Wednesday, October 24, 2012

தன்னம்பிக்கையின் சிகரம்-இப்ராஹீம் (அலை)பேரரசனும்,பேரறிஞனுமாகிய எந்த ஒரு குறையுமின்றி
அகிலங்களை படைத்தவனை புகழ்ந்து ஆரம்பிக்கின்றேன்....

வாழ்க்கையே போரடிக்குது பா..... என்ன லைப் இது.....??? எனக்கு மட்டும் ஏன் இப்டிலாம் நடக்குது.....??? நான் பட்ட கஷ்டம் யாருமே படக்கூடாது பா....??

என்னை போல கஷ்டப் பட்டவங்க யாருமே இல்லை...!!!
ஆண்டவனுக்கு கண்ணே இல்லையே....!!!
நான் யாருக்கு என்ன துரோகம் பண்ணுனேன்....???
ஊரை அடிச்சு உலையில போட்டவன் எல்லாம் நல்லா இருக்கான்...!!!??

நான் பாட்டுக்கும் நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன்.... எனக்கு மட்டும் இவ்ளோ கஷ்டத்தை ஏன்
அந்த ஆண்டவன் கொடுக்கிறான்???னு
தினமும் நாம் புலம்பிக் கொண்டு இருக்கிறோம்.

இவ்வுலகம் என்பது ஒரு சோதனைக்களம்.உதாரணத்திற்கு நாம் ஒரு தேர்வு கூடத்திற்குள்  சென்றால் நமக்கு வினா தாள் கொடுக்கப் படும். அதில் ஒரு மார்க் கொஸ்டின்,இரண்டு மார்க் கொஸ்டின், ஐந்து மார்க் கொஸ்டின்,பத்து மார்க் கொஸ்டின், இருபது மார்க் கொஸ்டின் என வகை வகையாக பிரிக்கப் பட்டு வினாக்கள் கேட்கப் பட்டிருக்கும். 

ஒரு மார்க் கொஸ்டின் ஈசியோ ஈசியாக இருக்கும். மதிப்பெண்ணின் தரத்திற்கேற்ப வினாக்கள் கடுமையாக இருக்கும்.... பத்து மார்க் கொஸ்டின் படிச்ச மாறி இருக்கும். முதல் வரி மறந்து போயிருக்கும்....இருபது மார்க் கொஸ்டின் பார்த்தாலே பயங்கரமா இருக்கும்.

அது போல சோதனைக் கூடமான இந்த உலகத்தில்
நமக்கு கொடுக்கப்படும்
சோதனைகளுக்கும் மதிப்பெண்கள் கொடுக்கப்படுது.ஒரு மார்க்,
இரண்டு மார்க் கொஸ்டின்  போல உள்ள கஷ்டம் எல்லாம் அட்டெண்ட் பண்ணிருவோம்...ஆனால்,இந்த பத்து மார்க்,இருபது மார்க் கொஸ்டின்போல இருக்கே கஷ்டம்....அது ரொம்ப கஷ்டமா இருக்கும்.
இருபது மார்க் கொஸ்டின் போல கஷ்டங்கள்  நம்மிடம் கண்டிப்பாக இருக்கும். அதில் எவ்வாறு பொறுமையோடு இருக்கிறோம்  என்பதை பொறுத்துதான் நம் மறுமை வாழ்வு இருக்கும்.

சோதனைகளும்,சிரமங்களும் இல்லாமல்  சொர்க்கம் போக முடியாது.
யாரை அல்லாஹ் விரும்புகிறானோ அவரை  சோதிக்கிறான்’’னு
நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.
இவ்வளவு சிரமங்களையும் தாண்டித்தான்  சொர்க்கம் போக
முடியுமானு நாம மலைச்சு போய்டுவோம்.... 

நமக்கு முன்னாடியே அல்லாஹு ரப்புல் ஆலமீன்
ஒருத்தரைப் படைச்சு அவருக்கு எக்ஸாமுக்கு மேல எக்ஸாமா வச்சு
அவரும் எல்லாம் எக்ஸாமிலும் பாஸ் ஆயி அல்லாஹ்வின் நெருங்கிய
தோழரும் ஆயிட்டாரு. அல்லாஹ் அவரை நமக்கு எல்லாம் இமாமுன் முத்தக்கீன்(பயபக்தியாளர்களின் முன்மாதிரி)னு சிறப்பிச்சு சொல்றான். 


ஒவ்வொரு நாளும் 5 வேளைத் தொழுகையிலும் அவருக்குக் கொடுக்கப்பட்ட அருளும், பரக்கத்தும் நமக்கு வேண்டும்னு துஆ செய்றோம்....
நாம் அனைவரும் போக பேராசைப்படும்  சொர்க்கத்தின் கதவை தட்டி முதல் முதலாக நுழையப்போகும்  நம் தலைவர் நபி ஸல் அவர்கள் கூட அவருக்கு கொடுக்கப்பட்ட அருளும்,பரகத்தும் தனக்கும் வேண்டி து ஆ செய்துள்ளார்.

உண்மையில் அவர்தான் தன்னம்பிக்கையின் சிகரம்....
அஞ்சா நெஞ்சன்.....
எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தன்னந்தனி
ஆளாக நின்னுவாழ்க்கையில் ஜெயித்துக்காட்டியவர்...
இறைவனின் தோழர் இப்ராஹீம் அலை அவர்கள் ....
அப்படிஎன்ன காரியம்தான் செய்தார்கள்...வார்த்தைகளில் நல்லறங்களை உபதேசித்தால் மட்டுமே  மனிதர்கள் உத்தமர்களாக மாறிவிடுவார்களா??என்றால் இல்லை என்பதுதான் பதில்.வழிப்பாதைக்கு மட்டுமல்லாமல் வாழ்க்கைபாதைக்கும் வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள்.

என்னைப்போல உள்ள ஒரு மனிதனாலும் இப்படியெல்லாம் வாழ முடிகின்றது-என்கிற உணர்வுதான் உத்வேகமாக மாறி அவனைத் தூண்டிவிடுகின்றது.இவரால் முடிகின்றபோது நம்மால் மட்டும் ஏன் முடியாதுஎன்ற நம்பிக்கை அவன் மனதில் இடம் பிடிக்கின்றது.
ஆகையால்தான் இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டுள்ளார்கள்.

இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது.அல்குர் ஆன் -60:4.

அச்சு பிசகாமல் அடி பிறழாமல் மக்களால் பின்பற்றப்படுகின்ற தலைமையே வழிகாட்டியேஉஸ்வா என சொல்லப்படும்.

நாம் பின்பற்றவேண்டிய உஸ்வாக்கள்என வான்மறை இருவரை மட்டுமே குறிப்பிடப்படுகிறது.
அந்த இருவர் மட்டுமே தன்னம்பிக்கையின் சிகரங்கள்....அவர்களை பின்பற்றவேண்டும் என்பதற்காகதானே ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொழுகையிலும் ஸலவாத்தில் அவர்கள் இருவரையும்நினைவு கூறுகிறோம்....
உஸ்வா.....ஆம்...அழகிய முன்மாதிரி என இப்ராஹீம் அலை,முஹம்மது நபிஸல் அவர்களையும் ரப்பு குறிப்பிடுகிறான்.

சிலைகளை வணங்கிய தன் தந்தைக்கு அழைப்புபணி செய்கிறார்....
தன் சமுதாய மக்களிடம் அழைப்புப்பணி செய்கிறார். சிந்தனையை உசுப்பிவிடும் கேள்விகளை கேட்டு அம்மக்களை சிந்திக்க செய்கிறார்.

அதற்கு இப்றாஹீம்) கூறினார்: “நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?“அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா; அல்லது தீமை செய்கின்றனவா? (எனவுங் கேட்டார்).26:72,73.

இறைவனை ஏற்க மறுப்பவர்களின் அறிவுவாசலை எப்படியாவது தட்டித்திறந்து விட வேண்டும் என்பதுதான் ஓர் இறை நம்பிக்கையாளரின் லட்சியமே தவிர அவர்களை வாதத்தில் வீழ்த்தி வாயடைக்க செய்வது அல்ல....
தந்தையின் எதிர்ப்பு....
ஊர் மக்களின் எதிர்ப்பு....அந்நாட்டு அரசனின் எதிர்ப்பு....தீக்குண்டத்தில் போடும்போதும் தன்னந்தனியாக அதை எதிர்கொண்டவர்....ஊரை விட்டு வெளியேறி மனைவியோடு ஹிஜ்ரத்....வயதான காலத்தில் தான் குழந்தைபேறு....

குழந்தை பிறந்தவுடன் பச்சிளம்பாலகனை,மனைவியோடு பாலைவனத்தில் விட்டு விடச் சொல்லி அல்லாஹ் கட்டளையிட்டவுடன் உடனே அதை நிறைவேற்றிய முன்மாதிரி....

