Tuesday, January 22, 2013

மார்க்கத்தில் இல்லாத மீலாது விழா!


   இஸ்லாமிய மாதங்களில் மூன்றாவது மாதமான‌ இந்த 'ரபீஉல் அவ்வல்' மாதத்தில், இஸ்லாமியர்களில் சிலர் 'மீலாது விழா' என்ற பெயரில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளை ஒரு விழாவாக‌க் கொண்டாடி வருகின்றனர். தற்போது அந்த 'மீலாதுந்நபி' விழாவுக்கு 'உத்தம நபியின் உதய தின விழா ' என்று புதியதோர் பெயரும் சூட்டப்பட்டு கொண்டாடப்படுகிற‌து. இவ்வருடம் ஜனவரி 25 இந்தியாவில் மிலாடிநபி கொண்டாடப்படுகிறது.  இஸ்லாத்தின் அடிப்படையை சரியாக புரியாதவர்களால் எழுதப்பட்ட 'மவ்லிது' என்ற நூலிலுள்ள‌ பாடல்களை, 'ரபீஉல் அவ்வல்' பிறை ஒன்றிலிருந்து தினமும் மாலை வேளைகளில் பன்னிரெண்டு நாட்கள் பாடி, புண்ணியம் தேடுவதாக 'ஷிர்க்'கென்னும்  பாவச் சுமைகளை சேர்த்து முடித்து, கடைசியாக இந்த விழாவினையும் கொண்டாடி கூடுதலாக ஒரு 'பித்அத்'தினையும் செய்து முடிக்கிறார்கள்.

    அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் தவ்ஹீத் பிரச்சாரத்தின் மூலமாக மக்கள் விழிப்புணர்வு பெற்றதால், மீலாத் விழாவும் அதன் பெயரால் நடத்த‌ப்படுகின்ற அனாச்சாரங்களும் பல பகுதிகளில் ஒழிந்துக் கொண்டு வந்தாலும், இன்னொரு பக்கம் தூய இஸ்லாத்தை மக்கள் மன்றத்தில் உரக்க சொல்ல வேண்டிய ஆலிம்களின் தலைமையிலேயே இந்த அனாச்சாரம் இன்றுவரை அரங்கேற்றப்பட்டு வருவதால், முழுமையான இஸ்லாமிய சமுதாயத்தையும் அதிலிருந்து மீட்டெடுக்க, சத்திய மார்க்கத்தை அறிந்த‌ நாம் ஒவ்வொரும் கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் 'நமக்கென்ன வந்தது.. அவர்கள் எப்படியும் கொண்டாடிவிட்டு போகட்டுமே' என அலட்சியம் செய்தால் அதற்கும் மறுமையின் கேள்விக் கணக்கு நமக்கு உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது!

   

    இந்த மீலாது விழாக்கள் இந்தியாவில் மட்டுமின்றி, இங்கிருந்து அரபு நாடுகளுக்கு செல்பவர்களில் சிலர் அங்கேயும் மீலாது விழாவைக் கொண்டாடுவதை விட்டபாடில்லை. ஆனால் அந்த இஸ்லாமிய‌ நாடுகளில் "மீலாது" என்ற பெயரில் எந்தவித‌ கொண்டாட்டங்களோ, விசேஷ நிகழ்ச்சிகளோ இல்லை. வணிக நோக்கத்திற்காக மட்டுமே அங்கு அரசாங்க விடுமுறை விடப்படுகின்றன. மக்கள் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை மார்க்கமாக நினைத்து தவறான வழியில் செல்வதைத் தடுக்காமல் அதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு இஸ்லாமிய அரசாங்கமே செய்கிறது என்றால், அவர்களிடம் முழுமையான மார்க்கம் இல்லை என்றுதான் சொல்லமுடியும் :(

    இந்த‌ மீலாது விழாக் கொண்டாட்டங்கள் மூலம் நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள எங்களின் அன்பை வெளிப்படுத்துகிறோம், அவர்களைப் புகழ்வதின் மூலம் அவர்களை கண்ணியப்படுத்துகிறோம், இதன் மூலம் அவர்களை நினைவு கூறுகிறோம் என்ற காரணங்களைக் கூறிக்கொண்டு அவர்கள் அரங்கேற்றி வரும் பல்வேறு அனாச்சாரங்களுக்கு இஸ்லாத்தில் துளியளவும் இடமில்லை. அவையெல்லாம் வழிபாடுகளே என்று நினைத்துக் கொண்டிருக்கும் அறியா மக்களை அந்த அறியாமையிலிருந்து வெளியேற விடாமல் எதையாவது சொல்லி மழுப்பி, அவை அத்தனையும் சரியென்று மக்களை நம்பவைத்து அவர்களை வழிகேட்டிலேயே தள்ளிக் கொண்டிருக்கும் சுன்னத் வல்ஜமாஅத்தின் ஆலிம்கள், அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லவேண்டிய நாளைய மறுமைக்கு அஞ்சிக் கொள்ளட்டும்! இப்படியெல்லாம் விழாக்களை ஏற்படுத்தினால் பணம் பார்க்கலாம் என்ற எண்ணமும் ஒரு காரணம்..

   இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இம்மாதத்தில் அவர்கள் நடத்தும் இந்த மீலாது விழாவின் பின்னணி என்ன? இதை எந்த விதத்தில் இஸ்லாம் தடுக்கிறது? என்பதைப் பார்ப்போம்.

    அல்லாஹ்வையும் அவனது தூதர்(ஸல்) அவர்களையும் மனதார ஏற்றுக் கொண்ட ஒரு முஸ்லிம், வணக்கமாக நினைத்து, தான் செய்யும் ஒரு காரியத்தை அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆனையும், நபி(ஸல்) அவர்கள் கூறிய/செயல்படுத்திய/அங்கீகரித்தவற்றை மட்டுமே உரைக் கல்லாக வைத்துதான் அது வணக்கமா அல்லது இல்லையா என்பதை முடிவு செய்ய‌வேண்டும். அப்போதுதான் அந்த வணக்கத்திற்கு நன்மை கிடைக்கும். இல்லையென்றால் அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படாத தீமைகளின் பட்டியலில் சேர்ந்துவிடும். (அல்லாஹ் காப்பானாக!) அப்படியானால், இந்த 'ரபீஉல் அவ்வல்' மாதத்தில் நடத்தப்படுபவை அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் காட்டித் தந்த‌தின் அடிப்படையில் அமைந்துள்ளதா என்றால், நிச்சயமாக இல்லை!

மீலாது விழாவின் பின்னணி:


    நபி(ஸல்) அவர்கள் தனக்காகவோ, தனக்கு முந்திய நபிமார்களுக்காகவோ அல்லது இறப்பால் தனக்கு முந்திச் சென்ற தன்னுடைய தோழர்களுக்காகவோ, குடும்பத்தினருக்காவோ பிறந்தநாள் ('மீலாது') விழா கொண்டாடியதில்லை. அதுபோல் நான்கு கலீஃபாக்களோ, மற்ற நபித்தோழர்களோ, அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களோ, அல்லது நபி(ஸல்) அவர்களால் போற்றப்பட்ட முந்தய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களோ மீலாது விழா கொண்டாடவில்லை. அப்படியானால் மீலாது விழாவின் ஆரம்பம் எப்போது?

    இவ்விழா ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் இஸ்லாமியப் போர்வையில் வந்த யூதர்களால் முதலில் அரங்கேற்றப்பட்டுள்ளது. அதாவது, நபி(ஸல்) அவர்களுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் வந்த 'பாதினிய்யா' கூட்டத்தைச் சேர்ந்த 'ஃபாத்திமியீன்கள்' என்ற வழிகெட்ட வம்சா வழியினர்தான் இந்த "மீலாது விழா"வை இஸ்லாத்தில் புகுத்தியவர்கள் என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. ஆக, 'நபி(ஸல்) அவர்களுக்காக' என்று கூறி இவர்கள் இவ்வாறு மீலாது விழாவை ஆரம்பித்து வைத்தது இஸ்லாத்தையோ, நபி(ஸல்) அவர்களையோ நேசிப்பதற்காக அல்ல‌! இஸ்லாத்தை அழிப்பதற்காகவும், இஸ்லாத்தை விட்டும் அதன் உண்மையான/தூய்மையான‌ கொள்கைகளை விட்டும் முஸ்லிம்களை தூரமாக்கும் திட்டத்தில், இஸ்லாத்தில் இல்லாதவைகளை இஸ்லாத்தில் நுழைய வைக்கவேண்டும் என்பதற்காகவே இதுபோன்றவற்றை துவக்கி வைத்தார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் எப்போது?


    நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு மீலாது விழாவைக் கொண்டாடுபவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 ல் நபி(ஸல்) அவர்கள் பிறந்தார்கள் என்று எண்ணிதான் கொண்டாடுகிறார்கள். ஆனால் இஸ்லாமிய தேதி (பிறை)யின் அடிப்படையில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் இதுதான் என்று எந்தவித சரியான தகவலும் எந்த ஹதீஸ் நூலிலும் பதிவு செய்யப்படவில்லை. அதேசமயம் கிழமையின் அடிப்படையில் உறுதியாகப் பதிவு செய்யப்பட்ட ஒரே ஆதாரம் திங்கள் கிழமை என்பது மட்டுமே! அப்படியானால் நபி(ஸல்) அவர்கள் எந்த பிறையில் பிறந்தார்கள் என்றே சரியாக சொல்லப்படவில்லை என்ற விஷயம் கூட தெரியாமல் எப்படி பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் அவர்களுக்கு?!

நபி(ஸல்) அவர்களைப் புகழ் பாடக்கூடாதா?


    இந்த விழாவிற்கு முந்திய நிகழ்ச்சிகளில் முக்கியமானது 'மவ்லிது' என்ற புகழ் பாடுவதாகும். நபி(ஸல்) அவர்கள் எந்தக் கொள்கையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக நபியாக அனுப்பப்பட்டார்களோ அதே இணை வைக்கும் கொள்கையை அடிப்படையாக‌க் கொண்ட  அந்த பாடல்களை அவர்களைப் புகழ்வதற்காக பாடப்படுகிறது. இது எவ்வளவு பெரிய அநியாயம்?! அதுவும் அல்லாஹ்வை மட்டுமே அழைக்கவேண்டிய பள்ளிவாசலில் வைத்தே அவனுக்கு இணைவைக்கும் இந்த மவ்லிது கவிதைகள் மிகவும் பக்திப் பரவசத்தோடு பாடப்படுகின்றன‌! இது மிகப்பெரும் அநீதியில்லையா? ஏக இறைவனை மறைமுகமாக‌ எதிர்க்கும் நன்றிகெட்ட செயல் அல்லவா?  வெளிப்படையாகப் பார்த்தால் அவை நபி(ஸல்) அவர்களைப் போற்றுவது போன்று தோன்றினாலும், உண்மையில் அவை அத்தனையும் 'ஷிர்க்' என்னும் இணைவைக்கும் கொள்கைகையைக் கொண்ட வரிக‌ளாகும்.

அண்ணல் நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையைப் பாருங்கள்:
"கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தியதுபோல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியான்தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர்(ரலி); நூல்: புகாரி (3445)
    இன்னும் இதுபோன்ற நிறைய ஹதீஸ்களில் தன்னை வரம்பு மீறி புகழ்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்பதைக் காணமுடிகிறது. ஏனெனில் வரம்பு மீறிப் புகழ்வது கூட இணை வைத்தலில் கொண்டுபோய் சேர்த்துவிடும் (அதாவது அல்லாஹ்விற்கு நிகராக அவனது தூதர் இருப்பதாக காட்டும்) என்பதில் நபி(ஸல்) அவர்கள் மிகவும் கவனமாக இருந்தார்கள்.
'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; தான் நாடியவருக்கு இது அல்லாத மற்ற பாவங்களை மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)

வழிகேட்டில் இருந்து மீள்வோம்:

     ஆக மவ்லிது, மீலாது விழா போன்றவை நபி(ஸல்) அவர்கள் மரணித்து நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது மட்டுமல்லாமல், இறைவனிடம் மன்னிப்பே கிடைக்காத‌ இணை வைத்தல் என்னும் மாபாதக குற்றத்தை செய்யக்கூடியதாக இருக்கும்போது, அதற்கு மார்க்க சாயம் பூசுவது அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் கை வைப்பதாகும். (நஊது பில்லாஹி மின்ஹா!)

      நம் முன்னோர்கள் வழிவழியாக செய்து வந்த விழா என்றும், மார்க்கம் கற்று, கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கும் ஆலிம்களே இவ்விழாவை ஆதரிக்கிறார்கள் என்றும் எண்ணி மக்களும் அறியாமையில் இவ்விழாவை இன்னும் கொண்டாடி வருகிறார்கள்.  நம் முன்னோர்கள் அறியாமையில் செய்த விஷயங்களை இப்போதும் தொடர சொன்னால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? இல்லை தானே?  மேலும் இத்தகைய விழாக்களை ஆலிம்கள் ஆதரிப்பதற்கு ஒரே காரணம் பணம் வசூலிக்க முடியும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

      அடுத்ததாக நபி (ஸல்) மீது வைத்திருக்கும் நேசத்தை வெளிப்படுத்த இத்தகையை விஷயங்களை செய்கிறோம் என்கிறார்கள். நேசத்தை  வருடத்தில் ஒரு நாள் மட்டும் தான் வெளிபடுத்த வேண்டும் என கருதுகிறார்கள் போலும்.  நபி(ஸல்) ஐ நாம் நேசிக்கிறோம் எனில் அதற்கு வருடத்தில் ஒருநாளை தேர்ந்தெடுப்பது என்பது அறிவுக்கும் பொருத்தமில்லாதது!  நம் நேசத்தை வெளிபடுத்த எந்நாளும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல் படி வாழ்ந்துகாட்டலாம். இறைத்தூதரவர்கள் மீது அதிக சலவாத் சொல்லலாம்.  கலப்படமல்லாத சுன்னாவை கடைபிடித்து இறைதூதரின் மீதான நம் நேசத்தை காட்டலாம்.  இப்படியாக நம் நேசத்தை ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நடத்தையிலும் காட்டுவதை விடுத்து ஒரு குறிப்பிட்ட நாளை தேர்ந்தெடுத்து , அந்த நாளில் மட்டும் காட்டுவது என்பது நகைப்புக்குரிய விஷயமே!!!

       மவ்லிது ஓதியும், மீலாது கொண்டாடியும் தங்கள் மறுமை வாழ்வை பாழாக்கும் இஸ்லாமிய பெருமக்களே! முன்னோர்கள் செய்ததும், சரியாக உங்களை வழிநடத்துவார்கள் என்று நீங்கள் நம்பும் ஆலிம்கள் சொல்வதும் மார்க்கம் என்று நம்பி, அதைப்பற்றி விழிப்புணர்வு ஊட்டப்படும்போதுகூட சிந்திக்காமல் அந்த வழிகேட்டிலேயே நீடித்திருக்கும் நிலையில் மரணம் வந்தால் நீங்கள் என்ன செய்ய இயலும்? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! சொல்பவர் யாரென்று பாராமல், சொல்லக்கூடிய விஷயம் என்னவென்பதையும், யாருடைய நன்மைக்காக சொல்லப்படுகிறது என்பதையும் நிதானித்துப் பாருங்கள்!

    அத்தகைய ஷிர்க்கான‌ மௌலிதை ஓதி, பித்அத்தான மீலாதை அறிந்தோ அறியாமலோ கொண்டாடியவர்கள் அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்ச‌க்கூடியவர்க‌ளாக இருந்தால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடிக்கொள்ளுங்கள்! மார்க்கத்தில் இல்லாத மீலாது விழாவை வருஷத்தில் ஒருநாள் கொண்டாடுவதுதான் நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் முறை என்ற தவறான வழிகாட்டுதலின் பக்கம் செல்லாதீர்கள்! வரக்கூடிய வருடங்களில் இதுபோல் கொண்டாடி இறைவனின் கோபத்தைப் பெற்றுக்கொள்வதை விட்டும் தற்காத்துக் கொள்ளுங்கள்!

உங்கள் சகோதரி,
அஸ்மா ஷர்ஃபுதீன்
read more "மார்க்கத்தில் இல்லாத மீலாது விழா!"

Tuesday, January 15, 2013

கல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா? -3ம் பரிசு பெற்ற கட்டுரை (இப்னு முஹம்மத்)

இன்றைய தமிழ் முஸ்லிம் சமூகத்தில் கல்வி குறித்து ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் 5% கூட பூர்த்தியாகவில்லை. மேலும் கல்விக்கான தேடலில் போதிய வழிகாட்டலின்றியும், வாய்ப்பின்றியும் தடுமாறுகிறது. உலகமயமாக்கலில் அனைத்து சமூகமும் அடித்துச் செல்லப்படுவதில் தமிழக முஸ்லிம் சமூகமும் அச்சுழலில் சிக்கித் தவிப்பதில் வியப்பொன்றுமில்லை.

கல்விக்கான தேடல் அறிவிற்கா? வளத்திற்கா?

இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் கல்வியை தன் எதிர்கால வாழ்வின் பொருளாதார தேவையை சீராக்க உதவும் அகக்காரணியாக மட்டும் நினைத்து தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) , பொறியியல் பாடப்பிரிவுகளைப் படித்து மைக்ரோசாஃப்ட், விப்ரோ போன்ற நிறுவனத்தில் வேலை பெறுவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். சிலர் அதில் வெற்றியும் பெறுகின்றனர். சிலர் பொருளாதாரப் பாடங்கள் (எம்.பி.ஏ), கலைப்பாடப்பிரிவுகள், தொழிற்பயிற்சிகள் பயின்று ஏதேனும் பன்னாட்டு நிறுவனம், அல்லது தனியார் நிறுவனத்தில் வேலை பெற்று விடலாம் என்று நம்பிக்கையுடன் பயில்கின்றனர். இவர்கள் யாருமே கல்வியை ஓர் அறிவாகக் கற்பதில்லை. மேலும் தான் அடையப் போகும் அல்லது அடைந்த கல்வியின் மூலம் தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும், ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கும் விடுதலை மற்றும் சமூக நீதி பெற்றுத் தருவதற்கும் தன் கல்வி பயன்தரும் என்று எண்ணுவதில்லை. இதில் இளைஞர்கள் மீது மட்டுமல்ல, பெற்றோர் மற்றும் சமூகத் தலைமை என்று அனைவருக்கும் பொறுப்புண்டு.

மார்க்க கல்வி போதிக்கும் பெரும்பாலான பாடசாலைகள் கூட மாணவன் தன் மார்க்கக் கல்வி கொண்டு ஏதேனும் ஒரு இறை இல்லத்தில் இமாமாகவோ அல்லது இஸ்லாமியப் பாடசாலையில் ஆசிரியனாகவோ சேர்ந்து தன் வாழ்வின் பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே அவனை தயார் செய்கின்றனர். நாம் இக்கட்டுரையில் மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என்று பாகுபாடு காட்டாமல் இஸ்லாம் போதித்ததின் அடிப்படையில் கல்வியை பரந்த நோக்குடனே அணுகுகிறோம்.

அல்லாஹ் தன் திருமறையில் கேட்கின்றான்,
“அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா?”
(அல் குர்’ஆன் 39:9)
ஓர் கல்வியை அறிவாகப் பெற்று ஆய்ந்தறிந்து அதன் மூலம் உலக மக்களுக்கு நன்மையை ஏவி தீமையை தடுப்பவனும், வெறுமனே கல்வியை பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதற்காக பயில்பவனும் சமமாவார்களா? இது கல்விக்கான தேடலில் முதல் கேள்வியாகும். இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
“அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தருகின்ற கல்வியை, உலக ஆதாயத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருவர் கற்றுக் கொண்டால் மறுமை நாளில் சொர்க்கத்தின் வாடையைக்கூட அவர் பெற்றுக்கொள்ள மாட்டார்.”
(அபூ ஹுரைரா(ரலி) அபூதாவூத் - 3664)
மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் கல்வியை அறிவாகப் பெற்று மக்களுக்குப் பயனளிக்கும் நபரைக் குறித்து ஓர் அழகிய உதாரணம் மூலம் விளக்குகின்றார்கள்,
“நேர்வழி மற்றும் கல்வி ஞானம் ஆகியவற்றுடன் என்னை அல்லாஹ் அனுப்பி வைத்ததற்கு உதாரணம் பூமியை வந்தடைந்த மழையின் உதாரணம் போலாகும். அதில் ஒரு பகுதி தண்ணீரை ஏற்றுக் கொண்டு செடி, கொடிகளை அதிக அளவில் விளையச் செய்கிறது. தண்ணீரை தேக்கி வைத்து அதன் மூலம் மக்களுக்கு பயனளித்த கெட்டியான பூமியாக உள்ளது. மக்களும் அதிலிருந்து குடித்தார்கள். (கால்நடைகளுக்கும்) குடிக்கக் கொடுத்தார்கள். விவசாயம் செய்தார்கள். அந்த பூமியின் மற்றொரு பகுதி கட்டாந்தரையாகும். அது தண்ணீரையும் தேக்கி வைக்காது. செடிகளையும் முளைக்கச் செய்யாது. இதில் முதல் உதாரணம் அல்லாஹ்வின் மார்க்கத்தை விளங்கி, அல்லாஹ் என்னை அனுப்பி வைத்த மார்க்கம் மூலம் பயனளித்து (அதாவது) தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவனுக்குரிய உதாரணமாகும். (கட்டாந்தரைக்கு உதாரணம்) மார்க்கத்தின் பக்கம் தன் தலையைக் கூடத் திருப்பாமல் அல்லாஹ் என்னை எதன் மூலம் அனுப்பினானோ அந்த வழியை ஒப்புக்கொள்ளாமல் இருப்பாவனுக்கு உதாரணமாகும்.”
(அபூ மூஸா (ரலி), புகாரி - 79, முஸ்லிம் 2282)
ஒருவன் கல்வியை அறிவாகப் பெற்று சமூக நலனுக்காக அதனை பயன்படுத்தும்போதுதான் அவனிடமிருந்து புதிய கண்டுபிடிப்புகள், சிந்தனைகள், அறிவுகள் தோன்றுகின்றன. இப்படிக் கல்வி பயில்பவன் தான் விஞ்ஞானியாகவோ, கண்டுபிடிப்பாளனாகவோ, சமூக ஆர்வலனாகவோ உயர இயலும். இல்லாவிட்டால் ஏதேனும் பன்னாட்டு நிறுவனத்தில் இலட்ச ரூபாய் மாத சம்பளம் பெற்று தன்னை மட்டுமே வளப்படுத்திக் கொள்ளும் சுயநலமியாகத்தான் இருப்பான். அவனது கல்வியால் மனித சமூகத்திற்கு எந்த பயனுமில்லை.

சிலர், "இன்று கல்வி முறையே இப்படித்தானே உள்ளது... இதனை முற்றாக சீர் செய்வது என்பது இயலாத காரியம்" என்கின்றனர். கல்வி முறையை முற்றாக சீரமைப்பது என்பது நீண்டகால இலக்கு. அதே சமயம் தற்போது கல்வித்தேடலில் இருக்கும் இளைய தலைமுறையினருக்கு, கல்வி என்பது அறிவு. அது மக்களுக்கு பயன்படும் விதமாக பயின்று சமூகத்திறுகும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கும் விடுதலையைப் பெற்றுத்தர பயன்படுத்த வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
“ நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே”
உமர் (ரலி), புகாரி - 1, முஸ்லிம் - 1907)

கல்வியின் மூலம் அதிகாரம்: 

தான் பெற்ற கல்வியின் மூலம் மக்களுக்கு சேவை செய்வதின் உச்சத்தை அடைவதற்கு அதிகாரம் அவசியமாகிறது. அதிகாரம் என்பது அரசின் ஆட்சிப்பணிகளான இந்திய நிர்வாக சேவை (ஐ ஏ எஸ்), இந்திய காவல் சேவை ( ஐ பி எஸ்) மற்றும் இன்னபிற அரசுப்பணிகளின் மூலம் சாத்தியமாகிறது. ஆனால் அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பங்களிப்பு அதிர்ச்சியளிக்கும் வகையில் குறைவாக உள்ளது.நான் தமிழகத்தில் அரசுப் பணியில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை மற்றும் அதன் சதவிகிதத்தை "தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்" மூலம் கோரிய போது அரசு அளித்த பதிலின் விவரம்: 


    • தமிழக முஸ்லிம் மக்களின் மொத்த மக்கட்தொகை 8%க்கும் மேல்!

    • ஆனால் அரசுப்பணியில் வெறும் 1.9%பேர்தான் உள்ளனர். 

    • அதிலும் அதிகாரமிக்க ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் பணிகளில் வெறும் 10 பேர் மட்டுமே உள்ளனர். 

    • காவல்துறையிலும் சதவீதக்கணக்கு மிக மிகக் குறைவாக உள்ளது. 

