Tuesday, January 22, 2013

மார்க்கத்தில் இல்லாத மீலாது விழா!


   இஸ்லாமிய மாதங்களில் மூன்றாவது மாதமான‌ இந்த 'ரபீஉல் அவ்வல்' மாதத்தில், இஸ்லாமியர்களில் சிலர் 'மீலாது விழா' என்ற பெயரில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளை ஒரு விழாவாக‌க் கொண்டாடி வருகின்றனர். தற்போது அந்த 'மீலாதுந்நபி' விழாவுக்கு 'உத்தம நபியின் உதய தின விழா ' என்று புதியதோர் பெயரும் சூட்டப்பட்டு கொண்டாடப்படுகிற‌து. இவ்வருடம் ஜனவரி 25 இந்தியாவில் மிலாடிநபி கொண்டாடப்படுகிறது.  இஸ்லாத்தின் அடிப்படையை சரியாக புரியாதவர்களால் எழுதப்பட்ட 'மவ்லிது' என்ற நூலிலுள்ள‌ பாடல்களை, 'ரபீஉல் அவ்வல்' பிறை ஒன்றிலிருந்து தினமும் மாலை வேளைகளில் பன்னிரெண்டு நாட்கள் பாடி, புண்ணியம் தேடுவதாக 'ஷிர்க்'கென்னும்  பாவச் சுமைகளை சேர்த்து முடித்து, கடைசியாக இந்த விழாவினையும் கொண்டாடி கூடுதலாக ஒரு 'பித்அத்'தினையும் செய்து முடிக்கிறார்கள்.

    அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் தவ்ஹீத் பிரச்சாரத்தின் மூலமாக மக்கள் விழிப்புணர்வு பெற்றதால், மீலாத் விழாவும் அதன் பெயரால் நடத்த‌ப்படுகின்ற அனாச்சாரங்களும் பல பகுதிகளில் ஒழிந்துக் கொண்டு வந்தாலும், இன்னொரு பக்கம் தூய இஸ்லாத்தை மக்கள் மன்றத்தில் உரக்க சொல்ல வேண்டிய ஆலிம்களின் தலைமையிலேயே இந்த அனாச்சாரம் இன்றுவரை அரங்கேற்றப்பட்டு வருவதால், முழுமையான இஸ்லாமிய சமுதாயத்தையும் அதிலிருந்து மீட்டெடுக்க, சத்திய மார்க்கத்தை அறிந்த‌ நாம் ஒவ்வொரும் கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் 'நமக்கென்ன வந்தது.. அவர்கள் எப்படியும் கொண்டாடிவிட்டு போகட்டுமே' என அலட்சியம் செய்தால் அதற்கும் மறுமையின் கேள்விக் கணக்கு நமக்கு உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது!

   

    இந்த மீலாது விழாக்கள் இந்தியாவில் மட்டுமின்றி, இங்கிருந்து அரபு நாடுகளுக்கு செல்பவர்களில் சிலர் அங்கேயும் மீலாது விழாவைக் கொண்டாடுவதை விட்டபாடில்லை. ஆனால் அந்த இஸ்லாமிய‌ நாடுகளில் "மீலாது" என்ற பெயரில் எந்தவித‌ கொண்டாட்டங்களோ, விசேஷ நிகழ்ச்சிகளோ இல்லை. வணிக நோக்கத்திற்காக மட்டுமே அங்கு அரசாங்க விடுமுறை விடப்படுகின்றன. மக்கள் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை மார்க்கமாக நினைத்து தவறான வழியில் செல்வதைத் தடுக்காமல் அதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு இஸ்லாமிய அரசாங்கமே செய்கிறது என்றால், அவர்களிடம் முழுமையான மார்க்கம் இல்லை என்றுதான் சொல்லமுடியும் :(