அவருடைய மனைவி ஹாஜரா அலை அவர்களிடத்திலும் மிக அழகிய முன்மாதிரி உள்ளது...கணவன் பாலவனத்தில் விட்டு செல்லும்போது,


’’இப்ராஹீமே,இறைவன் சொல் கேட்டா இவ்வாறு செய்கிறீர்கள்’’ என கேட்ட போது ’’ஆமாம்’’ என பதில் அளித்தார்கள்....


’’அப்படியென்றால் அல்லாஹ் எங்களைக் கண்டிப்பாக கைவிட மாட்டான்’’....

இப்படிகூறியது ஒரு பெண் என அனைவரும் நினைவில் வைப்போம்...
வீடு,வாசல்,வசதி என சுகபோகமாக இருக்கும்பெண்கள்...
சிறு சிறு விசயங்களுக்கெல்லாம் அழும் பெண்கள் ஹாஜரா அலை அவர்களைமுன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவேண்டும்...

சொல்லி அழ ஆள் இல்லை...
உதவி செய்ய ஆள் இல்லை...

வானம் பார்த்த பூமிதான் வீடு....
குடிக்க தண்ணீர் வசதி இல்லை..
அடுத்த வேளை சாப்பிட உணவு இல்லை....
தன் கணவர் எப்பொழுது திரும்வி வருவார் என தெரியாது...


பிள்ளையின்  தண்ணீர் தாகத்துக்கு என ஸஃபா,மர்வாக்கிடையே ஓடிய அந்த வீரப்பெண்மணிக்கு இறைவன் கொடுத்த பரிசே ஜம்ஜம் நீருற்று.

ஹஜ்ஜூக்கு செல்லும் ஆண்கள் முதற்கொண்டு எல்லோரும் ஸஃபா,மர்வாக்கிடையே தொங்கோட்டம் ஓடுவது இந்த வீரப்பெண்மணியின்  செயலை நினைவூட்டத்தான்.....

பெண்களை குறை சொல்லும் ஆண்கள் இப்படி தன்னந்தனியாக ஒரு ஆணால் இக்காலத்தில் இருக்க முடியுமா என யோசிக்க வேண்டும்....


இப்ராஹீம் அலை அவர்கள் அவர்களுக்காக  ஒரு அழகிய பிரார்த்தனைசெய்கிறார்கள்....

“எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக.....14:37.இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது.அல்குர் ஆன் -60:4.

அவரின் அழகியபிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொண்டான்...


வாழ்நாள் எல்லாம்  இறைப்பணிக்காக கஷ்டப்பட்டு  சொல்லமுடியாத 
துன்பங்களைஎல்லாம்சகித்துக்கொண்டுஊரையும்,நாட்டையும்,
உறவுகள் யாவையும்  விட்டு இத்தனை வருடம் பிள்ளை இல்லாமல் இருந்து அந்த பிள்ளை பிறந்த உடன் பாலைவனத்தில் கொண்டு சென்று விட்டு இறைக்கட்டளையை நிறைவேற்றியவருக்கு அடுத்த சோதனை காத்திருந்தது....


தான் பெற்ற மகனை பலி கொடுக்கச்சொன்னால் நாம் செய்வோமா??
இல்லை...நம்முடைய மகன் தான் ஒத்துக்கொள்வானா??
இல்லை...நம்முடைய மனைவி ஏற்றுக்கொள்வாரா??
“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! 
இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.25 :74.
ஆம்....இது இப்ராஹீம் நபி அலை செய்த துஆ...
எப்படிப்பட்ட கண்குளிர்ச்சியான குடும்பத்தை ரப்புல் ஆலமீன் 
அவருக்கு பரிசாக கொடுத்துள்ளான்... 

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”37:102.

மகனை அறுக்கும் பரிட்சையிலும் இப்ராஹீம் வென்றார்....

அதற்கு பதிலாகதான் ஆட்டை அறுத்து குர்பானி கொடுத்தார்.
அவரின் தியாகத்தை நினைவு கூறத்தான் குர்பானி கொடுக்கிறோம்.
வருடம் இருமுறை கொண்டாடும் பெருநாளில் ஒரு பெருநாளே 
இப்ராஹீம் அலை அவர்களின் தியாகத்தை நினைவு கூறத்தான்.....

இப்படிப்பட்ட தலைவரைக்கொண்டுதான் அல்லாஹு 
தன் இறையில்லத்தை உயர்த்தினான்....
அவர்நின்றுதொழுத இடத்தை 
மகாமு இப்ராஹீம் என சிறப்பித்துகூறுகிறான்.
அவரும்அவர் மனைவியும் செய்த அமல்களே 
நாம் ஹஜ்ஜில் செய்கிறொம்....

 மேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்றாஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? இன்னும் அல்லாஹ் இப்றாஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்.அல்குர் ஆன் 4:125

என்று பல நூற்றாண்டுகளாக குர் ஆன் மனித சமுதாயத்தைப் பார்த்துக்கேட்கிறது.

இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.

அவரிடம் அவருடைய இறைவன் “(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்” என்று சொன்னபோது அவர், “அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்” என்று கூறினார்.அல்குர் ஆன்.2:130,131.முஸ்லிமின் லட்சியமே இறைவனுக்கு கீழ்படிவதுதான்....
வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால் இப்ராஹீமைப்போல வாழ்!!
 இப்ராஹீம் என்னும் ஒற்றைமனிதரைப் பார்த்து உம்மத் என அல்லாஹ் கூறுகிறான்....


(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.2:124.

அல்லாஹ் வைத்த எல்லா சோதனைகளிலும் வெற்றி பெற்றார்.

அதனால்தான் அல்லாஹ் அவரை உலக மக்களுக்கு தலைவராக ஆக்கியுள்ளான்.

இறைவனின் நண்பரான இப்ராஹீம் அலை அவர்களுக்கு ஏற்ப்பட்ட சோதனைகளுக்கு முன் நாம் கஷ்டப்படுவது எல்லாம் ஒரு விசயமே அல்ல....

எந்த ஒரு கஷ்டம் ஏற்படும்போதும் இப்ராஹீம் அலை அவர்களின் சோதனைகளைசிந்தித்தால் நம் கஷ்டங்களும்,துன்பங்களும் லேசாகத்தெரியும்.

அல்லாஹ் நம்மை வாழும்போது முஸ்லிமாகவும்,மரணிக்கும்போதும் முஸ்லிமாகவும்,மறுமையில் எழுப்பும்போதும் முஸ்லிமாக ஆக்க அருள்புரிவானாக!

ஆமின்!!!!


read more "தன்னம்பிக்கையின் சிகரம்-இப்ராஹீம் (அலை)"

Saturday, October 20, 2012

உன்னை தேடி வந்துவிட்டேன் இறைவா...


லப்பைக்....அல்லாஹும்ம லப்பைக்...
லப்பைக்....அல்லாஹும்ம லப்பைக்...

இதோ நான் வந்து விட்டேன் அல்லாஹ்.... இதோ நான்.... ஹஜ்ஜை நிறைவேற்ற செல்லும் ஒவ்வொரு யாத்ரீகரின் இதயமும் இறையச்சத்தில் சங்கமித்து, இதயம் நிறைய வெளிப்படுத்தும் ஒரே உணர்வு.... ஒரே கேவல்..... யா அல்லாஹ்...இதோ நான் வந்து விட்டேன்.... உனக்காக..... உன் கருணைக்காக, உன் அருளுக்காக... உன் தயவுக்காக... நான் வந்து விட்டேன் யா அல்லாஹ் நான் வந்து விட்டேன்...


மீண்டும் ஒரு ஹஜ்...
மீண்டும் ஓர் உம்ராஹ்...
மீண்டும் ஓர் பயணம...
மெய் உலகிலிருந்து கிட்டத்தட்ட இன்னோர் மெய் நிகர் உலகிற்கு..!!

எப்படி ஹஜ் செய்வது, என்ன வழிமுறை என்பது முதல் திரும்பி வருகையில் என்ன கொண்டு வர வேண்டும், நகையா, பொருளா, அஜ்வா பேரிச்சையா? என்னும் லிஸ்ட் வரை எல்லாமே குறித்துக் கொள்கிறோம்... ஆனால் ஹஜ்ஜில் கிடைக்கும் மிக முக்கியமான ‘ரிஜ்க்’கை கொண்டு வருகிறோமா????

...(ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!. (2:197)
ஹஜ்ஜிலிருந்து திரும்பிய பின் நம்முள் என்ன மாற்றம் வேண்டும் என்பதை குறித்துக் கொண்டோமா??? அல்லது, ஒவ்வொரு வருடமும் ”இந்த வருடம் கண்டிப்பாக எடை குறைத்து விடுவேன்”  என்று சூளுரைப்பது போல ஒவ்வொரு ஹஜ்ஜின் பின்னேயும் தூசி தட்டப்படாத ஒரு சபதம் இருக்கிறதா??? என்ன செய்வதாக உள்ளோம் நாம், ஹஜ்ஜின் காலத்திலும், அதிலிருந்து திரும்பிய பின்னரும்?