கல்வித் தேடலில் அரசுப் பணியின் முக்கியத்துவம், இன்றைய தலைமுறையினருக்கு முறையாக வழிகாட்டப்படவில்லை. ஒருவன் கோடி கோடியாக சம்பாதித்தாலும் ஒரு கோப்பில் அரசிடம் கையெழுத்துப் பெற வேண்டுமானால் மாவட்ட ஆட்சித்தலைவரின் அலுவலகத்தில் சாதாரண அலுவலக எழுத்தரிடம் (க்ளார்க்) கை கட்டிதான் நின்றுதான் பெற இயலும். அதுதான் அதிகாரத்தின் சக்தி. உயர்சாதி பிராமணர்கள் இதனை நன்கறிந்ததால் தான் 1% உள்ள அவர்கள் அரசுப் பணியில் மட்டும் 90% உள்ளனர். இஸ்லாமிய இளைஞன் அரசுத்துறையில் பங்கெடுக்க ஆர்வம் கொள்ளாதிருக்க முக்கிய காரணம், “ சம்பளம் குறைவு”. அதனை விட தன் தந்தையின் வணிகத்தில் அல்லது பன்னாட்டு நிறுவனத்தில் அதிகம் சம்பாதிக்க இயலுமென்ற பணக்கணக்கு. ஆனால் எப்போது ஒரு சமூகம் அரசுப்பணியில் தனது பங்களிப்பை சரியாக பெறத் தவறிவிடுகிறதோ அச்சமூகத்திற்கு “சமூக நீதி” என்பது ஒருபோதும் கிட்டாது. அரசுப்பணிகளின் முக்கியத்துவம் குறித்து இஸ்லாமிய இளையத் தலைமுறையினருக்கு வழிகாட்ட வேண்டியது சமூகத் தலைமை மற்றும் மார்க்க அறிஞர்களின் முதன்மைக் கடமையாகும். தலித் மக்களும் கூட அரசுப்பணியில் போதிய சதவிகிதம் பெற்றுள்ளனர். ஆனால் முஸ்லிம்களின் நிலை பரிதாபத்திற்குரியது. வன்னியச் சமூகம் முதற்கொண்டு எல்லா சாதிப்பிரிவுகளும் ஆட்சிப்பணி பயிற்சி சாலைகளை (ஐஏஏஸ் அகாடமி) நடத்தி தன் சமூக இளைஞர்களை அதிகாரத்துறைகளில் நுழைவிக்கின்றனர். ஆனால் முஸ்லிம் சமூகம் மத்திய அரசுப்பணி (யுபிஎஸ்ஸி) மாநில அரசுப்பணி (டி என் பிசி) குறித்து சிறிதும் விழிப்புணர்வின்றி உள்ளது. எனவே கல்விக்கான தேடலில் அதிகாரத்தைப் பெறுவதே முதல் இலக்கு. அதன் மூலம் மிகுதியான மக்கள் பணியாற்ற இயலும்.

ஆரம்பக் கல்வியின் அவசியம் :

ஒருவன் பிற்காலத்தில் பெரும் விஞ்ஞானியாகவோ மெஞ்ஞானியாகவோ வர வேண்டுமெனில் அவனது அடிப்படைக் கல்வி மிகச் சிறப்பானதாக அமைய வேண்டும். பெரும் விஞ்ஞான கண்டுபிடிப்புக்களின் அடிப்படையாக ஆரம்பக் கல்வியின் வேதியியல், இயற்பியல், உயிரியல் கோட்பாடுகளும், கணிணி வழிக் கண்டுபிடிப்புகளுக்கு ஆரம்ப கல்வியின் கணித சூத்திரங்களே அடிப்படை. அது போல் ஒருவனின் பண்பு நலன்கள், சிந்தனைப் பாங்கு, ஒழுக்கம் ஆகியவைகளுக்கு ஆரம்பத்தில் அவன் மனதில் பதிய வைக்கப்படும் இறையறிவும், ஒழுக்க போதனைகளும்தான் அடிப்படை. முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் ஆரம்பக் கல்வியை சிறப்பானதாக திட்டமிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

ஒரு சமூகத்தின் எழுச்சிக்கு இன்று அதன் இளைய தலைமுறையினர்க்கு வழங்கப்படும் ஆரம்பக்கல்வியே ஆதாரமாகவுள்ளது. ஆனால் நமது சமூகம் இவ்விசயத்தில் மிகவும் பாராமுகமாகவுள்ளது. இன்று ஒரு சில இஸ்லாமிய கல்லூரிகள் இருப்பினும் நம் சமூகத்திற்கு அடிப்படையான ஆரம்பக்கல்விசாலைகள் மிக மிக குறைவாகவுள்ளது. பெரும்பாலும் கிறிஸ்துவ மிஷினரிகளால் நடத்தப்படும் ஆரம்ப பள்ளிகளிலேயே நமது சமூக இளைய தலைமுறையினர் கல்வி கற்கின்றனர். இந்நிலையை மாற்றி நமது இளைய தலைமுறையினர் பயிலப் போதுமான அளவு ஆரம்ப பாடசாலைகளை நாம் நிறுவ வேண்டும். பள்ளிகளை நிறுவினால் மட்டும் போதாது இஸ்லாமியக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் இணைந்து 1 முதல் 5ம் வகுப்புகள் வரையிலானப் பாடப்பிரிவுகளையும், 6 முதல் 10 வரையிலான பாடப்பிரிவுகளையும் அழகிய முறையில் தொகுத்து இஸ்லாமிய சமூகத்திற்கு வழங்க வேண்டும். இன்று சில இஸ்லாமியத் தனியார் தொண்டு நிறுவனங்கள், இயக்கங்கள் அம்முயற்சியில் ஈடுபட்டு மாணவர்களுக்கு அத்தகைய பாடபுத்தகங்களை வெளியிட்டிருப்பது வரவேற்க வேண்டிய விஷயமாகும். அப்புத்தகங்களை வாங்கி நம் வளரும் தலைமுறையினருக்கு கல்வி போதிக்க வேண்டும். தமிழகத்தில் சமச்சீர் கல்வி என்ற போதிலும் நாம் சுயமாக நமக்கென்று ஆரம்பப் பள்ளிகளை நிறுவும் போது ஒழுக்க போதனைக்கு என்று தனியாக ஒரு வகுப்பிற்கு நேரம் ஒதுக்கி அப்பாடப்பிரிவுகளை போதிக்க வேண்டும்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. எனவே ஆரம்ப பள்ளிகளிலேயே இறைவனை பற்றி அறிவையும், இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளையும் போதித்து இஸ்லாமிய கலாச்சாரத்தை மனதில் பதித்துவிட்டால் பின்பு மாணவனது வளச்சியில் , ஒழுக்கத்தில் அவ்வறிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அவன் ஒரு நல்ல முஸ்லிமாக, இந்திய குடிமகனாக இந்நாட்டிற்கு பெரும் சேவை செய்பவனாக பரிணாமம் எடுப்பான்.

பெண்கல்வியின் விழிப்புணர்வு:

துனிசிய நாட்டின் இஸ்லாமிய பேரறிஞர் ரஷீத்-அல்-கன்னூஸி கூறுகையில் ,
"உலகின் மக்கட் தொகையில் சரிபாதி பெண்கள். பெண்களை விட்டுவிட்டு எந்த சீர்த்திருத்தப் பணியும், சமூக புரட்சியும், அறிவும் வெற்றி பெற இயலாது என்கிறார்.
இன்று தமிழக முஸ்லிம் சமூகத்தில் பெண் கல்வி குறித்தான விழிப்புணர்வு இப்போது தான் பற்றிப்படர்கிறது. "தி ஹிந்து" நாளிதழின் நிருபர் திருமதி அமுதா கண்ணன் கூறுகையில்,
"முன்பெல்லாம் ஒரு கல்லூரியில் ஒன்று அல்லது இரண்டு இஸ்லாமிய பெண்களே இருப்பர். ஆனால் இன்றோ ஒரு கல்லூரியின் ஒவ்வொரு வகுப்பிலும் 3 பெண்களுக்கு குறையாமல் உள்ளனர்.
(தி ஹிந்து ஜூன் 11/2012)

அவினாசிலிங்கப் பல்கலை கழகத்தின் நிர்வாகவியல் துறையின் தலைவராக இருக்கும் திருமதி யூ. ஜெரினா பீ கூறுகையில்,
"முப்பது வருடத்திற்கு முன்பாக இஸ்லாமியப் பெண் 14 வயதை அடைந்து விட்டால் அவள் திருமணத்தின் மூலம் பள்ளியிலிருந்து பாதியில் நின்றுவிடுவாள். ஆனால் இன்று உயர்க் கல்வி கற்றும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. மேலும் பாரதியார் பல்கலை கழகத்தில் இளநிலை முதல் டாக்டர் பட்டம் வரை பத்து சதவீதம் முஸ்லிம் பெண்கள் கல்வி கற்கின்றனர்.
(தி ஹிந்து ஜூன் 11/2012)
மேற்கூறிய தகவல் மகிழ்ச்சிக்குரியவை என்றாலும் போதுமானவை அல்ல. நிறையப் பெற்றோர் தம்பிள்ளைகளை உயர்கல்வி படிக்க வைக்க நினைத்தாலும் இருபாலர் கல்விமுறை, மேற்கத்திய நாகரீக அடிப்படையிலான கல்வி முறைகள் அவர்களை தயங்கச் செய்கிறது. பேராசிரியர் திருமது ஜெரினா பீ அவர்கள் கூறுகையில்," கோவை பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கோட்டைமேடு மற்றும் கரும்புகடை பகுதியில் வாழும் பெண்கள், அவினாசிலிங்கப் பல்கலை கழகம் பெண்களுக்கானது என்பதால் நிறைய பேர் இணைகின்றனர் என்கிறார். பெண் கல்லூரிகள் மேலும் குறிப்பாக இஸ்லாமிய முறையிலான பெண் கல்லூரிகள் இன்று இச்சமூகத்திற்கு அடிப்படை தேவையாகும். இதன் மூலம் பெற்றோர் நம்பிக்கையுடன் தம் பிள்ளைகளை உயர்கல்வி கற்க அனுமதிப்பர்.