    இந்த‌ மீலாது விழாக் கொண்டாட்டங்கள் மூலம் நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள எங்களின் அன்பை வெளிப்படுத்துகிறோம், அவர்களைப் புகழ்வதின் மூலம் அவர்களை கண்ணியப்படுத்துகிறோம், இதன் மூலம் அவர்களை நினைவு கூறுகிறோம் என்ற காரணங்களைக் கூறிக்கொண்டு அவர்கள் அரங்கேற்றி வரும் பல்வேறு அனாச்சாரங்களுக்கு இஸ்லாத்தில் துளியளவும் இடமில்லை. அவையெல்லாம் வழிபாடுகளே என்று நினைத்துக் கொண்டிருக்கும் அறியா மக்களை அந்த அறியாமையிலிருந்து வெளியேற விடாமல் எதையாவது சொல்லி மழுப்பி, அவை அத்தனையும் சரியென்று மக்களை நம்பவைத்து அவர்களை வழிகேட்டிலேயே தள்ளிக் கொண்டிருக்கும் சுன்னத் வல்ஜமாஅத்தின் ஆலிம்கள், அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லவேண்டிய நாளைய மறுமைக்கு அஞ்சிக் கொள்ளட்டும்! இப்படியெல்லாம் விழாக்களை ஏற்படுத்தினால் பணம் பார்க்கலாம் என்ற எண்ணமும் ஒரு காரணம்..

   இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இம்மாதத்தில் அவர்கள் நடத்தும் இந்த மீலாது விழாவின் பின்னணி என்ன? இதை எந்த விதத்தில் இஸ்லாம் தடுக்கிறது? என்பதைப் பார்ப்போம்.

    அல்லாஹ்வையும் அவனது தூதர்(ஸல்) அவர்களையும் மனதார ஏற்றுக் கொண்ட ஒரு முஸ்லிம், வணக்கமாக நினைத்து, தான் செய்யும் ஒரு காரியத்தை அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆனையும், நபி(ஸல்) அவர்கள் கூறிய/செயல்படுத்திய/அங்கீகரித்தவற்றை மட்டுமே உரைக் கல்லாக வைத்துதான் அது வணக்கமா அல்லது இல்லையா என்பதை முடிவு செய்ய‌வேண்டும். அப்போதுதான் அந்த வணக்கத்திற்கு நன்மை கிடைக்கும். இல்லையென்றால் அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படாத தீமைகளின் பட்டியலில் சேர்ந்துவிடும். (அல்லாஹ் காப்பானாக!) அப்படியானால், இந்த 'ரபீஉல் அவ்வல்' மாதத்தில் நடத்தப்படுபவை அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் காட்டித் தந்த‌தின் அடிப்படையில் அமைந்துள்ளதா என்றால், நிச்சயமாக இல்லை!

மீலாது விழாவின் பின்னணி:


    நபி(ஸல்) அவர்கள் தனக்காகவோ, தனக்கு முந்திய நபிமார்களுக்காகவோ அல்லது இறப்பால் தனக்கு முந்திச் சென்ற தன்னுடைய தோழர்களுக்காகவோ, குடும்பத்தினருக்காவோ பிறந்தநாள் ('மீலாது') விழா கொண்டாடியதில்லை. அதுபோல் நான்கு கலீஃபாக்களோ, மற்ற நபித்தோழர்களோ, அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களோ, அல்லது நபி(ஸல்) அவர்களால் போற்றப்பட்ட முந்தய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களோ மீலாது விழா கொண்டாடவில்லை. அப்படியானால் மீலாது விழாவின் ஆரம்பம் எப்போது?

