Thursday, April 25, 2013

தலைகுனிந்ததோ பெண்! இரக்கமற்றவனோ ஆண் திமிருடன்...


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த இரண்டு நாட்களாக ஜீதமிழில் கண்ட உறைய வைக்கும் சம்பவம் என்னை இன்று இந்த உண்மை நிகழ்வை எழுத தூண்டியது..இது பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நல் நோக்குடன்....இன்றைய சூழ்நிலையில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்திலும் முன்னேறி வருகின்றனர் என்பதில் ஒரு விதம் மகிழ்ச்சி இருந்தாலும், மறு புறம் அது பல விதங்களில் தீயதை தருகிறது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

இன்று எத்தனையோ பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை மிகவும் சுதந்திரமாகவும், அவர்கள் எண்ணியதை எப்பாடு பட்டேனும், கடல் கடந்தேனும் படிக்க வைக்க முயல்கின்றனர். தங்கள் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதிலும், அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதையே குறிக் கோளாக கொண்டுள்ள பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தையும், ஆசைகளையும் மறைத்து மறந்து வாழ்கின்றனர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்கு பரிசாக இந்த காலத்து பிள்ளைகள் கொடுப்பதெல்லாம் அவமானமும் தலைகுனிவும் தான்.

இது தேவையா? :ஏழு வருடமாக காதலித்து அவனின் குழந்தையும் சுமந்துக்கொண்டு வாழ்க்கை கொடு என அவள் அவன் காலை பிடிப்பதும், திமிராக அவன் கிளிப்பிள்ளை போல் முடியாது முடியாது என்றும், முடியாது என்பது நிச்சயம் என்றும் அவன் கூறுவது  தவறான பாதையில் சென்றுக்கொண்டிருக்கும் நம் பெண்களுக்கு தேவையான பாடம் தான். காதலிக்கும் வரை தான் ஹீரோ, ஹீரோயின் என்ற எண்ணம் பெருக்கெடுக்கும். அவன் தேவை முடிந்ததும், எளிதாக தூக்கி எறிந்து ஆண் என்னும் திமிருடன் தலைநிமிர்ந்து நிற்கிறான். நிச்சயமாக இதற்கு பிறகும் மானங்கெட்ட கூட்டம் அவனுக்கு பெண் கொடுக்க முன்வரவே செய்யும். காரணம் இச்சமூகமானது, ஆண் என்றால் குத்திவிட்டு கம்பிரமாக நிற்கும் முள்ளாகவும், பெண்ணை கிழிந்தால் தூக்கி எரியும் சேலையாகவும் தான் பார்க்கிறது. மொத்த இழிவும் பெண்ணிற்கே. இதற்கு பிறகும் அவனுக்கு வாழ்க்கை இருக்கிறது.. ஆனால் அவளுக்கு? அந்த தைரியத்தில் தானே போலிஸ்ல கம்ளைன்ட் கொடு என சொல்கிறான்? ஓட்டை நிறைந்த சட்டமும், இந்த ஆணாதிக்க வெறிபிடித்த சமூகமும் அவனை காப்பாற்றும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் அவன்!

ஆனால் அப்பெண்????? வீதி ஏறி போராடி பலன் கிடைத்ததா? இல்லை டிவியில் லட்சுமி ராமக்கிருஷ்ணனிடம் பஞ்சாயத்து வைத்ததால் வாழ்வு கிடைத்துவிட்டதா? அவமானத்தையும் ,இழிவையும் தவிர என்ன எஞ்சியிருக்கிறது இப்போது? தன் வாழ்க்கையும் வீணாக்கியது போதாதென்று தன் தங்கையையும் காதலிக்க வைத்து , ஊர் உலகம் பார்க்க குடும்பத்தை பார்த்து காரிதுப்ப வைத்ததை தவிர என்ன என்ன சாதித்துவிட முடிந்தது இப்போது? நம்மை சுற்றி பின்னப்பட்டிருக்கும் சதிவலை பற்றிய எச்சரிக்கைகள் அவ்வபோது சொல்லப்பட்டும் சிக்கிதான் சீரழிவேன் என்று போகும் பெண்களை கண்டு பரிதாபம் கொள்ள மனம்வரவில்லை. இதை தொடர்ந்தே இந்த உண்மை சம்பவத்தை இங்கு பகிர்கிறேன்.

ஏமாந்த பெண்களுக்கும் இனி ஏமாற காத்து இருக்கும் பெண்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மேற்க் கண்ட சம்பவமும், இனி கீழ் வரும் சம்பவமும் ஒரு விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

என் வீட்டிற்கு அருகில் மிகவும் நடுத்தர வசதி கொண்ட ஒரு முஸ்லிம் குடும்பம் வசித்து வந்தனர். எல்லாரையும் போல் இந்த தாயும் தான் படிக்க முடியாத, அடைய முடியாத உயரத்தை தன் பிள்ளைகள் அடைய வேண்டும் என்று விரும்பினார்.

தன் பிள்ளைகளை உயர்ந்த படிப்பில் படித்து, நல்ல நிலைமையை அடைய பேங்க் லோன் அப்படி இப்படின்னு கடன, வுடன வாங்கி படிக்க வைத்தார்கள். வீட்டில் இருந்து படித்தால் வீட்டு வேலைகளுக்கு இடையில் படிப்பில் கவனம் சிதறும் என்று, உயர்ந்த செலவில் நல்ல பள்ளி, கல்லூரிகளில் ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்தனர். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்துள்ளோம் என்பதை மறந்து அவர்களும் எந்த வித கட்டுப்பாடும் இன்றி நட்பு வட்டாரத்தில் சுற்றி சுழன்டனர். மொபைல், கம்பூட்டர் என்று அவர்கள் வசதியை பெருக்கி கொடுத்தனர்.

மூன்று பெண் பிள்ளைகளும் நன்றாக, மிகவும் சுதந்திரமாக படித்தனர். இரண்டாம் டிகிரி முடிக்கும் நிலையிலேயே முதல் பெண்ணிற்கு நல்ல வரன் வந்தது. வந்த மாப்பிள்ளையோ பெண்ணின் உயர்ந்த டிகிரிக்கு ஏற்றார் போல் வரதட்சனையும் தாரளாமாக கேட்டார்.