நிறைய இஸ்லாமிய பெண்கள் போதுமான வழிகாட்டலின்றி, உயர் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் ஏதேனும் ஒரு பாடத்தை தேர்ந்தெடுக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு சராசரி குடும்பத்தலைவியாக மாறிவிடுகின்றனர். அவர்கள் கற்ற கல்வியின் மூலம் அவர்களுக்கும் பயனில்லை, சமூகத்திற்கும் பயனில்லை. எனவே கல்லூரிகள் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கையிலேயே எந்தக் கல்வி தன் அறிவை வளர்த்தி சமூகத்திற்கும் பயனுள்ள முறையில் இருக்கும் என்பதை ஆய்ந்தறிந்து, இன்று இஸ்லாமிய சமூகச் சூழலில் திருமணத்திற்குப் பிறகும் தனக்கும், தன் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பயனளிக்கும் வகையில் எக்கல்வி உதவும் என்று தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் இஸ்லாமிய இளைஞிகளுக்கு வழிகாட்ட வேண்டியது சமூகத்தின் பொறுப்பாகும். மேலும் அப்பெண்கள் பெற்ற கல்வியையும் இச்சமூகத்திற்காக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் திட்டங்கள் தயாரிக்க வேண்டும்.

துனிசியா, எகிப்து என்று அரபுலக வசந்தத்தின் புரட்சியில் பெண்கள் சரிசமமாக பங்கெடுத்ததை மறக்கலாகாது. ஒவ்வொரு இஸ்லாமியக் குடும்பமும், சமூகமும் நமது இளைய தலைமுறையினர்க்கு அவர்களின் திறமைகளை பயன்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

திருமணத்திற்கு பிறகும் பெண்கள் உயர்கல்வி கற்க நாடினால் இஸ்லாமிய வரையரைக்குட்பட்டு அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டியது சமூக கடமையாகும். பெண்கள் தாம் பெற்ற கல்வியின் வாயிலாக பிற பெண்களுக்கு கல்வி போதிப்பதாகட்டும், இஸ்லாம் எதிர்க்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து பிறருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலாகட்டும், வளரும் தலைமுறையினரை பயிற்றுவிப்பதிலாகட்டும் ஆசிரியராக, மருத்துவராக இன்னும் எந்தத் துறையிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்கவேண்டும்.

சட்டக் கல்விக்கான தேடல்:

“சட்டம் ஓர் இருட்டறை. வக்கீலின் வாதம், அதில் ஒளி விளக்கு”
என்று அறிஞர் அண்ணா கூறினார். சட்டத்தின் மொழி தெரிந்தால் மட்டுமே ஓர் ஒடுக்கப்பட்ட சமூகம் தனது சட்டரீதியான உரிமையை நிலைநாட்ட இயலும். வெள்ளையரின் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் அடிமைத்தனங்களை தகர்க்க நம் முன்னோர்கள் முதலில் செய்தது சட்டக்கல்வியை பயின்றதுதான்! காந்தி, நேரு, வல்லபாய் படேல், ஜின்னா என்று சுதந்திர போராட்ட தலைவர்களில் 80 % பேர் சட்டக்கல்வி முடித்த வழக்கறிஞர்களே. டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்வி பயின்றதன் காரணமாகத்தான் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் விடுதலைக்கு இறுதிவரை போராடி அவர்களின் உரிமையைப் பெற்றுத் தந்தார். இறுதியில் இந்தியாவின் அரசியல் சாசனத்தை எழுதும் தலைமைப் பொறுப்பையும் வகிக்க இயன்றது.

இன்று படிப்பு வராதப் போக்கிரி பயல்கள் மட்டுமே சட்டக்கல்வி பயில்கின்றனர் என்ற நம் சமூகத்தின் எண்ணம் தவறானது. பிராமணர்கள் அதிகம் மேல் சட்டக்கல்வி பயின்று பல உயர்நீதி மன்றங்கள், மற்றும் உச்சநீதிமன்றங்களில் நீதிபதியாக அமர்ந்து நமது இறையில்லம் தொடர்பான வழக்கில் நமக்கு எதிராக தீர்ப்புச் செய்யும் நிலைதான் இன்று. இன்று இஸ்லாமியச் சமூகத்திற்கு அதிகமான இடஒதுக்கீடு சிறைச்சாலைகளில்தான் வழங்கப்பட்டுள்ளது. சச்சார் கமிட்டியின் அறிக்கைப்படி நாட்டின் சிறைச்சாலைகளில் 30 % அதிகமானோர் இஸ்லாமியர்களாகத்தான் உள்ளனர். இவர்களில் மிகுதியானோர் அப்பாவிகள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அடிமையான இவ்விளைஞர்களுக்காக வாதாடி உண்மையை இவ்வுலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி அவர்கள் அப்பாவிகள் என்று நிருபிப்பதற்கு கூட போதிய முஸ்லிம் வழக்கறிஞர்கள் இல்லை. எனவே இளைய தலைமுறையினர்க்கு சட்டம் மற்றும் நீதித்துறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சட்டக்கல்வி பயில ஊக்குவித்தும், சட்டம் பயின்றவர்கள், நீதிபதித் தேர்வுகளில் கலந்துக்கொள்ள வழிகாட்டுவதும் இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் தலையாய கடமையாகும்.

கல்வித் தேடலில் செல்வந்தர்களின் பங்கு:

சச்சார் கமிட்டியின் அறிக்கையின் படி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் போதுமான அளவு ஆரம்ப பள்ளிகளோ, கல்லூரிகளோ அல்லது பல்கலைகழகங்களோ இல்லை, சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா ஆகிய நீதிபதிகளின் அறிக்கை மற்றும் இந்த அவல நிலை மாற மத்திய, மாநில அரசுக்கு அவர்கள் பரிந்துரைத்த ஆலோசனைகளும் இன்று பல ஆண்டுகள் ஆகியும் தூசிப்படிந்து புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். இந்நிலையில் கல்விக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக முஸ்லிம் தன்வந்தர்களுக்கு உண்டு. கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் முஸ்லிம் செல்வந்தர்களின் ஒன்றிணைந்து பல பல்கலை கழகங்கள், கல்லூரிகள், ஆரம்ப பள்ளிகள் ஆகியவற்றை நிறுவியுள்ளனர். ஆனால் தமிழகத்தில் இதில் சொற்ப சதவீதம் மட்டுமே செயல்பட்டுள்ளனர்.

கல்விக்கான உதவித்தொகை, ஊக்கத்தொகை வழங்குவதிலாகட்டும், மத்திய ஆட்சிப் பணி மற்றும் மாநில ஆட்சிப் பணிகளுக்கான பயிற்சிக் கல்லூரிகளை துவக்குவதிலாகட்டும், புதிய இஸ்லாமிய கல்லூரி ஆரம்ப பள்ளிகளை துவக்குவதிலாகட்டும் ஒன்றிணைந்து சேவை மனப்பான்மையுடனும், திட்டமிடலுடனும், ஒற்றுமையுடனும் செயல்ப்பட்டால் தமிழக முஸ்லிம்கள் கல்வியில் உயர்ந்த நிலை அடைய வாய்ப்புண்டு.

தென்மாவட்டங்களில் உள்ள இதுகுறித்த விழிப்புணர்வு கூட வடமாவட்டங்களில் இல்லை. கலவரத்தால் பாதிக்கப்பட்டு இன்றும் பிந்தங்கியுள்ள கோவை போன்ற மாட்டங்களில் அதன் முஸ்லிம் மக்கட் தொகைக்கு ஏற்ப ஆரம்ப பள்ளிகளோ, கல்லூரிகளோ இல்லை. இந்நிலை மாற வேண்டும்.

