Wednesday, February 25, 2015

ஆண்களின் அதிகாரம் பெண்களை அடக்குவதற்கா?


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு

எல்லாப் புகழும் இறைவனுக்கே. 

உலகம் முழுவதிலும் இந்த 20ம் நூற்றாண்டிலும் அனைத்து மக்களும் இன்று ஆணுக்குப் பெண் நிகரானவரா இல்லையா என்று பட்டி தொட்டியெல்லாம் பட்டிமன்றங்கள் நடத்தியும் ஒரு முடிவுக்கு எட்டாத நிலையில், பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னரே பெண்கள் ஆண்கள் மீது கொண்டுள்ளதை விடவும் ஆண்களே பெண்கள் மீது அதிகம் உரிமையுடையவர்கள் என்று தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்து விட்டது இஸ்லாம். இவ்வுண்மையை, இறைவாக்கை ஏற்க முடியாதவர்களே பட்டிமன்றங்கள் நடத்தித் தம் வாதத் திறமையைப் பறைசாற்ற முயன்று கொண்டிருக்கிறார்கள்.


புகாரி 5231. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் 

என் அல்லாத வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியேற்ற செய்தி ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கப் போகிறேன், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

கல்வி அகற்றப்பட்டுவிடுவதும், அறியாமை மலிந்துவிடுவதும், விபசாரம் அதிகரித்து விடுவதும், மது அருந்துதல் அதிகரித்து விடுவதும், ஐம்பது பெண்களுக்கு - அவர்களை நிர்வகிக்க ஒரே ஆண் என்ற நிலைமைவரும் அளவுக்குப் பெண்கள் மிகுந்து, ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும். 

எதிர்காலங்களில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட பன்மடங்கு அதிகரிக்கும் என்று முன்னறிவிப்பு செய்யப்படுகிறது. இம்முன்னறிவிப்பு தற்காலத்தில் உண்மையாகி வருவதையும் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம் என்பது மறுக்கவியலாத உண்மையாகும். நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், பெண்கள் எண்ணிக்கையில் மிகுந்து காணப்படும் அச்சமயங்களில் கூட பெண்களை ஆண்களுக்கு நிர்வாகிகளாக ஆக்கவில்லை. அவர்களுக்கு ஆண்களே நிர்வாகிகளாகத் தொடர்ந்து இருப்பார்களே தவிர, பெண்கள் தமக்குரிய எல்லைகுட்பட்டு வாழும் நிலையிலேயே இருப்பார்கள். 

2:228. ........ கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு; மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான்.

2:282 தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; 

குர் ஆனின் இவ்வசனங்கள் ஆண்கள் பெண்களை அதிகாரத்தில்மிஞ்சியிருப்பவர்களாக இருப்பதை உணர்த்தும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். பெண்கள் இருவரை ஒரு ஆணுக்குச் சமமாகக் கூறுகிறது. அது எப்படி..பெண்களிலும் சாமர்த்தியசாலிகள் உள்ளனர். அவர்கள் மீதுள்ள கடமைகள் அதிகமிருப்பதைச் சுட்டிக்காட்டி அவர்களது திறமைகளை, அறிவுத்திறனை, உரிமைகளை எப்படி தாழ்த்தலாம் என்று கேள்வி கேட்டால் அது மடமைத்தனமாகும். படைத்த இறைவனது கூற்று.. தான் அவ்வாறு தான் பெண்ணைப் படைத்துள்ளதாக அவனே கூறும்போது நாம் அதனை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இதனாலேயே நினைவாற்றலில் ஆண்களே பெண்களை மிகைத்து விடுகின்றனர்.

4:34. ........ எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

ஆக, மேற்கண்ட குர் ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் நமக்குத் தெளிவுபடுத்திய விஷயம் இதுதான். ஆண்களே பெண்களை விட அதிக உரிமையுள்ளவர்களாகவும் அதே சமயம் அதிகப் பொறுப்புள்ளவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளார்கள். இங்கு நாம் கவனிக்க வேண்டிய நடைமுறை என்னவென்றால், இறைவன் தமக்காகக் கொடுத்துள்ள உரிமைகளை நெஞ்சை நிமிர்த்திப் பெற்றுக்கொள்ளும் ஆண்கள், தமது பொறுப்புகளை, கடமைகளை முழுமையாக முழுமனதுடன் நிறைவேற்றுகிறார்களா? மனைவிகளை அடியுங்கள் என்று கூறப்பட்டுள்ளதா? எள்ளளவு காரணம் கிடைத்தாலும் அவர்களை அடித்து மிதித்துத் தமது ஆண்மைத்தனத்தை நிரூபிக்கத்துடிப்பதில் தான் அவர்களது பொறுப்பைக் காண்பிப்பதா? அல்லாஹ் குறிப்பிட்டுள்ள விஷயத்தில் பெண்கள் உங்களுக்கு முரண்பட்டால், முதலில் உபதேசம் செய்யுங்கள்; அதில் வெற்றி கிடைக்காத பட்சத்தில் படுக்கையிலிருந்து விலக்குங்கள்; அதிலும் திருந்தாவிட்டால் மட்டுமே லேசாக அடிக்கக்கூறியுள்ளான்; இந்த விதிகளை எத்தனை ஆண்கள் செயல்படுத்துகின்றனர்? தன் சொல் கேட்கவில்லையா? தன் பேச்சிற்கு மறு வார்த்தை ஒன்று வெளிவந்ததா? பளார் என்று அறைவதைத் தவிர தமது ஆளுமையை வெளிப்படுத்த வழி அறியாதவர்களே ஆண்கள். உண்மையில் தகப்பனாவதும் பெண்களின் மீது அடக்குமுறைகளைக் கையாள்வதுமே ஆளுமை என்று தவறாக நம்புபவர்களே ஆண்கள். இத்தகைய வன்முறைகளைக் கையாளத்தான் படைத்த இறைவன் இத்தகைய அதிக உரிமைகளையும் பொறுப்புகளையும் அளித்துள்ளானா? 