இதுவரை இப்படி சிந்திக்கவில்லை என்றாலும் இப்பொழுது சிந்திக்கலாம் வாருங்கள். ஹஜ் என்பது தொலைதூரம் பயணப்பட்டு, ஆடை ஆபரணங்களை தவிர்த்து, வெயிலிலும் தாகத்திலும் உடல் வருந்தி செய்யப்படும் ஒரு சம்பிரதாயமல்ல.....ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகனை அல்லாஹ்வின் கட்டளைக்காய் பலிகொடுக்க முன்வந்த அருமை நபி இப்றாஹீமின் வழியில், அவரின் வாழ்க்கையை சற்றே வாழ்ந்து பார்க்கவும், ஆசாபாசங்களை மறந்து, செல்வ சுகத்தையும், செல்லச்செல்வங்களையும் பிரிந்து மனம் வருந்த உடல் வருந்த இன்னோர் உலகில் சில நாழிகை வாழ்ந்து பார்க்கவும், எம் தந்தை இப்றாஹீமின் (அலைஹ்) அழைப்பிற்கு பதிலளித்தவர்களாகவும் செல்லும் ஓர் புனிதப் பயணம். அத்தகு சிறப்பான பயணத்தின் இறுதியில் வெறும் நினைவுகள் மட்டுமே மிஞ்சினால்? சில நாட்களில் வீணாகிப் போகக்கூடிய வெறும் பொருட்கள் மட்டுமே எஞ்சினால்?? இதற்காகவா ஆர்ப்பர்க்கிறோம்??? வாருங்கள் சிந்தனை செய்வோம்...

ஹஜ்ஜின் காலத்தில்:

1. எந்நேரமும் நினைவில் வையுங்கள், நீங்கள் அருமை நபி இப்றாஹீமின் (அலைஹ்) அழைப்புக்கு பதில் சொல்லியவர்களாகப் போகிறீர்கள். ஒவ்வொரு துன்பத்திலும் அல்லாஹ், அவரை சரணடைய சொல்லியபோது, எதற்கு, ஏன், யாருக்கு என்ற ஒரு கேள்வியுமில்லாமல்... நின்னை முழுக்க முழுக்க சரண்டைந்தேன் என்றார். அப்படி அல்லாஹ்வின் மீது அளவிலா அன்பை வைத்தும், அதை செயலிலும் காட்டியதால்தான், அல்லாஹ் அவரை ‘கலீலுல்லாஹ்’வாக்கினான். அவரின் அழைப்புக்கு நீங்களும் பதில் கூறியிருக்கிறீர்கள் என்பதை நினைத்து மகிழ்சியுறுங்கள்.... பணிவு கொள்ளுங்கள்.
2:131. இன்னும், அவரிடம் அவருடைய இறைவன் “(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்” என்று சொன்னபோது அவர், “அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்” என்று கூறினார்.

2. ஹஜ் செய்ய உங்களுக்கு வாய்ப்பளித்தான் என்பதற்காக ஏதோ கடன்பட்டவர்கள் போல நடந்து கொள்ளாதீர்கள்:

ஹஜ்ஜில் ஒவ்வொரு இடத்திலும் உங்களை விட ஏதாவதொரு விஷயத்தில் தாழ்ந்த அல்லது ஹஜ்ஜிற்கு வந்தும் கர்வத்தை விடாத சகோக்களை பார்க்க / பழக நேரிடும்.... அவர்களிடமும் இன்னும் அதிக மான பண்பையும் பணிவையும் காட்டுங்கள். யாருக்கும் கிடைக்காத பாக்கியம் உங்களுக்கு கிட்டியது போல் செருக்கு கொள்ளாதீர்கள்.

(2:197)எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;

3. குறுக்கு வழி தேடாதீர்கள்:
இது ஒரு பெரிய்ய்ய பிரச்சினைதான். அது வாஜிபா? இது ஃபர்ழா? அப்ப இது செய்ய வேண்டாம்லே? இதை விட்டுட்டு அதைப் பார்க்கலாம்....இவற்றை தவிர்த்து நேரத்தை மிச்சப்படுத்தி இன்னொன்றில் சேர்க்கலாம்......சகோ... மீண்டும் நினைவில் வையுங்கள், ஹஜ் என்பது சம்பிரதாயமில்லை.... ஒவ்வொரு வினாடியையும் ஆழ்ந்து அனுபவித்து ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள்.... அரஃபா மைதானத்தில் முழு நாளை எப்படி கழிப்பது என்பதிலிருந்து முஜ்தலிஃபாவின் இருளில் ஐஃபோனை செக் செய்வீர்களா இபாதத்தை பெருக்குவீர்களா என்பதையும் சிந்தனை செய்யுங்கள்....

4. எந்த ரிஜ்க் முதன்மையானது என்பதை முடிவு செய்யுங்கள்:
மக்காவிற்கு செல்லும்போது அந்த ஆர்வத்திலும் பேரானந்தத்திலும் தக்வாவும், நல்லொழுக்கமுமே வழிந்தோடிக்கொண்டிருக்கும் நம்மிலிருந்து.... ஆனால் மக்காவை விட்டு திரும்பி வருகையில் செலவாகிப்போன பணத்தின் மேலேயே பாதி பேரின் மனம் இருக்கும்.... இதற்காகவா ஹஜ்???? இந்த ரிஜ்க்கிற்காகவா இந்த சோதனையை எதிர்கொள்கிறோம்?
(2:198) (ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது; பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது “மஷ்அருள் ஹராம்” என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்; உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.
5. சோஷியலைஸிங்.... இங்கேயுமா????:
முகப்புத்தகத்திலும், கூகிள் பிளஸ்ஸிலுமாக செலவு செய்யும் நேரத்தை, மக்களோடு பழகுகிறோம் என்னும் பெயரில் இங்கேயுமா சிதறடிக்க வேண்டும்??? குழுவாக போவதும், வருவதும், சேர்ந்து சில சம்பிரதாயங்களை முடிப்பதும் என பலதும் நன்மைதான்.... ஆனால் தனியே இபாதத்தை செய்யவும் நேரமொதுக்குங்கள். கிடைக்கும் தருவாயிலெல்லாம் ஒரு காலியிடத்தை தேர்ந்தெடுத்து குர்’ஆன் ஓதவோ, என்ன செய்ய இயலுமோ அதை செய்யவோ முனைந்து விடுங்கள். மக்காவிலிருந்து மினா செல்லும்போதும், மினாவிலிருந்து மக்கா வரும்போதும் அதிகமான நேரத்தை ஏதேனும் ஒரு இபாதத்திலேயே செலவழியுங்கள். இந்த நேரங்களில்தான் சோஷியலைஸிங் என்னும் பெயரில் அதிக நேரம் செலவாகும்... கட்டுப்படுத்துங்கள்....இன்ஷா அல்லாஹ்.

6. ஹஜ்ஜின் முக்கிய நோக்கமே அல்லாஹ்விற்கு சரணடைவது என்பதை மறக்காதீர்கள்! :
வாழ்க்கையில் இது வரை பார்த்திராத, கேட்டிராத, ஏன்...உங்களின் வாழ்விலோ, ஹஜ்ஜிலோ இப்படி நடக்கும் என்று நினைத்தே பார்த்திராத எல்லா சம்பவங்களும் ஹஜ்ஜில் நடக்கும்.... அதற்கு காரணம் ...ஹஜ்ஜும் ஒரு பெரிய சோதனையே.... சோதிக்காமல் நம் ஈமானை மெருகேத்த முடியாதே...!!7. இறுதியாக, உங்கள் வீட்டிலிருந்து நீங்கள் பயணப்படுவதை, உலகிலிருந்தே பயணப்படுவதாக கற்பனை செய்யுங்கள்...!!:

உங்களின் பெருஞ்செல்வம், சொத்துக்கள், சொந்த பந்தங்கள், ஆருயிர் உறவுகள் என அனைத்தையும் ஒரு நாள் விட்டுப் போகத்தான் போகிறீர்கள்.... அதை மறக்காதீர்கள்.
(2:200)ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்-இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்.....
ஹஜ் மப்ரூர் (இறைப்பொருத்தம்) ஆகிவிட்டதா என்பதை இறைவனே அறிவான். ஆனால் அதற்கான சில சாட்சிகளை நாமும் அறிய நேரலாம்.... ஹஜ்ஜிற்கு பிறகு நம்மில் உள்ள குணநலன்களே....
“அல்ஹஜ் அல் மப்ரூர் என்பது இவ்வுலகை நிராகரித்தும், மறுமையை விரும்பியும் வாழும் ஓர் நிலையாகும். இந்த நேர்வையையே அல்லாஹ்,
மேலும், எவர்கள் நேர்வழியில் செல்கிறார்களோ, அவர்களுடை நேர்வழியை (இன்னும்) அதிகப்படுத்தி, அவர்களுக்கு தக்வாவை - பயபக்தியை (இறைவன்) அளிக்கின்றான்.” (47:17) என்கிறான்” -- அல் ஹஸன் அல் பஸரி(ரஹி)
இந்த ஹஜ், ஹஜ் மப்ரூரா? நம்மில் ஏதும் மாற்றம் கொண்டோமா?? அல்லது லப்பைக்...அல்லாஹும்ம லப்பைக் என்னும் வார்த்தைகள் இன்னும் நாவில் ஈரமாய் இருக்கின்றனவா??? இன்னும் அல்லாஹ்வின் அருளை நாடியவர்களாகவே நாம் உள்ளோமா?? எந்த நிலையில் இருந்தோம், எந்த நிலை அடைந்திருக்கிறோம், இந்நிலைக்கு நாம் தகுதியானவர்கள்தானா??? இதற்கெல்லாம் பதில், இப்பொழுதே உங்களில்...!!