பிராமணர் மற்றும் உயர்சாதியினர், ஏன் சில தலித் சமூகத்தில் கூட தற்போது பட்டப்படிப்பு பயில்பவர்கள் அனைவரும் மூன்றாம் அல்லது நான்காம் தலைமுறையினர். எனவே அவர்களின் பெற்றோர் மற்றும் சமூகத்தின் வழிகாட்டுதலின் படி படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் முஸ்லிம் சமூகத்தில் உயர்கல்வி பெறும் அனைவருமே முதல் தலைமுறையினர். இவர்கள் பெற்றோர் பள்ளிப்படிப்பைத் தாண்டாதவர்கள். எனவே இவர்களின் பிள்ளைகள் அனைவரும் உயர்மதிப்பெண் பெறுவது என்பது சாத்தியமில்லை. இந்நிலையில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு மட்டுமே 'கல்வி உதவித் தொகை வழங்குவது என்று சில செல்வந்தர்களின் நிலை உள்ளதால், நடுநிலையாக பயிலும் மாணவர்கள் கல்வி உதவித் தொகைப் பெற முடியாமல் உயர்கல்வி பெற இயலாது போய்விடுகிறது. எனவே முஸ்லிம் செல்வந்தர்கள் சமூகத்தின் எதார்த்த நிலையறிந்து நடுநிலையாக பயிலும் மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கினால் வருங்காலத்தில் உயர்கல்வி பெறும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கைப் பெருகும். அவர்களுக்கு பின் மூன்றாம் மற்றும் நான்காம் தலைமுறையினருக்கு அவ்வுதவியே தேவைப்படாத அளவு கல்வியில் சிறந்து விளங்குவர்.

சில செல்வந்தர்கள் நல்மனதுடன் கல்விச் சாலைகளை நிறுவினாலும், தெளிவாக திட்டமிடல் இல்லாததாலும், முறையான கவனிப்பின்றியும் காலப்போக்கில் இஸ்லாமிய கல்வி நிறுவனகள் தரம் குறைந்து முஸ்லிம் பெற்றோரே அப்பள்ளியில் பிள்ளைகளை சேர்க்கத் தயங்குகின்றனர். கோவையில் ஒரு புகழ்பெற்ற இஸ்லாமியப் பள்ளியும், வேறொரு சமூகத்தை சார்ந்த அறக்கட்டளையும் ஒன்றின் பள்ளியும் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டன. ஆனால் இன்று முஸ்லிம் பள்ளி உயர்நிலை தரத்தைத் தாண்டவில்லை. ஆனால் பிற சமூகத்தின் பள்ளி, கல்லூரியாகி பின்பு பல்கலைகழகமாக மாறி இன்று மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி என்று அவினாசி சாலையே இன்று அதன் அடையாளத்தை கொண்டு அழைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்பித்தவர்களின் நோக்கம் தூய்மையானதாக இருந்தும், பின் வந்தவர்களின் ஊழல், கோஷ்டிபூசல், கவனிப்பின்றியும் , நவீன காலத்திற்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொள்ளாததாலும் முஸ்லிம் பள்ளி சத்துணவுப் பாடசாலைப் போன்றே இன்றுமுள்ளது.

எனவே முஸ்லிம் செல்வந்தர்கள் ஒன்றிணைந்து கல்விச் சாலைகள் நிறுவுவதோடு மட்டுமல்லாமல் சிறந்த அறக்கட்டளைகள், திறமையான நிர்வாகிகள் மூலம் அதனை சரிவர இயக்கி உலகத் தரம் வாய்ந்த கல்விசாலைகளாக அதனை மாற்ற வேண்டும்.

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
"ஆதமின் மகன் இறந்துவிட்டால் மூன்றைத் தவிர மற்ற செயல்கள் எல்லாம் முடிந்துவிடும், 
1. தொடர்ந்து நன்மை தரும் ஜகாத்
2. அவர் மூலம் பயன்பெறப்படும் கல்வி
3. அவருக்காக பிராத்தனை செய்யும் நல்ல குழந்தை
( அபூ ஹுரைரா (ரலி) , முஸ்லிம்-1631
இறந்த பின்னும் மண்ணறையில் துணையாக வரும் கல்விப் பணி குறித்து செல்வந்தர்களை ஊக்கமூட்டி உற்சாகப்படுத்த வேண்டியது ஆலிம்களின் பங்கும், அவர்களின் பணியை பாதுகாத்து திட்டமிடலுடன் அடுத்த தலைமுறைக்கும் பயனளிக்கும் வகையில் மாற்றுவது சமூகத் தலைவர்களின் கடமையாகும்.

வேலைவாய்ப்பும் இட ஒதுக்கீடும்:

கல்வி மட்டுமல்ல அதற்கான வேலை வாய்ப்பும் ஒரு சமூகத்தின் சீராக அமைந்தால் தான் கல்விக்கான தேடல் சரியான திசையில் செல்லும். நாம் மேற்கூறிய கல்விச் சீர்த்திருத்தங்கள் மேற்கொண்டு இளைய தலைமுறையினர் அதன் வழியில் கல்வித் தேடல் அமைந்தால் அதற்கு பின்பு தனியார் மற்றும் அரசுத்துறையில் வேலை வாய்ப்புகள் குறித்தான தேடலில் இன்றைய இஸ்லாமிய சமூகம் தோற்கடிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. காரணம் சிறுபான்மையினரான நாம் திட்டமிட்டு வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுகிறோம்.

2011 ஆம் ஆண்டு தமிழக அரசின் மக்கட் தொகை கணக்கின்படி முஸ்லிம் மக்கட் தொகை தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 8 % ஆகும். இதுவே மிகவும் குறைத்து காட்டப்பட்ட ஒன்று என்று அனைவரும் அறிந்ததே. ஆனால் நமக்கு வழங்கப்படும் அரசுத்துறையில் இடஒதுக்கீடு 3.5 % மட்டுமே. அதுவும் சரிவர நடைமுறைப்படுத்தப்படாமல் திட்டமிட்டு மறுக்கப்படுகிறது . சமீபத்தில் அரசு மருத்துவர்களை தேர்வு செய்யும் விசயத்தில் கூட எப்படி அநீதியிழைக்கப்பட்டது என்பது உலகறிந்தது. எனவே தமிழகத்தில் அரசுத்துறையில் மட்டுமல்லாது தனியார் துறையிலும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 8 % வேலைவாய்ப்பு ரங்கநாத் மிஸ்ரா வேலை வாய்ப்பும், ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின்படி மத்திய அரசுப் பணிகளில் 10 % வேலைவாய்ப்பும் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இன்று இஸ்லாமிய இயக்கங்கள் இது குறித்து ஒன்றுபட்டு குரல் கொடுப்பது வரவேற்கத் தக்க ஒன்று. தற்போதைய தமிழக முதல்வர் தேர்தலுக்குமுன் தான் ஆட்சிக்கு வந்தால் தமிழக முஸ்லிம் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தார். அதனை அவர் உடனே அமல்படுத்த வேண்டும்.மத்திய அரசும் சென்ற தேர்தல் வாக்குறுதியில் வாக்களித்தபடி உடனடியாக மத்தியில் 10 % இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

வழங்கினால் மட்டும் போதாது, அது சரிவர அமல் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும்.இது குறித்து முஸ்லிம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது சமூகத் தலைவர்களின் பொறுப்பாகும்.

முடிவுரை:

கல்வி என்பது பிறர் கூறுவது போல் தனி மனித முயற்சியால் கிடைக்கும் ஒன்றல்ல. மாறாக ஒரு சமூகம் கூட்டு முயற்சியில் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து வளரும் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க அனைத்து முயற்சிகளையும் தியாகங்களையும் செய்ய வேண்டும்.

