Thursday, February 07, 2013

இஸ்லாமிய பெண்கள் அன்று எப்படியிருந்தார்கள்?????

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு!!


இன்றைய காலத்தில் பெண் விடுதலை, சுதந்திரம், முன்னேற்றம்னு எத்தனைவித போராட்டங்கள் நடந்தாலும் எந்த அளவிற்கு பெண் சுதந்திரம் மேலோங்குகிறதோ மறுபக்கம் அதே வேகத்தில் படுவீழ்ச்சிக்கே செல்கிறது. சொல்லப்போனால்  இன்றைய பெண்கள் வகுத்து வைத்திருக்கும் பெண் சுதந்திரத்திற்கான எல்லையென்பது அவர்களுக்கே ஆபத்தாக அமைந்து விடுவதை கண்கூடாகக் காண்கிறோம். அவ்வாறு இல்லை சகோதரிகளே... கோடுபோட்டு வாழ்வது பெண்ணுக்குத்தான் பெருமை என்று எடுத்துக் கூறினாலும் பொருட்படுத்துவதில்லை. உதாரணத்திற்கு, ஆடை குறைப்பின் சிகரமாக விளங்கும் சினிமாவிற்கும் எதிராகப் போராட்டம்...! முழுவதுமாக உங்களை ஆடையினால் பாதுகாத்துக் கொள்ளுங்கள் எனச் சொன்னால் அதற்கும் போராட்டம்...! பெண்கள் சுதந்திரம் என்றாலே அது இஸ்லாத்தோடு பிணையப்பட்டதாகவே இவ்வுலகில் பார்க்கப்படுகிறது. எப்படியாயினும் பெண்களுக்கென இஸ்லாம் வகுத்து வைத்திருக்கும் வரையறை பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் சேர்த்தே கண்ணியப்படுத்துகிறது என்பது ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு மட்டுமே கிட்டும் எண்ணமாகும்.  

மதச்சார்பற்ற இந்தியாவிலும் முஸ்லிம்களுக்கு என வரும்போது இஸ்லாத்தின் சட்டதிட்டங்களே அவர்களுக்கு அளிக்கப்பட்டு தீர்வுகளும் காணப்படுகின்றன. 1400 ஆண்டுகளாகியும் அதே சட்டங்கள் பொருந்திப்போவதை மக்கள் சிந்தித்துணர வேண்டும். எதிர்ப்பவர்கள் ஒரு புறமிருக்க, இஸ்லாத்தின் கட்டுப்பாடுகளை ஆதரித்து மனதார ஏற்றுக்கொண்டவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே  போகிறது என்பதிலும் ஐயமில்லை. பெண்களுக்கான இத்தகைய சட்டதிட்டங்கள் திட்டமிடப்படும்பொழுது இன்றைய காலப்பெண்கள் போலல்லாமல்  நம் முன்னோர்கள் அவற்றை ஒருமனதாக ஏற்றுக் கொண்டார்கள்.... ஏன்.... அவை அவர்களுக்கு நன்மையே பயக்கும் என தெரிந்து வைத்திருந்தார்கள். அதனாலேயே அக்காலங்களில் குற்றங்கள் குறைவாக இருந்தன..

நபிஸல்)  அவர்கள் காலத்தில் பர்தா பற்றிய குர்ஆன் வசனம் இறங்கியவுடன்  சாலைகளில் நடந்து சென்ற பெண்கள் உட்பட அனைவரும் அச்சட்டத்தை உடனே செயல்படுத்தினர்.. தமது குடும்பப்பிரச்சினைகளைத் தீர்க்க நபி(ஸல்) அவர்களிடம் தாமே நேரே வந்து  தம் தரப்பு வாதம் மட்டுமல்ல... எதிர்தரப்பு வாதத்தையும் வைத்து நியாயத்தீர்ப்பு கேட்க அவர்களில் ஒருவரும்  தயங்கியதில்லை. குர் ஆன் சட்டங்களும் நபிமொழிகளும் உடனுக்குடன் அமல்படுத்தப்பட்டன; உறுதியுடனும் இறையச்சத்துடனும் பின்பற்றப்பட்டன.