இந்த நிலைதான் இப்றாஹீம் (அலைஹ்) அவர்களின் வாழ்விலும் இருந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் அவர் இறைப்பொருத்தத்தை நாடினார். இன்று அவரின் காலடித்தடங்களில் நீங்கள் உள்ளீர்கள்..... அதே அரஃபாவிலும், மினாவிலும், மக்காவிலும் ஒவ்வொரு காரியமும் செய்யும் முன்னர் நினைத்துப் பாருங்கள், இப்றாஹீம் (அலைஹ்) என்ன செய்திருப்பார் என...

அல்லாஹ் உங்களனைவரின் ஹஜ்ஜையும் எளிதாக்குவானாக. பாதுகாப்பானதாக்குவானாக. உங்களனைவரின் இபாதத்தையும் கபூல் செய்வானாக. சிறியதிலிருந்து பெரும்பாவங்கள் வரை அனைத்தையும் மன்னிப்பானாக.... அன்று பிறந்த குழந்தையைப்போல் தூய்மையாக்குவானாக. ஆமீன்.யாரெல்லாம் இந்த வருடம் ஹஜ்ஜுக்கு போக இயலவில்லையோ, இன்ஷா அல்லாஹ் இந்த கட்டுரையின் நோக்கத்தைப் புரிந்து, அறிந்து அதன் வழி செல்ல இப்போதிலிருந்தே தயாராகுங்கள். காலம் தள்ளிப்போட்டுக்கொண்டெ இருக்காதீர்கள். இப்பொழுது வசதியிருந்தால் முந்தி விடுங்கள்.... இன்ஷா அல்லாஹ்...!

கண்டிப்பாக, நீங்கள் திரும்பி வந்ததும் உங்களிடம் வைக்கப்படும் முதல் கேள்வி, ஹஜ் எப்படியிருந்தது என்பதைப் பற்றித்தான்..... மனதொன்றி, இவ்வுலகின் கவலையற்று, ஆகிரத்தை(மறுமை வாழ்க்கை) மட்டுமே எதிர்பார்த்து ஹஜ் செய்திருப்பின், ‘அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது’ என்பதே உங்களின் பதிலாக இருக்கும்....

...அவ்வாறில்லாமல் ஹஜ்ஜை தொலைத்து விட்டிருந்தீர்களானால், “அந்த ஏஜென்சி வழியா மட்டும் போயிடாதீங்க...” என்பதே உங்களின் பதிலாககூடும்.... எந்த பதில் தருவது என்பது இப்போதே நீங்கள் திட்டமிடுவதில்தான் இருக்கிறது...!!

(47:19)ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக; இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக...
பட உதவி: நன்றி
read more "உன்னை தேடி வந்துவிட்டேன் இறைவா..."

Monday, October 15, 2012

குழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை

அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்....

நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அருட்கொடைகளையும் அனுபவிக்கிறோம்... அப்படிப்பட்ட இன்பங்களில் மிக சிறந்ததாக இஸ்லாம் கூறுவது நல் ஒழுக்கமுள்ள மனைவியை.....

பிறப்பு முதல் இறப்பு வரை எத்தனையோ  உறவுகளையும், நட்புகளையும் கடந்து வந்தாலும்  மிக நுண்ணியமானதும், உணர்வுப்பூர்வமான  உறவு வாழ்க்கை துணையே. மற்ற உறவுகளை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது.
ஆனால்,வாழ்க்கை துணை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு வாழும் உறவு ஆகும். அப்படிப்பட்ட உறவை சரியான முறையில்  தேர்ந்தெடுக்காவிட்டால் சொல்லொண்ணா நஷ்டம்தான்.

குழந்தை வளர்ப்புன்னு சொல்லிட்டு வாழ்க்கைத்துணையை  பற்றி ஏன் சொல்றேன்னு நீங்க நினைக்கலாம்! குழந்தை வளர்ப்பின் ஆரம்பமே நல்ல வாழ்க்கை துணையை தேர்தேடுப்பதில்தான் உள்ளது.....

இன்னும் நாம் அனைவரும் திருமணத்திற்கு முன்னும், பின்னும் இந்த து ஆ வை அதிகமாக ஒவ்வொரு தொழுகையிலும்
கேட்க வேண்டும்....
“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! 
இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.25 :74
இது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம அவர்கள் செய்த துஆ...
பயபக்தியாளர்களுக்கெல்லாம் முன்மாதிரியான அவர் செய்த
துஆவை நாமும் கேட்போம்.

சமுதாயத்தில் எத்தனை பேர் மனைவியிடம் அல்லது கணவனிடம் கண்குளிர்ச்சி இல்லாமல் அவதிப்படுவதை கண்கூடாகப் பார்க்கிறோம்....
மார்க்கம் இல்லாத அல்லது அரைகுறை மார்க்கம் தெரிந்த வாழ்க்கைதுணை
உள்ளவர்கள் வீட்டிற்கு உள்ளே ஏகப்பட்ட பிரச்சினைகளோடும்தான் வாழ்கிறார்கள்.

இவர்களிடம் வளரும் பிள்ளைகளும் அவர்கள் வழியேதானே வரும்.
வாழ்க்கைத்துணையிடம் பணமோ,அழகோ இருந்தால் மட்டும் போதாது.....
தக்வா உடைய வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்தால் மட்டுமே சந்ததிகளிடம் கண்குளிர்ச்சியை பார்க்க முடியும். மார்க்கம் உள்ள தாய், தந்தையால் மட்டுமே சிறந்த குழந்தைகளை உருவாக்கமுடியும்.

அடுத்ததாக கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணுக்கு கணவனின் அன்பும் அரவணைப்பும் கண்டிப்பாக தேவை. கணவனின் பாசமான தொடுதலும், அன்பான பேச்சும்  பெண்ணிற்கு மனதளவில் தெம்பையும், நம்பிக்கையை கொடுக்க கூடியது.

எளிதாக குழந்தை பெற்ற பெண்மணிகளிடம் ஆலோசனை கேட்டு கொள்வது  தன்னம்பிக்கையையும்,தைரியத்தையும் கொடுக்கும். சுகபிரசவத்திற்க்கும், சாலிஹான பிள்ளையாக வளர்வதற்கும் நாள்தோறும் ஒவ்வொரு தொழுகையிலும் ரப்புல் ஆலமீனிடம்  பிரார்த்திக்க வேண்டும்.
எவருக்கேனும் பிள்ளை பிறந்தால், அப்பிள்ளைக்கு நல்ல பெயர் வைக்கவும், நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுக்கவும், வாலிப வயதை அடைந்து விட்டால் மணமுடித்து வைக்கவும். பருவமடைந்த பின்னரும்(தனது அலட்சியப் போக்கின் காரணமாக)  மகனுக்கு மணமுடித்து வைக்கவில்லையென்றால், அவன் பாவத்தில் வீழ்ந்துவிட்டால் அந்த பாவம் அவனுடைய தந்தையைச் சேரும். பைஹகி-401
இப்போதுள்ள பெற்றோர்கள் அழகிய பெயர்களை வைப்பதை விட்டு விட்டு  ’’தஸ் புஸ்’’ என்று புதுமைபெயர்களாக கண்டுபிடிக்கிறார்களாம். இஸ்லாத்திற்காக தன் இன்னுயிரை நீத்த சுமையா (ரலி), பிலால் (ரலி) போன்றவர்களின் பெயரை நாம் எத்தனை பேர் நம் பிள்ளைகளுக்கு வைத்துள்ளோம்???

