Sunday, June 16, 2013

மாணவர்களும், தொழுகையும்

தொழுகை, ஒவ்வொரு முஸ்லிமின் இரண்டாவது கடமை.  மறுமையில் முதல் விசாரணை தொழுகை குறித்தே கேட்கப்படுமளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கடமை.தொழுகையை வலியுறுத்தும் வசனங்கள் மட்டுமே குர் ஆனில் 31 இடங்களில் வருகின்றன. அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொழுகையினை இறைவனருளால் நம்மில் பலர் கைக்கொள்கிறோம், அல்ஹம்துலில்லாஹ். ஆனால், நம் பிள்ளைகளிடம் இதை முறையாக நிலைநிறுத்துகிறோமா?
 பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களாகிய நம் பிள்ளைகள் தொழுகையின்மீது சற்று அசிரத்தையாகவே இருக்கின்றார்கள் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இதற்குப் பல காரணங்களைக் கூறிக்கொள்கிறோம்: பள்ளிகளில் இடவசதியில்லை; நேரம் கிடைப்பதில்லை; அனுமதிப்பதில்லை; என்று பல சமாதானங்களைக் கூறிக்கொள்கிறோம். 


 உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்; பத்து வயதை அடைந்(தும் தொழாமலிருந்தால்)தால் அதற்காக அவர்களை அடியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஜபு நூல்:அஹ்மத், அபூதாவூத்.

 மேலேயுள்ள ஹதீஸில், பத்து வயதாகிவிட்டால் அடித்தேனும் தொழவையுங்கள் என்று சொல்லப்பட்டிருப்பதிலிருந்து, சிறார்களுக்கும் தொழுகை எத்துணை அவசியமானது என்று புரிந்துகொள்ளலாம்.


 31 : 17. ''என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக. நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக. உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக. நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்”. 

 நபி லுக்மான்(அலை) அவர்கள் தம் மகனுக்குக் கூறிய அறிவுரை இது!! சிறுவயது முதலே தொழுகையைத் தவறாது கடைபிடிக்கச் செய்வதன்மூலம், தன் கடமைகளைத் தட்டிக் கழிக்காமல், பொறுப்புடன் நிறைவேற்றத் தயங்காத, தடைகளைக் கண்டு தளராத, மனத் திண்மை படைத்த,ஒரு நல்ல மூமினான பிரஜையை நாட்டிற்குத் தரும் கடமையை நிறைவேற்றுகிறோம். ஆகவே, சால்ஜாப்புகள் சொல்லிக் கொண்டிராமல், மாணவர்களுக்கும் தொழுகையைப் பேணுவதை அறிவுறுத்துவோம், இன்ஷா அல்லாஹ்.

 ஸ்லாமியரல்லாதவர்களால் நடத்தப்படும் பள்ளிகளில், மாணவர்களுக்குத் தொழுவதில் சிரமங்கள் இருப்பது உண்மையே. இதனை நிவர்த்தி செய்யும் வழிகளில் பெற்றோர்கள் ஈடுபட்டு, எப்படியேனும் மாணவர்களைத் தொழச் செய்யவேண்டும்.  பள்ளி நிர்வாகத்தினரோடு தன்மையாகப் பேசி, வேண்டுகோள் விடுக்கலாம். தமிழ்நாட்டில் பல தனியார் பள்ளிகள், மாணவர்கள் தொழுவதற்கு ஒத்துழைப்பு நல்குகிறார்கள். லுஹர் தொழுகை நேரம், பள்ளியின் மதிய இடைவேளையின்போது வருவதால், பலரும் இதற்கு ஆட்சேபிப்பதில்லை.

 இன்று பெரும்பான்மையான தனியார் பள்ளிகளில், 9, 10, 11, 12ம் வகுப்புகள் காலை 6.30 மணி முதல் மாலை 7 மணி வரை நடத்தப்படுகின்றன. எனும்போது, லுஹர், அஸர், மக்ரிப் ஆகிய மூன்று வேளைகளும் பள்ளி நேரத்திலேயே வருவதால் மாணவ, மாணவியர் மூன்று தொழுகைகளையும் கல்விக்கூடத்தில் தொழ வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது.  

 பள்ளிகளில் சேர்க்கையின்போதே, பெற்றோர் இதனை உறுதிசெய்யவேண்டும்.  தற்போது படித்து வரும் பள்ளிகளிலும், முஸ்லிம் பெற்றோர்கள் கூட்டாக இணைந்து வேண்டுகோள் விடுக்க வேண்டும். நிர்வாகம் மறுக்கும் பட்சத்தில், மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கவும் தயாராக இருக்க வேண்டும். சேர்க்கை கொத்தாகப் பாதிக்கப்படும் சாத்தியக்கூறு இருக்கும் பட்சத்தில், பள்ளி நிர்வாகம் மறுக்கவியலாது.

 ஜும் ஆ தொழுகை:

  அன்றாடத் தொழுகைகளான லுஹர், அஸரைத் தொழுவதில் மாணவர்களுக்கோ, அதை அனுமதிப்பதில் பள்ளி நிர்வாகங்களுக்கோ சிரமமிருக்காது.  ஆனால், வெள்ளிக்கிழமைக் கடமையான ஜும் ஆ தொழுகையை - கல்விக்கூட வளாகத்தை விட்டு வெளியே சென்று தொழவேண்டிய இதை - நிறைவேற்றுவதில்தான் அதிகச் சிரமம் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு இருக்கிறது.  ஏனெனில், இத்தொழுகை பள்ளிவாசலுக்குச் சென்று  ஜமா அத்தாகத் தொழ ஒவ்வொரு ஆணின் கட்டாயக்கடமையாக இஸ்லாம் வரையறுத்திருக்கிறது. 


 'ஜும்ஆ தொழுகைகளை விடுவதை விட்டும் ஒரு கூட்டம் விலகிக் கொள்ளட்டும்! இல்லையேல் அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் முத்திரையிடுவான்; அவர்கள் கவனமற்றவர்களாக ஆவார்கள்!' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பர் படிகளில் நின்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

 ஒரு கூட்டத்தாருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் ஜும்ஆவிற்கு வராமல் இருந்து விடுகின்றனர். நான் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்கச் செய்யுமாறு உத்தரவிட்டு விட்டு, ஜும்ஆவிற்கு வராமல் தங்களுடைய வீடுகளில் இருக்கும் ஆட்களைக் கொழுத்தி விட எண்ணி விட்டேன்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

 ஜும் ஆத் தொழுகையைத் தவிர்ப்பதால், மார்க்கக் கடமையிலிருந்து தவறுவதோடு, சமூகச் சிந்தனைகளை - சமுதாய அக்கறையை இளவயதிலேயே பசுமரத்தாணியாகப் பதிக்கும் குத்பா உரைகளைக் கேட்கும் வாய்ப்பும் தவறிப்போகிறது. 

 கல்விக்கூடங்கள் இதை அனுமதிக்காததன் காரணம், பெரும்பாலும் மாணவர்கள் தனியே வெளியே சென்றுவர விரும்பாதது மற்றும் மதிய இடைவேளையைத் தாண்டி தொழுகை நேரம் நீட்டப்படும் சாத்தியம் இருப்பதாலுமே. இவற்றை பெற்றோர்கள் சரியாக கையாண்டு, அதற்கானத் தீர்வுகளுடன் நிர்வாகத்தை அணுகினால், நிச்சயம் ஒத்துழைப்பு நல்குவார்கள். 

 கும்பகோணம் அருகில், அம்மாச்சத்திரத்தில் ஒரு கிறிஸ்தவப் பள்ளியில், மாணவர்களை ஜும் ஆத் தொழுகைக்காக, தம் பள்ளி வாகனத்திலேயே அழைத்துச் செல்கிறார்கள். இதுபோன்ற ஏற்பாடுகளை நிர்வாகத்துடன் கலந்துபேசிச் செய்யலாம். தகுந்த முறையில் நம் கடமைகளை எடுத்துக்கூறி முயன்றால், நிச்சயமாக ஆதரவு கிடைக்கும்.

 அலுவலகங்களில் பெரும்பாலும் இச்சிரமங்கள் இருப்பதில்லை. கல்விக்கூடங்களில்தான் இந்நிலைமை உள்ளது.

 அரசிடம் கோரிக்கை:

  சமீபத்தில் நடைபெற்ற மத்திய அரசின், 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான CBSE பள்ளித் தேர்வுகள் வெள்ளிக்கிழமைகளிலும் நடைபெற்றன. இந்தியாவில் தேர்வு நேரம், காலை 10.30 - 1.30 என்பதால், மாணவர்களால் ஜூம் ஆ செல்ல முடியவில்லை. ஒன்றிரண்டு தேர்வுகள் எனில் தவிர்க்க இயலாத நிலை என்று பொறுத்துக் கொள்ளலாம். மார்ச் 1-ம் தேதி ஆரம்பித்து, ஏப்ரல் 17-ம் தேதி முடியும் 12-ம் வகுப்பு தேர்வுகளில், ஐந்து தேர்வுகள் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறுகின்றன. இதுபோலவே, பல அரசுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள், அரசு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை ஜும் ஆ நேரத்தில் இடம்பெறுகின்றன.
 நாம் மத்திய-மாநில அரசுகளிடம் முக்கியத் தேர்வுகளை ஜும் ஆ நேரத்தை அனுசரித்து வைக்கும்படி கோரிக்கை வைக்க வேண்டும்.  கவனிக்க, நாட்களை மாற்றச் சொல்லவில்லை. நேரத்தை மட்டுமே மாற்றக் கோருகிறோம்.

 அரசிடமே நேரடி கோரிக்கை வைத்து உரிமை பெறுவதன்மூலம், மற்ற தனியார் நிர்வாகங்களும் முஸ்லிம்களின் தொழுகையின் முக்கியத்துவத்தை உணருவார்கள். நாமும் ஒவ்வொரு பள்ளி-கல்லூரி-நிர்வாகத்திடம், தனித்தனியாக வேண்டுகோள் வைப்பதைத் தவிர்க்கலாம். புரிந்துணர்வு இல்லாத நிர்வாகத்தினரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கவும் தேவை இல்லாமல், நமது உரிமையாகக் கேட்டு வாங்கலாம்.

 அண்டை மாநிலமான கேரளாவில், பல்வேறு மதத்தினர்களும் அடங்கிய சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. இயக்குனரகத்திற்கு தேர்வு நேரங்களை மாற்றியமைக்கும்படி இவ்வருடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. வேண்டுகோள் ஏற்கப்படவில்லையெனினும், முயற்சியாவது செய்தார்கள் என்பது பாராட்டிற்குரியது.  பல்வேறு இயக்கங்களைக் கொண்ட நம் தமிழகத்தில் ஒரு சிறுமுயற்சிகூட மேற்கொள்ளப்படவில்லையென்பது வருந்தத்தக்கதே.

 இதற்கு இன்னொரு காரணம், இஸ்லாமியக் கல்விக்கூடங்களின் எண்ணிக்கையும் தமிழகத்தில் மிகமிகக் குறைவு. ஆகவே, நம்மால் பள்ளி கூட்டமைப்புகளில் நம் குரலைப் பதிவு செய்ய முடியவில்லை. அதிக அளவில் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் நிறுவுவதன் இன்னொரு அவசியமும் புலப்படுகிறது. 

 வ்வளவு கஷ்டப்பட்டாவது தொழ வேண்டுமா என்று கேட்பவர்களுக்குப் பதில் இதுதான்:

 107 : 4,5. இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். 29 : 45. .... இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக. நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். 
 

 நம் சந்ததிகள் தொழுகையைப் புறக்கணிப்பதன் மூலம் வரும் கேடுகளால் அழிந்துபோகாமல் காப்பது, பெற்றோர்களாகிய நம் கடமை. இன்று உலகத்தில் பல்வேறு அழிமானங்கள், தீயவைகள் மாணவர்களை - எதிர்காலத் தூண்களைக் குறிவைத்து  நடைபெற்று வருகின்றன. அவற்றிலிருந்தெல்லாம் நம் பிள்ளைச் செல்வங்களை, இளைய சமுதாயத்தை, நாளைய நம்பிக்கைகளைக் காக்கக்கூடியது தொழுகை ஒன்றுதான்!!

-ஹுசைனம்மா

 சமரசம் மே 16-31 இதழில் வெளியானது.

read more "மாணவர்களும், தொழுகையும்"

Thursday, April 25, 2013

தலைகுனிந்ததோ பெண்! இரக்கமற்றவனோ ஆண் திமிருடன்...


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த இரண்டு நாட்களாக ஜீதமிழில் கண்ட உறைய வைக்கும் சம்பவம் என்னை இன்று இந்த உண்மை நிகழ்வை எழுத தூண்டியது..இது பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நல் நோக்குடன்....இன்றைய சூழ்நிலையில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்திலும் முன்னேறி வருகின்றனர் என்பதில் ஒரு விதம் மகிழ்ச்சி இருந்தாலும், மறு புறம் அது பல விதங்களில் தீயதை தருகிறது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

இன்று எத்தனையோ பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை மிகவும் சுதந்திரமாகவும், அவர்கள் எண்ணியதை எப்பாடு பட்டேனும், கடல் கடந்தேனும் படிக்க வைக்க முயல்கின்றனர். தங்கள் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதிலும், அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதையே குறிக் கோளாக கொண்டுள்ள பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தையும், ஆசைகளையும் மறைத்து மறந்து வாழ்கின்றனர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்கு பரிசாக இந்த காலத்து பிள்ளைகள் கொடுப்பதெல்லாம் அவமானமும் தலைகுனிவும் தான்.

இது தேவையா? :ஏழு வருடமாக காதலித்து அவனின் குழந்தையும் சுமந்துக்கொண்டு வாழ்க்கை கொடு என அவள் அவன் காலை பிடிப்பதும், திமிராக அவன் கிளிப்பிள்ளை போல் முடியாது முடியாது என்றும், முடியாது என்பது நிச்சயம் என்றும் அவன் கூறுவது  தவறான பாதையில் சென்றுக்கொண்டிருக்கும் நம் பெண்களுக்கு தேவையான பாடம் தான். காதலிக்கும் வரை தான் ஹீரோ, ஹீரோயின் என்ற எண்ணம் பெருக்கெடுக்கும். அவன் தேவை முடிந்ததும், எளிதாக தூக்கி எறிந்து ஆண் என்னும் திமிருடன் தலைநிமிர்ந்து நிற்கிறான். நிச்சயமாக இதற்கு பிறகும் மானங்கெட்ட கூட்டம் அவனுக்கு பெண் கொடுக்க முன்வரவே செய்யும். காரணம் இச்சமூகமானது, ஆண் என்றால் குத்திவிட்டு கம்பிரமாக நிற்கும் முள்ளாகவும், பெண்ணை கிழிந்தால் தூக்கி எரியும் சேலையாகவும் தான் பார்க்கிறது. மொத்த இழிவும் பெண்ணிற்கே. இதற்கு பிறகும் அவனுக்கு வாழ்க்கை இருக்கிறது.. ஆனால் அவளுக்கு? அந்த தைரியத்தில் தானே போலிஸ்ல கம்ளைன்ட் கொடு என சொல்கிறான்? ஓட்டை நிறைந்த சட்டமும், இந்த ஆணாதிக்க வெறிபிடித்த சமூகமும் அவனை காப்பாற்றும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் அவன்!

ஆனால் அப்பெண்????? வீதி ஏறி போராடி பலன் கிடைத்ததா? இல்லை டிவியில் லட்சுமி ராமக்கிருஷ்ணனிடம் பஞ்சாயத்து வைத்ததால் வாழ்வு கிடைத்துவிட்டதா? அவமானத்தையும் ,இழிவையும் தவிர என்ன எஞ்சியிருக்கிறது இப்போது? தன் வாழ்க்கையும் வீணாக்கியது போதாதென்று தன் தங்கையையும் காதலிக்க வைத்து , ஊர் உலகம் பார்க்க குடும்பத்தை பார்த்து காரிதுப்ப வைத்ததை தவிர என்ன என்ன சாதித்துவிட முடிந்தது இப்போது? நம்மை சுற்றி பின்னப்பட்டிருக்கும் சதிவலை பற்றிய எச்சரிக்கைகள் அவ்வபோது சொல்லப்பட்டும் சிக்கிதான் சீரழிவேன் என்று போகும் பெண்களை கண்டு பரிதாபம் கொள்ள மனம்வரவில்லை. இதை தொடர்ந்தே இந்த உண்மை சம்பவத்தை இங்கு பகிர்கிறேன்.

ஏமாந்த பெண்களுக்கும் இனி ஏமாற காத்து இருக்கும் பெண்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மேற்க் கண்ட சம்பவமும், இனி கீழ் வரும் சம்பவமும் ஒரு விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

என் வீட்டிற்கு அருகில் மிகவும் நடுத்தர வசதி கொண்ட ஒரு முஸ்லிம் குடும்பம் வசித்து வந்தனர். எல்லாரையும் போல் இந்த தாயும் தான் படிக்க முடியாத, அடைய முடியாத உயரத்தை தன் பிள்ளைகள் அடைய வேண்டும் என்று விரும்பினார்.

தன் பிள்ளைகளை உயர்ந்த படிப்பில் படித்து, நல்ல நிலைமையை அடைய பேங்க் லோன் அப்படி இப்படின்னு கடன, வுடன வாங்கி படிக்க வைத்தார்கள். வீட்டில் இருந்து படித்தால் வீட்டு வேலைகளுக்கு இடையில் படிப்பில் கவனம் சிதறும் என்று, உயர்ந்த செலவில் நல்ல பள்ளி, கல்லூரிகளில் ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்தனர். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்துள்ளோம் என்பதை மறந்து அவர்களும் எந்த வித கட்டுப்பாடும் இன்றி நட்பு வட்டாரத்தில் சுற்றி சுழன்டனர். மொபைல், கம்பூட்டர் என்று அவர்கள் வசதியை பெருக்கி கொடுத்தனர்.