ஆண்களையே முதன்மை சம்பாதிக்கக்கூடியவர்களாகவும் குடும்பத்தை நிர்வகிக்கக்கூடியவர்களாகவும் முழு சாட்சியமாகவும் (புகாரி 2658) பெண்களை விட அனேகர் முழுமையடைந்த இனத்தவராகவும் (புகாரி 3411) படைத்தது எதற்காக? அடிப்பதற்கும் அதிகாரத்தை திணிப்பதற்கும்தானா? இதுதான் நிர்வகிக்கும் திறனா? ஒரு அலுவலகத்தில் நிர்வாகி என்பவர் கொடூரமானவராகவும் சர்வாதிகாரம் செய்பவராகவும் இருந்தால் அவ்வலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் தொடர்ந்து பணியில் இருப்பார்களா? எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் மன நிம்மதியைத் தேடி வேறு வேலை தேடிச் சென்றுவிடுவார்கள். இந்நிலையில் நஷ்டம் யாருக்கு? நிர்வாகிக்குத்தான். ஒரு நிர்வாகியும் அவரது பொறுப்பிலுள்ளவர்கள் வசிக்கும் குடும்பம் எனும் அலுவலகத்துக்கும் இது மிகவும் பொருந்தும். எத்தனை வசதிபடைத்தவர்களாயினும் நிம்மதியும் ஆறுதலும் இல்லாத குடும்பம் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்ததாகவே காணப்படும். எனில், இதற்குத் தீர்வுதான் என்ன?

கணவன்மார்கள் எனும் குடும்ப நிர்வாகிகளே, உங்கள் மனைவி, மக்களை நன்மையின் பக்கம் ஏவுவதில் உங்கள் அதிகாரத்தைக் காட்டுங்கள். அதிகமதிகம் தான, தர்மங்கள் செய்யத் தூண்டுங்கள். பிள்ளைகளுக்குச் சிறந்த முன்மாதிரியாக உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள். சிகரெட், மது போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்ட உங்கள் வார்த்தைகளுக்கு உங்கள் மனைவி, மக்களிடம் அச்சம் மட்டுமே இருக்கும்; மரியாதை இருக்காது. 

ஜகாத், ஸதகாவில் பராமுகமாக இருக்கும் உங்கள் அன்பை ஏளனமாக எடுத்துக்கொள்வார்களே தவிர ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குடும்பத்தினருடன் உம்ரா, ஹஜ் கடமைகளைப் பயபக்தியுடன் நிறைவேற்றுங்கள். மார்க்கத்தைப் பேணுதலை உங்கள் மனைவிகளிடம் எதிர்பார்க்கும் நீங்கள், அதே அக்கறையை உங்களிடமும் உங்கள் பிள்ளைகளிடமும் நடைமுறைப்படுத்துங்கள். ஸாலிஹான பிள்ளைகளை வேண்டி துஆ கேட்கும் பெற்றோர்களும் ஸாலிஹானவர்களாக இருப்பதும் அவசியம்.

ஐவேளைத் தொழுகைகளைப் பேணாமல் நீங்கள் அவர்களுக்கு வழங்கும் அறிவுரைகள் அவர்கள் மனதில் ஒட்டாது; சாத்தான் ஓதும் வேதமாகவே அவர்கள் காதில் ஏறும். பெண்களுக்கு வீடுகளில் தொழுதுகொள்ள அளிக்கப்பட்டிருக்கும் சலுகைகளை உபயோகிக்கும் ஆண்கள், பெண்கள் மீது பொறுப்புடையவர்கள் அல்லர். இரவுத்தொழுகையைக் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகக் கடைபிடிப்பதில் உங்கள் அதிகாரத்தைக் காட்டுங்கள். உங்கள் குடும்பத்தினரிடையே உங்கள் மீது மரியாதை கலந்த அச்சம் ஏற்படுவது உறுதி. 

அதிகதிகம் நஃபில் தொழுகைகளை நிறைவேற்றுவதில் கடினம் காட்டுங்கள். உங்கள் பிள்ளைகள் நீங்கள் சொல்லும்முன்பே பள்ளிக்கு விரைபவர்களாக மாறுவார்கள். இதைவிட ஒரு தாய், தகப்பனுக்கு வேறென்ன பேறு வேண்டும்?

எத்தனை இல்லங்களில் மனைவி எழுப்பி, கணவர் தஹஜ்ஜத், அது கூட வேண்டாம், ஃபஜ்ர் தொழுகைக்குத் தயாராகிறார்கள்? பல்லாயிரக்கணக்கான வீடுகளில் இன்றும் தொழுகை என்பது என்னவோ பெண்களுக்காகவே கடமையாக்கப்பட்டது போல் அவர்கள் மட்டும் இரவில் எழுந்து தனியாகத் தொழுபவர்களாகவே உள்ளனர். இதுவே இல்லத்தலைவர்கள் தொழுகைகளை முறையாக இபாதத்துடன் கடைப்பிடிப்பவர்களாக இருந்தால், அவர்கள் வீட்டில் பெண்கள் தொழுகையில் அலட்சியப்படுத்துபவர்களாக இருப்பது என்பது சாத்தியமேயில்லை. குழந்தைகளும் இளமையிலேயே தொழுகையைப் பேணுபவர்களாக வளர்வார்கள்.

ஆண்களே, உங்கள் சம்பத்தியங்களை குளிர்சாதன அறைகளில் இருந்து கொண்டே ஏழை, வறியோருக்கு விநியோகம் செய்வதை விட்டும் விலகி, நேரடி களப்பணியில் இறங்குங்கள். உங்களைப் போன்ற ஆண்கள் தாம் விபத்தான இடங்களில் தம்மை சமூகப்பணியில் ஈடுபடுத்துகிறார்கள். அவர்களும் உங்களைப் போல் அலுவலகம் சென்று சம்பாதிப்பவர்கள் தாம்; அவர்களுக்கும் குடும்பம், பிள்ளைகள் உண்டு. அவர்களால் “சமூகக்களப்பணி” ஆற்ற இயலும்போது உங்களால் இயலாமல் போனது ஏன்? உங்களை அவற்றிலிருந்தும் தடுப்பது எது? நீங்கள் நேசிக்கும் குடும்பமா? உங்கள் அநாவசிய பொழுதுபோக்குகளா? இறைவன் உங்கள் மீது அருளியிருக்கும் வசதிபடைத்த சொத்துசுகங்களா? இவைகளில் ஏதேனும் ஒன்று உங்களைத் தடுத்தாலும் அதுவே உங்களுக்கான சோதனை. அச்சோதனையில் வெற்றி பெற எட்டு வையுங்கள்.

பெண்களும் சமூகக்களப்பணியாற்றும் இன்றைய காலகட்டத்தில் நீங்கள் வீடுகளில் புகுந்தவர்களாகப் பணத்தை இணையத்தின் மூலம் “தேவைப்படுவோருக்கு” அனுப்புவது உங்கள் நிர்வாகத்திறனல்ல.