நன்கு படிக்க வைத்தது போல் சிறந்த வாழ்க்கையும் அமைத்து தர வேண்டும் என்று எண்ணிய அவர்கள் மேலும் கடனை வாங்கி திருமணத்தை முடித்துக் கொடுத்தனர் அவளின் பெற்றோர்கள். திருமணத்திற்கு பிறகு அவள் படித்த படிப்பிற்கு உயர் சம்பளத்தில் வேலையும் கிடைத்தது. மாதம் லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் அளவில் தன் மகள் உயர்ந்த நிலையில் உள்ளாள் என்று பெற்றோர்களுக்கோ ஆழ்ந்த பூரிப்பு. இந்த கானல் நீர் பூரிப்பை தவிர வேறு ஒன்றும் மிச்சமில்லை.

இதே போல் நமது இரண்டாவது மகளும் நன்கு படிக்க வேண்டும். உயர்ந்த சம்பளத்தில் வேலை கிடைத்து நமக்கு பொருளாதார ரீதியில் உதவ வேண்டும் என்று மனக் கோட்டை கட்டினர் அவர்களின் தாய். அவளும் தனது படிப்பை சிறப்பாக முடித்தார். தன் பெற்றோர் எண்ணியது போல் நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று சிந்தித்த அவள் பல இடங்களில் வேலை தேடினார்.

அவள் நினைத்தப் படி தான் வசிக்கும் ஊரில் இருந்து ஒரு நாள் தூரம் பயணிக்கும் தொலைவில் ஒரு வேலையை கண்டெடுத்தாள் அவள் நண்பர்களின் உதவியால்.

பெண் பிள்ளையை இவ்வளவு தொலைவு தனியாக அனுப்புவதை பற்றி கொஞ்சமும் சிந்திக்காத பெற்றோர் அவள் விருப்பப்படி வேலைக்கு அனுப்பினர் பணம் வரும் என்ற ஆசையில். மாதம் ஒரு முறை, இரு முறை, விஷேசம் என்று தன் வீட்டை எட்டிப் பார்த்த அவள் தான் வேலை பார்க்கும் ஊரில் சுதந்திரப் பறவையாக பறந்தாள்.

முதல் பெண்ணைப் போல் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியவில்லை என்றாலும் சில ஆயிரங்கள் சம்பாதித்து அனுப்பினாள். பெண் பிள்ளையை பணயம் வைத்து பணம் வருகிறது என்று ஒரு துளி கூட அவர்கள் வருந்தவும் இல்லை, அதை தடுத்து கண்ணியத்தை காக்க முயற்சிக்கவும் இல்லை.

பணம் வந்தால் போதும் என்ற மன நிலையிலும், “கேட்பவர்களுக்கு எங்கள் பிள்ளை மேல் எங்களை விட நம்பிக்கை யார் வைக்க முடியும்” என்று அசட்டு பதிலும் கூறி வந்தனர்.

காலங்கள் கடந்தன கல்யாண வயதையும் தாண்டி! பார்க்கும் மாப்பிள்ளை எல்லாம் இவன் சரி இல்லை அவன் சரி இல்லை என்று அவளும் காலத்தை கடத்தினாள். ஒரு நாள் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீடோ இவளை பிடித்து விட்டதாகவும், கல்யாணத்தை எப்பொழுது வைத்துக் கொள்ளலாம் என்று பேசும் அளவிற்கு அவளது திருமணம் அருகில் வந்தது. மாப்பிள்ளை வீட்டாருக்கு பதில் சொல்வதாக திருப்பி அனுப்பி வைத்து அவளது பதிலுக்காக காத்திருந்த வேளையில் அவளோ ஒன்றும் சொல்லாமல் தன் வேலையை தொடர தொடர் வண்டியை பிடித்தாள்.

ஒரு மாதம் ஆனது, இரண்டும் மாதம் ஆனது, மூன்று மாதங்களாக வீட்டு பக்கம் எட்டி பார்க்காத, பதிலும் தராத மகளை எண்ணி தவித்தனர். தொலைபேசியின் இணைப்பும் துண்டித்து இருந்தது.

இத்தனை நாள் அவள் எங்கு வேலைப் பார்க்கிறாள், என்ன வேலை பார்க்கிறாள், யாருடன் வசிக்கிறாள் என்று எண்ணாத பெற்றோர் சற்று பதட்டம் கொள்ள ஆரம்பித்தனர். என்ன செய்வது என்று அறியாமல் இருந்த வேளையில் தான் அந்த கடிதம் அவர்களுக்கு எட்டியது.

படிப்பறிவில்லாத பெற்றோர்களோ இது என்னவென்று அறிய தனது மூன்றாவது மகளை நாடினார்.

அதைக் கண்ட அவள் திடுக்கிட்டாள். பேச்சு வராது ஊமையாகினாள். கதறினாள். என்னவென்று அறிய காத்து இருந்த அவளது பெற்றோர்களோ என்ன என்னவென்று கதறிக் அழுதனர்.

அந்தக் கடிதமோ, சர்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் முடித்துக் கொண்டதற்கான சான்றிதழ், உடன் ஒரு லட்டரும் எழுதி இருந்தாள்.

“எனக்கு நீங்கள் பார்த்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை, பதிலை எண்ணி காத்து இருந்த உங்களிடம் அதை சொல்லவும் வார்த்தைகள் இல்லை. அதனால் தான் நான் போனில் கூட உங்களிடம் தொடர்பு கொள்ளவில்லை. காரணம் நான் என்னுடன் கல்லூரியில் படித்த என் தோழனை கடந்த ஐந்து வருடமாக காதலித்தேன், திருமணம் முடித்துக் கொண்டேன்.

அவர் மாற்று மதம் என்பதால் உங்களிடம் சொல்ல தயக்கமும், உங்கள் எதிர்ப்பை எண்ணி பயமும் வந்தது. அதனால் என்னுடைய வாழ்க்கையை உங்கள் சம்மதமின்றி நானே தேடிக் கொண்டேன். எனக்கு திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கடந்து விட்டன.

உடனே தெரிவித்தால் என்னை அவரிடம் இருந்து பிரித்துவிடுவீர்கள் என்ற பயம் என்னை ஊமையாக்கியது. சிறிது நாட்கள் கழியட்டும் என்று காத்து இருந்தேன். இனி என்னை தேட வேண்டாம், அவரை நம் மதத்திற்கு அழைத்து வர முயற்சிப்பேன், அவர் சம்மதித்தால் அவரை உங்கள் மருமகனாக நம் வீட்டிற்கு அழைத்து வருவேன். இல்லையெனில் உங்களுடானுனான உறவை துண்டித்துக் கொள்வேன் உங்கள் சம்மதம் வரும் வரை”.