மூன்று பெண் பிள்ளைகளும் நன்றாக, மிகவும் சுதந்திரமாக படித்தனர். இரண்டாம் டிகிரி முடிக்கும் நிலையிலேயே முதல் பெண்ணிற்கு நல்ல வரன் வந்தது. வந்த மாப்பிள்ளையோ பெண்ணின் உயர்ந்த டிகிரிக்கு ஏற்றார் போல் வரதட்சனையும் தாரளாமாக கேட்டார்.

நன்கு படிக்க வைத்தது போல் சிறந்த வாழ்க்கையும் அமைத்து தர வேண்டும் என்று எண்ணிய அவர்கள் மேலும் கடனை வாங்கி திருமணத்தை முடித்துக் கொடுத்தனர் அவளின் பெற்றோர்கள். திருமணத்திற்கு பிறகு அவள் படித்த படிப்பிற்கு உயர் சம்பளத்தில் வேலையும் கிடைத்தது. மாதம் லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் அளவில் தன் மகள் உயர்ந்த நிலையில் உள்ளாள் என்று பெற்றோர்களுக்கோ ஆழ்ந்த பூரிப்பு. இந்த கானல் நீர் பூரிப்பை தவிர வேறு ஒன்றும் மிச்சமில்லை.

இதே போல் நமது இரண்டாவது மகளும் நன்கு படிக்க வேண்டும். உயர்ந்த சம்பளத்தில் வேலை கிடைத்து நமக்கு பொருளாதார ரீதியில் உதவ வேண்டும் என்று மனக் கோட்டை கட்டினர் அவர்களின் தாய். அவளும் தனது படிப்பை சிறப்பாக முடித்தார். தன் பெற்றோர் எண்ணியது போல் நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று சிந்தித்த அவள் பல இடங்களில் வேலை தேடினார்.

அவள் நினைத்தப் படி தான் வசிக்கும் ஊரில் இருந்து ஒரு நாள் தூரம் பயணிக்கும் தொலைவில் ஒரு வேலையை கண்டெடுத்தாள் அவள் நண்பர்களின் உதவியால்.

பெண் பிள்ளையை இவ்வளவு தொலைவு தனியாக அனுப்புவதை பற்றி கொஞ்சமும் சிந்திக்காத பெற்றோர் அவள் விருப்பப்படி வேலைக்கு அனுப்பினர் பணம் வரும் என்ற ஆசையில். மாதம் ஒரு முறை, இரு முறை, விஷேசம் என்று தன் வீட்டை எட்டிப் பார்த்த அவள் தான் வேலை பார்க்கும் ஊரில் சுதந்திரப் பறவையாக பறந்தாள்.

முதல் பெண்ணைப் போல் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியவில்லை என்றாலும் சில ஆயிரங்கள் சம்பாதித்து அனுப்பினாள். பெண் பிள்ளையை பணயம் வைத்து பணம் வருகிறது என்று ஒரு துளி கூட அவர்கள் வருந்தவும் இல்லை, அதை தடுத்து கண்ணியத்தை காக்க முயற்சிக்கவும் இல்லை.

பணம் வந்தால் போதும் என்ற மன நிலையிலும், “கேட்பவர்களுக்கு எங்கள் பிள்ளை மேல் எங்களை விட நம்பிக்கை யார் வைக்க முடியும்” என்று அசட்டு பதிலும் கூறி வந்தனர்.

காலங்கள் கடந்தன கல்யாண வயதையும் தாண்டி! பார்க்கும் மாப்பிள்ளை எல்லாம் இவன் சரி இல்லை அவன் சரி இல்லை என்று அவளும் காலத்தை கடத்தினாள். ஒரு நாள் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீடோ இவளை பிடித்து விட்டதாகவும், கல்யாணத்தை எப்பொழுது வைத்துக் கொள்ளலாம் என்று பேசும் அளவிற்கு அவளது திருமணம் அருகில் வந்தது. மாப்பிள்ளை வீட்டாருக்கு பதில் சொல்வதாக திருப்பி அனுப்பி வைத்து அவளது பதிலுக்காக காத்திருந்த வேளையில் அவளோ ஒன்றும் சொல்லாமல் தன் வேலையை தொடர தொடர் வண்டியை பிடித்தாள்.

ஒரு மாதம் ஆனது, இரண்டும் மாதம் ஆனது, மூன்று மாதங்களாக வீட்டு பக்கம் எட்டி பார்க்காத, பதிலும் தராத மகளை எண்ணி தவித்தனர். தொலைபேசியின் இணைப்பும் துண்டித்து இருந்தது.

இத்தனை நாள் அவள் எங்கு வேலைப் பார்க்கிறாள், என்ன வேலை பார்க்கிறாள், யாருடன் வசிக்கிறாள் என்று எண்ணாத பெற்றோர் சற்று பதட்டம் கொள்ள ஆரம்பித்தனர். என்ன செய்வது என்று அறியாமல் இருந்த வேளையில் தான் அந்த கடிதம் அவர்களுக்கு எட்டியது.

படிப்பறிவில்லாத பெற்றோர்களோ இது என்னவென்று அறிய தனது மூன்றாவது மகளை நாடினார்.

அதைக் கண்ட அவள் திடுக்கிட்டாள். பேச்சு வராது ஊமையாகினாள். கதறினாள். என்னவென்று அறிய காத்து இருந்த அவளது பெற்றோர்களோ என்ன என்னவென்று கதறிக் அழுதனர்.

அந்தக் கடிதமோ, சர்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் முடித்துக் கொண்டதற்கான சான்றிதழ், உடன் ஒரு லட்டரும் எழுதி இருந்தாள்.

“எனக்கு நீங்கள் பார்த்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை, பதிலை எண்ணி காத்து இருந்த உங்களிடம் அதை சொல்லவும் வார்த்தைகள் இல்லை. அதனால் தான் நான் போனில் கூட உங்களிடம் தொடர்பு கொள்ளவில்லை. காரணம் நான் என்னுடன் கல்லூரியில் படித்த என் தோழனை கடந்த ஐந்து வருடமாக காதலித்தேன், திருமணம் முடித்துக் கொண்டேன்.

அவர் மாற்று மதம் என்பதால் உங்களிடம் சொல்ல தயக்கமும், உங்கள் எதிர்ப்பை எண்ணி பயமும் வந்தது. அதனால் என்னுடைய வாழ்க்கையை உங்கள் சம்மதமின்றி நானே தேடிக் கொண்டேன். எனக்கு திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கடந்து விட்டன.

உடனே தெரிவித்தால் என்னை அவரிடம் இருந்து பிரித்துவிடுவீர்கள் என்ற பயம் என்னை ஊமையாக்கியது. சிறிது நாட்கள் கழியட்டும் என்று காத்து இருந்தேன். இனி என்னை தேட வேண்டாம், அவரை நம் மதத்திற்கு அழைத்து வர முயற்சிப்பேன், அவர் சம்மதித்தால் அவரை உங்கள் மருமகனாக நம் வீட்டிற்கு அழைத்து வருவேன். இல்லையெனில் உங்களுடானுனான உறவை துண்டித்துக் கொள்வேன் உங்கள் சம்மதம் வரும் வரை”.

கடிதம் முடிக்க முற்றுப் புள்ளி இட்டவள் தன் குடும்ப மானம் கொடி கட்டி பறக்க ஆரம்பம் இட்டாள். இன்று அந்த குடும்பமே வெளியில் செல்ல முடியாமல், சகஜமாக மற்றவர்களுடன் பேச முடியாமல், கூனி குறுகி ஒரு கைதி போல் சில வருடங்களாக வீட்டுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர்.

அவளை நேரில் கண்ட நான் எழுப்பிய வினா? பக்கத்து வீட்டில் வசிக்கும் எனக்கே எத்தனை பெரிய ஏமாற்றம், கோபம், வருத்தம் வருகிறதென்றால், அப்போ உன் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு??

என் மனம் சொல்லியது “உன்னை கொல்லும் உரிமை எனக்கில்லை இல்லையெனில்.......”.

உன் குடும்பம் உன்னை, உன் காதலை ஏற்றுக் கொள்ளாது என நீயே முடிவு செய்தது ஒரு பக்கம் இருக்க, அவனை இஸ்லாத்தில் இணைக்காமல் திருமணம் முடித்துக் கொள்ள உன்னால் எப்படி முடிந்தது. உன் வரையறை இதுவானாலும் வல்ல இறைவன் வகுத்ததோ...
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல் குர்-ஆன் 2:221).

உன் பெற்றோர் மகள் என்ற பேரில் இத்தனை நாள் பாம்பிற்கு பால் வார்த்துள்ளனர். தான் அடைந்த கஷ்டத்தை தன் பிள்ளைகள் அடையக் கூடாது என்று நம்பிக்கையுடன் சுகமான பள்ளி, கல்லூரி வாழ்க்கை, விருப்படி வேலை, மொபைல், கம்ப்யுட்டர் என்று உன்னை ஆளாக்கிய உன் பெற்றோருக்கு நீ கொடுத்த பரிசு இது தானா? இன்று அவர்களோ கடனில் மூழ்கி பட்டினி, ஓடிப் போன மகளின் பெற்றோர்.

சிந்தித்தாயா????? வயதான உன் பெற்றோர் நிலை என்னாவது? உனக்கு பின்னால் இருக்கும் தங்கையின் வாழ்வு என்னாவது? உன்னை பற்றி விசாரிக்கும் ஊராற்கு என்ன பதிலுரைப்பது?

இத்தனை வருடம் உன்னை சுமந்து பெற்றெடுத்து, உன் சுக போக வாழ்விற்காக தன்னை உருக்கி மற்றவர்களுக்கு ஒளி கொடுக்கும் மெழுகு போல, அவர்களின் வாழ்வை உருக்கி உன்னை ஒளி கொள்ள செய்தனர். ஆனால் நீயோ???.

இஸ்லாத்தின் சட்டப்படி நீ ஒருவரை விரும்பவதும், வெறுப்பதும் அல்லாஹ்விற்காக இருக்க வேண்டுமே தவிர உன் சுய இன்பம் மற்றும் சுய வாழ்விற்காக இருக்க கூடாது என்பதை நீ உணரவில்லையா?? இஸ்லாம் போதித்தது இது தானா?? இவ்வுலக வாழ்வின் இன்பத்திற்காக உயிரினும் மேலான உன் இறைவனை நிராகரித்து, அற்ப வாழ்வை நீ தேர்ந்தேடுத்துள்ளாய். நபி(ஸல்) அவர்களின் வாக்கை ஒரு முறையேனும் வாசித்துப் பார்த்தாயா???

இதையே இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:-

எவரிடம் மூன்று தன்மைகள் இருக்கின்றனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை அடைவார்.

அவை: 

1.அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு மற்ற எல்லாவற்றையும் விட அதிக நேசத்திற்குறியோறாவது 

2. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது

3. தாம் நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல இறை மறுப்பிற்கு திரும்புவதை அவர் வெறுப்பது என அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ஆதாரம் புஹாரி எண்: 6941
ஆனால் நீயோ இறை வழிக்கும், நபி மொழிக்கும் மாற்றத்தை கொண்டு சுகம் என்று நினைத்து சுமையை கொண்டுள்ளாய். தாய், தந்தையை நிராகரித்துள்ளாய். உன் தங்கை வாழ்வை கேள்விகுறியாக்கியுள்ளாய். நம்பிக்கை என்ற ஆயுதத்தைக் கொண்டு மிகப் பெரும் துரோகம் செய்துள்ளாய். இன்று நீ செய்த துரோகத்தை நாளை உன் பிள்ளை உனக்கு செய்யாது என்பதற்கு என்ன சான்று?


நீ நல்லோர் கூட்டத்தில் இருந்தால் அல்லாஹ் உனக்கும் உன் கணவருக்கும் நல் வழி காட்டுவானாக!!!

இன்று காதல் என்னும் பேரில் பெற்றவர்களை மறந்து இரு குடும்பத்தில் பேசி தீர்க்க வேண்டிய அந்தரங்க விஷயங்களை நீதி தேடி டீ.வி, நீயூஸ் பேப்பர் என்று ஊரே அலங்கோலப் பட செய்கின்றனர்.

இதனால், தான் செய்த தவறால் நம் பெற்றோருக்கு தலைக் குனிவை ஏற்படுத்துகிறோம், உடன் பிறவந்தவர்களின் வாழ்க்கையை கேள்வி குறி ஆக்குகிறோம் என்று எந்த குற்ற உணர்வு இல்லாமல் சுய நலமாக சிந்திக்கும் இவர்களை என்ன செய்வது???

பல வருடங்கள் காதலித்து, ஊரைச் சுற்றி அலையும் ஆண் பெண்ணுக்கு ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்பட்டவுடன் பிரிந்து செல்வதும், வேறு ஒருவரை திருமணம் செய்துக் கொள்வதும், கற்பம் அடைய செய்து காதலித்து பெண்ணை ஏமாற்றி கதறி அழ வைப்பதும், தன்னை மணம் செய்து கொண்டவருக்கு துரோகம் செய்வதும், கரை பட்ட உடையை மாற்றுவது போல் ஒரு நிமிடத்தில் செய்து விடுகின்றனர்.

உண்மைக காதல் என்று எண்ணி சில கயவர்களின் பசிக்கு ஆளாகும் பெண்களே என்று உணரப் போகிறீர்கள் காதல் என்பது கானல் நீர், அவர்களின் ஆசைக்கு நீங்கள் ஒரு போகப் பொருள் என்பதை...

இன்று நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நாளை மறுமை என்னும் நிரந்தர வாழ்வில் பதில் அளிக்க வேண்டும் என்பதை அனைவரும் மறந்து விடுகின்றனர். யாரும் காணாமல் அந்நிய ஆணுடன் ஊரை சுற்றி தவறு செய்தாலும் நம்மை படைத்த இறைவன் நம் அனைத்துக் காரியங்களும் பார்த்துக் கொண்டு இருக்கின்றான் அதற்கான தண்டனை காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? (அல் குர்-ஆன் 6:32)

இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு உள்ளது, அது போல் பெற்ற பிள்ளைகளை பேணி சரியான முறையில் வளர்ப்பது பெற்றோரின் கடமை மற்றும் பொறுப்பு ஆகும்.

பெண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்களே உஷார்!

Ø பெற்றோர்கள் தங்கள் பிள்ளையுடன் ஒரு மேலதிகாரி, ஊழியன் உறவு போல் அல்லாமல் நட்புடன் பழக வேண்டும். சிறந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். நாம் ஒரு சிறந்த அன்பு நிறைந்த பெற்றோராக நடந்துக் கொள்ளும் பட்சத்தில் அவர்கள் வேறு ஒருவரிடம் அன்பைத் தேடி செல்ல மாட்டார்கள்.

 Ø அளவுக்கு அதிகமாக வெறுப்பைக் காட்டுவது, திட்டுவது, சந்தேகிப்பதும் கூடாது.

Ø சிறு வயது முதல் உலக கல்வியை கொடுக்க முற்படும் நாம் மார்க்க கல்வியை கொடுக்க தவறுவதே இது போன்ற விளைவுகளை கொடுக்கிறது.

Ø ஐந்து வேலை தொழுகையை வலியுறுத்துவது அவர்களின் எண்ண அலைகளை கட்டுப் படுத்த உதவும். மனதை நிதானப்படுத்தும், பொறுமையைக் கொடுக்கும். மானக்கேடான விஷயங்களில் ஈடுபட நம்மை சிந்திக்க வைக்கும்.

இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். (அல் குர்-ஆன் 29: 45)

Ø மாத பயான்களுக்கு அழைத்து செல்வதும், இபாதத் நிறைந்த பெண்களுடன் பழக வைப்பதும் மனதில் ஒரு மாற்றத்தை கொடுக்கும். தவறான எண்ணங்கள் உதித்தால் களைய உதவும்.

Ø அந்நிய ஆண்களுடன் பழகும் வரைமுறையை இஸ்லாம் கற்றுத் தரும் முறைப்படி கற்றுத் தர வேண்டும்.

Ø நாம் படும் கஷ்டத்தை, கடனை நம் பிள்ளைகளுக்கு தெரிவிப்பது அவர்களை சூழ்நிலை அறிந்து நடக்க, உயர உதவும்.

Ø பெண் பிள்ளைகளை வளர்க்கும் நாம் சுதந்திரம் என்ற பேரில் அதீத நம்பிக்கையை கொண்டு வளர்ப்பது தவறல்ல. ஒரு பருவம் வந்தவுடன் அவர்களது அனைத்து செயல்களையும் உற்று கவனிப்பது பெற்றோரின் கடமையே. அது சந்தேகம் அல்ல அவர்கள் மீதுள்ள அக்கறை என்பதை விளங்க வேண்டும்.

Ø பருவம் வந்தவுடன் தனிமையை (ஹாஸ்டலில் படிக்க வைப்பது, வெளியே தங்க வைப்பது) கொடுப்பது அவர்களின் தவறான எண்ணத்திற்கு நாமே வழி ஏற்படுத்தி கொடுப்பதற்கு சமம். மாறாக நம்பகமான உறவினர் வீட்டிலோ அல்லது அருகில் உள்ள பள்ளி கல்லூரிகளிலேயே படிக்க வைக்கலாம். நம் கண் பார்வையில் வைத்துக் கொள்வது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் உகந்தது.

Ø அவர்களின் நட்பு வட்டத்தை நாமும் தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம்.

Ø கல்யாணத்திற்கு முன்பு தனியாக வேலைக்கு அனுப்புவதும், வெளியே தங்க வைப்பதும் சிறந்ததல்ல. இவ்வாறு செய்வது அவர்கள் தவறு செய்வதற்கு ஏதுவாக பெற்றோர்களே வழியமைத்து வாழ்த்துவதற்கு சமம்.