சமூகப்பணிக்கும் சமூகக்களப்பணிக்கும் அதிக வேறுபாடு உண்டு. ஹஜ் பயணத்தில் முடியைக் களையுமாறு தம் சஹாபாக்களுக்குக் கட்டளையிட்டு, அவர்களுக்கும் முன்பாகத் தம் முடியைக் களைந்து முன்மாதிரியாக வழிகாட்டியவர்கள் நம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். கட்டளையிட்டு சமூகப்பணியாற்றுவதை விடவும் தாமே முன்வந்து அக்கட்டளைகளின்படி வாழ்ந்து காட்டுவதே சமூகக்களப்பணியாகும்.

சமூக வளைத்தளங்களில் புரட்சிகரமான, விழிப்புணர்வூட்டும் கவிதையோ கட்டுரையோ எழுதுவதும் சமூகப்பணி தான். இப்பணியினை இன்றைய பெண்களும் மிக மிகச் சிறந்த முறையில் ஆற்றிவருகின்றனர். உடல் சிரமங்கள், வீட்டு வேலைகள் எல்லாவற்றிற்கும் மேலாக மஹ்ரம் என்ற ஒரு கேடயத்தையும் பேணிக்கொண்டு எத்தனையோ பெண்கள் சமூகக்களப்ப்ணியாற்றும் இவ்வுலகில் தான் நீங்களும் வாழ்கிறீர்கள். எப்படி வாழ்கிறீர்கள்? உங்கள் குடும்பங்களுடன் வீடுகளில் தஞ்சமடைந்தவர்களாக, வீண் பொழுதுபோக்குகளில் மூழ்கியவர்களாகப்  பெண்களைப் போல் மறைமுகப் பணியாற்றும் ஆண்கள் ஒருபோதும் முழுமையடைந்தவர்களாக முடியாது. இன்றைய பல ஆண்கள் செய்யும் கடமைகள், சமூக சேவைகள் அனைத்தும், கல்வி,குடும்ப நிர்வாகம், வேலை வாய்ப்பு என அநேக முன்னேற்றங்களை அடைந்துள்ள பெண்களாலும் சிறந்த திட்டமிடுதல்கள் மூலம் சுலபமாக நிறைவேற்ற முடியும். 


பெண்களை விட அதிக அளவில் நன்மையான காரியங்களில் ஈடுபடுவது மட்டுமின்றி, பெண்களால் செய்ய இயலாத நன்மையான காரியங்களையும் என்று ஆண்கள் நிறைவேற்றுகிறார்களோ அன்றே இறைவன் ஆண்களுக்கு அளித்திருக்கும் சிறப்புகளுக்குத் தகுதியானவர்களாகவும் தமக்கு அதிக உரிமைகளை வழங்கிய இறைவனைக் கண்ணியப்படுத்தியவர்களும் ஆவர். 


மார்க்கப்படி பெண்கள் அடையும் முன்னேற்றங்களைத் தடுத்து அவர்களை முடக்கி ஒடுக்காமல் அவர்களையும் மேம்படுத்தித் தாமும் முன்னேறி சமூகத்தினை வளர்க்கும் பொறுப்பை இங்ஙனம் ஆண்களிடையே அல்லாஹு தஆலா வழங்கியிருப்பதை நாம் அனைவரும் ஏற்று நடைமுறைப்படுத்துதலே இம்மை, மறுமை வெற்றிக்குச் சிறந்த காரணியாக அமையும் இன்ஷா அல்லாஹ்.

(இது என் சொந்த கருத்தே. அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்)

வஸ்ஸலாம். 


(முகநூல் குழுமமான டீக்கடை 2014ல் நடத்திய ரமழான் மாதக்கட்டுரை போட்டியில் இரண்டாம் பரிசான ரூபாய் 1000 பெற்ற இக்கட்டுரையினை இஸ்லாமியப் பெண்மணி தளத்தில் வெளியிட அனுமதித்த டீக்கடை குழும நிர்வாகத்தினருக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்)
read more "ஆண்களின் அதிகாரம் பெண்களை அடக்குவதற்கா?"

Monday, February 16, 2015

சுதந்திர போராட்டத்தில் ஹிஜாபுடன் களமிறங்கிய வீர மங்கை............

அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ்மதுல்லாஹி  வ  பரக்காத்தஹு...

இஸ்லாமிய ஹிஜாப் அணிந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற ஓர் வீர பெண்மணி பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காணப்போகிறோம். 

அப்பெண்மணி வேறு யாரும் இல்லை, இந்திய சுதந்திர வேங்கை வீர சகோதரான முஹம்மது அலி மற்றும் சௌகத் அலி, இவ்விரு வீரர்களை பெற்ற அன்னை தான் ஆபாதி பானு சாஹிபா என்ற “பீ அம்மா” அல்லது பீ அம்மன்” என்று அழைக்கப்படுகிறார்கள்.


 பிறப்பு:

இந்தியாவில் உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் என்ற ஊரில் 1857-ம் ஆண்டு செல்வாக்கு மிக்க குடும்பத்தில் தர்வேஷ் கான் என்பவருக்கு செல்வ புதல்வியாக பிறந்தார்கள். அன்றைய முஸ்லிம் பெண்களை போன்றே இவர்களால் எவ்வித கல்வி படிப்பையும்  படிக்க முடியவில்லை. 

 திருமணமும் விதவை வாழ்வும்:

 முஸ்லிம்களின் இஸ்லாமிய நெறிமுறை படி வாழ்ந்த பீ அம்மா, மற்ற பெண்மணிகளை போல் இவர்களும் அப்துல் அலி என்பவரை மணமுடித்து இல்லற வாழ்வை துவங்கினார்கள். இவர்களின் கணவர் ராம்பூர் பகுதியின் ஆங்கில அரசின் உயர் அதிகாரியாக இருந்தார்கள். அப்துல் அலி காலரா நோயினால் 1907-ம் ஆண்டு மரணம் அடைந்தார், அவர் இறக்கும் நேரத்தில் முப்பது ஆயிரம் கடன் வைத்திருந்தார். அப்போது அவருக்கு வயது முப்பது, அன்னை பீ அம்மாவிற்கு இருபத்தியேழு வயது. பீ அம்மா தனது 27-ம் வயதிலேயே தன் கணவரின் இறப்பால் விதவை ஆகினார்கள். சிறு வயதிலேயே இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள் இருந்தன. கணவன் இழந்த விதவை வாழ்வு ஒரு பக்கம், சின்ன சிறு ஆறு பிள்ளைகள் மறுப்பக்கம். பீ அம்மா மனம் தளராமல் தன் கணவனின் கடனை அடைத்ததோடு குடும்ப வாழ்விலும் வெற்றி பெற்று, இந்திய வரலாற்றில் அழியாத தன் பெயரை பதித்து விட்டே சென்றார்கள். இவர்களின் வாழ்க்கை இன்று ஒவ்வொரு இஸ்லாமிய பெண்கள் அறிய வேண்டியது அவசியம். இஸ்லாமிய கலாச்சாரத்தை விட்டு கொடுக்காமல் ஹிஜாப் என்ற இஸ்லாமிய பர்தாவை அணிந்தே ஆங்கிலேயர்களுக்கு எதிராக குரல் தந்தார்கள். அன்னை அவர்களுக்கு எவ்வித கல்வியறிவு இல்லை என்றாலும் தன் பிள்ளைகளை ஆங்கிலத்திலும், உருதுவிலும் புலமை பெற்றவர்களாக ஆக்கினார்கள். 

 அலி சகோதரர்கள்:

 இந்திய சுதந்திர போராளிகளில் அலி சகோதர்களான முஹம்மது அலி மற்றும் சௌகத் அலி இவ்விருவர்களை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த புதல்வர்களை பெற்றவர் தான் இந்த அன்னை. தன் முப்பது வயதிலேயே கணவனை இழந்த இப்பெண்மணியின் பிள்ளைகளுக்கு வயது எத்தனை இருக்கும், யோசித்து பார்த்தால் விளங்கும் சின்ன சிறு பிள்ளைகளாகவே இருந்திருப்பார்கள், அனைத்து குழந்தைகளும் பள்ளி பருவத்திலேயே இருந்திருப்பார்கள். அப்படிப்பட்ட சிறு பிள்ளைகளை கல்வி அறிவு இல்லாத ஒரு இஸ்லாமிய பெண்மணி, அதுவும் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் நிலைமைகளை பாருங்கள். எப்படி இருந்திருக்கும்?. இஸ்லாமிய மங்கை இந்நூற்றாண்டில் இப்படியல்லாம் வாழ முடியும் என்பதை தன் செயல்களில் காட்டிய இந்த வீர அன்னை, தான் இருந்த நிலைமைகளை எதுவும் ஒரு பொருட்டாக எண்ணவில்லை.

இந்த அன்னை தன் பிள்ளைகளை தேவ்பந்த், அலிகார் பல்கலை கழகத்திற்கு படிக்க அனுப்பியது மட்டுமில்லாமல் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்திற்கும் அனுப்பி அவர்களை ஆங்கிலத்திலும் உருதுவிலும் வல்லுனர்களாக ஆக்கினார்கள். அது மட்டும் இல்லாமல் இந்திய சுதந்திர போராட்டங்களில் அவர்களை ஈடுபட செய்து “அலி சகோதர்கள்” என்ற பெயரை இந்திய வரலாற்றில் பதிக்க காரணமாக இருந்தது அன்னை பீ அம்மா தான். முஹம்மது அலி அலிகார் பல்கலை கழக முன்னேற்றத்திலும், டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலை கழகம்(1920) உருவாக்குவதில் முக்கியமாக செயலாற்றியவர். இவர் தன் சகோதர் சௌகத் அலி அவர்களுடன் இணைந்து ஹம்டார்ட் (HAMDARD) என்ற உருது வார இதழும், தி கமராட் (THE COMRADE) என்ற ஆங்கில வார இதழும் நடத்தினார்கள். அதில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கருத்துகளை வழங்கி சுதந்திர ஆர்வத்தை மக்களுக்கு மத்தியில் பரப்பினார்கள். பீ அம்மாவின் மகனான முஹம்மத் அலி 1906-ம் ஆண்டு டாக்காவில் நடந்த இந்திய முஸ்லிம் லீக் துவக்க விழாவில் பங்குகொண்டு, 1918-ம் ஆண்டு அதன் அகில இந்திய தலைவராக பணியாற்றினார். அலி சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக காந்திஜி உடன் இணைந்து பல போராட்டங்களில் பங்கு பெற்றார்கள். கிலபாத் இயக்க போராட்டம், காந்திஜியின் ஒத்துழையாமை போராட்டம் என அனைத்திலும் பங்கு கொண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக அலி சகோதரார்கள் போராடினார்கள், அதனால் பல முறை ஆங்கிலேயர்களின் சிறைசாலைக்கு சென்றார்கள். சுதந்திர இந்தியாவிற்காக அலி சகோதரர்கள் இத்தனை உழைத்து இருப்பார்களானால், அவர்களின் முழு உந்துதலுக்கும்,  மகனின் வீர தேசபற்றுக்கு காரணம் அன்னை பீ அம்மாவின் முழு உழைப்பே ஆகும்.

முதலாம் உலகப்போர் நடந்துக்கொண்டு இருந்த சமயத்தில் அன்னையின் மகன் முஹம்மது அலி அவர்கள் சிறை பிடிக்கப்பட்டார்கள், அச்சமயம் முஹம்மது அலி அவர்களுடன் அன்னை பீ அம்மா அவர்களும் சிறையில் இருந்தார்கள். டிசம்பர் 1921-ம் ஆண்டு அலி சகோதரர் (முஹம்மது அலி மற்றும் சௌகத் அலி)களை பிரிட்டிஷ் ஆங்கில இராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அப்போது பொது மன்னிப்பின் பேரில் முஹம்மத் அலி விடுதலை செய்யப்படுகிறார் என்ற செய்தி அன்னை பீ அம்மா அவர்களின் செவிக்கு எட்டியது. அதை கேட்ட அன்னை, என் மகன் முஹம்மத் அலி இஸ்லாத்தின் மகன், பிரிட்டிஷ் போடும் மன்னிப்பு பிச்சையை அவன் எதிர்ப்பார்க்க மாட்டான். அப்படி அவன் செய்து இருந்தால், என் இந்த வயதான கை போதும் அவனுக்கு எதிராக போராடும் என வீர முழக்கம் முழங்கினார்கள். அன்னையின் அரசியல் வாழ்வு:

தன் புதல்வர்களை நாட்டுக்காக தியாகம் செய்தது இல்லாமல், தானே நேரடியாக அரசியலில் ஈடுப்பட்டார்கள். சுதந்திர பாரதத்திற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக குரல் கொடுத்தார்கள். இவர்கள் சுதந்திர போராட்ட இயக்கத்திற்கும், பெண்களுக்கும் மத்தியில் இணைப்பு பாலமாக இருந்து சுதந்திர போராட்டங்களில் பங்கு கொண்டார்கள். 1917-ம் ஆண்டு முதல் முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரஸ் அரசியல் மேடைகளில் மற்ற பெண்களுக்கு முன் அன்னை பீ அம்மா இஸ்லாமிய பர்தா ஹிஜாப் அணிந்து மேடையில் அமர்ந்து, மக்களுக்கு தேசப்பற்றை மூட்டினார்கள். ஒரு தடவை அன்னை பீ அம்மா அவர்கள் பஞ்சாப் பகுதியில் நடந்த ஒரு அரசியல் விழாவில் முகமூடி உள்ள ஹிஜாப் உடன் மேடையில் தோன்றி, மக்களுக்கு முன் உரையாற்றுவதற்கு முன் தன் முகமூடியை அகற்றி ஹிஜாபுடன் வீர முழக்கம் செய்தார்கள். இந்திய வரலாற்றில் ஹிஜாப் அணிந்து விடுதலை போராட்டம் செய்த இஸ்லாமிய பெண்மணிகளில் அன்னை பீ அம்மா தான் முதன்மையானவர்கள். செப்டம்பர் 1917-ம் ஆண்டு ஆங்கிலேய அரசின் பிரதிநிதிகள் மௌலானா முஹம்மது அலி அவர்களிடம் சமாதான ஒப்பந்தம் செய்ய வந்தார்கள், அதாவது உலகப்போர் நடக்கும் தருணத்தில் நாங்கள் உலகப்போரில் ஆங்கிலேய மன்னருக்கு எதிராக பங்கு கொள்ள மாட்டோம் என்ற ரீதியில் ஒப்பந்தம் இருந்தது. அப்போது அன்னை பீ அம்மா அவர்கள் திரைமறைவில் இருந்தார்கள், தன் மகனும் பிரதிநிதிகளும் பேசுவதை செவிமடுத்த அன்னை உடனே ஒரு பெண் சிங்கத்தை போன்று திரையில் இருந்து வெளிவந்து தன் மகனிடம் “நீ மட்டும் இதில் கையொப்பமிட்டால், என் முதிர்ந்த கைகள் உனக்கு எதிராக போராடும்” என கர்ஜித்தார்கள். டிசம்பர் 30, 1921-ம் ஆண்டு அஹ்மதாபாத்தில் நடந்த அகில இந்திய பெண்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டு பெண்களுக்கு மத்தியில் பேசும் போது, நம் நாடு விடுதலை அடையும் வரை சந்தோசங்களும் ஆடம்பரங்களும் நம் வாழ்வில் இருக்கக்கூடாது என்ற உரையாற்றினார்கள். அந்த மாநாட்டில் அன்னை பீ அம்மா உடன் கஸ்தூரிபாய் காந்தி, சரோஜினி நாயிடு, அனுசுயா பேன், அம்ஜாதி பேகம் போன்ற பெண்மணிகள் இருந்தார்கள். கதர் ஆடைகளை அணிவதிலும், அதையே மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் பீ அம்மா விரும்பினார்கள். இவர்களின் மேடை பேச்சில் இந்து-முஸ்லிம் ஒற்றுமை, ஆங்கிலேயர்களை வெளியேற்றுதல், கதர் ஆடை அணிகலன்களை அணிதல் போன்ற கருத்துகளே இருந்தன. ஆங்கிலேய கவர்னர் தன் அதிகாரியிடம் அன்னை பீ அம்மா அவர்களை கைது செய்வது பற்றி ஆலோசனை செய்தலில் அன்னை அவர்களை கைது செய்வதால் ஏற்ப்படும் பின் விளைவை எண்ணி அந்த திட்டம் கைவிடப்பட்டது. 

 அன்னைக்கு புகழாரம் சூட்டிய காந்திஜி:

முதல் உலகப்போரும், கிலபாத் இயக்க போராட்டமும் முடிவு பெற்ற காலம் 1924-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி அன்னை பீ அம்மா காலமானார்கள். அன்னாரின் இழப்பு அன்றைய முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது. ஒரு முஸ்லிம் பெண்மணியாக இருந்து நாட்டிற்கு அன்னாரின் சேவை மறக்கமுடியாதது. மகாத்மா காந்திஜி அன்னை பீ அம்மா பற்றி சொல்லும் போது “இளவர்களின் சக்தி உள்ள முதிர்ந்த பெண்மணி, அந்நிய சர்வாதிகாரம் ஒழிந்து, சுதந்திர நாடு பெற ஓய்வு இன்றி போராடிய பெண்மணி, கையால் நூலப்பட்ட கதரே அணிந்து அதையே மக்களும் அணிய சொன்ன பெண்மணி, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு போராடிய ஓர் உன்னத பெண்மணி” என்றார்கள். மற்றொரு தேசிய தலைவர் சுவாமி சாரதா நந்த் அவர்கள் அன்னை பீ அம்மா பற்றி சொல்லும் போது “இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு உண்மையில் ஆர்வம் உள்ள நபர் இருக்கிறார்கள் என்றால் அது அன்னை பீ அம்மா தான்” என்று சொன்னார்கள்.

கணவரை இழந்து விதவையாக வாழ்கிறோம் என எப்பெண்ணும் துக்கப்பட்டு தன் வாழ்வை எண்ணி வருத்தப்படக்கூடாது என்ற கருத்தை தாய்க்குலத்திற்கு சொல்ல எண்ணும் இந்த இனியவன், என் இக்கட்டுரையை இஸ்லாமிய பெண்மணிக்கு அர்ப்பணம் செய்கிறேன். 

read more "சுதந்திர போராட்டத்தில் ஹிஜாபுடன் களமிறங்கிய வீர மங்கை............"

Sunday, February 08, 2015

ஆமினா அஸில்மி: முஸ்லிம் பெண்கள் தலைமுக்காடு அணிவது ஏன்?