கடிதம் முடிக்க முற்றுப் புள்ளி இட்டவள் தன் குடும்ப மானம் கொடி கட்டி பறக்க ஆரம்பம் இட்டாள். இன்று அந்த குடும்பமே வெளியில் செல்ல முடியாமல், சகஜமாக மற்றவர்களுடன் பேச முடியாமல், கூனி குறுகி ஒரு கைதி போல் சில வருடங்களாக வீட்டுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர்.

அவளை நேரில் கண்ட நான் எழுப்பிய வினா? பக்கத்து வீட்டில் வசிக்கும் எனக்கே எத்தனை பெரிய ஏமாற்றம், கோபம், வருத்தம் வருகிறதென்றால், அப்போ உன் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு??

என் மனம் சொல்லியது “உன்னை கொல்லும் உரிமை எனக்கில்லை இல்லையெனில்.......”.

உன் குடும்பம் உன்னை, உன் காதலை ஏற்றுக் கொள்ளாது என நீயே முடிவு செய்தது ஒரு பக்கம் இருக்க, அவனை இஸ்லாத்தில் இணைக்காமல் திருமணம் முடித்துக் கொள்ள உன்னால் எப்படி முடிந்தது. உன் வரையறை இதுவானாலும் வல்ல இறைவன் வகுத்ததோ...
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல் குர்-ஆன் 2:221).

உன் பெற்றோர் மகள் என்ற பேரில் இத்தனை நாள் பாம்பிற்கு பால் வார்த்துள்ளனர். தான் அடைந்த கஷ்டத்தை தன் பிள்ளைகள் அடையக் கூடாது என்று நம்பிக்கையுடன் சுகமான பள்ளி, கல்லூரி வாழ்க்கை, விருப்படி வேலை, மொபைல், கம்ப்யுட்டர் என்று உன்னை ஆளாக்கிய உன் பெற்றோருக்கு நீ கொடுத்த பரிசு இது தானா? இன்று அவர்களோ கடனில் மூழ்கி பட்டினி, ஓடிப் போன மகளின் பெற்றோர்.

சிந்தித்தாயா????? வயதான உன் பெற்றோர் நிலை என்னாவது? உனக்கு பின்னால் இருக்கும் தங்கையின் வாழ்வு என்னாவது? உன்னை பற்றி விசாரிக்கும் ஊராற்கு என்ன பதிலுரைப்பது?

இத்தனை வருடம் உன்னை சுமந்து பெற்றெடுத்து, உன் சுக போக வாழ்விற்காக தன்னை உருக்கி மற்றவர்களுக்கு ஒளி கொடுக்கும் மெழுகு போல, அவர்களின் வாழ்வை உருக்கி உன்னை ஒளி கொள்ள செய்தனர். ஆனால் நீயோ???.

இஸ்லாத்தின் சட்டப்படி நீ ஒருவரை விரும்பவதும், வெறுப்பதும் அல்லாஹ்விற்காக இருக்க வேண்டுமே தவிர உன் சுய இன்பம் மற்றும் சுய வாழ்விற்காக இருக்க கூடாது என்பதை நீ உணரவில்லையா?? இஸ்லாம் போதித்தது இது தானா?? இவ்வுலக வாழ்வின் இன்பத்திற்காக உயிரினும் மேலான உன் இறைவனை நிராகரித்து, அற்ப வாழ்வை நீ தேர்ந்தேடுத்துள்ளாய். நபி(ஸல்) அவர்களின் வாக்கை ஒரு முறையேனும் வாசித்துப் பார்த்தாயா???

இதையே இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:-

எவரிடம் மூன்று தன்மைகள் இருக்கின்றனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை அடைவார்.

அவை: 

1.அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு மற்ற எல்லாவற்றையும் விட அதிக நேசத்திற்குறியோறாவது 

2. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது

3. தாம் நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல இறை மறுப்பிற்கு திரும்புவதை அவர் வெறுப்பது என அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ஆதாரம் புஹாரி எண்: 6941
ஆனால் நீயோ இறை வழிக்கும், நபி மொழிக்கும் மாற்றத்தை கொண்டு சுகம் என்று நினைத்து சுமையை கொண்டுள்ளாய். தாய், தந்தையை நிராகரித்துள்ளாய். உன் தங்கை வாழ்வை கேள்விகுறியாக்கியுள்ளாய். நம்பிக்கை என்ற ஆயுதத்தைக் கொண்டு மிகப் பெரும் துரோகம் செய்துள்ளாய். இன்று நீ செய்த துரோகத்தை நாளை உன் பிள்ளை உனக்கு செய்யாது என்பதற்கு என்ன சான்று?


நீ நல்லோர் கூட்டத்தில் இருந்தால் அல்லாஹ் உனக்கும் உன் கணவருக்கும் நல் வழி காட்டுவானாக!!!

இன்று காதல் என்னும் பேரில் பெற்றவர்களை மறந்து இரு குடும்பத்தில் பேசி தீர்க்க வேண்டிய அந்தரங்க விஷயங்களை நீதி தேடி டீ.வி, நீயூஸ் பேப்பர் என்று ஊரே அலங்கோலப் பட செய்கின்றனர்.

இதனால், தான் செய்த தவறால் நம் பெற்றோருக்கு தலைக் குனிவை ஏற்படுத்துகிறோம், உடன் பிறவந்தவர்களின் வாழ்க்கையை கேள்வி குறி ஆக்குகிறோம் என்று எந்த குற்ற உணர்வு இல்லாமல் சுய நலமாக சிந்திக்கும் இவர்களை என்ன செய்வது???

பல வருடங்கள் காதலித்து, ஊரைச் சுற்றி அலையும் ஆண் பெண்ணுக்கு ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்பட்டவுடன் பிரிந்து செல்வதும், வேறு ஒருவரை திருமணம் செய்துக் கொள்வதும், கற்பம் அடைய செய்து காதலித்து பெண்ணை ஏமாற்றி கதறி அழ வைப்பதும், தன்னை மணம் செய்து கொண்டவருக்கு துரோகம் செய்வதும், கரை பட்ட உடையை மாற்றுவது போல் ஒரு நிமிடத்தில் செய்து விடுகின்றனர்.

உண்மைக காதல் என்று எண்ணி சில கயவர்களின் பசிக்கு ஆளாகும் பெண்களே என்று உணரப் போகிறீர்கள் காதல் என்பது கானல் நீர், அவர்களின் ஆசைக்கு நீங்கள் ஒரு போகப் பொருள் என்பதை...