நல்ல ஒழுக்கங்களை கற்றுக்கொடுக்க நாம் ஒவ்வொருவரும் அண்ணலாரின் பொன்மொழிகளை எளிய முறையில் கதைபோல சொல்லிக்கொடுப்பதும் அவசியமாகும். பிள்ளைகளுக்கு சரியான வயதில் திருமணம்செய்யாமல் இன்னும் சம்பாதிக்கவேண்டும் என்று பிள்ளைகளை நிர்பந்திக்கும் பெற்றோர்கள் எத்தகைய தவறுகளைச் செய்கிறார்கள் என இந்த ஹதீஸின் மூலம் தெரிந்து கொள்ளலாம்???

அடுத்து, குழந்தை பெற்ற பின் குழந்தைக்கு இரண்டு வருடம் தாய் பால் ஊட்டுவது  தாய்க்கு இறைவன் இட்ட கட்டளையாகும். தாய்ப்பாலுக்கு இணையான உணவு  இவ்வுலகத்தில் ஒன்றும் இல்லை. பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும்  இறைவன் கொடுக்கும் அருட்கொடையே தாய்ப்பால் ஆகும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தியும், புற்று நோயை தடுக்கும் ஆற்றல் உள்ளதாக அறிவியல் கூறுகிறது. தாய்ப்பால் கொடுக்கும்போது தாயின் உடம்பில் உள்ள வெப்பமும், கதகதப்பும் குழந்தைக்கு மிகப்பெரும்நம்பிக்கையும், ஆற்றலையும் கொடுப்பதாக  உளவியல் ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

இதனால்தான் அல்லாஹ் செவிலித்தாய் மூலமாகவது
குழந்தைக்கு பாலூட்ட கட்டளை இடுகிறான்.
ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால்  அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை;  ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - 
நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.2;223
நமது குழந்தைகளை நாம் எப்படி நடத்த வேண்டிய முறை பற்றி 
கண்மணி நாயகம் ஸல் அவர்கள் கூறியதாவது....
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் பேரரான)  ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள்.  அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ(ரலி), 'எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள்.   ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை' என்றார்.  அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அன்பு காட்டாதவர்  அன்பு காட்டப்படமாட்டார்' என்று கூறினார்கள்.புகாரி-5997

முத்தம் என்பது பாசத்தின் வெளிப்பாடு.
அன்பின் வெளிப்பாடு.
கருணையின் வெளிப்பாடு.
நான் உன்மேல் பாசமாக இருக்கிறேன்.உன் உணர்வுகளை மதிக்கிறேன் என்பது போன்ற செயல்களை பிள்ளைகளிடம் வெளிப்படுத்த வேண்டும்.

நம்மில் எத்தனை பேர் பிள்ளைகளுக்கு முத்தம் கொடுக்கிறோம்....?
தோளில் தட்டி கொடுக்கிறோம்...?
தலையை வருடிக் கொடுக்கிறோம்.....?
மடியில் படுக்க வைத்து கொஞ்சுகிறோம்...?
செல்ல பெயர் வைத்து அழைக்கிறோம்...?
பிள்ளைகளின் தலையை வருடிக்கொடுப்பது அவர்களுக்கு நம்மீது இனம்புரியாத பாசத்தையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தும்.... இதெல்லாம் தாய் மட்டுமே செய்ய வேண்டிய செயல் அல்ல... தந்தைமார்களும் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
தன் உள்ளம் கடினமாக இருக்கிறது என முறையிட்ட சஹாபியிடம்நபி ஸல் அவர்கள் அநாதையின் தலையை தடவிக் கொடுப்பீராக என ஆலோசனை கூறுகிறார்கள்.(முஸ்னத் அஹ்மத்-293)
அநாதைகளின் தலையை தடவிக் கொடுப்பது அன்பை பரிமாற்றம் செய்யக்கூடிய செயலாக அண்ணலார் வழிக்காட்டுகிறார்கள். அதே போல், தலையை தடவிகொடுப்பதன் மூலமாக பெற்றோர்,பிள்ளை இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் பாசம் ரீசார்ஜ் செய்யப்படுகிறது.
நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்:உங்கள் குழந்தைகள் ஏழு வயது எட்டும்வரைஅவர்களுடன் விளையாடுங்கள்.அடுத்த ஏழு வயதில் அவர்களுக்கு கல்வியூட்டுங்கள்.அடுத்த ஏழு வயதில் அவர்களுடன் இணக்கமாகுங்கள்.#அஹ்மத்,நஸயி.

அல்லாஹ்வின் தூதர் எவ்வளவு அழகிய ஒரு வழிகாட்டலை குழந்தை வளர்ப்பில் ஒரு வரைபடம் போல காட்டிஉள்ளார்கள்...

குழந்தைகளுடன் விளையாட வேண்டுமாம்...
எத்தனை வயது வரை????
நன்றாய் கேளுங்கள்....?
7 வயது வரை.....!!!!

நாம் தான் 2 வயது ஆன உடனே குழந்தையின்  சேட்டைகளை ரசிக்காத கல் நெஞ்சம் கொண்டவர்கள் ஆயிற்றே!!!!! உடனே பிளே ஸ்கூல் எங்கே இருக்குனு தேடிப் பிடித்து கொண்டு போய் சிறை வைத்து விடுகிறோமே???

அடுத்த ஏழு வயதில் கல்வி கொடுக்கணுமாம்?!

அதற்கு அடுத்த ஏழு வயது அதி முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய பருவ வயது அல்லவா!! அந்த வயதில்தான் நாம் செல்போன்,லேப்டாப் தனியாக
வாங்கி கொடுக்கிறோம்..... அப்பொழுதுதான்  இணக்கமாக இருக்க ஒவ்வொரு பெற்றோருக்கும் அறிவுரை சொல்கிறார்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு பொறுப்பாளிகள். உங்களின் பொறுப்பை பற்றி கேள்வி கேட்கப்படுவீர்கள்.
#புகாரி.
பருவ வயதில் நம் பிள்ளைகள் வழி தவறியதென்றால் பெற்றோர்களிடம் அல்லாஹ் விசாரிப்பான் என்ற அச்சம் நம் அனைவருக்கும் வேண்டும். இன்னும் நமது குழந்தைகளுக்கு நாம் வழங்க வேண்டியவை ஏராளம்.
அன்பு, ஆதரவு, பாராட்டு, சுதந்திரம், வெற்றி என பல விசயங்கள் அதில் அடங்கும்... 

பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பும் முன்பே வீட்டிலேயே தாய் சிறிய துஆக்கள்,குட்டி குட்டி சூராக்கள், சலவாத் சொல்வது நற்பண்புகளை வளர்க்கும் ஹதீஸ்கள் போன்றவற்றை சொல்லி வளர்ப்பது கட்டாயமாகும்....

இன்னும் ஆண்களுக்கு நபி ஸல் அவர்கள் இடும் கட்டளை....
உங்கள் தொழுகைகளை சிலவற்றை வீட்டில் மேற்கொள்ளுங்கள். உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள்.#புகாரி


தந்தையும்,தாயும் வீட்டில் தொழுவதை பார்க்கும் பிள்ளைகள்அதே போன்று செய்ய உந்துதலாக இருக்கும். சம்பாதிப்பது மட்டும் தந்தையின் கடமை அல்ல. நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பதும் கடமையாகும்.
ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும்,
நல்ல ஒழுக்கத்தையும் விட சிறந்த அன்பளிப்பை வழங்கமுடியாது.
#திர்மிதி-1952
இன்னும் சில பெற்றோர் பிள்ளைகளிடம் எப்போதும் கண்டிப்புடனும், அதிகாரத்துடனும்நடந்துகொள்வார்கள். குழந்தைகளை எப்போது பார்த்தாலும் அடிப்பதால் தற்காலிக தீர்வு கிடைக்குமே தவிர நிரந்தர வெறுப்பு உண்டாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.பூமியில் உள்ளவர்களுக்கு கருணை காட்டுங்கள். வானில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான் என்பது நபிமொழி மென்மையான முறையில் பிள்ளைகளை கண்டியுங்கள்.
தவறு செய்யும்போது அவனுக்கு கொடுக்க வேண்டிய
அவனுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அவன் விரும்பும் ஒன்றை கொடுக்காமல் இருக்க வேண்டும்.