சுமையா பின்த் கய்யாத்(ரலி)


அக்காலத்தில் இறைநிராகரிப்பாளர்களுக்கு எதிராக மூளும் போர்களில் பங்கெடுக்க எத்தனையோ ஆண்கள் சாக்கு போக்குச சொல்லி வீட்டில் தங்கியிருக்க, பல பெண்கள்   போர்களில் தமது பங்கையும்  அளித்து இறைவனின் பொருத்தத்தையும் நபி(ஸல்) அவர்களின் மகிழ்ச்சியையும் பெற்றுக் கொண்டார்கள். இஸ்லாத்திற்காக தன் இன்னுயிரை நீத்த பெண்மணி சுமையா பின்த் கய்யாத்(ரலி) அவர்கள் முஸ்லிம் பெண்களனைவருக்கும் ஒரு நல்ல முன்மாதிரியாக விளங்குகிறார். எதிரிகள் அவரை வன்மையான முறையில் கொடுமைப்படுத்தியும் தமது இறைம்பிக்கையைக் கைவிடாது இறைவனிடத்தில் உயர் அந்தஸ்து பெற்றார்கள்.  (சுமையா (ரலி) அவர்களது கணவர் யாசிர் பின் அமீர்(ரலி), மகன்  அம்மார் இப்னு யாஸிர்(ரலி) என குடும்பத்தினர் அனைவரும் பின்னர் ஷஹீதானார்கள்).

ஜைனப்(ரலி)

தமது குழந்தைகளை இறைவழியில் வளர்ப்பதாயினும் நிராகரிப்பாளர்களின் அனைத்து வித தொல்லைகளிலிருந்தும் நபி(ஸல்) அவர்களின் உதவியை நாடுவதில் முன்னிலை வகித்தனர். சொத்தில் பெண்களுக்குப பாதி எனும் சட்டம் வந்ததும் அதனை பெண்கள் அனைவரும் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டார்கள். ஏனெனில் குடும்பத்திற்குச்  செலவு செய்யும்  பொறுப்பு என்பது ஆணுக்குத்தான் கடமை என்பதனை அவர்கள் நன்கு புரிந்திருந்தார்கள். அதற்காக அவர்கள் அனைவரும் சமையல்கட்டிலேயே தமது வாழ்வைக் கழித்தவர்களக இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்களுடைய மனைவி ஜைனப்(ரலி) அவர்கள் தோல் பதனிடும் தொழில் புரிபவர்களாகவும் அதிலிருந்து வரும் வருமானத்தைத் தர்மம் செய்பவர்களாகவும் இருந்தார்கள்.

கதீஜா (ரலி)

ணவனை இழந்தவர்கள் இன்றைய சமூகத்தில் உள்ள அனைத்துத் தடைகளையும் உடைத்து வெற்றி பெறுவது அத்தனை எளிதல்ல. அதனாலேயே ஒவ்வொரு பெண்ணின், அதுவும் வாழ்க்கைத் துணையின்றி தமது குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினால் அது பெரும் சாதனையாகக்  கருதப்படுகிறது. ஆனால் ஆரம்ப இஸ்லாமியக் காலத்தில் பெண்கள், அவர்கள் விதவையானாலும் சரி.. விவாகரத்தானவர்களாயினும் சரி... அவர்கள் சமுதாயத்தில் மதிப்புடன் அணுகப்பட்டனர். நபி(ஸல்) அவர்களின் முதல் மனைவி கதீஜா (ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களை மணப்பதற்கு முன்பே வணிகத்தில் மிகவும் புகழ் பெற்றவர்களாகவும் செல்வந்தராகவும் திகழ்ந்தார்கள். திருமணத்திற்குப் பின் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ வர ஆரம்பித்த காலத்தில் கதீஜா(ரலி) அவர்களது செல்வம் இஸ்லாத்தைப் பரப்ப பெரிதும் உதவிற்று. நேர்வழிக்கு மக்களை இட்டுச்செல்ல உதவிய ஆயுதம் என்றே அவர்களது செல்வத்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு கதீஜா(ரலி) அவர்கள் தமது அன்பையும் பாசத்தையும் மட்டுமல்ல, அவர்களது இஸ்லாமியப் பணிக்குத் தமது தார்மீக ஆதரவும் பொருளாதார உதவியும் அளித்து பெரும்பங்கு வகித்ததை யாராலும் மறுக்க முடியாது. நபிஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்ற பெண்மணிகளில் முதலாமவர் அவர்களது மனைவி கதீஜா(ரலி) அவர்கள்தான்! பெரிய செல்வந்தராக இருந்தபோதிலும் தமது குடும்பத்தினருக்குத் தம் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றியதன் மூலம் அவர் சுவனவாசி எனும் நற்பேறு அடைந்தார்கள். கீழ்வரும் ஹதீஸ அதற்குச் சான்றாகும்:
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு.. அல்லது உணவு... அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவரின் இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி); புகாரி - 3820.