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு

முஸ்லிம் பெண்கள் தலையில் முக்காடு அணிவது, அவர்களது தலையை மட்டுமல்ல.. மூளையையும் சேர்த்தே மறைத்து, அவர்களது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று விநோத கருத்துகள் கொண்டவர்களுக்குத் தக்க, வித்தியாசமான பார்வையில் தன் நேர்நோக்கங்களையும் முஸ்லிம் பெண்களுக்கு உத்வேகமும் உற்சாகமும் கொடுத்து அவர்களை ஊக்குவிக்கும் அருமையான எண்ணங்களையும் சகோதரி ஆமினா அஸில்மி இங்கு பகிர்கிறார்கள்:

தான் சார்ந்திருந்த கிருத்துவ மதத்திற்கு முஸ்லிம்களை மாற்ற நினைத்து, பின் உண்மையறிந்து முஸ்லிமாக மாறியவர் சகோதரி ஆமினா அஸில்மி. இஸ்லாத்தின் மீது கொண்ட பற்றினால் இஸ்லாமிய மார்க்க அறிஞராகத் தன்னை வளர்த்துக்கொண்டார். அமெரிக்காவின் சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவராகப் பணியாற்றியவர். மேலும் சகோதரியைப் பற்றி அறிந்து கொள்ள :ஏன் இஸ்லாம்? - ஆமினா அசில்மி

சகோதரி ஆமினா அஸில்மியின் கருத்து:

நாம் பிறருக்கு இஸ்லாத்தை எத்தி வைக்கும்பொழுது அவர்கள் புரியும் வண்ணம் எளிமையாக எடுத்துரைக்க வேண்டும். நான் அதிகம் எதிர்கொள்ளும் கேள்விகளில் இதுவும் ஒன்று: அதாவது முஸ்லிம் பெண்கள் ஏன் முக்காடு அணிகிறார்கள்? நம்மில் பலர் அடிக்கடி எதிர்கொண்ட இக்கேள்வியை நான் முஸ்லிம் பெண்மணிகள் பலரிடமும் கேட்டுவிட்டேன். 99 பேரில் ஒருவர் மட்டுமே இக்கேள்விக்குச் சரியான விடையளித்துள்ளார். 

முஸ்லிம்களே முக்காடு அணிவதற்கான சரியான காரணத்தினை அறிந்திருக்காவிடில், முஸ்லிமல்லாதோரிடம் நாம் எவ்வாறு புரிந்துகொள்ளலை எதிர்பார்க்க முடியும்:? இதற்கான பதில் நம் வேதமாகிய குர் ஆனிலேயே உள்ளது.

முதலாவதாக, நாம் முஸ்லிம்கள் என்று அறிந்துகொள்வதற்காக நாம் முக்காடு அணிகிறோம். இது முதல் காரணம். வாய்மையின் வெளிப்பாடாகவும் முஸ்லிமாக வாழ்வதில் நாம் அடையும்  பெருமையை வெளிப்படுத்தவும் அணிகிறோம். ஆனால், இம்முக்காடு இன்னும் பல ஆழ்ந்த கருத்துகளையும் வெளிக்கொணர்கிறது.உங்கள் முன் முக்காடு அணிந்து நிற்கும்  இப்பெண்ணானவர் அளவில்லாத வலிமைதைரியம், நேர்மையின் உருவமாக இருப்பவர். இவர் பொய்யுரைக்கமாட்டார்; இவர் ஏமாற்ற மாட்டார்; அனைவரையும் விட சிறந்த பணியாளராகவும் இருப்பவர்சிறந்த எஜமானியாகவும் இருப்பவர்; சிறந்த தோழியாகவும் சிறந்த ஆலோசகராகவும் விளங்குபவர்.

ஒரு முஸ்லிமாக இவரை நீங்கள் முழுமையான நம்பகத்தன்மையுள்ளவராக ஏற்றுக்கொள்ளக்கூடியவர். அதே சமயம், ஒரு எச்சரிக்கை விடுப்பவராகவும் இருக்கிறார். ஆம்... தன் சுயமதிப்பை முழுமையாக உணர்ந்த ஒருவரே உங்கள் முன் நிற்பவராவார். இவர் ஒரு விளையாட்டு சாதனம் அல்லர். ஆகையினால், இவரிடம் உங்கள் விளையாட்டுத்தனத்தைக் காட்டுவதற்கு முயற்சி செய்ய எண்ணியும் விடாதீர்கள்.

மற்ற அனைவரிடமிருந்தும் தனித்து அறியப்படவேண்டும் எனும் என் விருப்பத்தையே என் ஹிஜாப் நேரிடையாக உலகிற்குக் கூறுகிறது. நான் யார் என்பதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். இதையே நான் உங்களிடமிருந்தும் நீங்கள் என்னிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம். ஆகையால்,என்னிடம் நீங்கள் பேச வரும்போது உங்கள் சுயவிபரங்களை எங்கேனும் விட்டுவிட்டு வாருங்கள். அதை அறிந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. என்னுடன் பேசுகையில் வேறு யாரைப் பற்றியும் கதைக்காதீர்கள். என் சகோதரனின் சதையை உண்பதற்கு நான் ஒருக்காலும் விரும்பமாட்டேன்.

ஆக, இந்த முக்காடு என்னை முஸ்லிமாக அடையாளம் காட்டுவதோடு மட்டுமில்லாமல்,இன்னும் ஒரு படி மேலே சென்று அது கூறுவது என்னவென்றால் பாலியல் தொந்தரவுகளிலிருந்தும் என்னை அது பாதுக்காக்கிறது. சிலர் பாலியல் தொந்தரவுகளை பாலியல் பலாத்காரத்துடன் இணைக்கின்றனர். பாலியல் பலாத்காரத்திற்கும் நிகாபிற்கும் சம்பந்தமில்லை. கற்பழிப்பிற்கும் பாலியல் ஈர்ப்பிற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

பாலியல் பலாத்காரம் என்பது வன்முறை, வெறுப்பு மற்றும் ஆதிக்கத்தின் வெளிப்பாடாகும். என்னை விட அதிக வயதான பெண்களும் கற்பழிக்கப்படுகிறார்கள். அவர்கள் என்ன உடை அணிந்திருந்தாலும் சரியே. வயதிற்கும் உடைக்கும் கற்பழிப்பிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. கற்பழிப்பவர்களின் மனம் முழுவதும் வெறுப்பினால் நிறைந்துள்ளது. இவற்றில் இருந்து பாதுகாப்பு என்பது அவரவர் அணுகுமுறையிலிருந்தே கிடைக்கப்பெறுகிறது.

