Monday, January 19, 2015

குழந்தை வளர்ப்பும் அமானிதமே!!!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருபெயரால் துவங்குகிறேன்!!! 

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!!!

நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம்; ஆனால் அதைச் சுமந்து கொள்ள மறுத்தன;அதைப் பற்றி அவை அஞ்சின;ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்;நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கின்றான். (அல் குர்-ஆன் 33:72)

நிச்சயமாக மனிதர்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பும், கடமைகளும் அமானிதமே. அவன் வழங்கியதை சிறந்த முறையில் அவனிடம் ஒப்படைப்பதே அமானிதம் பேணுவதாகும். ஆனால் மனிதர்களில் பலர், மனிதர்களுக்கு வழங்கப்பட்ட அமானிதங்களை மறந்து அலட்சியம் செய்கின்றனர் என்பதை மனிதர்களாகிய நாம் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.. அதில் ஒன்று தான் குழந்தை வளர்ப்பு.

தனக்கு  பிறந்த குழந்தையை தன்னை தவிர வேறு  ஒருவரும் நல்ல முறையில் கவனித்துக் கொள்ள இயலாது என்று தாய்மார்கள் எண்ணிய கால கட்டம் வெகுவாக குறைந்துக் கொண்டே வருகிறது.

காரணம், இன்று பெண்களின் கல்வியறிவு அதிகமாக அதிகமாக அவர்களின் சுய சம்பாத்தியமும் ஓங்கி வருகிறது என்றால் மிகையாகாது. படித்த படிப்பிற்கு நாமும் கை நிறைய சம்பாதிக்கணும், தன் கணவனின் குடும்ப சுமையை குறைக்கணும் என்று பெண்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டார்கள். அப்படி சிந்திப்பதில் தவறு இல்லையென்றாலும் சூழலுக்கு ஏற்றவாறு  நம்மை மாற்றிக் கொள்வதில் நம்மை திருத்திக் கொள்ள வேண்டும். திருமணமாவதற்கு முன்பு வேலை பார்க்கும் பெண்கள் அதையே திருமணம் ஆன பின்னும் தொடர விரும்புகின்றனர். பலர் அந்த கண்டிசனோடு மாப்பிள்ளை பார்த்து மணம் முடிக்கின்றனர். சரி.. ஒரு குழந்தை வரும்வரை வீட்டில் அதிக வேலைகள் இல்லை என்பதற்காக செல்கிறார்கள் என்று ஒப்புக்கொண்டாலும், தங்களுக்கென்று ரசித்து ரசித்து பெற்ற குழந்தையை தன்னை தாய், தந்தை என்ற அந்தஸ்திற்கு உயர்த்திய பிள்ளையை பார்த்துக் கொள்ளும் வேலையை கூட இரண்டாம் பட்சமாக்கிவிட்டு வேலைக்கு முதல் உரிமை அளிப்பது தான் வருந்தத்தக்கது.

பிள்ளைக்காக கணவனே வேலைக்கு போக வேண்டாம் என்று தடுத்து நிறுத்தினாலும், அவர்களின் கட்டுபாட்டை மீறி பிள்ளையை அடுத்தவரின் பொறுப்பில் விட்டுவிட்டு வேலைக்கு செல்லும் பெண்களை நம் கண் முன்னே  காண முடிகிறது. அதன் விளைவு பெற்ற பிள்ளைகளை அன்போடும், பரிவோடும் பார்த்து அணு அணுவாக வளர்த்தெடுக்கும் வாய்ப்பை இழக்கும் துரதிஸ்டசாலிகளாகின்றனர் ஒரு சில தாய்மார்கள்.

பொதுவாக பெண்கள், தன்  ஆசை குழந்தையை 
மாமியாரோடு விட்டுச் செல்லவே யோசிபார்கள், மாறாக தன் தாயிடமோ அல்லது தாய் வீட்டை  சார்ந்தவர்களிடம் விட்டுச் செல்வதையே பாதுகாப்பாக கருதுவார்கள். அதே மாமியார் தான், தனக்கு கணவனாக வந்த அவரது மகனை பாதுப்பாக பெற்று வளர்த்து ஆளாக்கியுள்ளார் என்பதை சிந்திக்க மறந்து விடுகின்றனர். அவர்களிடம் இல்லாத பாதுகாப்பா நம் குழந்தைக்கு என்று பரந்த மனதுடன் சிந்திக்க மறுக்கின்றனர் நிறைய பெண்கள் என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்.