இன்று நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நாளை மறுமை என்னும் நிரந்தர வாழ்வில் பதில் அளிக்க வேண்டும் என்பதை அனைவரும் மறந்து விடுகின்றனர். யாரும் காணாமல் அந்நிய ஆணுடன் ஊரை சுற்றி தவறு செய்தாலும் நம்மை படைத்த இறைவன் நம் அனைத்துக் காரியங்களும் பார்த்துக் கொண்டு இருக்கின்றான் அதற்கான தண்டனை காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? (அல் குர்-ஆன் 6:32)

இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு உள்ளது, அது போல் பெற்ற பிள்ளைகளை பேணி சரியான முறையில் வளர்ப்பது பெற்றோரின் கடமை மற்றும் பொறுப்பு ஆகும்.

பெண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்களே உஷார்!

Ø பெற்றோர்கள் தங்கள் பிள்ளையுடன் ஒரு மேலதிகாரி, ஊழியன் உறவு போல் அல்லாமல் நட்புடன் பழக வேண்டும். சிறந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். நாம் ஒரு சிறந்த அன்பு நிறைந்த பெற்றோராக நடந்துக் கொள்ளும் பட்சத்தில் அவர்கள் வேறு ஒருவரிடம் அன்பைத் தேடி செல்ல மாட்டார்கள்.

 Ø அளவுக்கு அதிகமாக வெறுப்பைக் காட்டுவது, திட்டுவது, சந்தேகிப்பதும் கூடாது.

Ø சிறு வயது முதல் உலக கல்வியை கொடுக்க முற்படும் நாம் மார்க்க கல்வியை கொடுக்க தவறுவதே இது போன்ற விளைவுகளை கொடுக்கிறது.

Ø ஐந்து வேலை தொழுகையை வலியுறுத்துவது அவர்களின் எண்ண அலைகளை கட்டுப் படுத்த உதவும். மனதை நிதானப்படுத்தும், பொறுமையைக் கொடுக்கும். மானக்கேடான விஷயங்களில் ஈடுபட நம்மை சிந்திக்க வைக்கும்.

இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். (அல் குர்-ஆன் 29: 45)

Ø மாத பயான்களுக்கு அழைத்து செல்வதும், இபாதத் நிறைந்த பெண்களுடன் பழக வைப்பதும் மனதில் ஒரு மாற்றத்தை கொடுக்கும். தவறான எண்ணங்கள் உதித்தால் களைய உதவும்.

Ø அந்நிய ஆண்களுடன் பழகும் வரைமுறையை இஸ்லாம் கற்றுத் தரும் முறைப்படி கற்றுத் தர வேண்டும்.

Ø நாம் படும் கஷ்டத்தை, கடனை நம் பிள்ளைகளுக்கு தெரிவிப்பது அவர்களை சூழ்நிலை அறிந்து நடக்க, உயர உதவும்.

Ø பெண் பிள்ளைகளை வளர்க்கும் நாம் சுதந்திரம் என்ற பேரில் அதீத நம்பிக்கையை கொண்டு வளர்ப்பது தவறல்ல. ஒரு பருவம் வந்தவுடன் அவர்களது அனைத்து செயல்களையும் உற்று கவனிப்பது பெற்றோரின் கடமையே. அது சந்தேகம் அல்ல அவர்கள் மீதுள்ள அக்கறை என்பதை விளங்க வேண்டும்.

Ø பருவம் வந்தவுடன் தனிமையை (ஹாஸ்டலில் படிக்க வைப்பது, வெளியே தங்க வைப்பது) கொடுப்பது அவர்களின் தவறான எண்ணத்திற்கு நாமே வழி ஏற்படுத்தி கொடுப்பதற்கு சமம். மாறாக நம்பகமான உறவினர் வீட்டிலோ அல்லது அருகில் உள்ள பள்ளி கல்லூரிகளிலேயே படிக்க வைக்கலாம். நம் கண் பார்வையில் வைத்துக் கொள்வது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் உகந்தது.

Ø அவர்களின் நட்பு வட்டத்தை நாமும் தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம்.

Ø கல்யாணத்திற்கு முன்பு தனியாக வேலைக்கு அனுப்புவதும், வெளியே தங்க வைப்பதும் சிறந்ததல்ல. இவ்வாறு செய்வது அவர்கள் தவறு செய்வதற்கு ஏதுவாக பெற்றோர்களே வழியமைத்து வாழ்த்துவதற்கு சமம்.

நம்பிக்கை என்ற பேரில் இன்று தானும் வழி தவறி, தன் குடும்பத்தையும் சிதைத்த இவளை போல் நாளை எத்தனை பேரோ. தான் எடுக்கும் ஒரு நொடி முடிவிற்கு முன், தன்னை சார்ந்தவர்களை சிந்தித்து பார்ப்பதும், பாதகம் ஏற்படாமல் நடந்துக் கொள்வதும் ஒவ்வொருவரின் கடமை.

பெற்றோர்களே!!! உங்கள் குழந்தைகளின் தலைநிமிரும் வாழ்க்கைக்கான பாதையை ஏற்படுத்த பாடுபடுங்கள்.. அவர்களின் வாழ்வு செழுமைக்கு உங்களின் கண்காணிப்பும் அறிவுரையும் தான் முதல் தேவை.

“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!  (25:74)
உங்கள் சகோதரி
யாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன்

22 comments:

 1. மாஷா அல்லாஹ் அருமையான மற்றும் மிக தேவையான பதிவு

  ReplyDelete
 2. //////உண்மைக காதல் என்று எண்ணி சில கயவர்களின் பசிக்கு ஆளாகும் பெண்களே என்று உணரப் போகிறீர்கள் காதல் என்பது கானல் நீர், அவர்களின் ஆசைக்கு நீங்கள் ஒரு போகப் பொருள் என்பதை...////// காமம், காதல்என்ற பெயரில் கண்ணை மறைக்கும்போது..... சிந்திக்கும் திறனும் மழுங்கிப்போய்விடுகிறதே.....
  சரியான நேரத்தில் ஓர் எச்சரிக்கை பதிவு

  ReplyDelete
 3. நல்ல பெற்றோர் மனதை வேதனைக்குள்ளாக்குவது மன்னிக்கமுடியாத குற்றமே!...

  வரதட்சணை வாங்கிய மூத்த மருமகன் இஸ்லாத்துக்கு எதிராகத்தானே வாங்கினான்?..அதையும் ஒரு வார்த்தை கண்டித்திருக்க வேண்டாமா?...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கமென்டிற்கும் மிக்க நன்றி..

   நீங்கள் சொல்வது சரி தான் சகோதரரே... ஆனால் இந்த பதிவின் பின்னணி வேறு என்பதால் அதை பற்றி நான் பேசவில்லை.