    இவ்விழா ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் இஸ்லாமியப் போர்வையில் வந்த யூதர்களால் முதலில் அரங்கேற்றப்பட்டுள்ளது. அதாவது, நபி(ஸல்) அவர்களுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் வந்த 'பாதினிய்யா' கூட்டத்தைச் சேர்ந்த 'ஃபாத்திமியீன்கள்' என்ற வழிகெட்ட வம்சா வழியினர்தான் இந்த "மீலாது விழா"வை இஸ்லாத்தில் புகுத்தியவர்கள் என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. ஆக, 'நபி(ஸல்) அவர்களுக்காக' என்று கூறி இவர்கள் இவ்வாறு மீலாது விழாவை ஆரம்பித்து வைத்தது இஸ்லாத்தையோ, நபி(ஸல்) அவர்களையோ நேசிப்பதற்காக அல்ல‌! இஸ்லாத்தை அழிப்பதற்காகவும், இஸ்லாத்தை விட்டும் அதன் உண்மையான/தூய்மையான‌ கொள்கைகளை விட்டும் முஸ்லிம்களை தூரமாக்கும் திட்டத்தில், இஸ்லாத்தில் இல்லாதவைகளை இஸ்லாத்தில் நுழைய வைக்கவேண்டும் என்பதற்காகவே இதுபோன்றவற்றை துவக்கி வைத்தார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் எப்போது?


    நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு மீலாது விழாவைக் கொண்டாடுபவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 ல் நபி(ஸல்) அவர்கள் பிறந்தார்கள் என்று எண்ணிதான் கொண்டாடுகிறார்கள். ஆனால் இஸ்லாமிய தேதி (பிறை)யின் அடிப்படையில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் இதுதான் என்று எந்தவித சரியான தகவலும் எந்த ஹதீஸ் நூலிலும் பதிவு செய்யப்படவில்லை. அதேசமயம் கிழமையின் அடிப்படையில் உறுதியாகப் பதிவு செய்யப்பட்ட ஒரே ஆதாரம் திங்கள் கிழமை என்பது மட்டுமே! அப்படியானால் நபி(ஸல்) அவர்கள் எந்த பிறையில் பிறந்தார்கள் என்றே சரியாக சொல்லப்படவில்லை என்ற விஷயம் கூட தெரியாமல் எப்படி பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் அவர்களுக்கு?!

நபி(ஸல்) அவர்களைப் புகழ் பாடக்கூடாதா?


    இந்த விழாவிற்கு முந்திய நிகழ்ச்சிகளில் முக்கியமானது 'மவ்லிது' என்ற புகழ் பாடுவதாகும். நபி(ஸல்) அவர்கள் எந்தக் கொள்கையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக நபியாக அனுப்பப்பட்டார்களோ அதே இணை வைக்கும் கொள்கையை அடிப்படையாக‌க் கொண்ட  அந்த பாடல்களை அவர்களைப் புகழ்வதற்காக பாடப்படுகிறது. இது எவ்வளவு பெரிய அநியாயம்?! அதுவும் அல்லாஹ்வை மட்டுமே அழைக்கவேண்டிய பள்ளிவாசலில் வைத்தே அவனுக்கு இணைவைக்கும் இந்த மவ்லிது கவிதைகள் மிகவும் பக்திப் பரவசத்தோடு பாடப்படுகின்றன‌! இது மிகப்பெரும் அநீதியில்லையா? ஏக இறைவனை மறைமுகமாக‌ எதிர்க்கும் நன்றிகெட்ட செயல் அல்லவா?  வெளிப்படையாகப் பார்த்தால் அவை நபி(ஸல்) அவர்களைப் போற்றுவது போன்று தோன்றினாலும், உண்மையில் அவை அத்தனையும் 'ஷிர்க்' என்னும் இணைவைக்கும் கொள்கைகையைக் கொண்ட வரிக‌ளாகும்.

அண்ணல் நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையைப் பாருங்கள்:
"கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தியதுபோல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியான்தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர்(ரலி); நூல்: புகாரி (3445)
    இன்னும் இதுபோன்ற நிறைய ஹதீஸ்களில் தன்னை வரம்பு மீறி புகழ்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்பதைக் காணமுடிகிறது. ஏனெனில் வரம்பு மீறிப் புகழ்வது கூட இணை வைத்தலில் கொண்டுபோய் சேர்த்துவிடும் (அதாவது அல்லாஹ்விற்கு நிகராக அவனது தூதர் இருப்பதாக காட்டும்) என்பதில் நபி(ஸல்) அவர்கள் மிகவும் கவனமாக இருந்தார்கள்.
'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; தான் நாடியவருக்கு இது அல்லாத மற்ற பாவங்களை மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)