இதற்கும் ஒரு படி மேல் போய், மாமியாரையும் விட்டுவிட்டு தாய் வீடும் அருகில் இல்லாத பெண்கள் பேபி சிட்டிங் எனப்படும் குழந்தையை பராமரிக்கும் காப்பகத்திலும், வீட்டு வேலைக்காரர்களிடமோ விட்டுச் செல்வது பரவி வருகிறது. தன் கணவனை வளர்த்தெடுத்த மாமியாரிடம் விட்டுச் செல்வதை விட பாதுகாப்பாக, முகம் அறியாத மூன்றாம் நபரிடம் விட்டுச் செல்வதை பாதுகாப்பாக எப்படி நம்புகிறார்கள் என்பது தான் புலப்படவில்லை.

மேலும் பலருக்கு அருகில் யாருமில்லாத கட்டாயத்தாலும் வெளி நாடுகளில் வாழக் கூடியவர்களும் தங்கள் குழந்தைகளை குழந்தை காப்பகத்தில் விட்டு செல்லக் கூடிய சூழ்நிலை வந்தாலும், அங்கு நம்முடைய குழந்தைக்கு முழு பாதுகாப்போ, பரிவோ அல்லது அன்போ கிடைக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அதை அறியாத  அளவிற்கு எந்த தாயும் இல்லை. எனினும் விட்டுச் செல்லவே செய்கின்றனர்.

குழந்தை காப்பகத்தில் குழந்தைகளை உண்ண வைக்க படுத்தும் பாடும், கண்டபடி தூக்கி எறிவதும், அடித்து எடுப்பதும், கை கால்களை ரப்பர் போல் பிரட்டி எடுப்பது போன்ற பல வீடியோக்களையும், படங்களையும் முக நூல்களிலும், மெயில்களிலும், யு-ட்யூபுகளிலும் காணும்போதே நெஞ்சம் பதறுகிறது. நாம் இல்லாத நேரத்தில் நம் குழந்தை அங்கு என்ன பாடு படும் என்பது போன்ற பல ஐயங்கள் கல் நெஞ்சையும் கறைய செய்யும்.. தன் உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் தங்கள் குழந்தையை கண்டித்து உரிமையுடன் இரண்டு அடி போட்டால் கூட வரிந்துக் கட்டிக் கொண்டு வம்புக்கு செல்பவர்கள், யாரோ மூன்றாவது மனிதரிடம் எந்த நம்பிக்கையின் பேரில் தங்கள் பிள்ளைச் செல்வங்களை விட்டுச் செல்கின்றனர் என்பது மிகப் பெரும் கேள்விக் குறி.  கேட்டால் வருமானத்தின் அவசியம் என்பார்கள்.படைத்த இறைவன் இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் அதற்கு வேண்டிய உணவை, அத்தியாவசியத்தை தகுந்த நேரத்தில் அளிக்கின்றான். ஆனால் மனிதர்களாகிய நாம், நம் செல்லும் வேலை தான் நமக்கு சோறு போடுகிறது என்று சிந்திக்கின்றோம். உண்மை தான், ஆனால் நம்முடைய முயற்சி அல்லாஹ்வின் மேல் வைக்கும் தவக்குல் எனப்படும் முழு பொறுப்பே ஒவ்வொரு காரியத்திலும் வெற்றியடைய செய்கிறது. அப்படியே சிந்தித்தாலும் அதற்கு குடும்பத்தலைவனாகிய நம் கணவன் மட்டும் வேலைக்கு சென்றால் போதாதா???? போதாது என்ற சூழ்நிலையில் உள்ளவர்களும், குடும்பத் தலைவரின் துணைகளற்ற ஒருவர் தங்கள் குழந்தையை வேறு இடத்தில் விட்டுவிட்டு வேலைக்கு செல்வதில் தவறு ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் வல்ல இறைவன் மீது பொறுப்பு சாற்றி தங்கள் பொறுப்பை சரி வர கவனித்துக் கொள்பவர்களுக்கு பொறுபேற்க இறைவனே போதுமானவன். இதையே நபி ஸல் கூறுகின்றார்கள்:

அல்லாஹ்வின் மீது தவக்குல் எனும் முழுப்பொறுப்புச் சாட்டும் முறையில் நீங்கள் முழுமையாகப் பொறுப்புச் சாட்டினால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கும் உணவளிப்பான். பறவை காலையில் வயிறு ஒட்டியதாகச் செல்கிறது. மாலையில் வயிறு நிரம்பித் திரும்புகிறது என்று அபூஹீரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:திர்மிதி.2344)

ஆனால் இன்று நிறைய பெண்கள் தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேலைக்கு போகிறார்களா?? என்றால் இல்லை. இருக்கும் நிலையில் இருந்து தங்களை மென்மேலும் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற சிறு பேராசை, டைம் பாஸ் என்று பிறந்த மூன்றே மாதங்களான குழந்தை முதல் விவரம் அறிந்த  பிள்ளைகள் வரை குழந்தைகள் காப்பகத்திலும், அக்கம் பக்கத்தில் குழந்தையை கவனித்துக் கொள்பவரிடமும் விட்டுச் செல்கின்றனர். மனிதனின் தேவை என்பது பிறந்தது முதல் மரணம் வரை ஒவ்வொரு தருணத்திற்கேற்றார் போல் நீண்டுக் கொண்டே செல்கிறதே தவிர என்றும் குறைவதில்லை. நமக்கென்று ஒரு இடத்தை வாங்கி விட்டு வேலையை விட்டு நின்று விடலாம் என்று ஆரம்பிக்கும் பயணம், வீடு கட்டி, அதற்கு தேவையான பொருட்களை வாங்கி, தன் பிள்ளைகளின் மேல் படிப்பு என்று நீண்டுக் கொண்டே செல்லுமே தவிர நமது இவ்வுலக ஆசையும் தேவையும் ஒரு போதும் குறைய வாய்ப்பில்லை. நாமாக  நம்  ஆசையை கட்டுப்படுத்தும் வரை.

இதனால் அக்குழந்தைக்கு இயல்பாக கிடைக்க வேண்டிய தாயின் அன்பும், அரவணைப்பும், நேரத்திற்கு ஏற்ற உணவும், கொஞ்சலும் கெஞ்சலும் கிடைக்காது வளர நேரிடுகிறது. பால் குடிக்கும் பச்சிளம் குழந்தைக்கு தாய் பாலூட்டும் பாக்கியத்தை பல பெண்கள் இழக்கின்றனர். முகம் பார்க்கும் தன் குழந்தை அறியும் முதல் முகம், முதல் புன்னகை, சிறு சினுங்கள், சிறு சூட்டிகை வரை முதன் முதலில் தன் குழந்தை செய்யும் எந்த செய்கைகளையும் காணும் பாக்கியமற்றவர்களாகின்றனர். இவ்வுலகில் ஒரு பெண்ணுக்கு  இதை விட சிறந்தது வேறு என்ன இருக்க முடியும்??

குழந்தையை கவனித்துக் கொள்ளும் வேலையை செய்பவர்களுக்கு குறிக்கோள் மாதமானால் பணமே தவிர குழந்தையின் முன்னேற்றமோ வளர்ச்சியோ அது உண்ணும் உணவின் சத்தோ அல்ல. பத்து வயது நிரம்பிய குழந்தைக் கூட தயிர் சாதமும், நூடுல்சும், உப்பு சப்பில்லாத உணவுமே தனது அத்தியாவசிய உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட பெற்ற தாய் தந்தையே காரணமாகின்றனர். அந்தந்த வயதில் கொடுக்க வேண்டிய உணவுகளை கொடுத்து பழக்காமலும் அருகில் இருந்து கவனித்துக் கொள்ள தவறியதாலும், வேலைக்கு செல்லும் அவரசத்திலும் வீடு வந்தால் படுக்கையை நோக்கி செல்லும் அயர்ச்சியும் குழந்தைகளை போசாக்கற்ற நிலைக்கு தள்ளி விடுகிறது. இதனால் பல வித நோய்க்கு குழந்தைகள் ஆட்கொள்கின்றனர்.  மேலும் ஒரு குழந்தையை பார்த்துக் கொள்ளும் எத்தனையோ தாய்மார்களே சகிப்புத் தன்மையை இழந்து குழந்தையின் சேட்டையை கண்டு கை நீட்டுகின்றனர். பல குழந்தைகளை ஒரே நேரத்தில் காணும் பொறுப்பை பெற்ற அவர்கள் பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனம் இருக்க வேண்டும் என்று எண்ணுவதில் அர்த்தமில்லை. இதில் பணத்தின் பின்னால் ஓடி பாசத்தை எங்கோ விட்டு செல்லும் உங்களை குற்றம் சொல்வதா இல்லை அவர்களை குற்றம் சொல்வதா??