நம்பிக்கை என்ற பேரில் இன்று தானும் வழி தவறி, தன் குடும்பத்தையும் சிதைத்த இவளை போல் நாளை எத்தனை பேரோ. தான் எடுக்கும் ஒரு நொடி முடிவிற்கு முன், தன்னை சார்ந்தவர்களை சிந்தித்து பார்ப்பதும், பாதகம் ஏற்படாமல் நடந்துக் கொள்வதும் ஒவ்வொருவரின் கடமை.

பெற்றோர்களே!!! உங்கள் குழந்தைகளின் தலைநிமிரும் வாழ்க்கைக்கான பாதையை ஏற்படுத்த பாடுபடுங்கள்.. அவர்களின் வாழ்வு செழுமைக்கு உங்களின் கண்காணிப்பும் அறிவுரையும் தான் முதல் தேவை.

“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!  (25:74)
உங்கள் சகோதரி
யாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன்

read more "தலைகுனிந்ததோ பெண்! இரக்கமற்றவனோ ஆண் திமிருடன்..."

Tuesday, March 12, 2013

இது வேண்டாம்..அது...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

ஒரு சின்ன கேள்வியோடு இந்த இடுகையை தொடங்குகிறேன்....

ஹலால், ஹராம் என்ற புரிதல் நமக்கு எந்த வயதிலிருந்து வந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஹராமான, தடுக்கப்பட்ட உணவு என்று சொன்னாலே பலருக்கு உடனே நினைவுக்கு வருவது பன்றியின் இறைச்சியும், மதுவும் தான். பெரும்பாலான முஸ்லிம்கள் பன்றியின் பெயரைக்கூட உச்சரிக்கமாட்டார்கள், பதிலாக 'நாலு கால்' என்றே கூறுவோம் அல்லவா? அந்தளவுக்கு நமக்கு அல்லாஹ் ஹராமக்கியிருக்கும் அந்த இறைச்சியை நாம் வெறுக்கிறோம், அதை வெளிப்படையாக காட்டவும் செய்கிறோம். இந்த ஒரு விஷயம் மட்டும் சிறு வயதிலிருந்தே எல்லார் மனதிலும் ஆணியடித்தார் போல் பதிந்துவிட்டது அல்லவா?

ஹராம் வேணாம்... ஹலால் உணவு:

ஆனால் ஹராம் என்பது பன்றியின் இறைச்சி மட்டும் தானா? அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அறுக்கப்படாத எந்த ஒரு பிராணியும் நமக்கு தடுக்கப்பட்டவை தானே? நாம் உட்கொள்ளும் உணவு ஹலாலாக இல்லாத பட்சத்தில் நாம் கேட்கும் எந்த துவாவும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்தியா போன்ற பலதரப்பட்ட வழிபாடு, கலாச்சார பின்னணி கொண்ட நாடுகளில் நாம் செல்லும் இடமெல்லாம் ஹலால் உணவு கிடைக்கும் என்பது கேள்விக்குறி தானே? அப்போது என்ன செய்யலாம்? என் அனுபவத்தை பகிர விரும்புகிறேன்.

என்னுடைய மேலாண்மை படிப்புக்காக என்னை விடுதியில் சேர்க்க வந்த என் அம்மா, வாப்பா, வாப்சா, சாச்சி எல்லாரும் மெஸ்ல உள்ள சைவ சாப்பாட்டை வெளுத்துக்கட்ட, நான் மட்டும் செம்ம கடுப்புல ஒரு வாய் சோறு கூட உள்ள இறக்க முடியாம முழிச்சிட்டு இருந்தேன். என்ன காரணமா? அடம்புடிச்சு படிக்க அனுப்ப கேட்ட நானு, அங்க இனி எல்லா நாளுமே சைவம் தான் சாப்பிடணும்னு நினைச்சப்போ அப்படியே கண்ணுல தண்ணி வராத குறை தான். அங்க வாரத்துக்கு ரெண்டு நாள் கோழி போடுவாங்க.. ஆனா அது ஹலால் இல்லையே.. என்ன பண்றது? மூணு வேளையும் கறி கோழின்னு சாப்பிட்டு பழகின நாக்குக்கு வெண்டைக்காயும் அப்பளமும் எப்படி ருசிபடும்?

இந்த சிக்கன் 'ஹலாலா'- இல்ல இது 'சிக்கன் மசாலா' (க்ர்ர்ர்ர்ர்ர்) :

ஒரு நாள் நாங்க மூணாறு சுற்றுலா போயிருந்தப்போ அங்குள்ள ஒரு உணவகத்துல நான் கேட்டேன் 'சிக்கன் ஹலாலா?' அதுக்கு அவரு ரொம்ப அப்பாவியா சொன்னாரு 'இது சிக்கன் மசாலா'. இது காலேஜுல பயங்கர காமெடியா பரவிடுச்சு. ஆனா அதுல ஒரு நன்மை பாருங்க, ஹலால்னா என்னன்னு தெரியாத பலரும் நம்மகிட்ட வந்து 'ஹலால்னா என்ன?'ன்னு கேப்பாங்க. இதுல என் தோழி ஒருத்தி அவளே பதில் சொல்ல ட்ரை பண்ணினா 'ஹேய், நீங்க ஆடு வெட்டும்போது அதுகிட்ட சாரி கேப்பீங்க, அது தானே ஹலால்?'. சத்தியமா அது இல்ல, ஹலால்னா, இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது, ஒரு ஆட்டை உணவுக்காக அறுக்கும்போது அதை அல்லாஹ்வின் பெயரை சொல்லி கூரிய கத்தியால் கழுத்தில் வெட்டுவது தான் ஹலாலாகும். அப்படி கூரிய கத்தியால வெட்டுவதால் ஒரே கீரலோடு உயிர் போவதுடன் ரத்தம் எல்லாம் வடிந்துவிடும். இறைச்சியை அதனுடைய ரத்தம் இல்லாமல் சாப்பிடுவது தான் நல்லதுன்னு விளக்குவோம்.

கல்லூரியில், அலுவலகத்தில் - கொஞ்சம் மாத்திக்குவோமே :

வாழ்க்கையில் ஒரு கட்டம் வரைக்கும் எல்லாமே நம்முடைய தாய் தந்தையர் ஏற்படுத்தி தந்த ஒரு பாதுக்காப்பான வளையத்துக்குள்ள இருப்போம். ஆனா வளர வளர நாம் அந்த கட்டத்தை விட்டு வெளிவர வேண்டிய சூழல் இருக்கும். அப்போ நமக்கு ரெண்டு ஆப்ஷன்ஸ். ஒரேடியா அந்த வளையத்தை விட்டு வெளியே வருவது, அல்லது நாமும் நமக்கென்று ஒரு வளையத்தை ஏற்படுத்திக்கொள்வது. பள்ளி, கல்லூரி காலம் வரைக்கும் நம்முடைய பெற்றோர் இப்படித்தான் இருக்கனும், இப்படித்தான் தலையில முக்காடு போடனும்னு சொல்லுவாங்க. எப்படியும் நாம் இஸ்லாமிய சூழலில் தான் வளர்க்கப்படுவோம். ஆனா மேற்படிப்பு, வேலைன்னு வரும்போது நாம நம்ம கொள்கைகளை வீட்டோட விட்டுவிடாம அல்லாஹ்வின் துணையோடு உறுதியா பற்றி பிடிச்சிக்கணும்.

அலுவலகத்தில் நமக்குன்னு தொழ ஒரு இடத்தை ஏற்படுத்தி தர கேட்பதில் இருந்து, கை குலுக்குவதை தவிர்ப்பது, தேவையில்லாத சோசியலைசிங்க், அவுட்டிங்க் போன்றவற்றிற்கு செல்லாமல் இருப்பது, வேலை நேரம் போக அதிக வேலைப்பளு இருந்தால் வீட்டில் இருந்தபடி வேலை செய்ய அனுமதி வாங்குவது என்று நாம் தைரியமாக, அதே சமயம் தன்மையாகவும் மேலதிகாரியிடம் கேட்க வேண்டும்.

வீட்டில் இப்படி வேண்டாம்... பின் எப்படி??? :

நாம் வெளியில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தாலும் பிற மஹரமில்லாத ஆண்களுடன் இன்டெராக்ட் செய்யாமல் இருக்க முடியாது. வீட்டுக்கதவை தட்டும் தண்ணி கேன், லான்ட்ரி நபர்களில் இருந்து ஏதாவது ரிப்பேர் வேலை செய்ய வரும் வாட்ச்மேன், எலெக்ட்ரிசியன், ப்ளம்பர்கள் இவர்களில் ஒருவரையாவது நாம் தினமும் சந்திக்க நேரிடும். முடிந்த வரை இவர்களுடனான ஐ கான்டாக்ட், அதாவது நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்து கதவுக்கு பின்னாலிலிருந்தே பதில் சொல்லி அனுப்புவது நலம்.   
அது போல அவர்களுக்கு காசு எதுவும் கொடுக்கும் பட்சத்தில் ஒரு ட்ரேயில் அல்லது பாக்ஸில் வைத்து கொடுப்பதும் நலம்.  அப்படி தெரிந்தவர்கள் யாரவது வந்தாலும் கூட முடிந்தவரை அவர்களை கணவன்மார் வந்த பிறகு வர சொல்லுவதில் நாம் எந்த வெட்கமும் படக்கூடாது. ஏனெனில் நாம் பயப்படுவது அல்லாஹ் ஒருவனுக்கே, வேறெந்த மனிதர் நம்மை என்ன நினைப்பார் என்ற எண்ணம் நமக்கு இருக்கவே கூடாது. 

அது போல துணி தைக்க கொடுக்கும்போது முடிந்தவரை நாமே அளவை எடுத்துக்கொண்டு போவது நல்லது. இல்லையென்றால் பெண் ஒருவரை மட்டுமே, அதுவும் தனிமையில் அளவெடுக்க அனுமதிக்க வேண்டும். இது சின்ன விஷயமாக பட்டாலும் நாம் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஆண் மருத்துவரா??? வேண்டாம்...  பெண்மருத்துவர்...:

இப்படி எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்கும் நாம், மருத்துவர்களிடம் செல்லும்போது கட்டுபாடுகளை சிறிதளவு தளர்த்த வேண்டியிருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் நமது சக்திக்கு மீறி நம்மை சோதிக்க மாட்டான். பெண் மருத்துவர்கள் இல்லாத பட்சத்தில் ஆண் மருத்துவர்களிடம் தான் செல்ல வேண்டியிருக்கும். எப்படியும் பிள்ளைபேறு நேரத்தில் அனெஸ்தெடிக் கொடுக்க ஆண்களே பெரும்பாலும் வருகின்றனர். அத்தகைய சூழ்நிலைகள் தவிர்க்க இயலாதவை. ஆனால் மற்ற நேரங்களில் நாம் கவனமாக இருக்கலாமே! ஸ்கேன் செய்யும் சென்டர்களில் பெண் மருத்துவர்கள் இருக்கும் இடத்தையே மருத்துவரிடம் பரிந்துரைக்க சொல்லலாம். நாம் அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது நமது நிய்யத்தை உறுதியாக, 'யா அல்லாஹ், இதை உனக்காகவே செய்கின்றேன்' என வைத்துக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் நமக்கு துணை புரிவான். இதை என் அனுபவத்தில் இருந்தே சொல்கின்றேன்.

நவீன கந்துவட்டிக்காரன் வேண்டாம் :

இன்றைய காலகட்டத்தில் வட்டி என்பது மிகவும் சாதரணமாகி விட்டது. நாமாக தேடி போகாவிட்டாலும் நம்மை தேடி தலையில் வந்து உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு வட்டி நம்மை சுற்றி வளைத்து விட்டது. க்ரெடிட் கார்ட் வைத்திருந்தவன் எல்லாம் பணக்காரன் என்றிருந்த ஒரு காலம் போய் க்ரெடிட் கார்ட் இல்லையென்றால் ஒரு காரியமும் செய்ய முடியாது என்ற நிலைக்கு எல்லோருமே தள்ளப்பட்டிருக்கிறோம். அதுவும் சும்மா தானே கிடைக்கிறது என்று வாங்கி வைத்துக்கொண்டு அதனால் பல இன்னல்களுக்கு ஆளானோர்களே அதிக‌ம். இதனால் முடிந்த அளவுக்கு அந்த க்ரெடிட் கார்டுகளை வாங்காமல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். சில நிறுவனங்களிலும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யும் இடங்களிலும் க்ரெடிட் கார்ட் இல்லாவிடில் ஒரு வேலையும் நடக்காது. இருந்தாலும் இயன்ற வரை கடனட்டை இல்லாத ஒரு வாழ்க்கை முறையை நாம் பழகிக்கொள்வதே நல்லது. 


டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவா? கொஞ்சம் உஷார் :

அதுபோல, இப்போதெல்லாம் உணவுகள் எல்லாமே வயல்வெளிகளிலிருந்தும் தோட்டங்களிலிருந்தும் வருவதை விட தொழிற்சாலைகளிலிருந்து வருவதே அதிகம். நம் குளிர்சாதனப்பெட்டியை திறந்து பார்த்தாலே தெரியும் டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் உணவுகளை தான் நாம் இன்று அதிகமளவு உட்கொள்கிறோம் என்று. எப்போது கடைக்கு சென்று ஒரு பொருளை வாங்கினாலும் அதிலுள்ள 'இன் க்ரீடியன்ட்ஸ்' ஐ படிப்பது நல்லது. எப்படி படிச்சாலும் அந்த கெமிக்கல் பெயர்கள் ஹலாலா இல்லையான்னு நமக்கு தெரியாதில்லையா? எனக்கு தெரிந்த ஒரு சிம்பிள் ட்ரிக்: முடிந்த அளவு குறைவான உட்பொருட்கள் கொண்ட உணவுகளையே வாங்குங்கள். உதாரணமாக ஒரு பிஸ்கட் பாக்கெட்டில் "மைதா, சர்க்கரை, பால், எண்ணை, சோடா' என இருந்தால் நமக்கே ஒரளவுக்கு தெரியும் அவை ஹலாலாகத்தான் இருக்கக்கூடும் என. அது போல ஜெல்லி வகைகள், கலர் கலரான உணவு வகைகளை அறவே தவிர்ப்பது நலம்.

இதைத்தவிர நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் சில இருக்கு. ஆனால் அதை நாம் மிகவும் லேசாக எடைப்போட்டு விடுகிறோம். பல நேரங்களில் நம் குடும்பத்தினரின் கோபத்தையும் பெற வேண்டிய சூழ்நிலையும் அமைந்துவிடும். ஆனால், நாம் பயப்படுவது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தான் என்பதால், நாம் சிறிது கடுமையாக நடந்துக்கொள்வது போல் தெரிந்தாலும் கவலைப்படாமல், உறுதியோடு இருக்கவேண்டும்.

வீட்டில் அந்நியர் முன் ஹிஜாப்- ரொம்ப சுலபம் தான் :

இதில் மிக மிக முக்கியமானது, நம் வீட்டிலேயே இருக்கும் மஹரமில்லாத ஆண்கள். நாம் அதிகம் அறிந்திராத ஹதீஸ் ஒன்று இருக்கிறது, அது என்ன தெரியுமா?
"உங்கள் கணவனின் சகோதரர் மரணத்திற்க்கு ஒப்பாவார்" (Sahih Bukhari Hadith5232)

ஆச்சரியமாக இருக்கிறதா? வீட்டுக்கு வெளியே மஹரமில்லாத ஆண்கள் முன்னிலையில் ஹிஜாபை பற்றி கண்டிப்புடன் இருக்கும் நாம், நம் வீட்டிலுள்ள மஹரமில்லாதவர்கள் முன் எவ்வாறு இருக்கிறோம்? என்னதான் வீட்டிலுள்ளவர்கள் ஐந்து வேளை தொழுபவர்களாக இருந்தாலும் கொழுந்தன் தனியாக இருக்கும்போது அவருக்கு உணவு பரிமாற மாட்டேன் என்று சொன்னால் அந்த பெண்ணை ஒரு குற்றவாளியைப்போன்று தான் பார்ப்பார்கள். "அண்ணியென்றால் தாய்க்கு சமம்" என்ற இஸ்லாத்தில் இல்லாத கருத்தை எடுத்துரைப்பார்கள். இந்த நேரத்தில் தான் நாம் அல்லாஹ்வின் உதவியோடு உறுதியாக இருக்க வேண்டும் சகோதரிகளே!  அதே நேரத்தில் பொறுமையையும் கையாள வேண்டும். கண்டிப்பாக அவர்கள் முன் நம் ஹிஜாபை பேணத்தான் வேண்டும். ஹிஜாப் என்பது வெறுமனே தலையில் போடும் முக்காடு மட்டுமல்ல. புரிகிறதா? என்னைப்பொறுத்த மட்டில் இதற்கு சுலபமான வழி, சுடிதார் அணியும் பழக்கம் என்றால் ஒரு பெரிய காட்டன் துப்பட்டாவைக்கொண்டு போர்த்திக்கொள்ளலாம், சேலையென்றால் நம் தொழுகைக்கு பயன்படும் மக்கன்னா தான் பெஸ்ட். டக்கென்று மாட்டிக்கொள்ளலாம், வசதியும் கூட. :)

இசைக்கு நோ... வேறென்ன செய்யலாம் :

பிறகு, அடுத்த முக்கியமானது இசை கேட்பது. இன்றைய காலத்தில் ஒரு முஸ்லிமிடம் இசை ஹராமென்று சொன்னால், என்னது? ஹராமா? யார் சொன்னா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லைன்னு சாதாரணமா சொல்லிட்டு போயிடுவாங்க. வீட்டில் தனியாக இருக்கும்போது போர் அடிக்கிறது, அதான்னு சொல்லி எந்த நேரம் பார்த்தாலும் பாட்டு ஓடிக்கொண்டே இருக்கும், பாங்கு சொல்லும் நேரத்தை தவிர. சினிமாவும் பாடல்களும் நம்மையே அறியாமல் நம் வீட்டோடு ஒன்றாக மாறிவிட்டது. அதை இஸ்லாத்துக்கு எதிரானது என்பதை ஏற்கக்கூட மனமில்லாதவர்களாகத்தான் இன்றைய தலைமுறை இருக்கிறது. தனியாக இருக்கும் பட்சத்தில் பாட்டு கேட்பதற்கு பதிலாக குரான் வசனங்களை கேட்கலாமே? சரி, கவனம் அதில் இருக்காது என்றால் பேசாமல் செய்தி சேனல்களை வைத்துவிட்டு போங்களேன். பாடல்களில் வரும் ஆபாசமான வரிகளையும் நடன வரிகளையும் ஆமோதிக்கும் வகையில் அவற்றைக்கேட்டுக்கொண்டிருந்தால் நம்மை பார்த்து வளரும் நம் குழந்தைக்களுக்கு நாம் என்ன அறிவுரை சொன்னாலும் அது எடுபடாது.  நாமே ஆபாசத்தை அனுமதித்துவிட்டு இளைய தலைமுறையை குறை சொல்லகூடாது... என் அனுபவத்தில் வீட்டில் இதை நடைமுறைப்படுத்துவது தான் மிகவும் சவாலான ஒரு விஷயமாக கருதுகிறேன் (நல்லவேளை, வெளிநாட்டில் இருக்கிறோம் என்று ஒரு சின்ன சந்தோஷமும் கூட ) :)

எல்லாம் எளிதே... :

நம்முடைய மார்க்கம் கடைப்பிடிக்க மிகவும் எளிதானதே. அல்லாஹ் நம்மை படைத்த காரணம், அவன் ஒருவனை வணங்குவதற்காக மட்டுமே. அதை நாம் ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டும். மேற்கூறிய விஷயங்கள் சிறியதாக தெரியலாம். ஆனால் அல்லாஹ்வுக்காக என நாம் ஒரு நிய்யத்தை வைக்கும்போது அதி கிடைக்கும் கூலி நிச்சயமாக அதிகம். அதே போல் இவையெல்லாம் கடைபிடிப்பது பெரிய விஷயமாக தெரியலாம். ஆனால் அல்லாஹ்விற்காக நாம் ஒரு செயலை செய்யும் போது அதற்கான நன்மைகளை மறுமையில் பன்மடங்கு அள்ள முடியும் இன்ஷா அல்லாஹ்...