வழிகேட்டில் இருந்து மீள்வோம்:

     ஆக மவ்லிது, மீலாது விழா போன்றவை நபி(ஸல்) அவர்கள் மரணித்து நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது மட்டுமல்லாமல், இறைவனிடம் மன்னிப்பே கிடைக்காத‌ இணை வைத்தல் என்னும் மாபாதக குற்றத்தை செய்யக்கூடியதாக இருக்கும்போது, அதற்கு மார்க்க சாயம் பூசுவது அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் கை வைப்பதாகும். (நஊது பில்லாஹி மின்ஹா!)

      நம் முன்னோர்கள் வழிவழியாக செய்து வந்த விழா என்றும், மார்க்கம் கற்று, கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கும் ஆலிம்களே இவ்விழாவை ஆதரிக்கிறார்கள் என்றும் எண்ணி மக்களும் அறியாமையில் இவ்விழாவை இன்னும் கொண்டாடி வருகிறார்கள்.  நம் முன்னோர்கள் அறியாமையில் செய்த விஷயங்களை இப்போதும் தொடர சொன்னால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? இல்லை தானே?  மேலும் இத்தகைய விழாக்களை ஆலிம்கள் ஆதரிப்பதற்கு ஒரே காரணம் பணம் வசூலிக்க முடியும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

      அடுத்ததாக நபி (ஸல்) மீது வைத்திருக்கும் நேசத்தை வெளிப்படுத்த இத்தகையை விஷயங்களை செய்கிறோம் என்கிறார்கள். நேசத்தை  வருடத்தில் ஒரு நாள் மட்டும் தான் வெளிபடுத்த வேண்டும் என கருதுகிறார்கள் போலும்.  நபி(ஸல்) ஐ நாம் நேசிக்கிறோம் எனில் அதற்கு வருடத்தில் ஒருநாளை தேர்ந்தெடுப்பது என்பது அறிவுக்கும் பொருத்தமில்லாதது!  நம் நேசத்தை வெளிபடுத்த எந்நாளும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல் படி வாழ்ந்துகாட்டலாம். இறைத்தூதரவர்கள் மீது அதிக சலவாத் சொல்லலாம்.  கலப்படமல்லாத சுன்னாவை கடைபிடித்து இறைதூதரின் மீதான நம் நேசத்தை காட்டலாம்.  இப்படியாக நம் நேசத்தை ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நடத்தையிலும் காட்டுவதை விடுத்து ஒரு குறிப்பிட்ட நாளை தேர்ந்தெடுத்து , அந்த நாளில் மட்டும் காட்டுவது என்பது நகைப்புக்குரிய விஷயமே!!!

       மவ்லிது ஓதியும், மீலாது கொண்டாடியும் தங்கள் மறுமை வாழ்வை பாழாக்கும் இஸ்லாமிய பெருமக்களே! முன்னோர்கள் செய்ததும், சரியாக உங்களை வழிநடத்துவார்கள் என்று நீங்கள் நம்பும் ஆலிம்கள் சொல்வதும் மார்க்கம் என்று நம்பி, அதைப்பற்றி விழிப்புணர்வு ஊட்டப்படும்போதுகூட சிந்திக்காமல் அந்த வழிகேட்டிலேயே நீடித்திருக்கும் நிலையில் மரணம் வந்தால் நீங்கள் என்ன செய்ய இயலும்? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! சொல்பவர் யாரென்று பாராமல், சொல்லக்கூடிய விஷயம் என்னவென்பதையும், யாருடைய நன்மைக்காக சொல்லப்படுகிறது என்பதையும் நிதானித்துப் பாருங்கள்!