அலிகர் பல்கலைகழகத்தை நிறுவ அரும்பாடுபட்ட செய்யது அஹமது கான் ஒரு நாள் இரவு நடுநிசியில் அழுது கொண்டிருந்தார். அன்னாரிடம் அதுகுறித்து வினவப்பட்டபோது என் சமூகம் தான் எதிர்க்கொண்டுள்ள சவால்கள், சதிகள் பற்றி அறியாது உறங்கிக்கொண்டிருக்கிறது. அதனால் தான் நான் விழித்திருந்து அழுகிறேன் என்றார். 
அத்தகைய பெரும் தலைவர்கள் காட்டிய கல்வி சாலைகள் தான் இன்னும் இந்திய முஸ்லிம்களை ஓரளவு விழிப்புடன் இருக்கச் செய்துள்ளது. எனவே சமூக தலைவர்கள், ஆலிம்கள், பெற்றோர்கள் அனைவரும் தனது கனமான பொறுப்பை உணர்ந்து வளரும் தலைமுறையின் கல்விக்காக ஓயாது பாடுபட வேண்டியது அவசியமாகும். நாம் தூய எண்ணத்துடன் அல்லாஹ்வின் வழியில் பயணம் மேற்கொண்டால் அல்லாஹ் நமக்கு வழிகாட்டி, துணையாக நின்று அப்பணியில் வெற்றிப் பெறச் செய்வான்.
**********************************

கட்டுரையாளர் பற்றி:

சகோ. இப்னு முஹம்மது சென்னை பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு எம்பிஏ பயின்று வருகிறார். இவர் மனித உரிமைக்கு குரல் கொடுக்கும் ஆர்வலர். மேலும் சமூக நீதிக்காக போராடுபவர். இவரின் எழுத்து, அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் சிறுபான்மையினர் நீதிக்கானது. சகோதரர்.இப்னு முஹம்மதின் கட்டுரை முன்பு விடியல் வெள்ளி புத்தகத்திலும் வெளியாகியுள்ளது. மேலும் டீன்மேக்சின் இணையப் பத்திரிக்கையில் ஆங்கில கட்டுரைகள் வெளியாகியுள்ளன. புத்தகம் வாசிப்பது இச்சகோதரரின் மிக முக்கியப் பணி என கூறுகிறார் அல்ஹம்துலில்லாஹ்.
சகோதரரின் கட்டுரைகள் சில உங்கள் பார்வைக்கு :

LESSONS FOR INDIAN JIHADISTS IN ARAB SPRING
Six Feet is enough for all

இக்கட்டுரையைப் பற்றி:

வெறுமனே கல்வியின் மேன்மை குறித்து இஸ்லாம் கூறும் நல்லவிசயங்களைப் பட்டியலிடாமல் ,இன்று தமிழக முஸ்லிம் சமூகம் கல்விக்கான தேடலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான எதார்த்தமான தீர்வுகள் குறித்தும் ஆய்வுக்கட்டுரையாக இதனை வடிவமைத்துள்ளார். மேலும் கல்விக்கான தேடல் எதனை அடிப்படையாக கொண்டு அமைய வேண்டும்?(அறிவையா அல்லது பொருளாதாரத்தையா?) என்பதை கட்டுரையில் விளக்குகிறார். இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அனைதும் ஆதாரப்பூர்வமானவை. சில தகவல்கள் "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்" கீழ் போராடிப் பெற்றிருக்கிறார். பல்வேறு மேல்முறையீட்டுக்கு (கடித எண் 6523/பிநசிபி/2012-1 நாள் 12.10.12) பின்பே அரசு தகவல்களை தந்ததுள்ளது. இக்கட்டுரை பற்றி அவர் குறிப்பிடுகையில் "அல்லாஹ்வின் திருப்தி" ஒன்றை மட்டுமே மையமாக வைத்து எழுதப்பட்ட இக்கட்டுரை தமிழ் முஸ்லிம் சமுகத்தின் கல்விக்கான தேடலில் புதிய வழிகாட்டியாக அமையும் என்று எண்ணுகிறேன் என்கிறார். அல்ஹம்துலில்லாஹ்.

வாழ்த்துக்கள் சகோ.இப்னு முஹம்மத்..!
read more "கல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா? -3ம் பரிசு பெற்ற கட்டுரை (இப்னு முஹம்மத்)"

Saturday, January 12, 2013

இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை பேஸ்புக் குழுமம் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டி - முடிவுகள்


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக...

அல்ஹம்துலில்லாஹ்... இறைவனின் மாபெரும் கிருபையால் இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை பேஸ்புக் குழுமம் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டி அதன் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

ஆம் சகோஸ்.. வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் யார் யார் என அறிய மிகவும் ஆவலாய் இருப்பீர்கள் என்பதை அறிவோம். அதை தெரிந்து கொள்வதற்கு முன், இந்த போட்டி நடந்த விதம் குறித்து அறிந்து கொள்வது உங்களுக்கு ஒரு நல்ல புரிதலைத் தரும், இன் ஷா அல்லாஹ்.

டீக்கடை பேஸ்புக் குழுமத்தில் நம் மக்களுக்கு பயனுள்ள வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற விவாதம் வந்தது. பலர் பலவித யோசனைகள் சொன்னார்கள், ஆனால் பெரும்பாலானவர்கள் கட்டுரைப் போட்டி நடத்தலாம் என்று கூறினார்கள். ஆகவே கட்டுரைப்போட்டி நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஒரு கொள்கைச் சகோதரர் ரூபாய் 10,000 பரிசாக அறிவிக்கச் சொன்னார். மேலும் இது 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தலாம் எனவும் உறுதிகூறினார்.அல்லாஹ் அவருக்கு நற்கூலி வழங்குவானாக. ஆமீன்.

அதன் பின் 7 பேர் கொண்ட நடுவர் குழு அமைக்கப்பட்டது. 4 ஆண்கள், 3 பெண்கள். எந்த தலைப்பில் போட்டி நடத்தலாம் என்று விவாதிக்கப்பட்டு, "கல்விக்கான தேடலில் தமிழக முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா?" என்ற தலைப்பு முடிவு செய்யப்பட்டது. அதில் 5 பேர் கட்டுரையை தேர்ந்தெடுப்பவர்களாகவும், இருவர் இதர வேலைகள் செய்பவர்களாகவும் இருக்கும்படி முடிவு செய்தோம்.

கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் :

1. மொத்தம் 22 கட்டுரைகள் போட்டிக்கு வந்தன. அல்ஹம்துலில்லாஹ். இது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம். அடுத்த போட்டியில் இதை விட அதிகம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இன் ஷா அல்லாஹ்.

2. ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு எண் கொடுக்கப்பட்டது.(TIP001 to TIP022).

3. கட்ரையில், எழுதியவரின் பெயர், இன்னபிற விவரங்கள் இருந்தால் அது அழிக்கப்பட்டு, யார் எழுதியது என்று தெரியாத அளவிற்கு தனி பைலில் சேவ் செய்யப்பட்டது.

4. அதன்பின் 22 கட்டுரைகளும் 4 நடுவர்களுக்கும் அனுப்பப்பட்டது.

5. யார் கட்டுரையை திருத்துகிறோம் என்பது தெரியாமலே, ஒவ்வொருவரும் தனித்தனியாய் மார்க் அனுப்பினார்கள்.

6. மார்க் 10 க்கு போட வேண்டுமா, 20 க்கு போட வேண்டுமா என்ற கண்டிஷன் நாங்கள் வைக்கவில்லை. ஆகவே, நடுவர்கள் அவர்களாகவே ஒரு அளவுகோல் வைத்து தேர்ந்தெடுத்தார்கள். இரண்டு நடுவர்கள் 10 ன் அடிப்படையில் திருத்தினார்கள். ஒருவர் 30 க்கு மற்றொருவர் 100 க்கு. ஆக மொத்த மதிப்பெண்களை 150 க்கு என்ற அடிப்படையில் பார்க்கவும்.

7. நடுவர்களும் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்து இருந்தோம். அதற்கு பின்பற்றப்பட்ட வழிமுறை. அவர் பதிவுக்கு அவர் மார்க் போட முடியாது. மற்ற மூவரின் ஆவரேஜ் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஒரு நடுவர் கலந்து கொண்டார். (நல்ல வேலை அவர் ஜெயிக்கல.... ஹா..ஹா..ஹா).

கட்டுரைப்போட்டியில் நடந்த சுவாரஷ்யமான விஷயங்களும், படிப்பினைகளும் :


1. ஒரு சகோதரர் இந்த கட்டுரையில் குறிப்பிடுவதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அரசிடம் இருந்து சில தகவல்களை பெற்று இருக்கிறார். இத நாங்கள் இந்த போட்டியின் மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம். அல்ஹம்துலில்லாஹ். எங்கள் போட்டி ஒருவரை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது உண்மையிலே ஒருவித மன நிறைவை எங்களுக்கு தந்துள்ளது. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

2. கடைசித் தேதி டிசம்பர் 15 என்று அறிவித்து இருந்தோம். டிசம்பர் பத்து முதல் நிறைய சகோதர, சகோதரிகள் நாங்கள் நிறைய ரெபர் செய்து எழுதிக்கொண்டு இருக்கிறோம், ஆகவே எங்களுக்கு இன்னும் அதிகம் நாள் வேண்டும் என்று கேட்டார்கள். மாஷா அல்லாஹ். உங்கள் ஆர்வம் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. சொன்னது போலவே பலர் தங்கள் கட்டுரைகளை பல விரிவான தளங்களில் எழுதி அனுப்பி இருந்தார்கள். குட் வொர்க் சகோஸ்.