உங்கள் சகோதரி
நாஸியா
read more "இது வேண்டாம்..அது..."

Wednesday, February 20, 2013

கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்- முதல்பரிசு பெற்ற கட்டுரை (ஆபிதீன்)

கல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா?  என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெண்மணியும் -டீக்கடை பேஸ்புக் குழுமமும் நடத்திய கட்டுரைப்போட்டியில் முதல் இடம் பெற்ற சகோதரர் ஆபிதீன் அவர்களின் கட்டுரை இது. 
(நபியே ! யாவற்றையும்)  படைத்த உமது இறைவனின் திருநாமத்தால் நீர் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து  படைத்தான். ஓதுவீராக! உமது  இறைவன் மாபெரும் கொடையாளன் அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக்கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாததையெல்லாம் கற்றுக்கொடுத்தான்.(அல்குர்ஆன்96:1:5 )   

   
இஸ்லாம் என்பது இன்றைக்கு உலகம் முழுவதும் பரவி பலகோடி மக்களின் இதயங்களில் நீக்கமற வாழுகின்ற வழிமுறையாக, வாழ்க்கை நெறியாக உள்ள ஓர் அற்புத மார்க்கம். அதே வேளையில், இந்த மார்க்கத்தை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள்;, வேண்டுமென்றே  புனித இஸ்லாத்தைப்பற்றியும் அதன் உண்மைகளைப்பற்றியும் திரித்தும் சிதைத்தும் கூறிக்கொண்டும் இஸ்லாத்திற்கு இல்லாத முகங்களையும், நிறங்களையும் இருப்பதாகக் கூறிக்கொண்டும் அதன் புனிதத்தை குறைப்பதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஓரிரு நூற்றாண்டுகளாக இஸ்லாத்தை நோக்கி திட்டமிட்டு எறியப்படும் அம்புகளை எதிர்கொள்ளும் விவேகத்தையும் இஸ்லாமியர்கள் இழந்து வருவதும் கசப்பான உண்மை. காரணம்…  இஸ்லாமியர்கள், கல்வி ஞானத்தைப் புறக்கணித்தது.
எனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானம் இல்லாமல் தன்மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்.  (அல் குர்ஆன்: 30 -29 )
இறைவனால் அருளப்பெற்ற திருமறை இந்த உலகிற்கு அறிவைத் தந்தது, அறிவியலை தந்தது. ஒழுக்கத்தையும் உண்மையையும் கற்றுக் கொடுத்தது. சட்டத்தையும், நீதியையும் போதித்தது. திருமறை வழியில் இந்த உலகத்தை ஆளக்கூடிய தகுதிபடைத்த இஸ்லாமிய சமுதாயம். திருக்குர்ஆன் அழுத்திச் சொன்ன ஆக்கப்பூர்வமான கல்வியை அலட்சியப்படுத்திய காரணத்தினால் வீறுகொண்டு நிற்கவேண்டிய நாம் வீரியம் இழந்து நிற்கிறோம்..


கல்விக்கு கண்தந்த இஸ்லாம்:

உலகில் உள்ள எந்த சமூகமும் இஸ்லாம் மார்க்கம் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது போன்று வலியுறுத்தியது கிடையாது. கல்வி என்றால் என்னவென்றே புரியாத அந்தக் காலத்தில் கல்வியைக் கடமையாக்கியது இஸ்லாம். ஆண்களுக்கே கல்வி
இல்லாதிருந்த  நிலையில் , அன்று வெறும் போகப்பொருளாகக் கருதப்பட்ட பெண்களுக்குக்கும் கல்வியை கட்டாயமாக்கியது இஸ்லாம். இறைவன் அருளிய திருக்குர்ஆனில் சுமார் 750 வசனங்கள் கற்றுக்கொள்ளவதைப் பற்றி கூறுகிறது.  கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் கல்வியின் மாண்புகளையும் மகத்துவத்தையும் தனது வாழ்நாட்களில் பலமுறை வலியுறுத்திச் சென்றுள்ளார்கள்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஒருமுறை, நபியே..! திருமறையை ஓதுவதைவிட- கற்றுக்கொள்வது சிறந்ததா? என்று தோழர்கள் கேட்டபோது அதற்கு, அறிவின் மூலமாக அன்றி வேறு எப்படி திருமறையால் உங்களுக்கு நன்மை செய்ய முடியும்? என்று கேட்டார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள் “யார் கல்வியின் பாதையை தேடிச்செல்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் பாதையை  லேசாக்குகிறான் “ என்றார்கள் (நூல்: முஸ்லிம்)

நான் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் (எனது கனவில); ஒரு பால்கோப்பை என்னிடம் கொண்டுவரப்பட்டது .உடனே நான் (அதிலிருந்த பாலை ) தாகம் தீருமளவு குடித்துவிட்டேன். அது என் நகக்கண்கள் வழியாக வெளியேறுவதைப் பார்த்தேன். பின்னர் மீதியிருந்ததை  உமர்(ரலி) அவர்களுக்கு கொடுத்தேன். அப்போது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ! அந்தப் பாலுக்கு தாங்கள் என்ன விளக்கம் தருகிறீர்கள் ? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “கல்வி” என்று கூறினார்கள்.  (நபி மொழி –புகாரி.)  

கல்வி கற்பது என்பது அனைத்து முஸ்லீம்கள் மீதும் கடமையாகும் என நபி(ஸல்) அறிவிப்பதாக அனஸ்(ரலி) கூறியதை நூல் பைஹகியில் காணமுடிகிறது. சீனம் சென்றும் சேர்க்க நல்லறிவை, போராளி சிந்தும்  இரத்தத் துளிகளைக் காட்டிலும் ஒரு அறிஞனின் பேனா மை புனிதமானது. போன்ற  கல்வியின் மாண்புகள் மற்றும் மகத்துவங்கள் பற்றி நூற்றுக்கணக்கான ஆதாரப்பூர்வ ஹதீதுகள் நாம் அறிந்திருக்கிறோம். இஸ்லாம் மதித்த கல்வியை இஸ்லாமியர்களாகிய நாம் எந்தளவு மதித்திருக்கிறோம் என்பது தான் இந்தக்கட்டுரையின் சாரம்.

தமிழக முஸ்லிம்களின் கல்விப்பாதை  அன்று முதல் இன்று வரை

தான் நாடியவர்களுக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கிறான். (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ ,அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயம் ஆகிவிடுகிறார். எனினும், நல்லறிவுடையோர் தவிர வேறுயாரும் இதை சிந்தித்துப்பார்பதில்லை.   (அல்குர்ஆன் - 2 :269)

ஒரு காலத்தில் கல்வியை கையில் வைத்துக் கொண்டு பல்வேறு சாதனைகளையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் இந்த உலகத்திற்கு இஸ்லாமிய மேதைகள் அள்ளித் தந்தனர். ஆனால் தொடர்ந்து வந்த தலைமுறையினர் கடந்த நானூறு ஆண்டுகளாக கல்வியில் அலட்சியம் காட்டியதனால், இஸ்லாமியர்களின் இன்றைய அவலநிலையை நமக்கு நாமே விளக்க தேவையில்லை. உலகக்கல்வியிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கி நின்ற சமுதாயம், கடந்த நூற்றாண்டுகளில் நவீன கல்விச் சாலைகளில் எப்படி நடக்க ஆரம்பித்தது என்பதை புரிந்து கொள்வது அவசியம்.

அன்றைய காலங்களில் அரசாங்கம் கல்விக்கூடங்கள் பல தொடங்கி அதில் பல்வேறு சமுதாயத்தினர் கல்வி கற்று வந்தாலும், முஸ்லீம் சமுதாயத்தினர் மட்டும் நவீன கல்வியை ஏற்றுக்கொள்ள மிகப்பெரிய கருத்துப்போராட்டம் நடத்தி வந்தனர். நாளடைவில் தங்களின் சொந்த முயற்சியிலும் அரசின் உதவியாலும் முஸ்லீம்கள் தாங்களாகவே நடத்தும் ஒரு சில கல்வி நிறுவனங்களை தொடங்க முன் வந்தனர். தமிழக அளவில் கி.பி.1850 முதல் இன்று வரை முஸ்லிம்களின் கல்வி ஆர்வத்தையும் வளர்ச்சியையும் தெரிவதன் மூலம் நமக்கு ஒரு புரிதல் கிடைக்கும்.

ஆங்கிலேயர்கள் காலத்தில் முஸ்லீம்கள் ‘மக்தப்’ மற்றும் ‘மத்ரஸா’க்களில் கல்வி பயின்றனர். எழுதுதல் மற்றும் கணிதப்பாடங்கள் மக்தப்களிலும், இலக்கணமும் புவியியலும் மதரஸாக்களிலும் பாடமாகச் சொல்லித்தரப்பட்டது. அன்றைய ‘மக்தப்’ ‘லெப்பை பள்ளிகள்' என்றும் ஆசிரியர்கள் ‘லெப்பை’ என்றும் பெயர் பெற்றிருந்தனர்.

சென்னையில் 1851 அக்டோபர் 28-ம் நாள் நவாப் குலாம் கவுஸ்கான் பகதூர், “மதர்ஸா-இ-ஆஸம்” என்னும் மதரஸாவை தொடங்கினார். பிறகு 1959-ல் உயர்நிலைப் பள்ளிக் கூடமாக மாற்றப்பட்டு தமிழகத்தின் முதல் நவீன பள்ளிக்கூடம் 'மதர்ஸா-இ-ஆஸம' இன்று வரை செயல்பட்டு வருகிறது. அன்றைய ஆங்கிலேய ஆட்சியில் பெரிதும் அதிருப்தியடைந்த முஸ்லீம்களின் அதிருப்தியை குறைப்பதற்காக கிழக்கிந்திய நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அரபிக் மதரஸா ஒன்றை தொடங்கினர். மேலும் அன்றைய மதராஸ் ஆளுநர் ‘சர்.இராபர்ட் ஹோபர்ட’ முஸ்லீம்களின் கோரிக்கையை ஏற்று 1873-ல் இராயப்பேட்டை அஞ்சல் நிலையத்திற்கு அருகே உயர்நிலைப்பள்ளிக்கூடம் துவக்க உதவி செய்தார். பிறகு அது உட்ஸ் சாலைக்கு மாற்றப்பட்டது.

1857ல் சென்னை பல்கலைக்கழகம் உருவானது. அதில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்தனர் ஆனால், 1871-ல் தான் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்து முதல் முஸ்லீம் மாணவர் பட்டம் பெற்றார். அவர் தான் சென்னை மாகாணத்தின் முதல் முஸ்லீம் பட்டதாரி. 1885-ல் நவீன கல்வியை வளர்ப்பதற்காக 'அஞ்சுமன்-இ-இஸ்லாமியா' என்ற அமைப்பு துவங்கப்பட்டது. அந்த அமைப்பு 'அஞ்சுமன்-இ-முஃபித்-இ-இஸ்லாம்' என்ற பெயரில் ஒரு தொழிற்பள்ளியை முஸ்லீம்களுக்காக அமைத்தது.

1901-02-ம் கல்வியாண்டின் நிலவரப்படி தமிழகத்தில் ஆரம்ப பள்ளிகளில் பயின்ற முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை 44,705. இன்னொரு ஆச்சரியமூட்டும் மற்றொரு விபரம், தமிழக அரசின் புள்ளி விபரப்படி 1902-03-ம் கல்வியாண்டில் தமிழக கல்லூரிகளில் படித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 10 மாத்திரமே. அன்றைய காலகட்ட இஸ்லாமிய சமுதாய ஆர்வலர்கள் முஸ்லிம்களின் கல்வி பின்னடைவை கண்டு, முஸ்லீம்களின் கல்விநிலையை அதிகரிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினர். இது குறித்து சர்.சையது கான் துவங்கிய ‘முகம்மதின் கல்வி கூட்டமைப்பு’ தனது உறுப்பினர்கள் கூட்டத்தை 1901-டிசம்பர் 28-ம் தேதி சென்னை தேனாம் பேட்டையில் கூட்டியது.

அதே காலகட்டத்தில் 1902-ல் துவங்கப்பட்ட தென்னிந்திய “முகம்மதன் கல்வி சங்கம்” (MEASI) தனது கல்வி சேவையை முஸ்லீம்களுக்காக செய்து வந்தது. பிறகு அது 1946-ல் பெயர் மாற்றப்பட்டு “தென்னிந்திய முஸ்லீம் கல்விச் சங்கம்”  (MEASI) என்ற பெயரில் இன்றும் செயல்பட்டு வருகிறது. 1915 ஏப்ரல் 12-ல் சென்னை ஜார்ஜ் டவுனில் ‘பெண்டு லாண்டு’ பிரபு ஒரு முஸ்லீம் விடுதியை துவங்கி வைத்தார். அது 1918-ல் அரசு மற்றும்  MEASI அமைப்பின் நிதி உதவியால் செயல்பட துவங்கியது. தென்னிந்திய கல்விச் சங்கம் பெண்களின் கல்வியிலும் ஆர்வம் காட்ட துவங்கியது. அதன் பயனாக கட்டாய தொடக்க நிலை பள்ளித்திட்டத்தில் புர்கா வசதியுடன் முஸ்லீம் மாணவிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அரசிடம் தொடர்ந்து முறையிட்டது. அதன் அடிப்படையில், 1943-ல் ஜார்ஜ் டவுனில் பெண்களுக்காகவும் கல்விச்சாலை ஒன்றை அரசு துவங்கியது. அதைத் தொடர்ந்து MEASI சங்கத்தின் தொடர்முயற்சியால் சென்னையில் 1951-ல் புதுக்கல்லூரி துவங்கப்பட்டது. அதே 1951-ம் ஆண்டில் தான் “தென்னிந்தியாவின் அலிகார் பல்கலைக்கழகம் என்று கருதப்படும் திருச்சி ஜமால் முகமது கல்லூரி”யும் உருவானது.

அதேபோல 1903-ம் ஆண்டு “வாணியம்பாடி முஸ்லீம்கள், முஸ்லீம் கல்விச் சங்கத்தை” தோற்றுவித்து பிறகு 1916-ல் வாணியம்பாடி கல்விச் சங்கமாக உருவாகி 1919-ல் வாணியம்பாடியில் இஸ்லாமியா கல்லூரி துவங்கப்பட்டது.

தென்னிந்திய முஸ்லீம் கல்விச் சங்கத்தின் அன்றைய நிர்வாகிகளின் தொடர் வற்புறுத்தலின் பேரில் 1946-ம் ஆண்டு முஸ்லீம் மகளிருக்கென ஒரு தனிக்கல்லூரியை “ஹோபார்ட்” பள்ளியின் வளாகத்தில் அரசு துவக்கியது. ஆனால் அன்றைய தமிழக காங்கிரஸ் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார், முஸ்லீம்களுக்கென பிரத்யோகக் கல்லூரி இயங்குவது சரியல்ல என்று கூறி அது 1948-ல் எத்திராஜ் என்பவருக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டது. முஸ்லீம் நிர்வாகம் மாற்றப்பட்டதோடு முஹம்மதன் கல்லூரிக்கு வழங்கப்பட்ட அரசு சலுகைகளும் நிறுத்தப்பட்டு பிறகு 1949-ல் அரசு கல்லூரியாக அது அறிவிக்கப்பட்டது. இன்றைய சென்னை எத்திராஜ் கல்லூரி அன்று முஸ்லீம்களுக்காக துவங்கப்பட்டு பிறகு பிடுங்கப்பட்டதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, அரசை நம்பியிருந்த இஸ்லாமிய கல்வி ஆர்வலர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு சுயமாக எழுந்து நிற்க தலைப்பட்டனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆங்காங்கே முஸ்லீம் கல்லூரிகள் உருவாக ஆரம்பித்தது. 1951-ல் ஒரே ஆண்டில் சென்னை புதுக்கல்லூரியும், திருச்சியில் ஜமால் முகமது கல்லூரியும் துவங்கப்பட்டது. 1954-ல் சென்னை SIET  மகளிர் கல்லூரியும் அதே ஆண்டு அதிராம்பட்டிணத்தில் காதர்மைதீன் கல்லூரியும் உருவாகின. 1956-ல் உத்தமபாளையத்தில் கருத்தராவுத்தர் கல்லூரியும், 1965-ல் மேல்விசாரத்தில் அப்துல் ஹக்கிம் கல்லூரியும்,   1968-ல் மதுரை வக்போர்டு கல்லூரியும், 1969-ல் ஆம்பூரில் மஜ்ஹருல் உலூம் கல்லூரியும், 1970-ல் இளையான்குடியில் டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியும், 1975-ல் சென்னை காயிதே மில்லத் கல்லூரியும் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட ஆரம்பித்தது. இவையனைத்தும் அரசு நிதியுதவியை பெற்று முஸ்லீம்களால் நடத்தப்படும் கல்லூரிகளாகும். 1980-க்குப் பிறகு தமிழகத்தில் தனியார் கல்லூரிகளுக்கான அரசு உதவி முழுவதுமாக நிறுத்தப்பட்டது. புதிதாக தொடங்கப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் சுயநிதியில் இயக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவானது.