    அத்தகைய ஷிர்க்கான‌ மௌலிதை ஓதி, பித்அத்தான மீலாதை அறிந்தோ அறியாமலோ கொண்டாடியவர்கள் அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்ச‌க்கூடியவர்க‌ளாக இருந்தால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடிக்கொள்ளுங்கள்! மார்க்கத்தில் இல்லாத மீலாது விழாவை வருஷத்தில் ஒருநாள் கொண்டாடுவதுதான் நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் முறை என்ற தவறான வழிகாட்டுதலின் பக்கம் செல்லாதீர்கள்! வரக்கூடிய வருடங்களில் இதுபோல் கொண்டாடி இறைவனின் கோபத்தைப் பெற்றுக்கொள்வதை விட்டும் தற்காத்துக் கொள்ளுங்கள்!

உங்கள் சகோதரி,
அஸ்மா ஷர்ஃபுதீன்

16 comments:

 1. அஸ் ஸலாமு அலைக்கும் சகோ.அஸ்மா.

  தகுந்த நேரத்தில் சரியான பதிவு. மாஷா அல்லாஹ். சுருக்கமாக அழகாக விளக்கியுள்ளீர்கள்.

  //அந்த வழிகேட்டிலேயே நீடித்திருக்கும் நிலையில் மரணம் வந்தால் நீங்கள் என்ன செய்ய இயலும்?//
  அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கேள்வி.... அல்லாஹ் நம்மனைவரையும் காப்பாற்றி அருள்வானாக.

  ஆமீன்.

  ReplyDelete
  Replies
  1. வ‌ அலைக்குமுஸ்ஸலாம் சகோ. அன்னு.

   ////அந்த வழிகேட்டிலேயே நீடித்திருக்கும் நிலையில் மரணம் வந்தால் நீங்கள் என்ன செய்ய இயலும்?//
   அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கேள்வி.... அல்லாஹ் நம்மனைவரையும் காப்பாற்றி அருள்வானாக//

   நம்முடைய மறுமைக்காக‌ நாம் எப்படி அஞ்சுகிறோமோ அதைப் போலவே மற்றவர்களின் மறுமைக்காகவும் கவலைப்படுகிறோம் என்பதை மக்கள் உணர்ந்துக் கொண்டால், ஆங்காங்கே ஏற்படுத்தப்படும் இதுபோன்ற விழிப்புணர்வுகளை இன்ஷா அல்லாஹ் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். அல்லாஹ் போதுமானவன்! கருத்திற்கு ஜஸாகல்லாஹ் ஹைரா.

   Delete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா.. அழகான பகிர்வு..

  ReplyDelete
  Replies
  1. தெளிவு பெறவேண்டியவர்கள் பயனடைந்தால் அதுவே போதும், அல்ஹம்துலில்லாஹ்! வருகைக்கு நன்றி ஃபாயிஜா, ஜஸாகல்லாஹ் ஹைரா.

   Delete
 3. அஸ் ஸலாமு அலைக்கும் சகோ.அஸ்மா.
  இம் மாத ரஹ்மத் இதழ் பக்கம் 31 இல் மௌலவி டி.ஜே.எம். ஸலாஹுத்தீன் ரியாஜி அவர்கள் மீலாது விழா நடத்த வேண்டும் என்று எழுதிய விழிப்புண்ர்வும் மற்றும் மனாருல் ஹுதா சீர்திருத்தபணியில் விவேகம் வேண்டும் என்ற தலைப்பில் (பக்கம் 7 இல்) மௌலானா அப்துல் மஜீத் ஹள்ரத அவர்கள் எழுதியதும் ஒரு முறை படிக்கவும். பின் உங்கள் உடயை வெளியீடு மீண்டும் படித்து அதில் நாங்கள் எதை பின்பற்றவேண்டும் என்று தெளிவு செய்யவும். அவர்கள் எந்த இயக்கம் நீங்கள் எந்த இயக்கம் என்பதையும் தெளிவுபடிதினால் இந்த முஸ்லிம் சமுதாயத்தில் விழிபிதுங்காமல் பலர் நிம்மதியடைவர்கள். இம்மாதிரியான போர்ரட்டகளினால் யாருக்கு நன்மை. இதற்கு முடிவு எப்போது.