பிறர் முன் (உறவினர்கள்,நண்பர்கள்) பிள்ளைகளை கேவலப் படுத்துதல் கூடாது. அது அவனுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு குழந்தையும் தன் தாய்க்கும்  100 மார்க் போட்டு வைத்திருக்கும்.ஏன் என்றால் தாய்தானே குழந்தையை  இவ்வுலகத்திற்கு அறிமுகப்படுத்துகிறார். தன் தாயின் ஒவ்வொரு அடி மற்றும் தண்டனைக்கும்  ஒவ்வொரு மார்க் ஆக குறைத்துக் கொண்டே வரும்...
இறுதியில் ஒவ்வொரு தாயும் பூஜ்ஜியம் மார்க்குடன் தீராத வெறுப்பையும்  சம்பாதித்து இருப்பார்.
உங்களிடம் கண்ணியத்துடன்  நடந்துகொள்வது உங்கள் குழந்தைகளின் கடமை; உங்கள் குழந்தைகளை சமமாக நடத்துவது உங்களின் கடமை!-அபுதாவூத்.
குழந்தை வளர்ப்பை பற்றித்தான் அல்லாஹ்வின் தூதர் எவ்வளவு ஒரு அழகிய வழிகாட்டலை கொடுத்துள்ளார்கள். நம் பிள்ளைகளாக இருந்தாலும் அவர்களும் சக மனிதர்கள் என்ற விதத்திலே நடத்த வேண்டும். குழந்தைகளின் நல்ல பழக்கத்திற்காக பரிசளிக்க வேண்டும்.. மிரட்டல், உருட்டல் இருக்கும் பழக்கம் நம்மிடம் இருந்தால் உடனே நாம் அதனை மாற்றிக்கொள்வோம்.

ஆண்,பெண் பிள்ளைகளுக்கு இடையில் வேறுபாடு காட்டும் வகையில் உணவு,உடை விசயத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது... அதிகமான வீடுகளில் ஆண்பிள்ளைக்கும் மட்டும் உணவு விசயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கபடும்.அது மிகத் தவறு.
ஒருவன் தன் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்காமலும்,கொடுமைப்படுத்தாமலும், ஆண் குழந்தையுடன் ஒப்பிடும்போது வேறுபாடு காட்டாமலும் இருந்தால்இறைவன் அவனை சுவனத்தில் நுழையச் செய்வான்.#அபுதாவூத்.

ஆம்.பிள்ளைகளை ஒழுங்காக வேறுபாடு காட்டாமல் வளர்த்தாலும் பெற்றோருக்கு சொர்க்கத்தை கொண்டு நன்மாராயம் கூறப்படுகிறது....

ஒரு முஸ்லிம் தன் உயிரை விட அதிகமாக
அல்லாஹ்வை நேசிக்க வேண்டும்...
இரண்டாவது தூதரை நேசிக்க வேண்டும்.
மூன்றாவது தாயை நேசிக்க வேண்டும்....
நான்காவது இடம் யாருக்கு.....?
ஐந்தாவது இடம் யாருக்கு....?
அதுவும் தாய்க்குறிய இடம்
எனஅல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறுகிறார்கள்.
ஆறாவது இடம் தான் தந்தைக்கு......

மூன்று இடத்தை பெற்றுள்ள தாய் தன் பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும்.... இன்ஷா அல்லாஹ் அன்பின் மூலமும், நல்ல ஒழுக்கத்தின் மூலமும் சிறந்த மனிதனை உருவாக்கலாம். ஒரு சிறந்த மனிதனை உருவாக்குவது சிறந்த சமுதாயத்தைஉருவாக்குவதற்கு சமம்....

இன்ஷா அல்லாஹ்,
நாம் அனைவரும் இஸ்லாம் மட்டுமே கூறும் வாழ்வியல்கலையின் மூலம் சிறந்த சமுதாயத்தை உண்டாக்குவோம்.

உங்கள் சகோதரி
ஆஷா பர்வீன்

read more "குழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை "

Monday, October 08, 2012

பஷீர் பாயும் பஸீராம்மாவும் (புதிய கலகலப்பு தொடர் -1)


தொடர் அறிமுகம் : இஸ்லாமிய பெண்மணியின் மற்றொருமொரு வித்தியாசமான முயற்சி! கணவன், மனைவி உரையாடல் நடையில் விறு விறு, சுறு சுறு தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. பஷிர் பாய் மற்றும் அவரது மனைவி பஸீராம்மா
க்கும் இடையில்  வீட்டில் நடக்கும் உரையாடல்கள் தான் இத்தொடரின் களம்.... ஏற்கனவே பல நிகழ்ச்சிகள் இதே முறையில்  இருந்தாலும் அவற்றில் இல்லாத வித்தியாசத்துடன் இத்தொடர் வர இருக்கிறது இன்ஷா அல்லாஹ்.... வழக்கம் போலவே இந்த புது முயற்சிக்கும் உங்கள் பேராதரவை வழங்குவீர்கள் என்று நம்புகிறோம்...வாருங்கள், வந்து பாருங்கள் பஷீர் பாய் படப்போகும் பாட்டையும், வாங்கப் போகும் பல்புகளையும்....

_______________________________

பூப்புலரும் வேளை. அதிகாலை!  இனிய பாங்கு சத்தம் தொலை தூரத்திலிருந்தே கேட்டது. பஷீர் பாயின்  குறட்டை சத்தம் பாங்கொலியை குலைக்க, பல் விளக்கி, அழகாய் ஒளு செய்து, தொழுகைக்கு ஆயத்தமான  பஸீராம்மா, அவரை எழுப்ப சென்றார்.

பஸீராம்மா: ஃபஜ்ரு ஜமாத்’க்கு போகலியா?


பஷீர் பாய்
பாங்காயிடுச்சா....

பஸீராம்மா: அதென்ன காது கேக்குதில்லியா??


பஷீர் பாய்: 
இல்லம்மா... சரி நகரு... பல்லு வெளக்கிட்டு போவணும்...

பஸீராம்மா:
என்னது?


பஷீர் பாய்
என்ன என்னது?

பஸீராம்மா: இல்லே பல்லு விளக்கணுமின்னு சொன்னீகளே அதான் கேட்டேன்....


பஷீர் பாய்
ஏ... அதுல என்ன??

பஸீராம்மா: இல்ல...ஒன்னுமில்லாத நாள் கெணக்கா இன்னிக்கு மட்டும் என்ன ஃபஜ்ருக்கு முன்னாடி பல்லு வெளக்கப்போறீரு????


பஷீர் பாய்
அட.... ஒன்னோட காலையில பஞ்சாயத்தா போச்சே.... இன்னிக்கு என்னா நாளு...?

பஸீராம்மா:சனி...


பஷீர் பாய்
அதேன்.... சனிக்கிழமை காலை ஃபஜ்ருக்கு வாரம் ஃபுல்லா ஃபஜ்ரு வராதவுக வருவாக.... டாக்டர் காதரு, அந்த பேன்க் மேனேஜரு இல்யாஸு, நம்ம ஜனதா டெக்ஸ்டைல் மொய்தீனு.... எல்லாரும் இன்னிக்குதானே வருவாங்க.... மத்த நாளெல்லாம் வூட்டுலயே தொழுதுட்டு ஜோலியப் பாக்க போயிடுவாங்க....

பஸீராம்மா:அதனால???

பஷீர் பாய்: 
அதனாலேன்னா.... அட..... அவுகளோட எல்லாம் இன்னிக்குதான் கொஞ்சம் நேரம் பேச கெடைக்கும்.... பெரிய பெரிய வியாபாரிங்க அவிங்க முன்னாடி பல்லு வெளக்காம நாத்தத்தோடவா பேச சொல்றே......

பஸீராம்மா:அதானே பார்த்தேன்..... கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும்...கெழவிய தூக்கி மனைல வையின்னானாம்...அது மாதிரி.... தெனம் தொழுகப்போறப்ப பல்லு வெளக்க காணோம்.... வியாபாரிங்க கிட்ட பேசனும்ன்னா பல்லு வெளக்குவீகளோ??

பஷீர் பாய்: . . . . . . . . . . . . . !!!!!

பஸீராம்மா: ராசனுங்களெக்கெல்லாம் ராசன்....ராசாதி ராசன்.... அண்டத்தையும் அதிலுள்ளதையும் படைச்சவன், ரிஜ்க்கு தர்றவன்.... அவனுக்கு சுஜூது செஞ்சு, அவன் முன்னாடி நிக்கிறப்ப பல்லு சுத்தமா இருக்கணுன்னு தோணலை.... அவன் தந்த பணத்தை வெச்சு ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா தொழ வர்றவவிங்ககிட்ட பேச மட்டும் பல்லு நாத்தம் அடிக்கிதோ???


பஷீர் பாய்:  !!!!????!!!!