1980-களுக்குப் பிறகும் சுயநிதியின் அடிப்படையில் முஸ்லீம்களின் கல்வி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் வளர ஆரம்பித்தன. தமிழகம் முழுவதும் இன்றைய நிலவரப்படி அதிகமான பள்ளிகள் முஸ்லீம் சங்கங்களால் நடத்தப்பட்டு வருகிறது. அதிகமான கலை அறிவியல், பொறியியல், பாராமெடிக்கல் போன்ற கல்லூரிகளும் முஸ்லீம் சமுதாயத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது. பல தொழில் நுணுக்க பயிற்ச்சி நிலையங்கள், ITI, Polytechnic, அரபிக்கல்லூரிகள் போன்று அதிகமான உயர்நிலைக் கல்வி நிறுவனங்களும் முஸ்லீம்களால் நடத்தப்படுகின்றன. இவைகளில், கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் கல்லூரி, திருவாரூர் ராபியம்மாள் அகமது மைதீன் கல்லூரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி, ஐமான் கல்லூரி, சென்னை ஜஸ்டிஸ் பஷீர் அகமது கல்லூரி போன்ற கல்லூரிகள் பெண்கள் கல்லூரிகளாக செயல்பட்டு வருகிறது. ஆக, தமிழக முஸ்லீம்கள் துவங்கிய பள்ளிகள், கல்லூரிகள் நமது மாணவர்கள் படிப்பதற்கு போதுமான எண்ணிக்கையில் இல்லாவிட்டாலும் தேவையான அளவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையை உருவாக்கித் தந்த வல்ல இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தி கொள்ளலாம்.

முஸ்லீம் நடத்தும் கல்லூரிகளில்… முஸ்லீம் மாணவர்கள் எண்ணிக்கை ?

எவர் தனது இளமையில் கல்வியைத் தேடுவதிலும் வணக்க வழிபாட்டிலும் வளர்ந்து பெரியவராகிறாரோ அவருக்கு நாற்பது ஸித்தீக்கீன்களின் நன்மை கிடைக்கும்.  (நபிமொழி )

இஸ்லாமியர்கள் நடத்தும் கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில் துவங்கப்பட்டாலும்,  அந்தந்த கல்லூரிகளில் படிக்கும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை என்ன என்பது அதிர்ச்சியான தகவல். 1903-ம் ஆண்டில் தமிழகத்தில் வெறும் 10 முஸ்லீம் மாணவர்கள் மட்டும் படித்த காலம் போய் 2002-2003 தமிழக புள்ளி விபரப்படி தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை 25,000க்கு மேலாக உயர்ந்துள்ளது. இன்று இலட்சத்தை கூட தொட்டிருக்கலாம். இந்த எண்ணிக்கை மேலோட்டமாக வளர்ச்சியாகத் தெரிந்தாலும் முஸ்லீம்களின் சதவிகித எண்ணிக்கையில் இது மிக மிக சொற்பமே.

இந்திய அரசால் நடத்தப்படும் அபுல் கலாம் ஆசாத் கல்வி அறக்கட்டளை, சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக நடத்தப்படுகிறது. பல இலட்சக்கணக்கான நிதி உதவியையும் முஸ்லீம் கல்வி நிறுவனங்களுக்கு இந்த அறக்கட்டளை வழங்குகிறது. தமிழகத்தில் ஒரு சில பள்ளி கல்லூரிகள் மாத்திரமே இந்த அறக்கட்டளையின் மூலம் நிதியுதவி பெற முடிந்துள்ளது. காரணம், நிதியுதவி பெற இந்த அறக்கட்டளை விதிக்கும் நிபந்தனைகளில் ஒன்று, ‘முஸ்லீம்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் குறைந்தது 25 சதவீத மாணவர்களாவது படிக்க வேண்டும்’ என்பது. 25 சதவீத மாணவர்கள் முஸ்லீம் மாணவர்கள் கூட இல்லாததால், முஸ்லீமகளால் நடத்தப்படும் பல கல்வி நிறுவனங்கள் நிதியுதவியை பெற முடியாமல் தவிக்கிறது. இப்பொழுது தெரிந்திருக்கும் முஸ்லீம் கல்வி நிறுவனங்களில் படிக்கும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை. தமிழக அளவில் 1850 முதல் 1980 வரை மிக குறைந்த நிலையில் இருந்த கல்வி விழிப்புணர்வு 1980-க்கு மேல் ஓரளவு வேகமெடுத்து இருப்பது உண்மைதான். இருந்தாலும் இந்த மிகக் குறைந்த கல்வி வளர்ச்சியாவது ஆக்கப்பூர்வமாக இருக்கிறதா என்றால் கேள்விக் குறிதான் மிஞ்சுகிறது.

இன்றைய தமிழக இஸ்லாமியரின் கல்வி விழிப்புணர்வு – ஒரு பார்வை:

எந்த ஒரு சமுதாயமும் நல்வழியில் தன்னை மாற்றிக் கொள்ளாதவரை , அது மாறுவதற்கான சாத்தியம் இல்லை.   ( நபி மொழி  )
கடந்த காலங்களில் தமிழகத்தில் பல்வேறு நிலைகளில் கல்வி விழிப்புணர்வு காணப்படுகிறது. கல்வியின் தேவை மற்றும் அவசரம் குறித்து கல்வியறிவு குறைந்த பெற்றோர்கள்கூட .ஆர்வத்துடன் ஆலேசித்துக் கொள்வது நம் கண்கூட கண்டு மகிழ முடிகிறது.

இந்த மாற்றத்திற்காக அடிப்படைக் காரணங்களில் … 

i)    முஸ்லிம் கல்வி நிறுவனர்களின் விழிப்புணர்வு :

(கல்வி ஞானத்தின் மூலமாக) யார் நேர் வழியின் பக்கம் அழைக்கின்றாரோ அவருக்கு அந்நேர்வழியை பின்பற்றக்கூடியவர்களின் நற்கூலிகளைப்போன்று கிடைக்கும். எனினும் அவர்களின் (பின்பற்றுபவர்களின்) நற்கூலிகளில் எதுவும் குறையாது.     நபிமொழி –முஸ்லீம்

1850-ஆண்டுமுதல் 1970-வரை தமிழகத்தில் தொடங்கப்பட்ட முஸ்லீம் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை விட 1970 முதல் இன்று வரை துவங்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம். கடந்த 30 வருடங்களில் பொருளாதாரத்தில் ஓரளவு வசதி படைத்த இஸ்லாமிய கல்வி ஆர்வலர்கள் புதிய பல கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று தலைப்பட்டதன் பயனாக இன்று அதிகமாக இல்லாவிட்டாலும் ஓரளவு இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புகள் தெரிகிறது. கல்வி நிறுவனர்களின் விழிப்புணர்விற்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொள்வோம்.

ii)    சமுதாய இயக்கங்களின் கல்வி விழிப்புணர்வு:

உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்,கல்வி ஞானம் கொடுக்கப்பட்வர்களுக்கும், அல்லாஹ் பதவிகளை உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான்.     (அல் குர்ஆன்- 58:11 )

இன்றைய தமிழகத்தில் இஸ்லாமிய கொள்கைகளையும் முஸ்லீம்களின் வாழ்வாதாரத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் நம்மிடையே அரசியல் சார்ந்த கட்சிகளும், அரசியல்சாரா இயக்கங்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளது. அத்தனை இயக்கங்களும் இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளைத் தவிர மற்ற பல்வேறு கருத்துகளில் ஒன்றோடு ஒன்று முரண்பட்டு நிற்பதும் நமக்கு தெரியும். ஆனால் இந்த இயக்கங்கள், அமைப்புகள் அனைத்தும் “இஸ்லாமிய சமுதாயம் கல்வி நிலையில் கடைநிலையில் உள்ளது. மற்ற சமுதாயத்தோடு 200 ஆண்டுகள் கல்வியில் பின்தங்கி நிற்கும் முஸ்லீம்கள் உடனடியாக கையிலெடுக்க வேண்டிய ஆயுதம் கல்வி ஒன்று தான்”. என்ற ஒரு கருத்தில் மட்டும் தான் ஒத்துப்போகின்றன. அதற்காகவும் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் முஸ்லிம்களிடையே கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்களிடையே கல்வி ஆர்வத்தை தூண்டி வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. படிக்க வேண்டும் என்ற மனநிலையை மாணவர்கள் மனதில் விதைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கின்றனர். கல்விக்கு தடையாக நிற்கும் பொருளாதார பிரச்சினையை கல்வி உதவித்தொகைகள் வழங்கி கல்விச் சாலைகளுக்கு வழிகாட்டுகின்றனர்.

iii)    வெளிநாடு வாழ் தமிழக முஸ்லீம்களின் கல்வி விழிப்புணர்வு:

சமீப காலங்களில் வெளிநாடுகளில் வாழும் தமிழக முஸ்லீம்களிடையே கல்வி சார்ந்த விழிப்புணர்வு பிரகாசமாக எரிய துவங்கிவிட்டது. மற்ற நாடுகளில் வாழும் தமிழர்களை காட்டிலும் வளைகுடா நாடுகளில் வாழும் நம்மவர்களுக்கு இந்த விழிப்புணர்வு தீ சுவாலையாக சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. காரணம், ஒரு முஸ்லீம் நாட்டில் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு கீழ், முஸ்லீம்கள் பலர் கொத்தடிமைகளாக இளமையை இழந்து கொண்டிருக்ககூடிய அவலத்தை அனுபவிப்பதால் தான். இந்த அவலத்திற்கு முதல் முழு காரணம் தேவையான கல்வி இல்லாதது தான் என்பதை புரிந்து கொண்டதால் தான். தாங்கள் இழந்த கல்வி வாய்ப்பை தனது சந்ததிகளாவது பெற்று சிறக்கட்டுமே என்ற வெறியில் இஸ்லாமியர்களின் கல்வி வளர்ச்சிக்காக தனது குறைந்த சம்பளத்தில் சிறிய தொகையையினை தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தானமாகத் தருவதன் மூலமாகவோ அல்லது தன்னிச்சையாக செலவிடுவதன் மூலமாகவோ தனது கடமையை நிறைவேற்றிக்கொண்ட ஆத்ம திருப்தி அடைந்து வருகின்றனர்.

உலகத்தில் நூல்கள் எழுதுவதிலும், கல்விக்காக செலவழிப்பதிலும்  இஸ்லாமியர்களுக்கு எதிராக யாரும் போட்டி போட முடியாது. -  இமாம்  அல்ஜாயீ (ரஹ்)

இன்றைய இஸ்லாமிய கல்வி விழிப்புணர்வு ஆக்கப்பூர்வமான மாற்றமா ?

நாம் மிகவும் சந்தோசமடைந்து கொள்ளும் மிதவேகமான மாற்றங்கள் விவேகமான பாதையில் செல்கின்றதா? இந்த மாற்றத்திற்கு ஏற்ப ஆக்கப்பூர்வமான கல்வி வளர்ச்சியை அடுத்த சில ஆண்டுகளில் எட்ட முடியுமா? இன்று கல்வியின் அடிப்படையில் சமுதாய மாற்றத்திற்காக செலவழிக்கப்படும் மனித ஆற்றல்களுக்கும் பொருளாதார செலவுகளுக்கும் சரியான தீர்வு கிடைக்குமா?

கடந்த சில வருடங்களாக எந்த ஒரு அமைப்பையும் சாராது அதே வேளையில் அனைத்து அமைப்புகளுடன் ஐக்கியமாகி தமிழக மாணவர்களிடையே குறிப்பாக இஸ்லாமிய மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருபவன் நான். எனது கல்வி பயணத்தில் நான் கண்ட தமிழக இஸ்லாமிய மக்களிடையே கல்வி விழிப்புணர்வு சார்ந்த அனுபவ ஆதங்கங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

கல்வி விழிப்புணர்வில் சமுதாயத்தின் தடுமாற்றங்கள்


தமிழக அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் கல்வி நிலைய நிறுவனங்களும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கல்வி ஆர்வ தனவந்தர்களும் கல்வி விழிப்புணர்வு செயல்பாட்டில் தங்களை முடிந்தளவு பிணைத்துக்கொண்டு வருவது மிகப்பெரிய மாற்றமே. ஆனாலும்… சாதகமான சூழலுக்கிடையே பாதக விளைவுகளை உண்டுபண்ணும் சில தடுமாற்றங்ளை முடிந்தவரை தவிர்ப்பதன் மூலம் நமது இலக்கினை அடையும் தூரத்தைக் குறைத்துக்கொள்ள முடியும்.அந்த வகையான தடுமாற்றங்களில்  சில…

இருட்டில் இருக்கும் இன்றைய தமிழ் இஸ்லாமிய விஞ்ஞானிகள்:


இறைவணக்கத்தில்  ஈடுபட்டிருக்கும் ஆயிரம்     வணக்கசாலிகளை விட சைத்தானுக்கு நுட்பறிவாய்ந்த ஒரு அறிஞர் மிகவும் கடினமானவர்.     (நபி மொழி- திர்மிதி)

யானை தன் பலம் அறியாது என்று சொல்லுவார்கள்…மிகப்பெரும் பலம் கொண்ட யானையை மிகச்சிறிய சங்கிலியால் கட்டி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை நாம் நடைமுறையில் காண்கிறோம். பலம் இல்லாத பால்யவயதில் மனரீதியாக பழக்கப்பட்டு விட்டதால்  யானையும் தன் பலத்தை சோதித்துப் பார்ப்தில்லை (மதம் பிடிக்காத வரை). மிகப்பெரும் ஆற்றல் மிகுந்த இந்த சமுதாயமும் இன்றுவரை தன்பலத்தை உணராத நிலையில் தான் உள்ளது.

இந்தியாவில் .இஸ்லாமியர்கள் முன்னேறுவதை மற்றவர்கள் அங்கீகரிப்பதில்லை என்பது நமது பொதுவான குற்றச்சாட்டுகளில் ஒன்று. ஆற்றல்மிகு இஸ்லாமிய அறிஞர்களை அடுத்தவர்கள் அங்கீகரிப்பது ஒருபுறம் இருக்கட்டும், இன்றைய தினத்தில் தமிழகத்தின் பல்வேறு பல்கலைகழகங்களிலும் ஒருசில கல்லூரிகளிலும் தங்களின் அற்புமான ஆராய்சிகள் மூலம் உலக ஆராய்சியாளர்களை திரும்பிப் பார்க்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள் பல தமிழக முஸ்லீம் விஞ்ஞானிகள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இது வரை இவர்களை அடையாளம் கண்டிருக்கிறோமா? அல்லது இவர்களின்  அறிவியல் சாதனைகளை குறைந்தது நம்மவர்களுக்காகவாவது அறிமுகப்படுத்தி அங்கீகரித்திருக்கிறோமா…?

மண்புழு என்ற அற்பஉயிரியை அற்புத உயிரியாக்கி இயற்கை உரம் உருவாக்கி வரும் டாக்டர். ‘சுல்தான்அஹமது இஸ்மாயில்’(சென்னை புதுக்கல்லூரி, பாசுமதி அரிசி மூலம் இந்தியாவின் அன்னிய செலவானியை உயர்த்திய அரிசி விஞ்ஞானி ‘பத்மஸ்ரீ சித்தீக்’  (இளையான்குடி), புற்றுநோய் ஆராய்சியில் திருப்புமுனை கண்ட ‘அக்பாஷா’ (பாரதிதாசன் பல்கலைக்கழகம்-திருச்சி), நுண்ணுயிரி ஆராய்சியில் புதுமைபடைத்த ‘தாஜூதீன’; (பாரதிதாசன் பல்கலைக்கழகம்,-திருச்சி), ஆழ்கடல் மீன்களில் அற்புதங்களை அள்ளித்தரும் ‘அஜ்மல்கான்’(அண்ணாமலை பல்கலைக்கழகம்-) சதுப்பு நில ஆராய்சியில் ஆச்சரியங்கள் படைத்த அப்துல் ரகுமான் (பூண்டி புஸ்பம் கல்லூரி தஞ்சாவூர்), பாக்டீரியாக்களில் மரபணுமாற்றத்தை கண்டறிந்த ‘ஹூசைன் முனைவர்’ (மதுரை காமராஜர் பல்கலைகழகம்), மாசுக்கட்டுப்பாட்டு ஆராய்சியில் புதுமை செய்த ‘அப்பாஸி’    (பாண்டிச்சேரி பல்கலைகழகம்),  மீன் இன ஆராய்சியில் புது வகை மருத்துவங்கள் கண்டறிந்த ‘முகமது அனீபா’ (புனித சேவியர் கல்லூரி – பாளையங்கோட்டை) உள்ளிட்ட இன்னும் பல்வேறு அறிவியல் விஞ்ஞானிகளும் பல பொருளாதார நிபுணர்களும் ,  இலக்கிய அறிஞர்களும் வெளிச்சத்திற்கு வராமலேயே உள்ளனர்.