ஏனெனில் என்னைப் பற்றி அல்லாஹ் என்ன கூறியிருக்கிறான் என்பதை நான் அறிவேன். அதுவே இஸ்லாமிய மனப்பாங்கு (islamic attitude) ஆகும். நான் விளையாட்டுப் பொருள் அல்லள். நான் உண்மையானவளாகவும் நேர்மையானவளாகவும் நீங்கள் நம்பக்கூடியவளாகவும் உள்ளேன். இதுவே என் அணுகுமுறை என்று உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

நான் ஒரு கடைவீதிக்குச் சென்றால் எனக்காக கடைவாசற்கதவைத் திறக்க பலரும் விரும்புவர். இதையே நான் எதிர்பார்க்கிறேன்.

நான் ஒரு பேருந்தில் ஏறினால் தாம் எழுந்து எனக்காகத் தமது இருக்கைகளை தர பலர் விரும்புவர். இதையே நான் எதிர்பார்க்கிறேன்.

இதுவே அனாவசிய கதை பேசும் கூட்டத்தினர் இருக்கும் அறைக்கு நான் சென்றால் அவர்கள் தமது பேச்சை நிறுத்திவிடுவார்கள். ஏனெனில் நான் புறம்பேசுவதை ஒருக்காலும் அனுமதிக்கமாட்டேன் என்று அவர்கள் அறிவார்கள். இதுவே இஸ்லாமிய அணுகுமுறை. இதுவே நான் பிறரிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதை பிறருக்கு உணர்த்தும்.

அதே வேளை, துயரங்கள் மேலிடும் வாழ்வில் உள்ள ஒருவர், என்னிடம் தமது துயர்களைப் பகிர்ந்து பேசலாம். அவர்களது ப்ரச்சினைகள் அமானிதமாகக் கருதப்படும்; பாதுகாக்கப்படும். மேலும் அவர்களுக்கு என் மூலம் கிடைக்கும் அறிவுரையோ மிக மிகச் சிறந்ததாக அமையும். ஆக, நான் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிமல்லாதோருக்கும் ஆலோசனை வழங்குகிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் என் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.

இவையனைத்தும் மிகச்சிறிய விஷயங்களாகத் தோன்றலாம். ஆனால் அவற்றை நான் உங்களிடம் விளக்கியதில் உள்ள வேறுபாடுகளை நீங்கள் உணர்ந்தீர்களா? அது உண்மைக்கு அருகில் உள்ளதாகும்.

(இப்பதிவு http://www.youtube.com/watch?v=kdxj_ygsCPQ&feature=youtu.be இந்த வீடியோவின் தமிழாக்கமாகும்)


உங்கள் சகோதரி
பானு
read more "ஆமினா அஸில்மி: முஸ்லிம் பெண்கள் தலைமுக்காடு அணிவது ஏன்?"

Monday, February 02, 2015

பெண்களை துரத்தும் கற்கால வாழ்க்கை-தி ஹிந்துக்கான பதில்

உலக ஹிஜாப் தினமான நேற்று இஸ்லாமிய நாட்டின் ஆடைகட்டுபாட்டை குறித்து வெளியிட திஹிந்துவிற்கு என்ன அவசியம் என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் செல்லவில்லை! நடுநிலை பத்திரிக்கை என நம்பக்கூடிய தி ஹிந்து சமயம் பார்த்து தாக்கும் பத்தோடு பதினொன்றான மற்றைய பத்திரிக்கைகள் போன்றது தானா என்ற யூகங்களுக்கும் செல்ல விரும்பவில்லை. ஆடை கட்டுபாடு துரத்துவதாக கவலைபட்ட கட்டுரைக்கான பதிலை தருவது  மட்டுமே என் நோக்கம்.

சகோதரி சுஜாதாவின் கட்டுரையைப் பார்த்ததும் சிரிப்பு தான் வருகிறது. கவலைப்படுவதற்கும் விவாதிப்பதற்கும் ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் இருக்கும் போது, மிஷேலின் ஆடை குறித்துப் பேசித் திரியும் உலகை என்னவென்று சொல்வது என்று சொல்லிவிட்ட சகோதரி தன் கட்டுரையுடனே முரண்பட்டத்தை எண்ணி நகைப்பை கட்டுபடுத்த இயலவில்லை.  ஒரு நாட்டிற்கு செல்லும் போது, அவர்களின் சட்ட, திட்டங்களுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்ள வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த விஷயம் சகோதரிக்கு தெரியாமல் இருப்பது சற்று வியப்பாகத் தான் இருக்கிறது.

நம் நாட்டிலும் சில இடங்களில் பெண்கள் அனுமதிக்கப்படாமல் இருப்பது போல, ஆண்களும் சட்டையோடு அனுமதிக்கப்படுவதில்லை. நாட்டின் பிரதமராகவே இருந்தாலும் சட்டையை கழற்றினால் தான் உள்ளே நுழைய முடியும். அங்கு போய் யாரும் நீதி பேசி கொண்டு இருப்பதில்லை. அந்த இடத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுத் தான் நடக்கிறார்கள். அதே போல நம் நாட்டில் எந்த இடத்தில் குப்பை போட்டாலும் யாரும் கேட்க போவதில்லை. அதையே சில நாடுகளில் செய்தால் அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும். இது போல அவரவர் நாட்டுக்கு என்று சில வரைமுறைகள் வைத்து உள்ளார்கள். அதற்கு மதிப்பு கொடுத்து தான் அங்கு செல்பவர் நடந்து கொள்ள வேண்டும். அது தான் சரியான முறையும் பண்பாடும்.