   இது பெற்ற பிள்ளைகளால் ஏமாற்றப்படும் பெற்றோர்களுக்கும் , இனி ஏமாற காத்து இருக்கும் பெண்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே எழுதியது..

   இனியாவது மாறுமா ஏமாறும் பெண் கூட்டமும், ஏமாற்றும் சில ஆண் கூட்டமும்.. :((((((

   தங்கள் வீட்டிலும் பெண் பிள்ளைகள் உள்ளார்கள் என்று ஒரு`நிமிடம் யோசித்தால் அடுத்தவர்கள் வாழ்வை கேள்வி குறியாக்க மனம் வராது...

   Delete
 4. நானும் சொல்வதெல்லாம் உண்மை பார்த்தேன் .. நீங்கள் சொன்னது மாதிரி உறைந்தே விட்டேன்... முஸ்லிம் சமூகம் இப்படி ஒரு கேவலமான நிலைக்கு.. உட்பட்டிருப்பது பார்க்க இரத்தம் கொதித்தது.......7 வருடமாக ஒரு இந்துவைக் காதலித்து . தன்னை இழந்தது மட்டுமல்லாம்ல.. ஊடகத்துக்குள் நியாயம் கேட்டு வந்து முஸ்லிம் சமூகத்தை ஏலம் போட்ட அந்தப் பெண்ணை என்ன செய்யலாம்..? ராட்சசன் அவன் காலில் விழுந்து வாழ்வுப் பிச்சை கேட்டு அவள் கெஞ்சுவதும் என்ன கேவலம்....?
  இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன....???இதற்கு யார் பொறுப்பு..?
  இஸ்லாமிய அடிப்படை அறிவு இல்லை.. பெற்றோர் அந்தப் பக்கமான கண்களை பிள்ளைகளுக்கு திறந்து விடவில்லை.......இறையச்சம் , இறைநம்பிக்கை இல்லை..
  தலையில் சீலையைத் துாக்கி போட்டால் மட்டும் இஸ்லாமியர் ஆகிட முடியுமா..?.
  இதற்கெல்லாம் பெற்றோரும் பதில் சொல்லும் கடமை இருக்கிறது....
  மிகக் கேவலமான ஒரு விசயத்தை பார்த்தில் என் நித்திரை கெட்டுப் போனது தான் மிச்சம்...
  நான் இலங்கையைச் சேர்ந்தவள்.. லண்டனில் வசித்து வருகிறேன்....

  சகோதரி இந்த மாதிரியான நிகழ்வுகள் இந்தியாவில் சர்வசாதாரணமாக வே நடக்கிறதே.. இதற்கு ஒரு விடிவு இல்லையா..? அந்நியக் கலாச்சாரத்துடன் கலந்துவிட்டதால் அடிப்படை மார்க்க அறிவு கூட சொல்லித்தராமல் பெற்றோர் வள்ரக்கிறார்களே....இதற்கு என்ன தீர்வு ..?

  ReplyDelete
 5. சுப்ஹனல்லாஹ். தக்க தருணத்தில் வந்த நல்லதொரு பதிவு இது. இதை நிறைய பேரிடம் கொண்டு சேர்க்க அல்லாஹ் உதவி புரிவானாக.

  நானும் ஹாஸ்டலில் இரண்டு வருடங்கள் படித்தவள்தான். அந்த அனுபவத்தில் சொல்கிறேன், அல்லாஹ்வின் அருள் இல்லாமல் இருந்திருந்தால் வழிகேட்டில் தவறிப்போவதற்கு ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. எனவே, ஆண்பிள்ளையோ, பெண்பிள்ளையோ குடும்பத்தை விட்டு உலக வாழ்க்கைக்காக வெளியிடம் தங்கி படிப்பதை நான் யாருக்கும் பரிந்துரைக்கவே மாட்டேன்.

  ReplyDelete
 6. மாஷா அல்லாஹ்! காலத்துக்கு ஏற்ற சிறந்த ஆக்கம் .பெற்றோர் தம் பிள்ளைகள் சிறந்த முறையில் கல்வி கற்று நல்ல ஒரு நிலைக்கு வர வேண்டும் என்று எதிர்பார்ப்பது சாதாரணம் .என்றாலும் நமது வாழ்க்கை எந்த ஒரு நிலையிலும் இஸ்லாம் சொல்லும் முறையிலே அமையனும் . வாழ்க்கையில் எதை பெற்றாலும் அது ஹலாலா இருக்கணும் .

  இன்று ஓர் இருவர் இப்படி செய்யும் தப்புகளால் முழு சமூதாயமும் தலை குனிய வேண்டிய நிலை .நன்றாக படித்து இஸ்லாம் சொல்லும் முறையில் தொழில் செய்து பெற்றோர்களையும் கைவிடாது தன் வாழ்க்கையும் சிறந்த முறையில் அமைத்துக்கொண்டு வாழும் நிறைய சகோதரிகளை நம் சமுகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் .

  நாம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக .

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  மாஷா அல்லாஹ்..இன்றைய தினத்திற்கு தேவையான விழிப்புணர்வு பதிவு.இது போல எத்தனை கதைகள் தான் கேட்பது..அடிப்படையில் ஒரு பெண் ஆனவள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறியாதவர்கள் தான் இப்படி பட்ட கேவலமான செயலை செய்கிறார்கள்..

  மதம் என்பதைத் தாண்டி ஒரு பெண் என்பவள் பொக்கிஷமாக பாதுக்காக்க வேண்டியதை ஒன்றை எளிதாக பறிமாறிக் கொள்வதையெல்லாம் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

  வெறும் இச்சைக்கான பொருளா ஒரு பெண் என்பவள்..? தன் தகுதியையும், தனக்கான சுயமரியாதையையும் தெரியாத பெண்கள் தான் இப்படி பட்ட வழியை நாடுவது..

  காதலுக்கும், காமத்துக்கும் வித்யாசம் தெரியாத மடப்பெண்..வாழ்வை கேள்விகுறியாக்கி நிற்கிறது..இப்படிப் பட்ட செயல்களை செய்து கொண்டிருக்கும் பெண்களுக்கு..இந்த பெண் ஒரு உதாரணம்..எப்படி ஒரு பெண் இருக்கக் கூடாது என்பதற்கு..

  நல்லதொரு பதிவுக்கு நன்றி யாஸ்..தொடர்ந்து இது போன்ற பதிவுகளை எழுத வாழ்த்துக்கள்..:)

  ReplyDelete
 8. மாஸா அல்லாஹ். நல்ல கட்டுரை. நல்ல முதிர்ச்சியான அறிவுரைகள். உங்களின் இந்த முயற்சிக்கு இறைவன் கூலி வழங்கட்டும்.