சிறிய செயலுக்காக பெரிய அளவில் விளம்பரப் படுத்தும் நம்மவர்கள் , பெரிய அளவில் கல்விச் சாதனைகள் புரிந்து கொண்டிருக்கும் இவர்களை குறைந்தது தமிழக முஸ்லீம் சமுதாயத்திற்குக்கூட அறிமுகப்படுத்தி  ஆவணப்படுத்தவில்லையே என்பதும் மிகப்பெரிய ஆதங்கமாக உள்ளது.

சமகாலத்தில்,நம்மிடையேயும் ஆற்றல்மிகு அறிவியல் அறிஞர்கள் உள்ளார்கள்  அவர்களும் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை நம்மவர்களுக்கும் தெரியவேண்டும். இது  நமது சமுதாய இளைஞர்கள் மனதில் புரையோடியிருக்கும் கல்வி சார்ந்த தாழ்வு மனப்பான்மை வேரறுக்கும். யானைக்கு கட்டபட்ட சங்கிலி போன்று நமது சமுதாயத்தின் மீதும் சுற்றப்பட்டிருக்கும் கல்வியற்ற சங்கிலியும் தகர்ந்து போக வாய்ப்புள்ளது.

•    அமைப்புகளின் தனித்துவ முயற்சி


பெரும்பாலான ஊர்களில் நடைபெறும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒரு இஸ்லாமிய அமைப்பு நடத்தும்பொழுது அந்த ஊரில் உள்ள மற்ற இஸ்லாமிய அமைப்புகள் அதை வரவேற்காவிட்டாலும் அங்கு மாணவர்களின் வருகையை தவிர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், கல்வி விழிப்புணர்வு என்ற பெயரில் நடத்தப்படும் பெரும்பாலான நிகழ்சிகள் வீரியம் இழந்த நிகழ்ச்சியாக முடிந்து விடுகிறது. காரணம் கல்வி விழிப்புணர்வு என்ற பெயரில் அமைப்புகளின் தனித்துவத்தையும் அந்தந்த இயக்கங்களின் விளம்பரத்தையும்  பிரதிபலிக்கவே  முயற்சிக்கின்றனர். அத்துடன், கல்விஉதவி செய்யும் ஒவ்வொரு அமைப்புகளும் அந்தந்த மாணவர்களிடம் தங்களின் இயக்கம் சார்ந்த கொள்கைகளை வலியுறுத்துவது மட்டுமல்லாமல் மற்ற அமைப்புகளோடு இருக்கும் ஆர்வத்தை பிரித்தெடுப்பதில் ஆர்வம் காட்டுகின்ற சூழலும் ஆங்காங்கே நடக்கிறது.

இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், படித்து முடித்து தனது கல்வி அறிவால் சமுதாயத்தை மேம்படுத்த இருக்கும் மாணவர்களின் மனநிலை, நமது சமுதாயத்திற்குள்ளே இருக்கும் பிரிவுகளை இன்னும் வலுப்படுத்த வாய்ப்பிருக்கிறது.
கல்வியின் மூலம் பிற அறிஞர்களுக்கு நிகராகிவிட வேண்டும் என்பதற்காக அல்லது அறிவீனர்களின்  வாதம் புரிவதற்காக அல்லது அதன் மூலம் மக்களின் உள்ளங்களைத் தன் பக்கம் திருப்புவதற்காக ஒருவர் கல்வியை நாடினால் அவரை அல்லாஹ் நரகில் புகுத்துவான் .          ( நபிமொழி-திர்மிதி)

•    சிதறடிக்கப்படும் பொருளாதாரம்:

    கல்விக்காக தமிழக அளவில் ஒவ்ஒரு வருடமும் தனவந்தர்களால் செலவு செய்யப்படும் பணத்தின் மதிப்பு பல நூறு கோடிகளை தாண்டுகிறது என்கிறது புள்ளி விபரம். கல்விக்காக இஸ்லாமியர்களால் வழங்கப்படும் பெரும்பாலான பொருளாதாரம் முறைப்படுத்தப்படாமல் சிதறடிக்கப்படுகிறது என்பது தான் உண்மை. முறைப்படுத்தப்படாத கல்வி உதவித்தொகையால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பெரும்பாலான பணம் கல்விக்காக அல்லாமல் பலநூறு மாணவர்களின் பாக்கெட் மணியாக கரைந்து போகிறது என்பதும் நடைமுறை உண்மை.

•    கல்வி நிலையங்கள் துவங்காத சமுதாய அமைப்புகள்

    இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் சமுதாய இயக்கங்களை தங்கள் கல்வி நிறுவனங்களுக்குள் ஊடுருவ அனுமதிப்பதில்லை. தமிழகத்தில் கல்வி விழிப்புணர்வு பேசும் எந்த ஒரு சமுதாய இயக்கங்களும் தங்கள் பங்கிற்கு ஓரிரு உயர்கல்வி நிலையங்களையாவது உருவாக்குவது பற்றி இது வரை சிந்திக்கவும் இல்லை. இதை சாதிப்பதற்கான திறனும் ஆற்றலும் இருந்தும் சமுதாய இயக்கங்கள் ஒதுங்குவதும் புரியவில்லை.

•    பணத்திற்காக படிக்கும் மாணவர்கள்

    கல்வி ஆர்வலர்களும் சமுதாய அமைப்புகளும், அரசு மற்றும் சிறுபான்மை பிரிவுகளும், வெளிநாட்டு வாழ் தனவந்தர்களும் கல்விக்காக ஏழை மாணவர்களுக்கு உதவி செய்ய அதிக அளவு ஆர்வம் காட்டும் காலகட்டம் இது. ஒவ்வொரு ஊரிலும் ஒரு சிறு எண்ணிக்கையில் பெற்றோர்களும் மாணவர்களும் கல்வி உதவி தொகையை பல இடங்களில் பெறுவதில் படிப்பதை காட்டிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது ஒரு கசப்பான உண்மை. ஒரு பட்டப்படிப்பிற்கு ஒரு ஆண்டு ஆகும் செலவை காட்டிலும் ஐந்து மடங்கு வசூல் செய்யும் அவலமும் மறைமுகமாக நடக்கிறது. இதனை, “படிக்கும் மாணவர்கள் தானே போகட்டும்” என்று ஜீரணித்துக்கொண்டாலும் இந்த மனநிலையில் உள்ள மாணவர்கள் மூன்று, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் பட்டப்படிப்பையும் சரியாக முடிக்காமல் வெளியேருகின்றனர் என்பதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை. முறைப்படுத்தப்படாத கல்வி உதவி இது போன்ற முறையற்ற மாணவர்களை வளர்க்க வழி வகுக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச்சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் , நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்.  ( நபி மொழி)

கல்வி விழிப்புணர்வில் உண்டான பாதகங்களை சாதகமாக்க முடியுமா?


ஓவ்வொரு வருடமும் பெரும்பாலான ஊர்களில் கல்வி சார்ந்த விழிப்புணர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் நம்மிடம் உண்டான இந்த விழிப்புணர்வு நமது கல்விச் சரிவை சரிகட்டும் அளவிற்கு இன்னும் வளரவில்லை என்பது தான் இன்றைய நிலை. அதற்கு என்ன தான் செய்ய முடியும்?

 நமது இஸ்லாமிய இயக்கங்கள் எல்லாம் ஒரே குடையின் கீழ் நின்று கல்வி விழிப்புணர்வு நடவடிக்கையில் இறங்கலாமா …?  என்ன…!
நம்ம தமிழக சமுதாய இயக்கங்கள் எல்லாம் ஒன்று சேர்வதா?
ம.;.ம்…ம். அது கனவிலும் நடக்காத ஒன்று…

இறைவன் நினைத்தால் தவிர சாத்தியமில்லை என்று நீங்கள் நினைப்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கும். இருந்தாலும், ஓவ்வொரு இஸ்லாமிய இயக்கங்களும, அமைப்புகளும், அறக்கட்டளைகளும், வெளிநாட்டு கல்வி ஆர்வலர்களும் தனித்தனி பாதைகளில் சென்றாலும், அவரவர்கள் கல்விப் பணிகளை தடுமாற்றமில்லாமல் செய்வதற்கு…
  • தங்களின் சுயவிளம்பரம் தவிர்த்து வீரியம் மிக்க கல்வி விழிப்புணர்வு செயல்பாடுகளை தொடரலாம். ஆற்றல் மிக்க மாணவர்களை அடையாளம் கண்டு தத்தெடுத்துக் கொள்ளலாம். ஓவ்வொரு அமைப்பும் ஊருக்கு சில மாணவர்களை முழுமையாக தத்தெடுத்துக் கொள்ளலாம். உயர்நிலை கல்வியிலிருந்து உட்சபட்ச கல்வி வரை பொருளாதாரத்திற்கு பொறுப்பேற்றுக்கொள்ளலாம்.
  •  கல்வி உதவி செய்யும் ஒவ்வொரு அமைப்புகளும் மாணவர்களுடைய முழு படிப்பு செலவையும் ஏற்கும் பொழுது, ஒரே மாணவர் பலரிடம் கேட்கும் வாய்ப்பு குறைகிறது. தத்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விபரங்களை வெளியிடலாம்.  வெளியிட விரும்பாவிட்டால், கொடுக்கப்படும் உதவித் தொகை அந்தந்த கல்வி நிறுவனங்களில் நேரடியாக செலுத்த முயற்சி செய்யலாம்.
  •  தமிழக அளவில் உள்ள பல்கலைக் கழகங்களிலும் பல்வேறு கல்லூரிகளிலும் அனுபவமிக்க பேராசிரியர்களும், ஆற்றல் மிகுந்த விஞ்ஞானிகளும் வெளி உலகத்தின் கவனத்திற்கு வராமல் அமைதியாக அதே வேளையில் சமுதாய பணி செய்ய சரியான தொடர்பு கிடைக்காமல் ஒரு பெரிய அறிவுஜீவ கூட்டங்களே மறைந்திருக்கிறது. இவர்களை ஒருங்கிணைத்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமுதாய கல்வி வளர்ச்சிக்கு எளிய வழி காணலாம்.
  • இஸ்லாமிய கல்லூரிகளின் எண்ணிக்கை பெருக வேண்டும். தங்களுடைய பொருளாதாரங்களை கல்வி நிறுவனங்களில் முதலீடு செய்ய முன் வர வற்புறுத்தலாம். குறைந்த பொருளாதார வசதி இருந்தாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிலர் ஒன்று சேர்ந்து பொருளாதாரத்தை உருவாக்கி கல்வி நிலையங்களை புதிதாக உருவாக்குவதற்கு உகந்த காலகட்டம் இது. ஓரளவு சேவை நோக்கோடும் அதிக அளவு வியாபார நோக்கோடும் கல்வி நிலையங்கள் தொடங்க இது உகந்த சூழல். காரணம், அடுத்த ஒரு சில ஆண்டுகளில் இந்திய அளவில் பல ஆயிரக்கணக்கான புதிய உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கும் முயற்சியில் இந்திய அரசு உள்ளது. அதை நமது இஸ்லாமியர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  •  இன்றைய சூழலில் பட்டப்படிப்பு முடித்து விட்டாலும் மாத்திரம் அரசு பதவிகளில் அமர்ந்துவிடும் வாய்ப்புகள் சிறிதளவிலும் கிடையாது. காரணம், அரசு பதவிகளுக்கு அந்தந்த துறை சார்பாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இன்று உயர்கல்வியில் காட்டும் ஓரளவு ஆர்வத்தை பல்வேறு துறைகள் சார்பாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதிலும் காட்ட வேண்டும். போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் முயற்சிகளில் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் போட்டி போட வேண்டும்.
  • அரசுப்பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற சமுதாய ஆர்வலர்களை     ஒன்றினைப்பதன் மூலம் சமுதாயக் கல்விப்பாதையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தமுடியும்.
  •  சமுதாயத்தின் மிகப்பெரும் வரப்பிரசாதம் ஜும்மாமேடைகள். இங்கு மார்க்க விசயங்களோடு கல்வி விசயங்களையும் பேச அனைத்து பள்ளிகளிலும் அனுமதித்தால் அது சமுதாய மறுமலர்சிக்கு நிச்சயம் வழிதரும்.   

இது போன்று ஒருசில முயற்சிகளில் இந்த சமுதாயம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்பொழுது தான் நிச்சயமாக இந்த விழிப்புணர்வு பலன் உள்ளதாக இருக்கும். சமீபத்தில் சினிமா கயவர்களால் சித்தரிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான துப்பாக்கி சத்தம் வெளியேறுவதற்கு முன்பாகவே அதன் தோட்டாக்கள் பிடுங்கப்பட்டது நமக்கு தெரியும். இந்த சினிமா கயவர்களின் சித்தரிப்பு நாடகங்கள் நம்முடைய சமுதாய இயக்கங்கள் ஓரளவு ஒன்று கூடியதனால் முறியடிக்கப்பட்டது.

அறிவைப் பெறுங்கள் . அது தன்னை நல்லது இது, தீயது இது எனப் பகுத்தறியச் செய்யும். மேலும் மேலுலகத்திற்கு வழிகாட்டும். காட்டில் தோழனாகவும் ஏகாந்தத்தில் சமூகமாகவும், தோழன் இல்லாத சமயத்தில் தோழனாக இருக்கும். சந்தோசமான வாழ்விற்கு வழிகாட்டும். தோழர்களின் மத்தியில் ஒரு ஆபரணமாகவும் இருக்கும். பகைவர்களிடையே ஒரு ஆயுதமாகவும் இருக்கும்.    என்ற நபிமொழியின் அடிப்படையில்…

இறைவனின் அருட்பெரும் கொடையான கல்வியை நமது சமுதாயம் பெற்று நம்மையும் நம்முடைய சமுதாயத்தையும் உலகாளச் செய்யும் தகுதியை வளர்ப்பதற்கு கல்வி எனும் இந்த ஒன்றுக்காக வேண்டியாவது நாம் ஒன்றிணைய வேண்டும் என்று ஒவ்வொருவரும் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்வோம்.

முடிவாக…


உண்மையான மனநிலையில் சரியான இலக்கோடு ஆக்கப்பூர்வமான வழியில் உயர் கல்விக்கான தேடலில் தமிழக இஸ்லாமிய சமுதாயம் இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. தற்போது இருக்கும் கானல்நீர் போன்ற விழிப்புணர்வை முழுமையாக நம்பினால் வாழ்நாள் முழுவதும் விழித்துக்கொண்டே இருக்க வேண்டும்.  விடியலை நோக்கி…

இன்ஷா அல்லாஹ், எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் மிக விரைவில் வெளிச்சத்தில் வைக்க வேண்டும் . ஆமீன் … ஆமீன்..

கட்டுரையாளர் மற்றும் கட்டுரை பற்றி:

சகோதரர் ஆபீதீன் ( Dr.  Captain.   S.ABIDEEN ) இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியராக பணி புரிகிறார். ( Assistant Professor  of Zoolgoy, Dr.Zakir Husain College , Ilayangudi)  . கல்லூரி விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு  இஸ்லாமிய பகுதிகளில் உள்ள   பள்ளி கல்லூரிகளில்  உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சிகள், தன்நம்பிக்கை மேம்பாட்டு பயிற்சிகள்  குறித்த சிறப்பு நிகழ்சிகளை நடத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் 250 க்கும் மேற்பட்ட  நிகழ்சிகள் மூலம்  ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களை அல்லாஹ்வின் உதவியால் சந்தித்து  கல்வி விழிப்புணர்வு பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். . தனது கல்விப் பயணத்தில் அவர் கண்ட அனுபவங்களும் ஆதங்கங்களுமே இந்த கட்டுரை வரிகள்.

read more "கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்- முதல்பரிசு பெற்ற கட்டுரை (ஆபிதீன்)"

Wednesday, February 13, 2013

இஸ்லாமியப் பெண்கள் எப்படிங்க விவாகரத்து செய்ய முடியும்..?

    
    திருமணமென்னும் வாழ்க்கை ஒப்பந்தத்துடன் வாழ்விலே சங்கமிக்கும் ஓர் ஆணும் பெண்ணும், பரஸ்பரம் நேசித்து.. இன்பங்களைப் பகிர்ந்து.. துன்பங்களில் பங்கெடுத்து.. துயர‌ங்களில் தோள் கொடுத்து, ஓருயிர் ஈருடலாய் ஒருமித்து வாழ்வதே இனிய இல்வாழ்க்கையாகும். இரத்த பந்தமில்லா ஓர் அந்நியம்.. திருமண பந்தத்தின் மூலம் அந்நியோன்யமாகி, மற்றெல்லா உறவுகளையும் நட்புகளையும்விட நெருக்கமாகி, அந்தரங்க உணர்வுகள் வரை ஊடுருவி இரண்டறக் கலந்துவிடும் கணவன்-மனைவி உறவுதான் சந்தோஷமான குடும்ப சூழ்நிலையின் அஸ்திவாரமாக உள்ளது. ஆனால் அந்த அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடுமானால் அன்பும், மன அமைதியும் நிலவும் வாழ்க்கை என்பது கேள்விக்குறியே!