3. அறிவிலும் ஆர்வத்திலும் நாங்கள் ஒன்றும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபிக்கும் விதமாக சகோதரிகள் பலர் கலந்து கொண்டார்கள். 22 பேரில் 12 பெண்கள். பெண்களே பெரும்பான்மை. இஸ்லாமியர்கள் பெண்களுக்கு சுதந்திரம் வழங்குவதில்லை என்ற வெத்து வாதத்தை சொல்பவர்களை சம்மட்டி கொண்டு அடித்துள்ளது இந்த கட்டுரைப்போட்டி.

4. பல நல்ல ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் , ஐடியாக்களையும் சொல்லி இருக்கிறீர்கள். அவற்றை எப்படி பயன்படுத்துவது, யாரிடம் கூறினால் நடக்கும் போன்ற விஷயங்களை விவாதித்து, ஏதாவது ஒரு விதத்தில் அவை நம் சமுதாயத்திற்க்கு பயன்படும்படி செய்ய எங்களால் ஆன முயற்சிகளை செய்கிறோம், இன் ஷா அல்லாஹ்.

இனி வெற்றியாளர்கள் விபரங்கள்.....

கடும் போட்டிக்கு இடையே முதல் பரிசாக  ரூபாய் ஐந்தாயிரம்  தட்டிச் செல்பவர்...

சகோ. Dr. Captain. S.ABIDEEN, இளையான்குடி.
பெற்ற மதிப்பெண்கள் : 104.5

முதல் இடத்திற்கு வரும் எல்லா தகுதியும் இருந்து, வெறும் 4 மதிப்பெண்களில், நூலிழையில் முதல் இடத்தை தவறவிட்டு, இரண்டாம் பரிசாக ரூபாய் 3 ஆயிரம் தட்டிச்சென்றவர் :

சகோ. உம்ம் ஒமர் என்ற அனிஷா, அமெரிக்கா.
பெற்ற மதிப்பெண்கள் : 100.5

வெறும் 3 மதிப்பெண்களில், நூலிழையில் இரண்டாம் இடத்தை தவறவிட்டு, மூன்றாம் பரிசாக ரூபாய் 2 ஆயிரம்  வென்றவர்:

சகோ. இப்னு முஹம்மது, கோவை.
பெற்ற மதிப்பெண்கள் : 97.5

ஆறுதல் பரிசு விபரங்கள் :

போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறாத மற்றவர்களுக்கு, எங்களின் உம்மத் குழு வெளியிட இருக்கும் "எதிர்க்குரல் (இஸ்லாமோபோஃபியா Vs இஸ்லாமிய பதிவர்கள்)" என்ற புத்தகம் ஆறுதல் பரிசாக வழங்கப்படும்.

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் டீக்கடை - இஸ்லாமியப் பெண்மணி சார்பாக சான்றிதழ் வழங்கப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

மதிப்பெண் அட்டவணை :


பெயர்
நடுவர்-1
நடுவர்-2
நடுவர்-3
நடுவர்-4
total

100க்கு
10க்கு
30க்கு
10க்கு

அப்துல் ஹமீது
20
2
10
7
39
இப்னு முஹம்மது
62
6
21
8.5
97.5
அஹ்மத் யஹ்யா
44
3
11
7.5
65.5
Peer Mohamed A.M.
62
4
19
7.5
92.5
உம்மு ஷாஜ்
38
4
12
7
61
ஃபாயிஜாகாதர்
43
2
7
7
59
எஸ். நிலோபர் ரஹ்மான்
58
5
10
8
81
அப்துல் நாசர்
37
4
12
7.5
60.5
P. அப்துல் ஹக்
53
7
16
8
84
நபிலா
34
4
11
7
56
Dr.  Captain.   S.ABIDEEN
66
8
22
8.5
104.5
உம்மு ஹனா
43
6
19
9
77
இப்ராஹிம் ஷா
45
4
14
8
71
பீர் முஹம்மத்
50
7
20
8.5
85.5
சா.உம்மு ஹபீபா
45
4
11
7.5
67.5
ஆமினா
49
7
16
8.5
80.5
எம். சகீனா பேகம்
43
6
10
7.5
66.5
பானு
54
5
17
8.5
84.5
ஹுசைனம்மா
48
8
16
8
80
ஆயிஷா பேகம்
38
3
10
8
59
ஸ்டார்ஜன்
35
2
6
7
50
உம்ம் ஒமர்
68
9
15
8.5
100.5நிறைய சகோதர, சகோதரிகள் 80 ல் இருந்து 100 க்குள் இருக்கிறார்கள். ஆகவே, இது ஒரு மிகச் சிறந்த போட்டி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை... எல்லாப் புகழும் இறைவனுக்கே.

நன்றி... நன்றி..நன்றி...:

1. வெற்றி பெற முடியாவிட்டாலும், அழகான, அற்புதமான பல கருத்துக்களைக் கூறிய போட்டியாளர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியும், வாழ்த்துக்களும்.

2. தங்கள் கடினமான பணிகளுக்கும் இடையில் நேரம் ஒதுக்கி இதை திறம்பட நடத்த உதவிய நடுவர்கள், போட்டி ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

3. அறிவிப்பு வெளியிட்டதும் தத்தமது வலைதளங்களில்  அறிவிப்பு செய்தும், பேனர் வைத்தும்  இப்போட்டி பலரிடத்தில் கொண்டு சேர்த்த சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

4. சமூக வலைதளங்களிலும்,  மெயில்கள் மூலமாகவும் போட்டி பற்றிய தகவல்களை பகிர்ந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களால் தான் இவ்வெற்றி சாத்தியமானது! இறைவன் நம் அனைவரின் உழைப்பையும் பொருந்திக் கொள்வானாக... ஆமீன்...

இப்போட்டிக்கு நடுவர்களாக செயல்பட்டவர்கள் :

1. ஹுஸைனம்மா (http://hussainamma.blogspot.com)
2. அன்வர் சதாத் (http://engenaan.blogspot.in/)
3. முஹம்மத் ஆஷிக்(சிட்டிஸன் ஆப் வேர்ல்ட்) (http://pinnoottavaathi.blogspot.com/)
4. குலாம் (http://www.naanmuslim.com/)
5. உம்ம் ஓமர் (http://mydeartamilnadu.blogspot.in/), இவர் சொந்த அலுவல் காரணமாக மதிப்பெண் போடவில்லை.

மதிப்பெண்கள் பட்டியல் இந்த வரிசையில் இல்லை... ஹா..ஹா..ஹா .. சோ, யார் யார் எவ்வளவு மதிப்பெண் கொடுத்தாங்கன்னு கண்டுபிடிக்க முயற்சி பண்ணாதீங்க.

இப்போட்டியின் மற்ற வேலைகளை செய்தவர்கள் :

1. ஆமினா முஹம்மத்
2. சிராஜுதீன்

எதிர்கால திட்டங்கள் :

இறைவன் நாடினால்... இது போன்ற போட்டிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில்(3 மாதங்கள்) நடத்தும் யோசனை உள்ளது. அவ்வாறே செய்ய எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்யுங்கள்.

இறுதியாக, இன்ஷா அல்லாஹ் நீங்கள் கூறிய அனைத்து யோசனைகளையும் தொகுத்து இணையத்தில் வெளியிடுவோம். முடிந்தால் புத்தகமாகவும் வெளியிடுவது பற்றி யோசிக்கிறோம். புத்தகம் தான் உங்கள் கருத்துக்களை தமிழக முஸ்லிம்களிடம் கொண்டு செல்ல சரியான வழி என்று எங்களுக்கு தோன்றுகிறது.

குறிப்பு : முஸ்லிம் அல்லாத மாற்று மத அல்லது மதம் இல்லை என்று சொல்லும் சகோதர, சகோதரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இது எங்களுக்கு சிறிது வருத்தத்தைத் தருகிறது. யாரும் கலந்து கொண்டிருந்தால், அவர்கள் வெற்றி பெறாத பட்சத்தில் ஆறுதல் பரிசு கொடுப்பது குறித்தும் யோசித்திருந்தோம். ம்ம்.. நடக்காமல் போய் விட்டது.

இறைவன் நாடினால், இனி வரும் போட்டிகளில் பங்கு பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பங்கு கொள்ள வேண்டும் என்று எங்கள் அன்புச் சகோதரங்களை உரிமையுடன் அழைக்கிறோம்.

முதல் மூன்று இடங்களை பிடித்த சகோஸ், தங்கள் வங்கி கணக்கு விபரங்களை மெயிலில் அனுப்பி வையுங்கள். இன்ஷா அல்லாஹ் பத்து நாட்களுக்குள் பரிசுதொகை அனுப்பிவிடுகிறோம். (அனுப்பியதும் அதன் ரசீதை ஸ்கேன் செய்து  இப்பதிவிலேயே  அப்டேட் செய்கிறோம் இன் ஷா அல்லாஹ்)
read more "இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை பேஸ்புக் குழுமம் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டி - முடிவுகள் "