உம்மு சல்மா(ரலி)

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் பிறகு ஹஜ் நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் நபி(ஸல்) அவர்கள் தமது மக்களை தலைமுடியைக் களைந்து தூய்மை நிலையை அடைந்து கொள்ளுமாறு கட்டளையிடுகிறார்கள். மக்கத்து குறைஷிகளுடைய அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவதுபோல் இயற்றப்பட்ட ஹுதைபிய்யா உடன்படிக்கையினால் மனவருத்தத்தில் இருந்த முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்கள் கூறியதை நிறைவேற்றுவதில் தாமதம் காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை அறிவுறுத்தியும் அனைவரும் அமைதி காத்ததை நபியவர்கள் தமது மனைவி உம்மு சல்மா(ரலி) அவர்களிடம் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள். இதனைக் கேட்ட அவரது மனைவி தமது கணவரிடம் "கவலைப்படாதீர்கள் அல்லாஹவின் தூதரே! பிறருக்கு கட்டளையிட்டதைத் தாங்கள்  முதலில் நிறைவேற்றி விடுங்கள்" என ஆலோசனை கூறினார்கள். இதன்படியே நபி(ஸல்) அவர்களும் தமது தலைமுடி நீக்கி, குர்பானி கொடுத்தார்கள். இதனைக் கண்ட அவர்களுடனிருந்த முஸ்லிம்கள் உடனே அனைவரும் அவ்வாறே நிறைவேற்றினர். நபி(ஸல்) அவர்கள் நிராகரிப்பாளர்களின் போக்குக் குறித்தும் முஸ்லிம்களின் சிலநேர கவனக்குறைவுகளைக் குறித்தும் கவலை கொண்டிருந்த காலங்களில் அவரது மனைவிமார்கள் சமயோசிதமான முறையில் ஆறுதலளித்துள்ளதை நாம் வரலாற்றின் பலயிடங்களில் காண்கிறோம். எந்த நிலையிலும் 'சமையலைத் தவிர உனக்கென்ன தெரியும்' என்று இன்று பல குடும்பங்களில் குடும்பத்தலைவர்கள் தமது மனைவிகளை ஒரு பொருட்டாகக்கூட மதிப்பதில்லை. நம் அனைவருக்கும் முன்னோடி, தலைவர் நபி(ஸல்) அவர்கள் தமது மனைவிகளின் உதவிகளை மனமுவந்து ஏற்றுக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைந்துள்ளார்கள்! இதனால் பல நன்மைகள் பெற்றுள்ளார்கள். மேற்கூறப்பட்டுள்ள சம்பவத்தில் உம்மு சல்மா(ரலி) அவர்களின் தகுந்த யோசனையினால் நபியவர்கள் மட்டுமல்ல, அங்கிருந்த முஸ்லிம்கள் அனைவருமே இறைவனின் பொருத்தத்தைப் பெற்றுக்கொண்டார்கள். (புஹாரி 2731,32)

ஷிஃபா பின்த் அப்துல்லாஹ்

அன்றைய காலகட்டத்தில் மதினா ஒரு மாபெரும் வணிகமையமாகத் திகழ்ந்தது. மர் பின் கத்தாப்(ரலி) அவர்கள் மதீனத்துச் சந்தைக்கு ஷிஃபா பின்த் அப்துல்லாஹ் அவர்களை தலைவராக நியமித்தார்கள். ஷிஃபா (ரலி) அவர்கள் அதிக அறிவுக் கூர்மையுடையவராகவும் தொலைநோக்குப் பார்வையுடையவராகவும் விளங்கினார். அவரது ஆலோசனைகள் உமர்(ரலி) அவர்களுக்குப் பலசமயங்களில் உதவிகரமாக அமையப்பெற்று அதிக லாபத்தையும் ஈட்டித்தந்தன.