  இரண்டவாது, அந்த ஜி டிவி விடியோவை நான் பார்க்க வில்லை. அந்த விடியோவுக்கு வந்த கமெண்ட்களில் இருந்தே என்ன நடந்த்து என்று தெரிந்து கொண்டேன்.

  இப்படி பட்டவனிடம் மீண்டும் வாழ்கையைத் தர சொல்லி கேட்பது இன்னொரு தற்கொலைக்குச் சமம். அந்தப் பெண் நடந்த தவறுக்கு இறைவனிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டு நேர்வழிக்குத் திரும்பி, பல நல்ல காரியங்கள் செய்து, இது போன்ற தவறுகளைத் தடுப்பதற்காக பல விழிப்புணர்வை ஏற்படுத்துவதை ஒரு நோக்கமாக வைப்பது போன்று தன்னுடைய வாழ்கையை பயனுள்ள வழியில் கழிக்க இன்னும் வாய்ப்புள்ளது.

  ReplyDelete
 9. Very good presentation sister YASMIN Its applicable to all irrespective of RELIGIOEN.Hatsoff to YOU.

  ReplyDelete
 10. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக உங்களுடைய பணிகளை மேலும் சீராக்குவனாக எந்த நோக்கத்திற்காக இதை பதிவுசெய்தீர்களோ அந்த நோக்கத்தை அல்லாஹ் நிறைவேற்றுவனாக !

  ReplyDelete
 11. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.அல் குரான் 3:104// அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக உங்களது பணிகளை சீரக்குவனாக எந்த நோக்கத்திற்காக இதை பதிவு செய்தீர்களோ அந்த நோக்கத்தை அல்லாஹ் நிறைவேற்றுவனாக !

  ReplyDelete
 12. அந்தக் காணொளியைக் கண்டேன். உங்கள் பதிவில் கண்ட இன்னொரு பெண்ணின் கதையையும் படித்தேன். நான் (இஸ்லாமியப்) பெண்கள் மீது வைத்திருந்த மதிப்பு இன்னும் உயர்ந்து விட்டது. அவர்கள் தவறு செய்ததாகத் தோன்றவில்லை.

  கேடுகெட்ட ஆணாதிக்க கேவலங்களையும் படம்பிடித்துக் காட்டியுள்ளது. நான் சுருக்கமாகச் சொல்ல வருவது இந்தப் பெண்(கள்) சிலர் சொல்வது போல இஸ்லாமிய சமூகத்தைக் கேவலப்படுத்தவில்லை.

  //வரை உங்கள் மருமகனாக நம் வீட்டிற்கு அழைத்து வருவேன். இல்லையெனில் உங்களுடானுனான உறவை துண்டித்துக் கொள்வேன் உங்கள் சம்மதம் வரும் வரை”. //

  இதைத் தவிர அவளுக்கு வேறு நேர்மையான வழி என்ன இருக்கிறது ? பெண்களுக்காக ஆண்கள் மதம் மாறுவார்களா ?

  //“உன்னை கொல்லும் உரிமை எனக்கில்லை இல்லையெனில்.......”. // ???

  உரிமை இல்லாமலும் பலர் கொன்று கொண்டும் கொலை செய்து கொண்டும்தானே இருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies

  1. /இதைத் தவிர அவளுக்கு வேறு நேர்மையான வழி என்ன இருக்கிறது ? பெண்களுக்காக ஆண்கள் மதம் மாறுவார்களா ?

   /நான் (இஸ்லாமியப்) பெண்கள் மீது வைத்திருந்த மதிப்பு இன்னும் உயர்ந்து விட்டது. அவர்கள் தவறு செய்ததாகத் தோன்றவில்லை./ அப்ப ஓடிப்போய் திருமணம் செய்வது பெண் முன்னேற்றத்தின் அடையாளமா... பெற்றோர் சொல்பவர்களைத் திருமணம் செய்பவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா...தன் பெற்றோரின் நம்பிக்கையைத் தொலைத்து விட்டாள்... இன்னும் சொல்லப்போனால் அவர்களை மூன்று மாதங்களாகத் தவிக்கவிட்டிருக்கிறாள்... அவர்களை ஏமாற்றிவிட்டாள். இத்தனை தவறுகளைச் செய்திருக்கிறாள்... இதெல்லாம் உங்க கணக்கில் தவறில்லையா..நேற்று வந்தவனுக்காகத் தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களை துச்சமெனக் கருதி உறவைத் துண்டித்து விடுவேன் என்றால் அதுதான் நேர்மையான வழியா... முதல் கோணலைத் திருத்திக் கொள்ளாவிட்டால் முற்றிலும் கோணலாகிவிட வாய்ப்புண்டு என்பதற்குத்தான் முதல் வீடியோவை படிப்பினையாகக் கூறப்பட்டிருக்கிறது.

   /2:221. (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்./

   ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமைத்தான் கண்டிப்பாகத் திருமணம் செய்யவேண்டுமென இறைவன் சொல்லியிருக்கிறான் எனில் அதில் உள்ள நன்மைகளைப் புரிந்து கொள்ளாதது அப்பெண்ணின் ஈமான் பிந்தங்கியிருப்பதையே காட்டுகிறது....இறைக்கட்டளையை நிறைவேற்றியிருந்தால்அதன் மூலம் மறுமையில் அவளுக்காக இறைவன் தயார் செய்து வைத்திருக்கும் உயர் அன்பளிப்புகளைத் தவறச் செய்து விட்டாள். இது மார்க்கத்தின் மீது அவளுக்கிருக்கும் அறிவின்மையைக் காட்டுகிறது...

   எல்லாவற்றிற்கும் மேலாக /பெண்களுக்காக ஆண்கள் மதம் மாறுவார்களா ?/ இது முற்றிலும் தவறான ஒரு புரிதல்... ஒரு பெண் ஆணுக்காகவோ ஒரு ஆண் பெண்ணுக்காகவோ இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அவசியமில்லை.. அது இஸ்லாத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தால் நான் சொல்ல வருவது புரியும். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு இறைவன் ஒருவனுக்காக, அவன் தரும் நன்மைகளுக்காக, மறுமைக்கு அஞ்சி ஏற்றுக்கொள்தலே முழுமுதற்காரணமாக இருக்கவேண்டும். இவ்வுலக இன்பங்களுக்கீடாகவோ குறைவாகவோ இஸ்லாத்தை ஒருவர் கருதினால் அவரது மார்க்கப்பற்று முதலில் அடிபட்டுப் போகிறது. இஸ்லாம் தனக்களித்திருக்கும் சலுகைகள் அனைத்தையும் அனுபவித்துவிட்டு முஸ்லிம் எனும் போர்வையில் மற்ற முஸ்லிம்களுக்கு ஏன் தவறான எடுத்துக்காட்டாக வேண்டும் என்பது தான் ஆசிரியரின் ஆதங்கம்.