இன்று எத்தனையோ தம்பதியினரைப் பார்க்கிறோம். பெற்றோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கணவன் மனைவியின் முழு சம்மதத்துடன் நடந்த திருமணமாக இருந்தாலும் சரி, திருமணத்திற்கு முன்பே இருவரும் தங்களின் சொந்த விருப்பத்தின்படி முடிவுசெய்து, தாங்களே விரும்பி ஏற்றுக்கொண்ட திருமண வாழ்க்கையாக இருந்தாலும்கூட, 'ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்' என்பதுபோல் வெகு விரைவிலேயே பிரிந்துவிடுமளவு மனக்கசப்பு ஏற்பட்டு தவிப்பதைப் பார்க்கிறோம். ஒவ்வொரு தம்பதிகளுக்கு மத்தியிலும் காரணங்கள் வித்தியாசப்பட்டாலும், குழந்தைகள் பெற்று வாழ்வின் சில கட்டங்களை ஒன்றாக கைக்கோர்த்து தாண்டியவர்கள்கூட, அவர்களுக்கிடையே சரியான புரிந்துணர்வு இல்லாமையினாலும், உப்பு சப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் சகிப்புத்தன்மை இழந்துவிடுவதாலும், 'நீயா..? நானா..?' என எதிரும் புதிருமாக பிளவுபட்டு, தங்களின் குழந்தைகளின் எதிர்கால வாழ்வைக்கூட பொருட்படுத்தாமல் பிரிந்துவிட எண்ணும் அவலங்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன.


அதே சமயம், கணவன்-மனைவி இருவரில் யாராவது ஒருவர் அடிப்படையிலேயே மோசமான குணாதிசயங்கள்/நடத்தைகள் கொண்டவராக இருந்து, அதனால் பாதிக்கப்படும் மற்றவர் வாழ்நாள் முழுதும் அதை சகித்தே ஆகவேண்டும் என்பது போன்ற நிர்ப்பந்தங்கள் யாருக்கும் கிடையாது. குறிப்பாக இஸ்லாத்தைப் பொருத்தவரை, பாதிக்கப்படுவது ஒரு பெண்ணாக இருந்தாலும் அந்தப் பெண், பிடிக்காத தன் கணவனிடமிருந்து பிரிந்துவிட‌ விவாக விலக்கு செய்யலாம் என பெண்ணுக்கும் விவாகரத்தில் சம உரிமை அளித்துள்ளது. மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் அதற்குரிய மிகச் சரியான தீர்வைச் சொல்லும் மார்க்கம் இறைவன் வகுத்த இஸ்லாம் மார்க்கம் மட்டுமே!  அதனால்தான் நம் நாட்டு விவாகரத்து சட்டம்கூட இஸ்லாமிய விவாகரத்து சட்டத்தின் பக்கம் முகம் திருப்பி, அதை சரி காணும் நிலைக்கு வந்துள்ளது.

நம் நாட்டின் மிகக் கடினமான "விவாகரத்து சட்டமுறை" தான், கணவன் மனைவிக்கிடையிலான பிரச்சனைகளில் பல கொடுமைகளும், உயிரழப்புகளும்கூட நடக்க காரணமாக இருக்கிற‌து. தன் வாழ்க்கைத் துணையோடு சேர்ந்து வாழ இயலவே இயலாது என்று எப்போது ஒருவர் உறுதியாக நினைக்கிறாரோ அப்போதே, வாழப் பிடிக்காத தன் முடிவைத் தெரியப்படுத்தி பிரிந்துவிட அந்தச் சட்டம் இடமளிப்பதில்லை. இதனால் கோர்ட்டுக்கு சென்று தீர்ப்பை எதிர்ப்பார்க்கும் பெண்கள் பல வருடங்கள் காத்துக் கிடப்பது மட்டுமின்றி, தன் பக்க சாதகமாக தீர்ப்பு வரவேண்டி.. ஏற்கத்தக்க காரணங்களை சொன்னால்தான், தான் எதிர்ப்பார்க்கும் தீர்ப்பு கிடைக்கும் என்பதற்காக.. உண்மையிலேயே ஆண்மையுள்ள கணவனாக இருந்தாலும், தனக்குப் பிடிக்காத அந்த கணவன் மீது 'ஆண்மையற்ற‌வன்', 'பொம்பளைப் பொறுக்கி' போன்ற இல்லாத பழிகளைப் போட்டு விவாகரத்தைக் கேட்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறாள். இதனால் பிரிந்து செல்லும் அவளுடைய கணவனும் தன் எதிர்கால வாழ்க்கையில் பாதிக்கப்பட்டுவிடுகிறான். அதேபோல் ஒரு ஆணும் தன் மனைவியை பிரிவதற்காக, அவள் ஒழுக்கமானவளாக இருந்தாலும் அவ‌ளை நடத்தைக் கெட்டவளாக சித்தரித்து கோர்ட்டில் முறையிடுகிறான்.

சரியில்லாத தன் கணவனை நினைத்த மாத்திரத்தில் பிரிய இயலாத ஒரு பெண், பெயரளவில் ஒருவனுக்கு மனைவியாக இருந்துக்கொண்டு அவளது உணர்வுகளையும், நிம்மதியையும் சோதிக்க‌க்கூடிய வறண்ட‌ வாழ்க்கையை அனுபவிக்கிறாள். அத்துடன் சட்ட‌ப்படி விவாகரத்துப் பெற்று இன்னொரு திருமணம் செய்ய இயலாத அவளது கணவன் தனக்கு ஏற்படுத்திக் கொண்ட சின்ன வீடு 'செட்டப்'பினையும் சகித்துக் கொண்டு வாழும் நிலைக்கு தள்ளப்படுவதன் மூலம் அவள் மனத‌ளவில் பெரும் சித்திரவைதைக்கு ஆளாக்கப்படுகிறாள். இதைவிட கொடுமையாக, பிடிக்காத தன் மனைவியைவிட்டு உடனே பிரிய இயலாத காரணத்தினால் அவளுடைய‌ மரணச் செய்தி 'ஸ்டவ் வெடித்து பெண் சாவு' என தலைப்பிட்டு வரும்படியான ஏற்பாடுகளை கச்சிதமாக முடித்துவிடுகிறார்கள் சில ஆண்கள்! அல்லது மனைவி தன் பக்கம் தவறை வைத்துக் கொண்டே கணவனைப் பிரிய விரும்புபவளாக இருந்தால், அவனிடமிருந்து விவாகரத்துப் பெற்று பிரிய முடியாத‌ சிக்கலான சட்ட சூழ்நிலையினால், அந்த கணவனோடு வாழ முடியாத/விருப்பமில்லாத நிலையில், அந்த மனைவி மூலமே மர்மக் கொலைகளோ அவளுடைய கள்ளக் காதலன் மூலமோ கணவனின் உயிருக்கு ஆபத்தான கட்டங்களை ஏற்படுத்துவ‌தையும் அவ்வப்போது செய்திகளாக பார்க்கத்தான் செய்கிறோம்.

இதற்கெல்லாம் வழிகொடுக்காமல்தான் இஸ்லாம் மார்க்கம் சுலபமான‌ தீர்வாக 'குலஃ'/'குலா' என்று சொல்லக்கூடிய பெண்களுக்கான விவாகரத்து உரிமையை அளித்துள்ளது. இது இந்தியாவின் "முஸ்லிம் தனியார் ‎சட்டம்" (Muslim Personal Law) விலும் குறிப்பிடப்பட்டுள்ள‌து. மோசமான அத்தனை விளைவுகளுக்கும் அடிப்படை காரணமாக அமைந்திருப்பது இந்தியாவின் "விவாகரத்து சட்டமுறை" என்பதை வெகு தாமதமாக உணர்ந்த மத்திய அரசு, சென்ற வருடம் 'திருமணச் சட்டத்திருத்த மசோதா' வைக் கொண்டு வந்தது. அந்த புதிய மசோதாவில், பிரிய நினைக்கும் தம்பதியர் விரைவில் விவாகரத்து பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி விவாகரத்து கோரும் தம்பதியர் விவாகரத்து மனுவை சமர்ப்பித்தால், வழக்கப்படி 6 மாதம் முதல் 18 மாதங்கள் வரை விவாகரத்துப் பெற காத்திருக்கும் நிலமை இருக்காது எனக் கூறப்படுகிறது. இஸ்லாம் கூறும் வழிகாட்டுதல்கள்தான் மனிதனின் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு சரியான வழியை அமைத்துக் கொடுத்துள்ளன என்பதற்கு இந்த திருமணச் சட்டத்திருத்தம் சாட்சி சொல்ல‌க்கூடியதாக அமைந்துள்ளது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

'அலை எப்போது ஓய்வது.. தலை எப்போது முழுகுவது' என்ற ரீதியில் காத்துக் கிடக்காமல், 'வாழப் பிடிக்கவில்லையா? அதற்கான காரணங்கள் சரியானதுதானா? அல்லது காரணமே சொல்லக்கூட விருப்பமில்லையா? நீ பிரிந்துவிடலாம்' என்று முந்திய விவாகத்தை ரத்து செய்து, பிடிக்காத வாழ்விலிருந்து பெண்களையும் விடுதலையடைய வைக்கும் மார்க்கம் இஸ்லாம்! 'கணவன்-மனைவி' என்ற உறவு பிரிக்க முடியாத பந்தமல்ல. எனவே திருமணமான ஒரே மாதமாக இருந்தாலும், ஒரே நாளாக இருந்தாலும், ஏன்... அந்த மறுநிமிடமாகவே இருந்தாலும், அந்த விவாகரத்து உரிமை இஸ்லாமியப் பெண்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சுலபமான இத்தகைய விவாக விலக்குச் சட்டம், இஸ்லாமிய மக்களுக்கு (மார்க்க அறிஞர்களால்) சரியான முறையில் கொண்டுச் செல்லப்படவில்லை என்பது வருத்தமான விஷயமாகும்.

அத்தகைய‌வர்கள் மார்க்க அறிஞர்களாக அறியப்பட்டாலும் இஸ்லாத்தின் அநேக சட்ட‌ங்க‌ளை அதன் சரியான வடிவில் அறியாததால், விவாகரத்து உரிமையைக்கூட தவறாக விளங்கி, பெண்களுக்கு அவ்வுரிமை இல்லையென மறுத்தனர்; இன்னும்கூட‌ மறுக்கின்றனர். அதை தனக்கு சாதகமாக‌ பயன்படுத்திக் கொண்ட சிலர், தன் மனைவியின் மீது சேர்ந்து வாழமுடியாத வெறுப்பு ஏற்படும்போது, மனைவிக்குதான் விவாகரத்து உரிமை இல்லையே என்ற தவறான எண்ணத்தில், இறுமாப்புடன் தானும் தலாக் விடாமல், 'உன்னை மங்க வைக்கிறேன் பார்!' என்று கூறி, அப்படியே (மனைவியின்) தாய்வீட்டில் அவளை விட்டுச்சென்று, தான் மட்டும் வேறு திருமணம் செய்துக்கொண்டு, பிள்ளைக் குட்டிகளோடு சந்தோஷமாக வாழ்வார்கள். கணவன் தலாக் சொன்னால் மட்டுமே பிரிந்துச் செல்லவும், மறுமணம் செய்துக் கொண்டு வாழவும் இயலும் என நினைத்துக் கொள்ளும் அந்தப் பெண்ணும், தன் ஆயுளின் கடைசிவரை வாழா வெட்டியாகவே தனியாக இருக்கும் கொடுமைக்கும், பெண்களின் விவாகரத்து உரிமைப் பற்றிய‌ அவர்களின் அறியாமையே வழிவகுத்தது. இதனால்,
முஸ்லிமல்லாத பலரும், இஸ்லாமியப் பெண்களுக்கு விவாகரத்து உரிமை இல்லை என்று நினைத்திருந்தார்கள். இஸ்லாத்தை விமர்சிப்பதில் சுகம் காண்பவர்களுக்கும் இந்த விமர்சனம் நல்ல பொழுதுபோக்காக அமைந்தது. "இஸ்லாமியப் பெண்கள் எப்படிங்க விவாகரத்து செய்ய இயலும்..? அந்த உரிமையை அவர்களுக்கு கொடுக்காமல் 'தலாக்' என்ற ஆணின் உரிமையை மட்டும் கொடுத்து இஸ்லாம் பெண்களின் உரிமையில் பாரபட்சம் காட்டுகிறதே..?" என கூக்குரல் எழுப்புகின்றனர்.
ஆனால் இஸ்லாம் 6 வது நூற்றாண்டிலேயே அந்த விவாகரத்து உரிமையை பெண்களுக்கும் அளித்திருந்தது! எனவே நேரடி குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் ஆராயாமல் தீர்வு சொல்லும் சில ஹஜ்ரத்மார்கள்/ஆலிம்கள் சொல்வதையோ, அவர்கள் அங்கீகரிக்கும் மார்க்கத்திற்கு முரணான‌ மத்ஹப்களின் அடிப்படையையோ மார்க்கமாக கொள்ளாமல், மார்க்கத்தின் மூல ஆதாரமாகிய‌ குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் மட்டுமே தீர்வு காண்போமானால், அனைத்திற்கும் மிக சுலபமான தீர்வு நமக்கு கிடைக்கும். ஆக, திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள கணவனுக்கு உரிமை இருப்பது போன்றே மனைவியான ஒரு பெண்ணுக்கும் இஸ்லாத்தில் உரிமை இருக்கிறது என்பதையும், இருவருக்குமிடையே விவாவகரத்துச் செய்யும் முறையில் மட்டுமே வித்தியாசமிருக்கிறதே தவிர உரிமையில் வித்தியாசமில்லை என்பதையும் நாம் தெளிவாக மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும். இஸ்லாத்தின் விவாகரத்து சட்டங்களை சரியாக புரியாத சில ஜமாஅத்தார்கள், பெண்கள் விவாகரத்து செய்யும் உரிமையினை இன்றளவும்கூட  மறுத்தாலும், சமூகத்தில் அது கண்டிப்பாக களையப்பட வேண்டிய ஒன்றாக உள்ளதே தவிர, அது இஸ்லாத்தின் குறையாக ஆகாது. 

அல்லாஹ் தனது திருமறையிலே, 
 "கணவர்களுக்கு மனைவியர் மீதுள்ள உரிமையைப் போன்று, மனைவியருக்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு" (அல்குர்ஆன் 2:228) 
என்றே கூறுகிறான். இதில் விவாகரத்து உரிமையும் அடங்கும்! நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த‌ வழிமுறைகளும் பெண்களின் 'விவாக‌ம்' மற்றும் 'விவாகரத்து உரிமை'யை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அவற்றில், பெண்ணுக்கு இஸ்லாம் கொடுத்துள்ள‌ 'விவாக விலக்கு உரிமை' யின் சட்டங்களை சற்று விரிவாக காண்போம்.

1) கணவனிடமிருந்து பிரியவேண்டுமானால், பெண் அவனுடைய‌ சம்மதம் பெறவேண்டுமா?

இஸ்லாத்தை சரியாக புரியாத‌ சில அறிவுஜீவிகள் சொல்வதுபோல், ஒரு பெண் விவாகரத்து செய்ய வேண்டுமானால் அந்த கணவனிடம் அனுமதி கேட்கவேண்டும்.. அவனுடைய முழு சம்மதத்தைப் பெறவேண்டும் என்றெல்லாம் இஸ்லாமிய விவாகரத்து சட்டங்களில் அறவே கிடையாது. (இதற்கான‌ ஆதாரம் பின்னால் கொடுக்கப்பட்டுள்ளது)
 

2) விவாகரத்தை விரும்பும் பெண்கள் நேரடியாக கணவனிடமே சொல்லிவிட்டு பிரிந்து சென்றுவிடலாமா?


அவ்வாறு செல்வது கூடாது. இஸ்லாம் ஒவ்வொரு விஷயத்திற்கும் சில விதிமுறைகளை விதித்துள்ளது போன்று, பெண்களின் விவாகரத்து விஷயத்திலும் சில விதிமுறைகளை விதித்துள்ளது. தன் கணவனிடமிருந்து விவாகரத்தை விரும்பும் பெண்கள், ஜமாஅத்தாரிடமோ, சமுதாயத் தலைவரிடமோ தன் முடிவைத் தெரிவித்துவிட்டு விவாகரத்து(குலஃ) செய்துவைக்க முறையிடவேண்டும். ஏனெனில் அந்த விவாக விலக்கானது அந்த பெண்ணின் பிற்கால வாழ்க்கைக்கே பாதகமாக அமைந்துவிடாமல், ஜமாஅத்தார்கள் அறிவுரைகள் சொல்லி மீண்டும் அந்த கணவனோடு இணைந்து வாழ அறிவுரை கூற‌லாம். பெரும்பாலான பெண்களின் தன்மை, முதலில் வேகமாக அவசரப்பட்டுவிட்டு பின்னால் வருந்துவதான். இதனால்தான் "பெண் புத்தி பின் புத்தி" என சொன்னார்களோ என்னவோ..! கன்னிப் பெண்களுக்கு கணவன் அமைவதே தாமதாகும் இன்றைய‌ சமுதாய சூழ்நிலையில், விவாகரத்தான பெண்களின் நிலையை நாம் அவசியம் எண்ணிப் பார்க்கவேண்டும். எனவே குடும்பத்தில் அட்ஜஸ்ட் பண்ணி போகவேண்டிய சின்னஞ்சிறிய விஷயங்களுக்கெல்லாம் பின்விளைவை யோசிக்காமல் பெண்கள் தடாலடியான‌ ஒரு முடிவை எடுத்துவிடக்கூடாது என்ற நன்னோக்கத்திலேயே, அவர்களுக்கு நல்லுபதேசங்கள் செய்தும், பொறுமைக் காத்தால் பலனுண்டு என்பதை புரியவைக்கவும் ஒரு நல்ல வாய்ப்பாக அவர்களுக்கு அமைத்துக் கொடுக்கவே பெண்கள் முதலில் ஜமாஅத்தார்களிடம் தெரிவிக்க சொல்லும் அழகிய வழிமுறையை இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது. (இதற்கான‌ ஆதாரம் பின்னால் கொடுக்கப்பட்டுள்ளது)


3) விவாகரத்து செய்துவைக்க தங்களிடம் வந்து முறையிடும் (குலஃ கேட்கும்) பெண்களுக்கு ஜமாஅத்தார்கள் செய்யவேண்டிய கடமை என்ன?