கவ்லா பின்த் அல் அஸ்வர்:

 
கவ்லா பின்த் அல் அஸ்வர்
எனு
ம் பெண்மணியின் குடும்பம் இஸ்லாத்தை அதன் ஆரம்ப காலத்திலேயே ஏற்ற குடும்பங்களில் ஒன்றாகும். ஜெருசலேத்தின் அருகில் அத்னஜின் எனுமிடத்தில் ரோமர்களுக்கெதிராக நடைபெற்ற போரில் கவ்லா (மருத்துவராக)வும் அவரது சகோதரர் திறார் அவர்களும் பங்குபெற்ற போரில் திறார் சிறைபிடிக்கப்பட்டார். இதனையறிந்த கவ்லா ஒரு வீரனைப் போல் வேடமணிந்து தமது சகோதரனுக்காக எதிரிகளுடன் போரிட்டார். அவரது போர்த்திறமையைக் கண்டு சிறைப்பிடிக்கப்பட்ட தமது போர் வீரர்களைத் தேடும் படைக்கு கவ்லாவையே தலைவராகப்  படைத்தலைவர் காலித்(ரலி) அவர்கள்  நியமித்தார்.

மற்றொரு போரில் கவ்லாவும் மற்ற சில பெண்மணிகளும் சிறைபிடிக்கப்பட்டனர். மற்ற பெண்களுக்குத் தானே தலைவியாகக் கட்டளைகள் பிறப்பித்து, தன்னை வசப்படுத்த முயன்ற எதிரித் தலைவனையும் சேர்த்து பலரையும் கொன்று குவித்தார்கள்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கவ்லாவின் பெயரையே இன்றைய ஈராக்கிய பெண்கள் மிலிட்டரி அமைப்பிற்கும்(Khawlah bint al-Azwar unit) ஐக்கிய அமீரகத்தில தோற்றுவிக்கப்பட்ட பெண்கள் மிலிட்டரி கல்லூரிக்கும் (Khawla bint Al Azwar Training College) உலகில் இன்னும் பல பள்ளி/கல்லூரிகளுக்கும் சூட்டி பெருமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

நுஸைபா பின்த் கஅப்(ரலி)


உம்மு உமாராஹ் என்று பலரால் அறியப்பட்ட நுஸைபா பின்த் கஅப்(ரலி)  என்பவர் கைபர், ஹுனைன், யமாமா போர்களில் மிக முக்கிய பங்களித்தார். இப்போர்களிலானால் அவர் இழந்தது ஒரு கையை.... பெற்றது எண்ணற்ற காயங்களையும் இறைவனது பொருத்தத்தையும் ஆகும்.  உஹது போரில் 'நான் எத்திசையில் திரும்பினாலும் உம்மு உமாராஹ் என்னைக் கவசம் போல் காத்துப் போரிடுவதைக் கண்டேன்' என நபி(ஸல்) அவர்களால் போற்றப்பட்டார்கள்.
 மதீனாவாசிகள் இஸ்லாத்திற்காகத் தம்மையும் தம் பொருளையும் அர்ப்பணித்து நபி(ஸல்) அவர்களோடு (அகபா) உறுதிப்பிரமாணம் செய்து கொண்ட நிகழ்ச்சியின் 60 ஆண்கள் மற்றும் 2 பெண்களில் நுஸைபாவும் ஒருவராகத் திகழ்ந்தார்.

சஃபிய்யா(ரலி)


அதே உஹதுப் போரில் தோல்வியை நெருங்கும் சமயம் வந்தபோது முஸ்லிம்களில் பலர் புறமுதுகிட்டு ஓடலானார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் (தந்தையினுடன் பிறந்த) அத்தை சஃபிய்யா(ரலி) அவர்கள் அவ்வீரர்களை நோக்கிச் சென்று அறிவுரை வழங்கி அவர்களை மறுபடியும் போர்க்களத்திற்கு அனுப்பினார்கள்.


முடிவாக, "கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு; 2:228... எனும் வசனத்தின் மூலம் இவ்வுலகத்தில்  பெண்களைவிட அதிக உரிமைகள்  ஆண்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும் இறைவனின் முன் அனைவரும் சமமே... "உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர்." இதனையும் அல்லாஹுவே கூறுகிறான்....நாம் சிந்தித்து உணர்வோம், இன்ஷா அல்லாஹ்.