   /கேடுகெட்ட ஆணாதிக்க கேவலங்களையும் படம்பிடித்துக் காட்டியுள்ளது./ ஆம்... இருவர் மீதும் தவறிருப்பது ஒருவரும் மறுப்பதற்கில்லை... இதற்குப் பிறகு அந்த ஆணின் வாழ்வு எங்ஙனம் அமையும்... அந்தப் பெண்ணின் வாழ்வு எந்ததி திசையில் பயணமாகும் என்பதுதான் அனைவரின் கேள்வி....ஒரு முஸ்லிம் ஆண் இதுபோல் பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்வதும் கண்டனத்திற்குரியது தான்.ஆண் என்பதால் இறைக்கட்டளையை மீறும் உரிமை அவனுக்கு ஒருபோதும் கிடையாது. திமிரெடுத்த சில ஆண்கள் செய்வதை எல்லாம் ஏட்டிக்குப்போட்டியாகப் ’பெண்ணுரிமை போற்றுவோம்’ எனும் சித்தாந்தத்தில் பெண்களும் செய்யத்தொடங்கினால் உலகம் என்னவாகும்?

   //உரிமை இல்லாமலும் பலர் கொன்று கொண்டும் கொலை செய்து கொண்டும்தானே இருக்கிறார்கள். //

   ஆம்... இதே கருத்தை ஆசிரியரைப் பார்த்து யாரும் சொல்லிவிடக்கூடாது என்றுதான் இறைவனுக்குக் கட்டுப்பட்டு தன் கோபத்தை அடக்கிக்கொள்கிறார்.... இறைவன் சிறந்த வழியைக் காட்டித்தந்தாலும் அதனை மேம்போக்காக எடுத்துக் கொண்டதன் பேரில் நமக்கிருக்கும் ஆதங்கத்தை/கருத்துக்களை/தவறைத் திருத்திக்கொள்ளும் வழிகளை நாம் கூறத் தான் முடியும். அதற்கு மேல் உரிமை எடுத்துக்கொண்டால் இவ்வுலகில் ஒருவரையொருவர் வெட்டி சாய்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

   Delete
  2. ஓடிப்போவது பெண் முன்னேற்றமல்ல. விரும்பியவரை மணப்பது பெண்ணின் அடிப்படை உரிமை. அவள் மதத்தை மீறிவிட்டாள்தான். காதல் மதத்தை விட வலிமையானது. என்ன செய்ய ? அவள் பெற்றோரை ஏமாற்ற வேண்டுமென்று ஓட வில்லை. காதலைப் பிரித்து விடுவார்கள் என்று அஞ்சித்தான் செய்திருக்கிறாள். பெற்றோர் வருந்தியளவுக்கு அவளும் வருந்தியிருப்பாள். எப்படிச் சொல்வதென்று தெரியாமல் தவித்திருக்கிறாள். தம் மதத்திற்கு அழைத்து வர முயற்சிப்பேன் என்று கூறியிருக்கிறாள். பொதுவாக காதல் திருமணங்களில் பெண்கள்தான் மதம் மாறுவார்கள். ஆனால் இவள் இஸ்லாமியப்பற்றுள்ள பெண்ணாக இருப்பதால்தான் கணவனை மாற்ற முயற்சிப்பேன் என்கிறாள். அதனால்தான் மதிப்பு கூடி விட்டது என்றேன்.
   /பெண் ஆணுக்காகவோ ஒரு ஆண் பெண்ணுக்காகவோ இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அவசியமில்லை. இஸ்லாத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தால் நான் சொல்ல வருவது புரியும்// அறிவேன். முஸ்லிமைத் திருமணம் செய்ய முஸ்லிமுக்கு மட்டும்தான் அனுமதி என்றதால்தான் நான் ஆண் மதம் மாறுவானா என்று கேட்டேன்.


   //இஸ்லாம் தனக்களித்திருக்கும் சலுகைகள் அனைத்தையும் அனுபவித்துவிட்டு// இதைப் பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா ? எவைகளை அனுபவித்து விட்டு தவறான முன்னுதாராணமானாள் ?

   Delete
  3. /விரும்பியவரை மணப்பது பெண்ணின் அடிப்படை உரிமை. // ஆம்...இஸ்லாத்தில் திருமணத்திற்கு மணமகனின் சம்மதத்திற்கு ஈடாக பெண்ணின் சம்மதமும் பெற வேண்டியது அவசியம். பெற்றோரிடம் தன் விருப்பத்தைக் கூறி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் அவள் மீதிருக்கும் பழி குறைந்திருக்கும்... தன் கணவனை இஸ்லாத்திற்கு வரச்செய்வேன் என இப்பொழுது கூறுகிறாள்... ஒருவேளை அவன் வர மறுத்துவிட்டால் அவளின் கதி???... /பிரித்து விடுவார்கள் என்று அஞ்சித்தான் செய்திருக்கிறாள்./ மேற்கண்ட வீடியோவின் தொடர்ச்சியாக இவள் வாழ்வும் ஆகிவிடுமோ எனும் அச்சம் நம் அனைவரையும் தொற்றிவிட்டது மறுக்கமுடியாது

   Delete
  4. ///இஸ்லாம் தனக்களித்திருக்கும் சலுகைகள் அனைத்தையும் அனுபவித்துவிட்டு// இதைப் பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா ? எவைகளை அனுபவித்து விட்டு தவறான முன்னுதாராணமானாள் ? /

   இஸ்லாத்தில் பெண்களுக்கு இருக்கும் உரிமைகளை விவரிக்கும் வாய்ப்பை அளித்த இறைவனுக்கே புகழனைத்தும். எடுத்துக்காட்ட பல உதாரணங்கள் இருந்தும் பதி(லி)வின் நீளம் கருதி சிலவற்றை மட்டும் முன்வைக்கிறேன்.

   81:8. உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
   81:9. “எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று-

   பெண் குழந்தை எனத் தெரியவந்தாலே கர்ப்பத்திலேயே கலைத்துவிடும் கூட்டத்தினரிடம் இருந்து “உங்கள் பெண்மக்களை உயிருடன் புதைக்காதீர்கள்’ என இறைச்சட்டம் உள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம்.