  ReplyDelete
  Replies
  1. வ‌அலைக்குமுஸ்ஸலாம் சகோ. முஹம்மத் கையூம்! வேலை பளுவினால் உடன் பதில் தர இயலவில்லை, மன்னிக்கவும்.

   //இம் மாத ரஹ்மத் இதழ் பக்கம் 31 இல் மௌலவி டி.ஜே.எம். ஸலாஹுத்தீன் ரியாஜி அவர்கள் மீலாது விழா நடத்த வேண்டும் என்று எழுதிய விழிப்புண்ர்வும் மற்றும் மனாருல் ஹுதா சீர்திருத்தபணியில் விவேகம் வேண்டும் என்ற தலைப்பில் (பக்கம் 7 இல்) மௌலானா அப்துல் மஜீத் ஹள்ரத அவர்கள் எழுதியதும் ஒரு முறை படிக்கவும்//

   மீலாது விழா நடத்தவேண்டும் என்று கூறும் யாருடைய‌ ஆக்கங்களாக இருந்தாலும் சரி, பெரிய ஆலிம்கள் என மக்கள் யாரை நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அத்தகையவர்களின் சொற்பொழிவுகளாக இருந்தாலும் சரிதான், நாம் கண்மூடி அதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் மார்க்கத்தில் இப்படிப்பட்டவையெல்லாம் அனுமதிக்கப்பட்டது என்பதை நிர்ணையிக்கும் உரிமை அல்லாஹ்வுக்கும், அவனுடைய இறுதிதூதர்(ஸல்) அவர்களுக்கு மட்டுமே! எனவே குர்ஆன், ஹதீஸிலிருந்து மட்டும் அவர்கள் எழுதும்/பேசும் காலம் இன்ஷா அல்லாஹ் வர‌ட்டும், அப்போது ஒருமுறை என்ன.. பலமுறை படித்துப் பார்த்து நாமும் சேர்ந்து மக்களுக்கு அதைக் கொண்டு செல்வோம்!

   //பின் உங்கள் உடயை வெளியீடு மீண்டும் படித்து அதில் நாங்கள் எதை பின்பற்றவேண்டும் என்று தெளிவு செய்யவும்//

   அல்லாஹ்வினால் பூரணமாக்கப்பட்ட ஒரு தூய மார்க்கத்தில் இருந்துக் கொண்டு, மார்க்கத்தில் இல்லாத.. புதுமையாக உருவாக்கப்பட்ட.. இதுபோன்ற‌வற்றையெல்லாம் மார்க்கமாகக் காட்டும் மௌலவிகளைப் பின்பற்றுவது சரிதானா என்று நீங்கள்தான் (தக்வாவுடன்) சிந்திக்கவேண்டும் சகோ. அந்த சிந்தனையில் கிடைத்த பதிலை வைத்து யாரைப் பின்பற்றவேண்டும் என்று முடிவெடுக்கவேண்டியது நீங்கள்தான். நானல்ல! அதுபோல் நாங்கள் சொல்வது குர்ஆன், ஹதீஸிலிருந்து மட்டுமே உள்ளதா என்பதை உறுதிசெய்துக் கொண்டு, அதிலிருந்து கிடைக்கும் குர்ஆன், ஹதீஸின் போதனைகளைப் பின்பற்றுங்கள். எங்களை அல்ல!

   //அவர்கள் எந்த இயக்கம் நீங்கள் எந்த இயக்கம் என்பதையும் தெளிவுபடிதினால் இந்த முஸ்லிம் சமுதாயத்தில் விழிபிதுங்காமல் பலர் நிம்மதியடைவர்கள்//

   அவர்கள் எந்த இயக்கம் என்பது அவர்களை இங்கே அறிமுகப்படுத்திய உங்களுக்கு தெரிந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். எனக்கு அது தேவையில்லாதது சகோ. மார்க்க விஷயங்களைப் பொறுத்தவரை சொல்லக்கூடியவர்கள் யாரென்று நான் பார்ப்பதில்லை. சொல்லக்கூடிய விஷயங்களை மட்டுமே குர்ஆன், ஹதீஸின் ஒளியில் உள்ளதா என்று பார்த்தால் போதும். மக்களும் இதே அளவுகோளை வைத்துக் கொண்டால் (நீங்கள் சொல்வதுபோல்) விழிபிதுங்காமல், இன்ஷா அல்லாஹ் நேரான வழியில் நிம்மதியடைவார்கள்!