இவ்வுலகம் ஆண்களின் சாதனைகளினால் மட்டும் வளர்ந்ததல்ல.. பெண்களின் தியாகங்களும் உழைப்பும் பாசமும் இன்றி எந்த வீடும் சமுதாயமும் நாடும் வளர்ச்சி காண முடியாது.  சமூக முன்னேற்றத்தில் பங்கேற்ற பெண்களின் வாழ்க்கையில் ஆண்களுக்கும் பாடமுண்டு. இஸ்லாம் கூறும் வழிகாட்டுதலின்படி பெண்கள் அடையும் முன்னேற்றமே நிலைபெறும்! ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; பெருமை கொள்ளச்செய்யும்! இன்னுமின்னும் எத்தனையோ பெண்மணிகளின் சாதனைகள், தியாகங்கள் வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன.. இன்றைய நவீன உலகத்தில் ஒவ்வொரு பெண்ணும் அடையும் சாதனைகளைச் சொல்லிச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம் இறைவனுக்காகத் தம் உயிர், உடைமை குடும்பம் என அனைத்தையும் இழந்த வரலாற்றுப் பெண்களின் வாழ்க்கை முறைகளையும்  நமக்கு வழிகாட்டியாகக்  கொண்டு ஈருலகிலும் நன்மைகள் பல பெற்று பயனடைவோமாக, இறைவன் நாடினால் !

12 comments:

 1. வ அலய்கு முஸ்ஸலாமு வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹூ மாஷா அல்லாஹ் போலி சுதந்திரத்தில் மிதக்கும் பெண்களுக்கு கணிவான அறிவுரை ஜசாகல்லாஹூ கைரா

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. கருத்துக்கு நன்றி... வ இய்யாகும் அசீர்

   Delete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் பானு.

  முஸ்லிம் பெண்கள் என்றால் முன்னேற முடியாதவர்கள் என்ற தவறான எண்ணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய, இஸ்லாத்தின் தியாகப் பெண்மணிகள் மற்றும் சாதனைப் படைத்தவர்களில் சிலரின் அறிமுகங்களோடு கூடிய அழகான ஆக்கம்!

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் ஸலாம் அக்கா. இஸ்லாத்தின் சட்டங்கள் பெண்களுக்குப் பின்னடைவையே தரும் என்ற பலரின் கருத்திற்கு எதிராக அவை அவர்களுக்கு நல்லவையே நாடி ஏற்படுத்தப்பட்டன என இப்பதிவின் வாயிலாக உரக்கக்கூறும் வாய்ப்பைத் தந்த இறைவனுக்கே புகழனைத்தும்.

   Delete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  இஸ்லாமிய பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என நினைப்பவர்களுக்கு உங்க பதிவு சரியான பதிலை சொல்கிறது.... அக்காலத்திலேயே பெண்கள் எவ்வளவு அழகான சுதந்திரத்துடன் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருந்தார்கள் என நினைக்கும் போது வியப்பா இருக்கு! பாதி பேர் பற்றி இக்கட்டுரை படித்தபின் தான் தெரிந்துக்கொண்டேன். நல்ல உழைப்பு..பாராட்டுக்கள் பானு

  ஜஸக்கல்லாஹ் ஹைர்

  ReplyDelete
  Replies
  1. /அழகான சுதந்திரத்துடன்/ சுதந்திரம்..சுதந்திரம் என நாம் பின்பற்றுவது நமக்கு மட்டுமல்ல...நம் வீட்டினருக்கும் நாட்டினருக்கும் நல்ல விளைவுகளை உருவாக்குவதே அழகான சுதந்திரம். நல்ல வார்த்தை பிரயோகம் ஆமினா. மாற்றுமதத்தினர் மட்டுமின்றி நாமே அறிந்துகொள்ள வேண்டிய, வியப்பை அளிக்கும், பெண்களைப் பற்றின பல வரலாறுகள் உள்ளன.

   வ இயாக்கும் ஆமினா.

   Delete
 4. மிக ஆழமான அறிவார்ந்த பதிவு பகிர்வுக்கு நன்றி...

  குர்ஆன் இறங்கிய சமகால மக்களின் வாழ்வியலை அவர்களின் பொற்காலத்தை மிக அழகாக பட்டியல் போட்டு காட்டியிருக்கிறீர்கள்.

  புரட்சியின் மையப்புள்ளி பெண்கள்.

  பெண்களை புறக்கணிக்கிற எந்த சமூகமும் நாகரீகமானது அல்ல. அந்த சமூகம் முன்னேற்றமும் அடையாது.