   ”நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ, அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம் என்று சொல்லி தமது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள் முஸ்லிம் 5127 ”

   ஆண்குழந்தைக்குக் கூட இப்பேற்பட்ட பாக்கியம் கொடுக்கப்படவில்லை. அவளது பெற்றோருக்குச் சுவனத்திற்குக் கடவுச்சீட்டாகப் படைத்து பெருமைப்படுத்தியிருக்கிறான் இறைவன்.


   இப்படி உடை அணிந்தால் தான் நீ அழகாகத் தெரிகிறாய் என பெண்ணை மூளைச்சலவை செய்து அவளது உடையைக் கூட அவள் விருப்பத்தின் பேரில் அணிய விடாமல் தடுக்கப்பட்டிருக்கும் பெண்களை “உன் உடலை மறைக்கும் இந்த உடை அணிவது உனக்கு கண்ணியத்தைக் கொடுக்க வைக்கும்... அந்தக் கண்ணியமே அழகு” என நல்வழிகாட்டியுள்ளது இஸ்லாம்.

   பெண்களை மட்டும் பார்வையைத் தாழ்த்த சொல்லவில்லை.. ஆண்களையும் பார்வையைத் தாழ்த்தச் சொல்லி எத்தனையோ ஆண்களின் தீயப்பார்வையிலிருந்து இவளைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது இஸ்லாம்.


   ”2544. 'தன்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்து, அவளுக்கு அவர் கல்வி கற்றுக் கொடுத்து, அவளை நல்ல முறையில் நடத்தி, பிறகு அவளை விடுதலை செய்து திருமணமும் முடித்து வைக்கிறவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார். ”

   அடுப்பூதும் பெண்ணிற்குப் படிப்பெதற்கு என வீட்டிலேயே முடக்கப்பட்ட பெண்ணிற்கும் இஸ்லாம் ஆண்-பெண் அனைவருக்கும் கல்வி பெறும் உரிமையைச் சமமாக வழங்கியுள்ளது.. தம் மகள்களுக்குக் கல்வி வழங்கும் கடமையை முறையாக நிறைவேற்றினர் அவளது பெற்றோர். கல்வியளிக்கப்படாமல் வீட்டிலேயே முடக்கி வைத்திருந்தால் அவளது பெற்றோரைக் கேள்வி கேட்போர் யாருமில்லை. ஆனால் அவர்களது கடமையைச் செவ்வனே செய்ய வைத்த இஸ்லாத்திற்கு அவள் செய்த கைம்மாறு??

   பெண்களுக்கும் சொத்தில் பங்கு தரப்பட வேண்டும் என எத்தனையோ சமுதாயங்களில் இன்றும் சரியாகத் தீர்வு சொல்லப்படாத நிலையில் பெற்றோர் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு எனக் கூறி அவளுக்கு சமவுரிமை வழங்கியுள்ளது இஸ்லாம்.

   இந்தப் பெண் (போன்ற பலர் ) எடுத்த இத்தகைய சுய முடிவு நிச்சயமாக இனி தம் மகள்களை வெளியூரில் தங்கி படிக்கவைக்க யோசிக்கத் தூண்டும். இதுவும் ஒரு வகையில் தவறான முன்னுதாரணமாகிவிட்டது.இவளது தங்கையின் வாழ்விலும் கண்டிப்பாக சில வருந்தத்தக்க நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு. (இறைவன் பாதுகாப்பானாக)

   முடிவாக, நிச்சயமாக இதுவும் கடந்து தான் போகும். இஸ்லாத்திற்கு யாராலும் களங்கம் ஏற்படுத்திவிட முடியாது. இஸ்லாம் தமக்களித்திருக்கும் உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தியோருக்கே நஷ்டம். இறைவனே மிக்க அறிந்தவன்.

   Delete
 13. //ஏழு வருடமாக காதலித்து அவனின் குழந்தையும் சுமந்துக்கொண்டு வாழ்க்கை கொடு என அவள் அவன் காலை பிடிப்பதும்,// ஏன் இப்படி ஆகி விட்டது இஸ்லாமிய சமுதாயம் மிகவும் கவலையளிக்கிறது. நீதிக்கு ஜீதமிழில் புர்க்காவுடன் நிற்கின்றார்கள், இயதர்க்கு பெண் தீர்ப்பு வழங்குகிறார், தந்தி டீவியில் இப்படி தான் புர்காவுடன் நித்தியா நந்தாவிடம் செல்கிறார்கள்.இவர்களிடம் சென்றால் நீதி கிடைத்து விடுமா ?

  ReplyDelete
 14. //ஏழு வருடமாக காதலித்து அவனின் குழந்தையும் சுமந்துக்கொண்டு வாழ்க்கை கொடு என அவள் அவன் காலை பிடிப்பதும்,//

  ReplyDelete
 15. மேற்கண்ட உங்கள் பதிவும் அதை ஒட்டிய உங்கள் அறிவுரையும் எதார்த்தமானவை .... சொல்வதெல்லாம் உண்மையில் வந்த சம்பவம் மட்டுமல்ல .. இது போன்ற சம்பவங்கள் தற்போது கணிசமாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது .. காதல் என்ற போதைக்கு பலர் அடிமையாகி வருகிறார்கள் குறிப்பாக நம் சமூக பெண்கள் ... முதலில் நம் பெண்களுக்கு நம்மால் முடிந்த அளவிற்கு நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

  ReplyDelete
 16. தலைகுனிந்ததோ பெண்! இரக்கமற்றவனோ ஆண் திமிருடன்... இந்த தலைப்பு எனக்கு நியாயமாகப்படவில்லை. பெண்களால், பெண்களுக்காக நடத்தப்படும் பகுதியில் நியாயமாக கருத்துக்கள் பதியப்படுத்த வேண்டும். மாற்று மதத்தை சேர்ந்த ஒருவன் என்று தெரிந்தும், பெற்றோரை மதிக்காமல், குடும்ப கவுரவத்தை பற்றி கவலைப்படாமல், தான் சார்ந்த மதத்தின் கோட்பாடுகளை மதிக்காமல் ஓடிப்போன ஒரு ஓடுகாலிக்கு என்ன பெயர் கொடுப்பீர்கள். இன்றைக்கு ஒருவனுடன் ஓடிப்போன ஒடுகாலி அடுத்தவனுடன் ஓடமாட்டாள் என்பது என்ன நிச்சயம். என்னடைய வார்த்தைகள் யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல. மன்னிக்கவும்.

  ReplyDelete