அது போல தான் சவூதி சென்ற அமெரிக்க அதிபரின் மனைவியின் உடையில் தெரிந்த மாற்றம். உடல் பாகங்கள் வெளி தெரியாத உடை அணிய வேண்டும் என்பது அந்த நாட்டின் சட்டம். இதில் எங்கு பிற்போக்கு எண்ணம் இருக்கிறது என்று புரிய வில்லை. உடலின் பாகங்கள் வெளி தெரிய உடை அணிவது தான் பெண்ணுரிமையா..? அதை தான் சகோதரி விரும்புகிறார்களா? அது போலவே அன்னியப்பெண்களின் கைகளைத் தொட வேண்டாம் என்பது இஸ்லாத்தில் உள்ள வழிமுறை. இது எந்த விதத்தில் அதிபரின் மனைவியை காயப்படுத்தியது. பெண்களை தேவை இல்லாமல் தொட்டால் கூச்சலிடும் நாம் தாம்.அவர்களின் கையை பிடிக்க வில்லை என்று குறை சொல்கிறோம்.. :) இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.குடியரசு தின விழாவிற்காக யாரோ ஒரு அமெரிக்கர் வருவதற்கு ஒட்டுமொத்தமாக இந்த நாட்டின் பலகோடி மக்கள்  மூன்று தினங்களுக்கு அடிமையானதன் மத்தியில் என் நாட்டின் சட்டத்திற்கு கட்டுபடு என்ற சவூதியின் போக்கு நம் நாட்டில் நினைத்துபார்க்க முடியுமா?”பெண்ணுரிமைகளுக்கான போராட்டங்கள் வலுவடைந்து வரும் சவுதி அரேபியாவில், மிஷேல் அடிபணிந்ததன் மூலம் தவறான முன்னுதாரணமாகிவிட்டார்” என சகோதரி குறிப்பிட்டுள்ளார். ஒரு நாட்டின் சட்டத்திட்டங்களை மதிப்பது அடிமைதனத்தின் அடையாளமாக மாற்றப்பட்டுவிட்டதை என்னவென்று சொல்ல? சிந்தனை வரட்சியா? ஏதோ எழுதிட வேண்டுமென்பதற்காக எதையும் யோசிக்காமல் பக்கங்களை நிரப்பும் செயலா இது?. ”செல்லும் இடங்களுக்கு ஏற்றவாறு பெண்கள் ஆடை மாற்றம் செய்துகொள்ள வேண்டிய சூழல் உலகம் முழுவதும் நிலவுகிறது. ஆனால் ஆண்கள் தங்கள் ஆடைகளிலேயே எந்த நாட்டுக்கும் எந்த இடத்துக்கும் சென்று வர முடிகிறது. ” என்ற சகோதரியின் ஆதங்கத்தில் வெளிப்படும் நகைச்சுவை இன்னும் சுவாரசியமானது. கண்ணியமான உடை அணிந்துவிட்டால் கேள்வி கேட்பார் யார்? இதில் ஆண், பெண் என்ற வித்தியாசம் என்ன?.

கண்டிக்க வேண்டிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட ‘மிஷேல் நாகரிகமாகத்தான் உடை அணிந்தார்’ என்று விளக்கம் அளித்துள்ளன என்று சகோதரி கவலைபடுகிறார். புரிகிறதா சகோதரி? கண்டிக்காததன் பின்னணி அடிமைதனத்தை வேடிக்கை பார்ப்பதல்ல! நம் நாட்டை நாம் நேசிப்பது போலவே வேறொரு  நாட்டின் பண்பாட்டை போற்றவும் வேண்டும் என்ற நாகரிக பண்பு. ஆனால் நாம் தான் எல்லாவற்றையும் கோர்த்து முடிச்சு போட தவியாய் தவிக்கிறோம்! :)

பெண்களை வணிகப்பொருள்கள் ஆக்கி, அவர்களின் உடலையும், இளமையையும் சந்தைப்படுத்தும் உலகத்தின் மத்தியில் பெண்களை மதித்து அவர்களுக்கு உரிய மரியாதையையும், மதிப்பையும் கொடுக்கும் இஸ்லாத்தின் வழிமுறைகள் கட்டுப் பெட்டித்தனமாக தெரிவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

பெண்களின் முன்னேற்றம் அவர்கள் அரைகுறை உடையில் இல்லை. அவர்களின் திறமையில் இருக்கிறது என்பது சவூதி போன்ற இஸ்லாம் நாடுகளில் பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி, தேசியக் கண்காட்சி மையம் என பல இடங்களில் ஹிஜாப்போடு சுறுசுறுப்பாக பணிபுரியும் பெண்களே சாட்சி.

கூடுதல் தகவலாக சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் 30 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பெண்களுக்கான பல்கலைக்கழகம் இருக்கிறது என்பதையும், இந்த பல்கலைக்கழகத்தில் 60 ஆயிரம் மாணவியர் படிக்க முடியுமென்பதையும் உலகத்திலேயே பெண்களுக்கான பெரிய  பல்கலைக்கழகம் என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

உங்கள் சகோதரி,
ஆயிஷா பேகம்

------

read more "பெண்களை துரத்தும் கற்கால வாழ்க்கை-தி ஹிந்துக்கான பதில்"

Sunday, February 01, 2015

என் ஹிஜாப் என் உரிமை!!!ஆடைக்குறைப்பே உங்கள் நாகரிகமென்றால்...!
காட்டு விலங்குகள் தொன்று தொட்டு நாகரிகத்தின் உச்சியில்...!

போலியாக ஆர்ப்பரிக்கும் உங்கள்  நாகரிகத்திலிருந்து விலகி...
பழம்பெரும்வாதியாக வாழ்வதே எங்கள்  திருப்தி...!

என் ஹிஜாபை பற்றி உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை ...?
அந்தோ... ஆடு நனைகிறதென ஓநாய் அழுவது போல...!

பெண் விடுதலை என்ற பெயரில் பிதற்றிக்கொண்டு...
அரைகுறை ஆடை அணிவதல்ல உண்மை பெண்ணியம்...!

போகப்பொருளாக்கி பார்ப்பதே நீ திணிக்கும் பெண்ணியமா...?
ஹிஜாபை அணிய வேண்டாமென சொல்ல உனக்கென்ன உரிமை...?

இச்சைப் பார்வைகள் உண்டு போட்டதன் மிச்சமாக இருக்க,
என் மனம் இசையாது போனதன் கோபமோ...?

வெளி அழகை பார்த்து நீ தூக்கித்தரும் அங்கீகாரத்தினை...
என் அறிவுக்கான வெற்றியென ஏமாற்றிக்கொள்ள மாட்டேன்...!

நீ விரும்புவதை நான் அணிந்து வலம் வருவதல்ல என் சுதந்திரம்...!
நான் விரும்பும் ஆடையே எனக்கான பாதுகாப்பு அரண்...!


நீ கூக்குரலிடுவது போல் என் ஆடை சிறுமைப்படுத்தவில்லை,
மாறாக என்னை பூரணமாக முழுமையாக்கியது...!

என்னை யார் பார்க்க வேண்டுமென்று தீர்மானிக்கும் உரிமை, என்னை தவிர யார் கையிலுமில்லை...!

என் ஹிஜாப் என் உரிமை...!!!
அரைகுறை ஆடையல்ல என் அடையாளம்...!!!

ஆம்... அரைகுறை ஆடையல்ல என் அடையாளம்...!!!

உங்கள் சகோதரி
தாஹிரா  பானு
read more "என் ஹிஜாப் என் உரிமை!!!"