****************************
பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான். (ஆதாரம் - அல் பகரா : 222)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (எல்லாத் தொழுகைகளிலும் கட்டாயமாகப்) பல் துலக்கும்படி (மிஸ்வாக் செய்யும்படி) மக்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்.(ஆதாரம்- புகாரி 7240)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக் கொண்டாரோ அவரே முஹாஜிர் ஆவார். (ஆதாரம்- புகாரி 10)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பல் துலக்குவது வாய்க்கு சுகந்தத்தையும் இறைவனிடத்தில் பொருத்தத்தையும் பெற்றுத் தருகிறது. (ஆதாரம்- நஸாயீ 5)
****************************


read more "பஷீர் பாயும் பஸீராம்மாவும் (புதிய கலகலப்பு தொடர் -1)"

Thursday, October 04, 2012

முஹம்மத்- யார் இவர்

முன்குறிப்பு :மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் எப்படி தயாரிப்பது, எப்படி பிரிண்ட் செய்வது, தவறுகள் வந்தால் என்ன செய்வது போன்ற விஷயங்களால் அந்த ஆர்வம் பேச்சுடன் முடிந்து விடுகிறது. இஸ்லாம் பற்றி எப்பொழுதெல்லாம்  விமர்சனங்கள் வருகிறதோ அப்பொழுதெல்லாம் உடனே இஸ்லாம் பற்றிய உண்மைகளை மாற்று மதத்தவர்களுக்கு புரியவைக்க குறிப்பேடுகள் வழங்கும் விதமாக இஸ்லாமிய பெண்மணியும், பேஸ்புக்கில் இயங்கிவரும்  டீக்கடை குழுமமும் இணைந்து செய்யும் முயற்சியே இந்த பேம்லெட் வெளியீடு.  இதைத் தொடர்ந்து இன்ஷா அல்லாஹ் பல தலைப்புகளில் இதே போன்ற குறிப்பேடுகளை வெளியிடும் திட்டமும் உள்ளது. அது வெற்றி அடைய துவா செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இந்த குறிப்பேட்டை யார் வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைப்படுபவர்கள் "admin@islamiyapenmani.com " என்ற மெயில் ஐடிக்கு மெயில் அனுப்புங்கள். பிரிண்ட் செய்ய முடியாதவர்கள், எங்களிடம் சொல்லவும்.  டீக்கடை குழுமத்தில் இருக்கும் ஒரு சகோதரர்  உங்களுக்காக அதை குறைந்த விலையில் அடித்துத் தர தயாராக இருக்கிறார். வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் விஷயத்தை நாங்கள் செய்து விட்டோம். இதை மாற்று மதத்தவர்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பு நம் அனைவரிடமும் இருக்கிறது. இதற்காக உழைத்த , உழைக்கப் போகும் முகம் தெரிந்த மற்றும் முகம் தெரியாதா சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இறைவன் நற்க்கூலி வழங்குவானாக. ஆமீன்."

முக்கிய அறிவிப்பு: (பிற்சேர்க்கை)

இந்த பேம்ப்ளெட் நாளை பிரிண்ட் செய்யப்பட இருக்கிறது. யாருக்கும் தேவை என்றால் அட்மின்களுக்கு மெயில் செய்யுங்கள்.. ஒரு காபி 1.70 பைசா வரும்.. 100 ன் மடங்காக சொல்லுங்கள் இன்ஷா அல்லாஹ் அனுப்பி வைப்பார்கள். முடிந்த அளவு அதிகம் அடிக்க விரும்புகிறோம்..தனியாக அச்சடிக்க நிறைய காசு ஆகும்...சோ இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்... 1000 காப்பி 1700 ரூபாய் தான் வரும்...

அல்ரெடி 15,000 காபிகளுக்கு சகோதர சகோதரிகள் ஆர்டர் செய்துள்ளார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..                                                     முஹம்மத்- யார் இவர்?

முதல் மற்றும் 5ம்,6ம் பக்கம்
பெரிதாக பார்க்க படத்தை க்ளிக்கவும்
 இறுதிதூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்களை  இஸ்லாமிய மக்கள் ஏன் இவ்வளவு விரும்புகிறார்கள்? யார் இவர்? அப்படி என்ன நற்பண்புகள் தான் அவரிடத்தில் இருந்தது?  இக்கேள்விகளுக்கான  விடையே உங்கள் கையில் இருக்கும் இந்த வெளியீடு...
சிறிது நேரம் ஒதுக்கி முழுமையாக படியுங்கள்... இதை படித்து முடிக்கும் போது "இவர் ஏன் சிறந்தவர்" என்ற கேள்விக்கு உங்கள் மனம் சரியான விடை சொல்லும் (இறைவன் நாடினால்)...

நேர்மை :

இவர் ஒரு நம்பிக்கையாளர், உண்மையாளர் என்று இவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட கூறும் அளவிற்கு நற்பெயர் பெற்றிருந்தார்கள். அரசு கருவூலத்தில் இருக்கும் ஒரு துண்டு பேரிச்சை பழத்தை தனது பேரன் வாயில் போட , இறைத்தூதரோ பதறிப் போய் வாயில் இருந்து பேரிச்சையை வலுக்கட்டாயமாக துப்ப வைத்து "அரசு பணத்தில்  எதுவும் நமக்கு சொந்தமானது அல்ல" என்று கூறினார்கள்.   கருவூலத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனச் சொல்லும் ஆட்சியாளரை காண முடியுமா நம்மால்?

மதினாவில் தொழுவதற்காக பள்ளிவாசல் தேவைப்பட்டது. நபி (ஸல்) அவர்களுக்காக இரு இளைஞர்கள் இலவசமாகவே இடம்  கொடுக்க முன்வந்தார்கள். ஆனால் இறைத்தூதரோ இலவசமாக வேண்டாம் என்று கூறி  பணம் கொடுத்து அந்த இடத்தை வாங்கினார்கள். அவர் இலவசமாகவே அந்த இடத்தை பெற்றிருக்க முடியும்... செய்தார்களா?

ஏழ்மை வாழ்க்கை :

இறைத்தூதர் குடும்பத்தினர் தொடர்ந்து மூன்று நாட்க்களுக்கு எந்த உணவையும் வயிறாற உண்டதில்லை.  மற்றவர்கள் பரிதாபம் கொண்டு விருந்துக்கு அழைக்கும் நிலையிலேயே  தன் வாழ்நாளை பட்டினியுடன் கழித்துள்ளார்கள்.

இறைத்தூதரிடம் ஒரு பாய் விரிப்பு மட்டுமே இருந்துள்ளது. அதை பகல் நேரத்தில் படுக்கைக்கு விரிப்பாகவும், இரவு நேரத்தில் வீட்டை மறைக்கும் கதவாகவும் பயன்படுத்தினார்கள். பாயின் மீது எவ்வித விரிப்பும் இல்லாமல் படுப்பதால் அவரின் உடலில் பாயின் தடம் பதிந்திருக்கும். சாதாரண தலையணையே பயன்படுத்தினார்கள். ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை ஆளக்கூடிய ஆட்சியாளர், மாளிகையில் வாழ்ந்திருக்க முடியும். கருவூல பணத்தில் தன் வாழ்நாளை சுகபோகத்தில் கழித்திருக்க முடியும்... செய்தார்களா?


மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் :

 மக்களிடத்தில் எவ்வித மரியாதையையும், தனிப்பட்ட கவனிப்பும், சிறப்பும் பெற அவர்கள் ஒரு போதும் விரும்பியதில்லை. மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளரான இறைத்தூதரை காண்பதும், கேள்வி கேட்பதும், பேசுவதும், பழகுவதும் , ஒன்றாக உணவு அருந்துவதும் அந்தப் பகுதி மக்களுக்கு பெரிய விஷயமாக இருக்கவேயில்லை.

முன்பு வாங்கிய கடனை திருப்பி கொடுக்க தாமதமானதால் கோபம் கொண்டு நபியை ஏசுகிறார் ஒரு யூதர். ஆனால் இவரோ பொருமையாக கடன்கொடுத்தவருக்கு உரிமை இருக்கிறது, அவரை துன்புறத்த வேண்டாம் என தன் தோழர்களுக்கு கட்டளையிடுகிறார். இறைத்தூதர் நினைத்திருந்தால் ஆட்சிதலைவராக தண்டனை வழங்கியிருக்கலாம். அதற்கான அதிகாரமும் இவருக்கு உண்டு. ஆனாலும் செய்தார்களா?

தனக்கு அன்பளிப்பாக வந்த  ஆட்டை வைத்து ஏற்பாடு செய்த விருந்திற்கு   பொதுமக்கள் அனைவரையும் அழைத்து  மக்களோடு ஒன்றாகவே அமர்ந்து உணவருந்தினார்கள்.
  "அடக்குமுறை செய்பவனாகவும், மமதை பிடித்தவனாகவும் அல்லாஹ் என்னை ஆக்கவில்லை" என்றார்கள். இத்தகைய ஆட்சியாளரைக் கண்டதுண்டா ? தனக்கு கொடுக்கப்பட்ட பரிசை தானே முழுமையாக அனுபவித்திருக்க முடியும்.  செய்தார்களா?

மரியாதை காரணமாக நடுக்கத்துடன் இறைத்தூதரை காண வந்தார் ஒரு நபர். "சாதாரணமாக இருப்பீராக. சாதாரண குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்" என்று கூறி சகஜ நிலைக்கு அந்த நபரைக் கொண்டுவருகிறார்கள் .