   //இம்மாதிரியான போர்ரட்டகளினால் யாருக்கு நன்மை. இதற்கு முடிவு எப்போது//

   இம்மாதிரியான போராட்டங்களினால் 'குர்ஆன்' & 'ஹதீஸ்' மட்டுமே மார்க்கம் என்ற சத்திய வழியில் போராடுபவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் நன்மை கிடைக்கும் சகோ. அதன் மூலம் ஹிதாயத் பெற்றவர்களுக்கும் நன்மைதானே?

   இதற்கு முடிவு அல்லாஹ் அனைவருக்கும் ஹிதாயத் கொடுக்கும்போதுதான் சகோ. அதுவரை அவனுடைய மார்க்கத்தில் உள்ளதை உள்ளபடி அப்படியே கூட்டாமல் குறைக்காமல் சொல்லியும், மார்க்கத்தில் இல்லாததை 'இது மார்க்கமில்லை' என்று துணிந்து சொல்லி அதிலிருந்து மக்களை மீட்கவும் போராடதான் வேண்டும். ஏனெனில் இது அல்லாஹ் இட்ட கட்டளை.

   நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும்! இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் 3:104)

   Delete
 4. SALAM,

  எங்க பகுதியில அல்ஹம்துலில்லாஹ் முன்னாடிக்கு இப்போ பெரும் பங்கு குறைஞ்சிடுச்சி.ALAHU AKBAR
  ---------------------------
  முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு:
  இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் இனிவரும் காலங்களில் எதிர்வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வழிகாட்டுதலுடன் தான் முன் செல்கிறோமா?உங்களின் கருத்துகளை அவசியம் பதிந்து நம் சமுகத்திற்கு நேரான வழியில் செல்ல உதவுங்கள்.

  கருத்துக்களை இக்கட்டுரையில் பதியவும்:http://tvpmuslim.blogspot.in/2013/01/muslimkal-ethil-kavanam-seluththavendum-tamil-survey.html

  ReplyDelete
  Replies
  1. சலாம் சகோ.

   //எங்க பகுதியில அல்ஹம்துலில்லாஹ் முன்னாடிக்கு இப்போ பெரும் பங்கு குறைஞ்சிடுச்சி.ALAHU AKBAR//

   அல்ஹம்துலில்லாஹ், ரொம்ப சந்தோஷம் சகோ. அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழியைத் தந்தருள்வானாக! வருகைக்கும் தகவலுக்கும் நன்றி சகோ.

   Delete
 5. நல்ல விளக்கமான விழிப்புணர்வுப்பதிவு அஸ்மாக்கா .... அல்ஹம்துலில்லாஹ்... இன்றைய தலைமுறையினர் இது போன்ற அனாச்சாரங்களில் ஈடுபடுவது குறைந்துள்ளது.... மாற வேண்டியது கடந்த தலைமுறையினரே...

  ReplyDelete
  Replies
  1. //இன்றைய தலைமுறையினர் இது போன்ற அனாச்சாரங்களில் ஈடுபடுவது குறைந்துள்ளது.... மாற வேண்டியது கடந்த தலைமுறையினரே...//

   உண்மைதான். இன்றைய தலைமுறையினருக்கு கிடைக்கும் விழிப்புணர்வு முந்திய தலைமுறையினருக்கு மிகவும் குறைவே! ஆனாலும் சில இளைஞர்களும்கூட இத்தகைய அனாச்சாரங்க‌ளை விட்டும் தப்பவில்லை என்பது கவலைக்குரிய விஷயம் :( அனைவருக்கும் நேர்வழி கிடைக்க அல்லாஹ் போதுமானவன். கருத்திற்கு நன்றி பானு.