மேலும் ஒவ்வொரு நற்செயல்களையும் பார்த்து பார்த்து கற்றுக் கொடுக்க வேண்டிய வயதை தாண்டிய பின், வேலை வேலை என்று அதன் பின் ஓடிய பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் தங்கள் சொற்களை கேட்பதில்லை என்றும், மரியாதை கிடைப்பதில்லை என்றும், ஒழுங்காக படிப்பதில்லை என்றும்  எண்ணுவதில் எந்த வித நியாயமுமில்லை. ஒரு குழந்தையின் பழக்க வழக்கங்கள் என்பது அதிக நேரம் யாருடன் இருக்கிறது என்பதை பொறுத்தே அமைகிறது. இதனால் பசு மரத்தாணி போல் பதிய வேண்டிய வயதில் வேறு வீட்டில் வளரும் சூழ்நிலை நேரிடுவதால், அவர்களின் ஆன்மீக வழிபாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், பேச்சு, நடைமுறை என்று தாய் தந்தையரை பிரதிபலிக்க வேண்டிய குழந்தைகள் தங்களை வளர்க்கும் காப்பாளர்களின் குணங்களை பிரதிபலிக்கிறது. இப்படி அவர்களின் வழிபாடுகளையும், நல் மற்றும் தீய செயல்களையும் பார்த்து பார்த்து வளரும் குழந்தைகள் நாம் எதிர்பார்க்கும்  குணாதிசயங்களுடனும், ஒழுக்கத்துடனும் வளர வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது?? குழந்தைகளை அமைதி படுத்த காலை முதல் மாலை வரை டி.வியின் முன் அமர வைக்கும் குழந்தை பொறுப்பாளர்களால் பல குழந்தைகள் பல கெட்ட செயல்களை தங்களுக்குள் பதிய வைக்கின்றனர். அவர்களின் சிந்தனை முற்றும் மழுங்கி, டி.வி, கார்ட்டூன், கேம்ஸ் என்று ஒரு குறுகிய வட்டத்தில் வாழ பழகிக் கொள்கின்றனர்.

தாய் தந்தையின் முழு கண்காணிப்பில் வளரக் கூடிய, இதை, இந்த நேரத்தில் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாட்டுடன் வளர்க்கும் குழந்தைகளே இன்று நம் கட்டுபாட்டில் இல்லது பல தவறான வழிகளுக்கு செல்லும்போது, கேட்க, கண்டிக்க, முழு நேரமும் கட்டுபாட்டுடன் வளர்க்க சரியான ஆட்கள் அற்ற குழந்தைகள் தாங்கள் கற்றுக் கொள்ளும் சிறு தவறுகளையும் தங்களுக்குள்ளேயே வளர்த்து வளர்த்து தறிக் கெட்டு போகின்றனர். அவர்களை எதிர்த்து ஒரு கேள்வி கேட்டாலும் பணத்தின் பின் அலையும் உனக்கு என்னை கண்டிக்க என்ன தகுதி இருக்கிறது என்று கன்னத்தில் அறைந்தார் போல் கேட்கும் சூழலுக்கு தாய், தந்தைகள் தள்ளப்படுகின்றனர்.  அத்தனை நாட்கள் நீங்கள் ஓடியதற்கு எந்த பயனும் இல்லை என்பதை உணர்த்த அந்த ஒரு கேள்வி போதாதா??? ஆனால் இது போல் வேலைக்கு செல்லும்  பெற்றோர்கள் காட்டும் முதல் காரணம் தங்கள் குழந்தைகளின் எதிர்காலமும் வசதியான வாழ்வும். அடித்தளம் சரியில்லாத குழந்தையின் எதிர்காலம் வலுவாக அமையும் என்று நம்புவது மிகப் பெரிய முட்டாள் தனமாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள் என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புஹாரி.2554)