 பள்ளிவாசல் கட்ட கல் சுமப்பதும், அகழ் வெட்டுவதும் என மக்களோடு மக்களாக தாமும் இணைந்து செயல்பட்டார் இந்த மாமனிதர்! தன் ஆட்சிக்குட்பட்ட சாதாரண மக்களின் பெயர்களையும் தெரிந்து வைத்திருப்பவராகவும், குடும்பங்களில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் நேராக அவர்கள் வீட்டிற்கே சென்று விஷாரிப்பதுமாக மக்களோடு ஒன்றிணைந்த வாழ்க்கை வாழ்ந்தார் இந்த உத்தம மனிதர்

அனைவரும் சமமே! :

பள்ளிவாசலை கூட்டி சுத்தம் செய்யக்கூடியவர் எங்கே? என கேட்க, அப்போது தான் அவர் இறந்த விஷயத்தை சொல்கிறார்கள். இதனை ஏன் எனக்கு முன்பே கூறவில்லை என கடிந்துக்கொண்டதோடு அந்த சாதாரண வேலையாளின் அடக்க ஸ்தலத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்தார்கள். இறைத்தூதரின்  பணியாளர் அனஸ் (ரலி) அவர்களின் பாட்டி  இறைத்தூதரை விருந்துக்கு அழைக்க, மறுப்பு சொல்லாமல் அந்த ஏழை வீட்டு விருந்தை ஏற்றுக்கொண்டார் இந்த வல்லரசின் ஆட்சியாளர்!

புகழுக்கு ஆசைப்படாத மாமனிதர்:

ஒரு நபர் இறைத்தூதரை புகழ்ந்துகொண்டிருக்க, அதை நிறுத்தச்செய்து, "என்னை வரம்பு மீறி புகழாதீர்கள், நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். மற்றும் அல்லாஹ்வின் அடியானும் , அவனது தூதரும் ஆவேன். அல்லாஹ் தந்த இந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன் என்றார் அந்த அற்புத மனிதர்!

ஹியாரா எனும் பகுதி மக்கள் தன் தலைவருக்கு சிரம் பணிவதை கண்ட நபிதோழர் நபி (ஸல்)  "நாங்கள் சிரம் பணிந்திட அதிக தகுதியுடையவர் நீங்கள் தாம்" என்றார். அதை மறுக்கும் விதமாக "நான் இறந்த பின் என் அடக்கஸ்தலத்தில் சிரம் பணிவீரா?" என திருப்பிக் கேட்டார் இறைத்தூதர் அவர்கள் . அதற்கு அவர் "இல்லை... அவ்வாறு செய்ய மாட்டேன்" என்றார். ஆம்.. அவ்வாறு செய்யக்கூடாது என்றும், தமக்காக  தமக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டுமென யார் விரும்புகின்றாரோ அவர் தமது இருப்பிடத்தை  நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும் என்றும் கூறினார்கள்.  தான் வாழ்ந்த போதும் கூட அல்லாமல் தான் இறந்த பின்னும் கூட அடுத்தவர் தம்மை சிரம் பணிவதை விரும்பதவராக இருந்தார்  இந்த முன்மாதிரி  ஆட்சியாளர்.

ஏதேனும் மக்களுக்கு கட்டளையிடும் போது "நபியே நாங்கள் உங்களை போன்று இல்லை (அதாவது நீர் எம்மை விட சிறந்தவர் என கூறக்கூறுவது)" என கூறினால் கடுங்கோபம் கொள்பவர்களாக இருந்தார்கள். தானும் மற்றவர்களை போலவே என்று கூறிவந்தார்!

சலுகை பெறாத உத்தம மனிதர்:

அரசு பணியில் ஜகாத் வசூலிக்கும் பொறுப்பை தனது மகன்களுக்கு கொடுக்க  சொல்லி இறைதூதரின் பெரியதந்தை கேட்க இறைதூதரோ அதை மறுத்தார்.

தனது பெரிய தந்தை ஜகாத் பணம் கொடுக்க மறுக்க, ஜகாக்கத்தை வசூலிப்பதோடு அதேயளவு தொகை அபராதமாக வசூலிக்கும்படி உத்தரவிட்டார்.  தன் உறவினர் என்பதற்காக எவ்வித சலுகையும் அவர் பெறவில்லை!தன் குடும்பத்தாருக்கும் கொடுக்கவில்லை.

நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்தமான தோட்டம் இருந்தது. அந்த தோட்டத்தின் உரிமையாளருக்கும் அது பிடித்தமானது. "நீங்கள் விரும்பும் பொருளிலிருந்து செலவு செய்யாதவரை நன்மையை அடைய மாட்டீர்கள்" என்ற திருக்குர் ஆனின் வசனத்தைக் குறிப்பிட்டு, அதை நபியவர்களுக்கே பரிசளிக்க, அதை ஏற்காமல், உமது நெருங்கிய உறவினர்களுக்கே அதை வழங்குங்கள் என்ற நபியவர்கள் தனது சொத்துக்கள்  எல்லாவற்றையும் பொதுவுடமையாக்கிவிட்டு இறக்கும் தருவாயில் அடமானம் வைத்த தனது கேடயத்தை மீட்க வசதியில்லாதவராகவே இறந்தார்கள்.
பேம்லெட்டின் 2,3,4ம் பக்க தோற்றம்
பெரிதாக்கி பார்க்க படத்தை க்ளிக்கவும்

பிறமதத்தவர்களிடம் :


இறைதூதர் அவர்களை பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே நபியவர்கள் எழுந்து நின்றார்கள். உடன் இருந்தவர்கள் அது பிற மதத்தவரின் பிரேதம் என தெரிவிக்கப்பட்டது.  அதற்கு மாமனிதரோ "அதுவும் ஓர் உயிரல்லவா?" என பதிலுரைத்தார்கள்.

இஸ்லாத்தை ஏற்காத  எனது தாய் வந்திருக்கின்றார். அவரை நான் என்னுடன் வைத்துக்கொள்ளலாமா? என்று ஒரு பெண் இறைத்தூதரிடம் கேட்டபோது, "அவர் உம் தாயல்லவா? அவரை உம்முடன் வைத்துக்கொள்வீர்ராக!"  என்றார்கள்.

எதிரியிடத்திலும் நேர்மை :

தான் சாப்பிட்ட இறைச்சியில் விஷத்தை கலந்த யூதப் பெண்ணை, தான் வேதனையை அனுபவித்தபோதிலும் மன்னித்தார்கள்.
போரில் கைப்பற்றப்பட்ட கைபர் பகுதியை தனக்குரியதாக ஆக்கிக்கொள்ளாமல் அங்கு வசித்து வந்த யூத மக்களுக்கே உரிமை கொடுத்தார்கள்.

போர்க் களத்தில் பெண் இறந்து கிடப்பதை கண்ட இறைத்தூதர்... பெண்களையும், சிறுவர்களையும் கொல்லக்கூடாது என கடுமையாக எச்சரித்தார்கள். போரின் போது   முகங்களை தாக்கக்கூடாது, இறந்த உடலை சிதைக்கக் கூடாது, நீர்நிலைகள், நிழல் மற்றும் பயன் தரும் மரங்களை சேதப்படுத்தக் கூடாது என கடுமையான விதிகளை விதித்தார்.
                                                     **********************
வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும், ஒவ்வொரு செயல்களிலும் எப்படி வாழ வேண்டும்  மக்களுக்கு வாழ்ந்துகாட்டியவர். அறிவுரையோடு நிறுத்தாது தன்னிலிருந்தே நடைமுறைபடுத்தி, தானும் கடைபிடித்து மக்களையும் கடைபிடிக்க செய்து நல்வழிபடுத்தியவர்!
                                                    **********************
வாய்ப்புகள் நிறைய இருந்தும் சுகபோகத்தில் வாழாத , அதிகாரம் இருந்தும் சலுகைகள் பெறாத, அரசு சொத்துக்களை தனதாக்கிக்கொள்ளாத, தனது வாரிசுகள் கூட அரசு பணத்தை அனுபவிக்க விடாத, தனக்கான சிறப்பான இடத்தை பயன்படுத்தி மக்களை தனக்குக்கீழ் பணிய வைக்காத, மாற்றுமதத்தவரை மதித்த, பேதம் கடைபிடிக்காத, எல்லாவித மக்களையும் சமமாக பாவித்த, எதிர்களிடத்திலும் நேர்மையைக் கடைபிடித்த, போர்களத்திலும்  விதிமுறைகள் வகுத்த, தன் வாழ்நாள் முழுவதையும் வறுமையிலேயே கழித்த, பெண்கள் ஒருபோதும் ஆண்களுக்கு அடிமை அல்ல எனக்கூறி பெண்களை சிறப்பித்த, அப்பழுக்கற்ற, நற்பண்புகள் பொருந்திய இந்த மாமனிதரை . இஸ்லாமிய மக்கள் ஏன் தங்கள்  உயிரினும் மேலாக மதிக்கின்றார்கள் என்பதை இப்போது உணர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

read more "முஹம்மத்- யார் இவர்"