   Delete
 6. அஸ் ஸலாமு அலைக்கும்

  இவ்விழா ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் இஸ்லாமியப் போர்வையில் வந்த யூதர்களால் முதலில் அரங்கேற்றப்பட்டுள்ளது. அதாவது, நபி(ஸல்) அவர்களுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் வந்த 'பாதினிய்யா' கூட்டத்தைச் சேர்ந்த 'ஃபாத்திமியீன்கள்' என்ற வழிகெட்ட வம்சா வழியினர்தான் இந்த "மீலாது விழா"வை இஸ்லாத்தில் புகுத்தியவர்கள் என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன.

  அந்த சான்றுகளையும் ஆதார மூல நூல்களின் பெயர் மற்றும் பக்கங்களையும்.இங்கே தெரிவிக்கவும் எடுத்துப் பார்த்து விட்டு இன்ஷா அல்லாஹ் தொடரலாம்.

  ஷம்சுத்த்தீன் சாதிக்

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்

  1.(இவ்விழா ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் இஸ்லாமியப் போர்வையில் வந்த யூதர்களால் முதலில் அரங்கேற்றப்பட்டுள்ளது. அதாவது, நபி(ஸல்) அவர்களுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் வந்த 'பாதினிய்யா' கூட்டத்தைச் சேர்ந்த 'ஃபாத்திமியீன்கள்' என்ற வழிகெட்ட வம்சா வழியினர்தான் இந்த "மீலாது விழா"வை இஸ்லாத்தில் புகுத்தியவர்கள் என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன.)

  அந்த சான்றுகளையும் ஆதார மூல நூல்களின் பெயர் மற்றும் பக்கங்களையும்.இங்கே தெரிவிக்கவும் எடுத்துப் பார்த்து விட்டு இன்ஷா அல்லாஹ் தொடரலாம்.

  2.(நபி(ஸல்) அவர்கள் எந்தக் கொள்கையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக நபியாக அனுப்பப்பட்டார்களோ அதே இணை வைக்கும் கொள்கையை அடிப்படையாக‌க் கொண்ட அந்த பாடல்களை அவர்களைப் புகழ்வதற்காக பாடப்படுகிறது. இது எவ்வளவு பெரிய அநியாயம்?! அதுவும் அல்லாஹ்வை மட்டுமே அழைக்கவேண்டிய பள்ளிவாசலில் வைத்தே அவனுக்கு இணைவைக்கும் இந்த மவ்லிது கவிதைகள் மிகவும் பக்திப் பரவசத்தோடு பாடப்படுகின்றன‌! இது மிகப்பெரும் அநீதியில்லையா? ஏக இறைவனை மறைமுகமாக‌ எதிர்க்கும் நன்றிகெட்ட செயல் அல்லவா? வெளிப்படையாகப் பார்த்தால் அவை நபி(ஸல்) அவர்களைப் போற்றுவது போன்று தோன்றினாலும், உண்மையில் அவை அத்தனையும் 'ஷிர்க்' என்னும் இணைவைக்கும் கொள்கைகையைக் கொண்ட வரிக‌ளாகும்.)

  பள்ளியில் நபியை புகழ்ந்து நபித்தோழர்கள் கவி பாடியதற்கு ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் பல இருக்க,அவற்றை முழுக்க மறைத்து விட்டு வெறும் ஷிர்க் என்று நீங்கள் பத்வா கொடுத்திருப்பது தான் நகைப்பிற்கும் வியப்பிற்கும் உரியது.இப்படி பத்வா கொடுத்து விட்டு முஸ்லிம்களே என்று எந்த நாவால அவர்களை அழைப்பீர்கள்?அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்மையான வழியில் மக்களுக்கு மார்க்கத்தைச் சொல்லும் தௌஃபீகை தந்தருள்வானாக.

  ஷம்சுத்த்தீன் சாதிக்
  theriruveli.

  ReplyDelete