குழந்தையை பெற்ற ஒவ்வொரு பெண்ணும் அக்குழந்தைக்கு முழு பொறுப்பாவாள். அக்குடும்பத்தின் முழு பொறுப்பும் கணவனுடையதாகும். மனைவி சிந்தனை தவறும் நேரத்தில் சரியான வழியை எத்தி வைக்க வேண்டியது கணவனின் பொறுப்பாகும். உலக வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக உங்கள் பொறுப்பில் அலட்சியம் காட்டாதீர்கள். பணம் என்பது நமக்கு அடிமையாக வேண்டுமே தவிர பணத்திற்கு நாம் அடிமையானால் ஈருலக வாழ்வின் பல வெற்றிகளை இழக்க நேரிடும்.  மேலும் ஒரு பெண்  வேலைக்கு சென்று சம்பாதிக்க கூடியதை அவளுக்கு உரிய குடும்ப பொறுப்பிற்காக மனதார விட்டுக் கொடுக்கும் போது , அவளால் கிடைக்க கூடியதையும் சேர்த்து அவளது கணவனின் சம்பாதியத்தை இரட்டிப்பாக்க இறைவனே போதுமானவன்.

தக்க நேரத்தில் தம் மனைவியை சரியான வழியில் செலுத்தாமல் தம் மனைவியின் சம்பாதியத்தில் சுகம் கண்ட ஆண்களும் அவர்கள் பொறுப்பை பற்றி விசாரிக்கப்படுவீர்கள் என்பதை நினைவில் கொண்டு தங்கள் மனைவி தவறான முடிவில் சென்றாலும் அவளை வழி நடத்த வேண்டியது ஒவ்வொரு கணவனின் கடமை என்பதை உணர்ந்து செயல் பட வேண்டும்.. இவ்வுலக வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கும்  நாளை மறுமையில் ஒவ்வொருவரும் பதில் அளிக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.

சிறு வயதில் நாம், நம் பிள்ளைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவமே, வயதான காலத்தில் அன்பிற்காக ஏங்கும் நம் பின்னால் அவர்களை வரச் செய்யும். இன்று பணத்திற்காக பாசத்தை எங்கோ விட்டு செல்லும் உங்களை அதே பணத்தின் பின்னால் ஓட தயாராகும் உங்கள் பிள்ளைகள், நேரமின்மையை காரணம் காட்டி உங்களை முதியோர் இல்லத்தில் விட்டால் வருந்தலாகாது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

நீங்கள் வளர்த்தெடுக்கும் உங்கள் பிள்ளையின் நல் ஒழுக்கமும், பயிற்றுவிக்கும் மார்க்கமுமே நாளை பெற்றோருக்காக துஆ செய்யும் கண்ணுக்கு குளிர்ச்சியான பிள்ளையாக வளர செய்யும். மரணத்திற்கு பிறகு ஒவ்வொரு மனிதனையும் தொடரக்கூடிய மூன்று விசயங்களில் பெற்றோர்களுக்காக பிள்ளைகள் கேட்கும் துஆவும் ஒன்றாகும். 

“என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” (அல் குர்-ஆன் 17:24) என்று நம் பிள்ளைகள் நமக்காக துஆ செய்யக் கூடியவர்களாக இருப்பதே ஒவ்வோர் பெற்றோருக்கும் கிடைக்கும் வெற்றியாகும்.

அதற்காக நம் பிள்ளையை தயாராக்குவது பெற்றோர் கையில் அதுவும் ஒரு தாயிற்கே பொறுப்பு அதிகம் உள்ளது. அதை தவற விட்டால் இம்மை, மறுமை வாழ்வில் கை சேதப்பட்டவராகிவிடுவோம் என்பதை உணர வேண்டும்.. நிலையற்ற இவ்வுலகை விட்டு நிரந்தரமான மறுமை வாழ்விற்கு ஆவன செய்வோம். உலக ஆசையை ஒத்தி வைப்போம். இன் ஷா அல்லாஹ்...