  ஒரு சமூகத்தின் சனத்தொகையில் சரிபாதி இருக்கும் பெண்களை செயல்பட விடாமல் புறக்கணிப்பது என்பது உடலின் சரிபகுதி வாதத்தால் பாதிக்கப்பட்டு கிடப்பவனுக்கு சமமானது.

  குர்ஆன் இறங்கிய போது வாழ்ந்த சமகால அந்த பெண் சமூகம் எவ்வளவு உரிமை பெற்றிருந்தார்கள் சுகந்திரத்தை அனுபவித்தார்கள் என்பதற்கு ஒரு வரலாற்று சான்றை பாருங்கள்.

  பரீரா என்ற பெண் முகீ என்பவரைத் திருமணம் செய்திருந்தார். அடிமையாக இருந்த பரீரா விடுதலை செய்யப்பட்ட பின் முகீஸுடன் வாழ்வது பிடிக்கவில்லை. எனவே அவரை விட்டு பரீரா பிரிந்து விட்டார். ஆனால் பரீரா மீது முகீ அதிகஅன்பு வைத்திருந்ததால் அவரால் அதைத் தாங்கமுடியவில்லை. இதைக் கண்ட நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து முகீஸுடன் சேர்ந்து வாழ அறிவுரை கூறினார்கள். அப்போது பரீரா “இது (மார்க்கத்தின்) கட்டளையா? (தனிப்பட்ட முறையில்) உங்கள் பரிந்துரையா? என்று கேட்டார். அதற்கு நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையில்லை; பரிந்துரைதான் என்று கூறினார்கள். அப்படியானால் எனக்கு முகீ வேண்டாம் என்று பரீரா கூறி விட்டார்.நூல்: புகாரி 5283

  ஆன்மீக தலைமையும், ஆட்சித் தலைமையும் பொருந்திய ஒரு தலைவர் பரிந்துரைக்கிறார் சாதாரண குடிமகள் அதை புறக்கணிக்கிறார். இதுதான் பெண் விடுதலை.

  ReplyDelete
  Replies
  1. சரியாககூறினீர்கள் சகோ.. அன்றைய முஸ்லிம் பெண்கள் செய்தவற்றை இன்றைய பெண்கள் செயல்படுத்தினால் அது ஏதோ புரட்சி போல் பேசப்படும். அன்றைய பெண்கள் அனுபவித்த சுதந்திரத்தில் பாதி கூட இன்று நம் பெண்களிடையே இல்லாததே இதற்குக் காரணம். பல செய்திகளைக் கூறும் ஹதீஸினைப் பகிர்ந்தமைக்கு ஜஸாக்கல்லாஹ்.

   Delete
 5. நல்ல பதிவு. சிலரைக் குறித்த விபரம் இதை வாசித்துதான் தெரிந்துகொண்டேன்.

  //பெண்களின் தியாகங்களும் உழைப்பும் பாசமும் இன்றி எந்த வீடும் சமுதாயமும் நாடும் வளர்ச்சி காண முடியாது. சமூக முன்னேற்றத்தில் பங்கேற்ற பெண்களின் வாழ்க்கையில் ஆண்களுக்கும் பாடமுண்டு. //

  இன்றையக் காலத்தில், பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் புரிந்துகொள்ள வேண்டியது இது. இந்தப் புரிதல் இருந்தால், இப்பதிவுக்கேற்ற சமகால உதாரணங்களும் அதிக அளவில் பெருகும், இன்ஷா அலலாஹ்.

  ReplyDelete
  Replies
  1. எதற்கெடுத்தாலும் சட்டம் பேசும் சில ஆண்கள் தம் வீட்டுப் பெண்கள் விஷயத்தில் பராமுகமாகவே இருக்கின்றனர். நல்லவை பல நிறைந்துள்ள இச்சமூகத்தில் பெண்களுக்குப் பல ஆபத்துகளும் நிறைந்துள்ளன. இதனைக் களைய ஆண்களும் முன்வந்தாலே பெண்சாதனைகள் பல வெளிவரும், இன்ஷா அல்லாஹ்.

   Delete
 6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  நம் சஹாபிய பெண்களின் வீரத்தையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளையும், அவர்களுக்கு அக்காலத்திலேயே வழங்கப்பட்டு இருந்த சுதந்திரத்தையும் அருமையாகச் சொல்கிறது.உங்களின் பதிவு.

  தொகுத்த விதம் அழகு..நல்லதொரு பதிவுக்கு நன்றி சகோ..:)

  ReplyDelete