கணவன் ஒரு பெண்ணை தலாக் விடாதவரை அந்த திருமண உறவை ரத்துச் செய்யமுடியாது என்று சில‌ ஜமாஅத் தலைவர்கள் சொல்வது சரியா?


ஒரு பெண் 'குலஃ' கேட்பதற்கான‌ காரணங்கள் தெரிய வருமானால் அதை
க் கேட்ட‌றிந்து, அப்பெண் மீண்டும் அவளுடைய கணவனோடு சேர்ந்து வாழ, மென்மையான உபதேசங்களை அவளுக்கு செய்யவேண்டும். சேர்த்து வைக்க இயலாத நியாயமான காரணங்கள் பெண்ணின் பக்கம் இருக்குமேயானால், கண்டிப்பாக அந்தப் பெண்ணின் திருமண வாழ்வை ரத்து செய்து, உடனே அவளைப் பிரிந்து விடுமாறு அவளுடைய‌ கணவனுக்கு கட்டளையிட வேண்டிய கடமையும் ஜமாஅத்தார்கள் மீது இஸ்லாம் விதித்துள்ளது.
அபுஸ்ஸுபைர்(ரலி) அறிவிக்கிறார்கள்:

அப்துல்லாஹ்வுடைய மகள், ஸாபித் என்பவ‌ருக்கு மனைவியாக இருந்தார். அவர் அப்பெண்ணுக்கு ஒரு தோட்டத்தை மஹராக வழங்கியிருந்தார். ('குலஃ' வழக்கு வந்தபோது) "உனக்கு அவர் தந்துள்ள தோட்டத்தைத் திருப்பிக் கொடுக்கிறாயா?" என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "ஆம்; அதைவிட அதிகமாகவும் கொடுக்கிறேன்" என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், "அதிகமாக வேண்டாம்; அவரது தோட்டத்தை மட்டும் கொடு" என்றார்கள். அப்பெண் சரி என்றதும், ஸாபிதின் சார்பாக நபி(ஸல்) அவர்களே தோட்டத்தைப் பெற்றுக் கொண்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தீர்ப்பு ஸாபிதுக்குத் தெரிய வந்தபோது, "அல்லாஹ்வின் தூதருடைய தீர்ப்பை நான் ஏற்கிறேன்" என்று கூறினார்கள். (ஆதார நூல்: தாரகுத்னீ)

இங்கே கணவனின் தலாக்கை எதிர்ப்பார்க்காம‌ல் நபி(ஸல்) அவர்களே அந்தப் பெண்மணியிடமிருந்து மஹரைப் பெற்றுக் கொண்டு திருமணத்தை ரத்து செய்து நமக்கு வழிகாட்டுகிறார்கள். இந்த தகவல், சம்பந்தப்பட்ட அந்தக் கணவருக்கே பிறகுதான் தெரிய வருகிறது என்றால் ஜமாஅத் தலைவருக்கு உள்ள அந்த உரிமையையும், பெண்ணின் 'குலா'வை மட்டும் ஏற்றுக்கொண்டு அவ்வாறு பிரித்து வைக்கவேண்டிய கடமையையும் அவர்கள் தெளிவாக அறிய வேண்டும். ஆக, கணவன் தலாக் விடாதவரை அந்த திருமண உறவை ரத்துச் செய்யமுடியாது என்று கூறக்கூடிய‌ ஜமாஅத் தலைவர்கள், இந்தக் கடமையை பெண்கள் தரப்பில் சரியாக செய்துக் கொடுக்காவிட்டால் அல்லாஹ்விடத்தில் இஸ்லாத்தின் சட்டத்தைப் புறக்கணித்த குற்றவாளிகளே! (இன்று குர்ஆன்‍-ஹதீஸின் அடிப்படையில் மட்டுமே பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் சில‌ 'ஷரீஅத் தீர்ப்பாயங்கள்' தமிழ்நாட்டில் உள்ளன. திருமண வாழ்வில் பாதிக்கப்பட்ட பெண்கள் அவற்றை நாடி தீர்வு கேட்டு, சுலபமாக விவாக விலக்குப் பெறலாம்.)4) தன் கணவனைப் பிரிவதற்கான காரணங்களை ஜமாஅத்தார்களிடமோ மற்றவர்களிடமோ ஒரு பெண் சொல்லிதான் ஆகவேண்டுமா?


தேவையில்லை. வெளியில் சொல்ல அவளுக்குப் பிடிக்காத அந்தரங்க காரணங்கள் பல இருக்கலாம். எந்த காரணமும் சொல்ல விரும்பாத‌ பெண்களும் அந்த இல்வாழ்க்கையை தொடர, 'தான் விரும்பவில்லை' என்பதை மட்டும் ஜமாஅத்தார்களிடம் தெரிவித்துக்கூட உடனே விவாக விலக்கு பெற்றுக் கொள்ளலாம். இதுபோன்ற நிறைய சம்பவங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நடந்துள்ள‌து. (அடுத்த கேள்விக்கான பதிலில் கூறப்பட்டுள்ள‌ ஹதீஸே இதற்கான போதுமான ஆ
தாரமாகும். அந்த ஹதீஸிலே 'பரீரா' என்ற பெண்ணின் கோபத்தைப் பார்த்து வியக்கும் நபி(ஸல்) அவர்கள், அதற்கான காரணத்தை அந்தப் பெண்ணிடம் கேட்கவில்லை.)

5)  'சேர்ந்துதான் வாழவேண்டும்' என அப்பெண்ணை நிர்ப்பந்திக்க ஜமாஅத்தார்களுக்கோ, பெண்ணின் தந்தை அல்லது உறவினர்களுக்கோ இஸ்லாத்தில் உரிமை உள்ளதா?


ஒரு மனைவி மூலமாக‌ அவளுடைய கணவனுக்கு வாழ்க்கையின் என்னென்ன சந்தோஷங்களும், திருப்தியும் கிடைக்கிறதோ அவை அனைத்துமே.. மனைவியாக தன்னுடன் வாழும் ஒரு பெண்ணுக்கும் முழுமையாக கிடைக்கவேண்டும். அப்படியில்லாமல், கணவனால் கிடைக்கவேண்டிய அடிப்படை சந்தோஷங்களின்றி, அவன் செய்யும் அக்கிரமங்களையெல்லாம் சகித்துக் கொண்டு ஒரு பெண் வாழவேண்டும் என்ற கட்டாயத்தை எந்த பெண்ணின் மீதும் ஒரு போதும் இஸ்லாம் திணிக்கவில்லை. 'கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்' என்ற ஆணாதிக்க சக்திக்கெல்லாம் இஸ்லாத்தில் துளியளவும் இடம் கிடையாது. 

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூட பரீரா என்ற பெண்ணிற்கு, பிரிந்த தன் கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பரிந்துரை செய்தார்களே தவிர நிர்
ப்பந்திக்கவில்லை.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்:

பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு 'முஃகீஸ்' என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்தபோது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து
க் கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களிடம் "அப்பாஸ் அவர்களே! பரீராவின் மீது முஃகீஸ் வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?" என்று கேட்டார்கள். (பிறகு முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்டபோது) நபி(ஸல்) அவர்கள் "முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக்கூடாதா?" என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா "அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா?" என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் "(இல்லை.) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன்" என்றார்கள். அப்போது பரீரா, "(அப்படியானால்,) அவர் எனக்குத் தேவையில்லை" என்று கூறிவிட்டார்.
ஆதாரம்: புகாரி (5283)
ஆக, அல்லாஹ்வின் தூதர் அவர்கள்கூட‌ 'நான் கட்டளையிடவில்லை; இது என் பரிந்துரையே' என்று கூறிவிட்ட பிறகு, அது நபி(ஸல்) அவர்களின் கட்டளையாக இல்லாததால் அவர்களின் பரிந்துரையை அந்தப் பெண்மணி மறுத்துவிட்ட இந்த சம்பவம், பெண்ணின் உரிமையில் தலையிட்டு.. பிடிக்காத கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பெண்ணை நிர்ப்பந்திக்க பெற்ற தாய், தகப்பனுக்குகூட இஸ்லாத்தில் உரிமையில்லை என்பதை பட்டவர்த்தனமாக கூறுகிறது. சுப்ஹானல்லாஹ்! இதுதான் பெண்ணுரிமைப் பேணும் இஸ்லாம்!!

6)   விவாக விலக்கினைப் பெற்ற பெண்கள், கணவனிடமிருந்து பெற்ற மஹர் தொகையை திருப்பிக் கொடுத்துவிடவேண்டுமா?


ஆம். 
ஒரு பெண் விவாக விலக்கினை தன்னுடைய தரப்பிலிருந்து கோருவதால், திருத்தின்போது னிமிருந்து பெற்ற ஹர் தொகையை மாத்தார்கள் மூமாக அந்தக் கணவனிடம் கட்டாயம் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். இதற்கும் ஜமாஅத்தார்களே பொறுப்பேற்று, அதை வாங்கி கணவனிடம் கொடுக்கவேண்டும். (இதற்கான‌ ஆதாரம் பின்னால் கொடுக்கப்பட்டுள்ளது)

7) ரைத் விர்த்து மற்ற செலவினங்களைக்  காட்டி கூடுதல்  தொகையை  கணவன் கேட்டால், அவற்றையும் பெண் திருப்பிக் கொடுக்கவேண்டுமா?


கொடுத்த மஹரை விட கூடுதலாக பெண்ணிடத்தில் வேறெதையும் 
கணவன்  கேட்க முடியாது. ஜமாஅத் தலைவரும் அதை வற்புறுத்த முடியாது.

இப்னு மாஜாவில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கும் 2332 வது ஹதீஸில், "(மஹராகக் கொடுத்த‌)அவரது தோட்டத்தை பெற்றுக் கொள்ளவேண்டும். அதைவிட அதிகமாகப் பெற்றுக் கொள்ளக்கூடாது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ள ஹதீஸ் இது சான்றாக அமைந்துள்ளது.


8) 'குலஃ' சொன்ன‌ பெண்கள் எவ்வளவு காலத்திற்கு 'இத்தா' இருக்கவேண்டும்?


கணவனிடம் 'குலஃ' சொல்லிவிட்ட பெண்கள் ஒரு மாதவிடாய் ஏற்படும் காலம்வரை 'இத்தா' இருக்கவேண்டும்.

ருபய்யிஃ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்கள் 'ஜமீலா' எனும் தம் மனைவியை அடித்தார். அதனால் அவரது கை ஒடிந்துவிட்டது. இதைக் கண்ட அப்பெண்மணியின் சகோதரர் அன்றைய சமுதாயத் தலைவரான நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஸாபித் இப்னு கைஸை அழைத்து வரச்செய்து, "அவள் உமக்குத் தர வேண்டியதை(மஹரை)ப் பெற்றுக் கொண்டு அவளை அவள் வழியில் விட்டு விடுவீராக!" என்றார்கள். அவர் "சரி" என்றார். அப்பெண்மணியிடம் "ஒரு மாதவிடாய்க் காலம்வரை (திருமணம் செய்யாமல்) பொறுத்திருக்குமாறும், தாய் வீட்டில் சேர்ந்துக் கொள்ளுமாறும் கட்டளையிட்டார்கள். ஆதாரம்: நஸயீ (3440)
 

9) 'குலஃ'வின் மூலம் கணவனைப் பிரிந்த பிறகு, மீண்டும் அந்த கணவனுடன் சேர்ந்து வாழ பெண் விரும்பினால், அதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா? 

அதற்கு நிபந்தனை எதுவுமுண்டா?


தன் கணவனைப் பிரிந்து வாழ்வதைவிட சேர்ந்து வாழ்வதே மேல் என எப்போது ஒரு பெண் உணர்கிறாளோ, தான் பிரிந்து வந்தது தவறு என்ற முடிவுக்கு வந்து மீண்டும் அந்த கணவனுடன் சேர்ந்து வாழ அவள் விரும்பினால், தன் முன்னாள் கணவனிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்து அவனுடைய சம்மதத்தைக் கேட்கவேண்டும். அதற்கு அந்த கணவ‌ன் சம்மதித்து தன் முன்னாள் மனைவியை மீண்டும் ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிப்பானேயானால், புதிதாக மஹர் கொடுத்து 'மறுமணம்' செய்துக் கொள்ளும் நிபந்தனையின் மூலம் மட்டுமே சேர்ந்து வாழ இயலும். மறுமணம் செய்யாமல் சேர்ந்து வாழ இயலாது. ஏனெனில் 'குலஃ'வின் மூலமாக என்றைக்கு இருவரும் பிரிந்தார்களோ, அன்றைக்கே இருவரும் அந்நியர்களாகி விடுவார்கள். அந்நிய ஆணும் பெண்ணும் திருமண ஒப்பந்தமின்றி சேர இஸ்லாத்தில் இடமில்லை என்பதே இதற்கு போதுமான ஆதாரமாகும். (பின்வரும் பதிலிலும் கூடுதல் ஆதாரத்தைக் காணலாம்) 


10) 'குலஃ'வுக்கு பிறகு தன் (முன்னாள்) மனைவியை மறுமணம் செய்யாமல் மீண்டும் அழைத்துக்கொள் கணவனுக்கு அனுமதி உண்டா?'தலாக்' செய்த பிறகு மூன்று மாதவிடாய் காலத்துக்குள் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை கணவனுக்கு இருப்பதைப்போல், 'குலஃ'வுக்கு பிறகு தன் (முன்னாள்) மனைவியை மஹர் கொடுத்து மறுமணம் செய்யாமல் மீண்டும் அழைத்துக்கொள்ள அந்தக் கணவனுக்கு அனுமதியில்லை.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்:

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஸாபித் பின் கைஸ்(ரலி)யின் மனைவி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ நற்குணத்தையோ நான் குறைக்கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்துக்கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்" என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்றார்.) உடனே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் "அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி "சரி" என்றார். உடனே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் "தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு" என்றார்கள்.
நூல்: நஸயீ 3409
'ஒரேயடியாக அவளைப் பிரிந்து விடு' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து மீண்டும் அழைக்கும் உரிமை கணவனுக்கு கிடையாது என்பதும், 'குலஃ' அடிப்படையில் பிரிந்தவர்கள் அந்நிய ஆண் பெண்களாகி விடுவர் என்பதும் தெளிவாகிறது. 

1), 2), 6) ஆகிய பதில்களுக்கான ஆதாரம்:-


இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்:

ஸாபித் இப்னு கைஸ் பின் ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியார் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் இப்னு கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறைக் கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்துக் கொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்" என்று கூறினார். அப்போது, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், "ஸாபித் உனக்கு (மணக் கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம்; (தந்து விடுகிறேன்)" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), "தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!" என்று கூறினார்கள். ஆதாரம்: புகாரி (5273)

இந்த ஹதீஸில் தன் கணவனிடமிருந்து பிரிந்து விடுவதற்காக நபி(ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்ட அந்தப் பெண்ணிடம், அவர்களின் கணவனுடைய‌ சம்மதத்தைப் பெற்று வந்தாயா என்று கேட்கவோ, சம்மதம் பெற்று வரும்படியோ நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.

நேரடியாக கணவனிடமே 'குலஃ' சொல்லிவிட்டு பிரிந்து சென்றுவிடாமல், நபி(ஸல்) அவர்களிடத்தில் வந்தே முறையிடுகிறார்கள்.

திருமணத்தின்போது கணவனிடமிருந்து பெற்ற மஹர் தொகையை திருப்பிக் கொடுத்துவிடும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள்.

ஆகவே... பெண்கள் விவாகரத்துப் பெற இதை விட எளிமையான வழியை உலகில் எங்குமே காண முடியாது! இஸ்லாமிய வாழ்க்கையில் தன் மனைவியைப் பிடிக்கவில்லையெனில் "தலாக்" சொல்லி விவாக உறவினை முறித்துக் கொள்ளும் விதமாக ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில், கணவன் மீது அதிருப்தியுறும் மனைவியும் "குலஃ" (خلع) எனும் விவாகப் பிரிவினையின் மூலம் கணவனைப் பிரியும் உரிமையை இஸ்லாம் பெண்களுக்கும் வழங்கியுள்ளது என்பதை நாம் உலக மன்றத்தில் உரத்துச் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

பிடிக்காத கணவனுடன் வாழ இயலாமலும், பிரிய வழி தெரியாமலும் வாழா வெட்டிகளாக, பிறந்த வீட்டில் கண்ணீர் வடித்தே காலத்தைத் தள்ளும் அபலைப் பெண்களுக்கு, இஸ்லாம் கொடுத்துள்ள‌ உரிமைகளை அறியத் தரவேண்டும். சில இஸ்லாமியத் தலைவர்களின் அறியாமைக் காரணமாக‌ பெண்களுக்கு இழைக்கப்படும் இத்தகைய கொடுமையினால், மாற்றாரும் இஸ்லாத்தை தவறாக விளங்கி விமர்சிக்க இடமளித்து விடக்கூடாது.

வாழ இயலாத கண‌வனிடமிருந்து பிரிந்து மறு வாழ்வை அமைத்துக் கொள்ள இஸ்லாம் கூறும் அற்புதமான வழிமுறைகளை அப்பெண்கள் அறிவதற்கு ஏற்பாடு செய்வதும், இத்தகைய இறை மார்க்கத்தின் அழகிய வழிகாட்டுதல்களை கையில் வைத்துக்கொண்டு பெண்களுக்கு விவாகரத்து விஷயத்தில் அநீதி இழைக்கும் ஜமாஅத் தலைவர்களுக்கு இந்தச் சட்டம் பற்றி விளக்குவதும், இவற்றை அறிந்த ஒவ்வொருவரின் கடமை என்பதை நினைவில் கொள்ள‌வேண்டும்!

உங்கள் சகோதரி,
அஸ்மா ஷர்ஃபுதீன்.

read more "இஸ்லாமியப் பெண்கள் எப்படிங்க விவாகரத்து செய்ய முடியும்..?"