டிஸ்கி: இது அனைவருக்கும் பொருந்தாது எனினும் பணத்தின் மீது பேராசை கொண்டு பிள்ளைகளை மற்றவர்களின் பொறுப்பில் விட்டு வஞ்சிக்கும் பெற்றோர்கள் சிந்திக்கவே!!! இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு ஜீவனாலும் போற்றப்படும், மதிப்பளிக்கப்படும் ஒரே ஜீவன் தாய். அப்படிப்பட்ட தாய்மைக்கே உரிய பாசத்தை அடகு வைத்து நிலையற்ற பணத்தை பெற முயற்ச்சிக்காதீர்கள்... 

உங்கள் சகோதரி
யாஸ்மின் ரியாஸ்தீன் 
read more "குழந்தை வளர்ப்பும் அமானிதமே!!!"

ஏன் ஹிஜாப்? -பரிசு போட்டி அறிவிப்பு - கால நீட்டிப்பு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்...!

ஏக இறைவனின் அன்பும் அருளும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக ஆமீன்...

          பிப்ரவரி 1-   உலக ஹிஜாப் தினத்தை முன்னிட்டு வலையுக அன்பர்களுக்காக இஸ்லாமிய பெண்மணி நடத்தும் இந்த வருடத்தின் முதல் போட்டியை இங்கு அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்... !!

உங்கள் அறிவுக்கும் ஹிஜாப்பிற்கும் சம்மந்தமே இல்லையே என்று நிருபர் கேட்ட கேள்விக்கு நோபல் பரிசு வென்ற இஸ்லாமிய பெண்மணியின் பதிலுக்கும் நம் போட்டிக்கும் தொடர்புண்டு என்றால் மிகையாகாது.உடலை மறைத்திருக்கும் பெண்கள் அறிவையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்ற பிம்பம்  இன்று பலர் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்டது. ஹிஜாப் பேணும் சகோதரிகள் ஒவ்வொருவரும் ஹிஜாப் குறித்தான கேள்விகளை கட்டாயம் எதிர்கொண்டிருப்பார்கள். அவர்களின் அனுபவங்களை பகிரவும், தங்கள் வீட்டு பெண்கள் எதிர்கொண்ட  கேள்விகளுக்கு ஆண்களின் பதில்களை பகிரவும் ஓர் அறிய வாய்ப்பு.

போட்டிக்கான  கேள்விகள் மற்றும் பரிசுகள் விபரம் கீழ்க்காணும் படத்தில்:-

போட்டியின் விதி முறைகள்:-

  • உங்கள் பதில்கள் 20 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்..
  • நீங்கள்  எழுதும் படைப்பு இதற்கு முன் வேறு எந்த தளத்திலும் பிரசுரிக்கப்பட்டு இருக்கக்கூடாது. காப்பி பேஸ்ட்டாகவோ யாரோ வேறொருவரின் பதில்களாகவோ இருக்கக்கூடாது. கட்டாயம் உங்கள் சொந்த பதிலை மட்டுமே எழுதி அனுப்புங்கள்.
  • உங்கள் ஆக்கங்களை அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி: admin@islamiyapenmani.com
  • உங்கள் ஆக்கங்கள் எங்களுக்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 
           பிப்ரவரி 15-02-2015 இந்திய நேரம் இரவு 11.59க்குள்
  • ஜனவரி 31-2015 என்ற போட்டியின் இறுதி தேதி வலையுக நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிப்ரவரி 15-2015 வரை போட்டியின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களின் விருப்பமே எங்கள் விருப்பம்.
  • நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அனைவரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பரிசினை வெல்லுங்கள்.

கவனிக்க: ஹிஜாப் என்பது நாகரீகமாய், ஒழுக்கமாய், இறுக்கமற்றதாக, முகம், கை மணிகட்டு, கால்பாதம் தவிர்த்து உடல் அங்கங்களை  வெளிகாட்டாத எந்த உடையையும் குறிக்கும்.


வலையுக சகோதர சகோதரிகளுக்கு அன்பான வேண்டுகோள்: 
தங்கள் வலைதளங்களில் போட்டி குறித்த பேனரை பதிவு செய்து இந்த போட்டி அனைவரிடத்திலும் சென்றடைய உதவுங்கள்...
read more "ஏன் ஹிஜாப்? -பரிசு போட்டி அறிவிப்பு - கால நீட்டிப்பு..."