Tuesday, September 25, 2012

இஸ்லாமிய ஆண்மகன்!- எப்படியிருக்க வேண்டும்?


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ...

என்னடா இது? இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரும்பி போயிடாதீங்க. இந்த பதிவு, ஒரு முஸ்லிம் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி! அதனால தான் பின்ன, எப்பவும் இஸ்லாத்தில் பெண்களுடைய உரிமைகள், கடமைகளை பத்தியே பேசிட்டு இருக்கோம். அதில உள்ள ஆண்களுடைய கடமைகளும், பெண்களுக்கு அவர்கள் மேல் உள்ள உள்ள உரிமைகள் பத்தி தெரிஞ்சுக்க வேண்டாமா?

ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும் தன்மகனையும் சமாளிக்குறதை பத்தி ரொம்ப பொலம்பிட்டு இருந்தாள் என் தோழி!  ஆனா, ஒரு பெரிய மிஸ்டேக் பண்ணிட்டாள்.... என்னன்னா, பொலம்பினது  தன் தம்பிக்கிட்ட! அவன் உடனே "அக்கா, டோன்ட் க்ரிப் அபௌட் திஸ்! இட் இஸ் ஒன்லி யுவர் ஜாப்"!! அப்படின்னான்! மவனே! வந்துச்சு பாருங்க கோவம்!

ஒரே ஒரு கேள்வி தான் அவனை கேட்டேன். கப் சிப். புள்ளை அதுக்கப்புறம் வாயே திறக்கல. இப்ப அதே கேள்வியை எல்லாருக்கும் கேட்கலாம்னு இருக்கேன்!

முஹம்மது நபி ஸல் அவர்கள் வீட்டிலிருக்கும்போது என்ன செய்வார்கள் தெரியுமா? மனித குலம் அத்தனைக்கும் மிகப்பெரிய தூது செய்தியைக்கொண்டு வந்து நமது அன்பு நபியவர்கள் வீட்டிலிருக்கும்போது, வீட்டை பெருக்குவதிலும், துணிகளை தைப்பதிலும் ஆட்டிடம் பால் கறப்பதிலும் உதவி செய்தார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா?! "உங்களில் சிறந்தவர்கள் உங்கள் மனைவியரிடம் சிறந்தவரே" என்ற ஹதீஸை எல்லோருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்!

ஆனா எத்தனை பேர் இதை கடைப்பிடிக்கிறீங்க சொல்லுங்க? வீட்டுக்கு வந்தவுடன், "நானே டயர்டா ஆஃபீஸ்ல இருந்து வந்திருக்கேன், என்னை தொந்தரவு பண்ணாத"ன்னு சொல்லாத ஆண்களை காட்டுங்க பாப்போம்! குளு குளுன்னு ஏஸியில உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் நீங்க, பொறுக்க முடியாத வெயிலில், மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த நபி ஸல் அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டது என்ன?

வீட்டை நிர்வகிப்பதில் ஒரு பெண்ணுக்கு மட்டும் தான் கடமை, ஆணுக்கு அதில சம்பந்தமே இல்லைன்னு நினைப்பவர்கள் கொஞ்சம் நபி வழியையும் கடைப்பிட்க்கட்டும். இஸ்லாத்தை பொறுத்த வரை உங்கள் வேலையும் வீட்டில் தான் துவங்குகிறது. அந்த வீட்டை நடத்துவதற்க்கு தான் நீங்கள் வெளியே சென்று சம்பாதிக்கிறீர்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் வெளியில் சென்று பொருள் ஈட்டுவதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள். அதுவும் பிள்ளை கொஞ்சம் அழுதாலும் போதும், எரிச்சல் வந்து விடுகிறது. 

ஒரு வீட்டில் உள்ள ஆண் தனது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு பொறுப்பாளி ஆகிறார். அவர்களின் உணவு, உடைமை, அனைத்திலும் செலவழிக்க வேண்டியது அவரது கடமையாகிறது. தனது தந்தை, மகன், கணவர், சகோதரர், இவர்களின் சம்பாத்தியத்தில் அப்பெண்ணுக்கு உரிமை இருக்கிறது. மாறாக, அப்பெண் எவ்வளவு தான் செல்வம் படைத்தவள் என்றாலும், வீட்டின்மீது செலவழிக்க அவளுக்கு கடமையில்லை, அவர்களுக்கு உரிமையும் இல்லை. எத்தகைய சூழ்நிலையிலும், ஒரு வீட்டுக்காக உழைத்து கொண்டு வருவது ஆணின் கடமையே. இதனால் தான் பெண்களுக்கு ஆண்களை அல்லாஹ் பொறுப்பாளி ஆக்கியுள்ளான்.

இவ்வாறு கடினப்பட்டு உழைத்துக்கொண்டு வந்த பணத்தை வீணடிக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அதைப்பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம். இப்போது இந்த ஒரு பொறுப்பை பெரும்பாலானவர்கள் எப்படி தவறா பயன்படுத்துறாங்கன்னு பார்ப்போம்.


நம்மை சுத்தி நடக்குற விஷயங்களை பார்க்கும்போது நம்மை நாமே சுயபரிசோதனை செஞ்சிக்கிறது நல்லது இல்லையா?

பெரும்பாலான முஸ்லிம் வீடுகள் பெற்றோர்கள் எப்படி இருக்காங்க தெரியுமா? வீட்டிலுள்ள ஆண்கள் நபிவழி பேணி தாடி வைக்கிறாங்களோ இல்லையோ, வேளா வேளைக்கு பள்ளி சென்று தொழுகிறார்களோ இல்லையோ பெண்கள் அபாயா போடக்கூடியவர்களாக இருக்காங்க. தன் மகள் பத்தாவது, பனிரென்டாவதோட படிப்ப நிறுத்தினா போதும்னு ஒரே புடியா புடிப்பாங்க. என்ன காரணம்னு கேட்டா: "ஆம்பளைங்க எப்படி போனாலும் பரவாயில்லை, ஆனா பொம்பளை புள்ளைக்கு ஒண்ணுன்னா ஊரு தப்பா பேசும்"னு வீட்டு பெரியவங்க சொல்வாங்க.

ஸுப்ஹானல்லாஹ்! இதுவா அல்லாஹ் நமக்கிட்ட கட்டளை? இந்த பதில்ல எங்கயாச்சும் தக்வான்னு ஒண்ணு இருக்கா? நாம முஸ்லிம் என்றால் என்ன அர்த்தம்? நம்முடைய வணக்கம், தொழுகை, ஈமான், செயல்கள், எண்ணங்கள் இது எல்லாமே அல்லாஹ் ஒருவனுக்காக மட்டும்தானே இருக்க வேண்டும்? இங்கே ஊர் தப்பா பேசும், பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கனும், ஆம்பளை எப்படி இருந்தாலும் பரவாயில்லைன்னு பேசுவது வெட்ககேடு இல்லையா?

ஒரு பெண் தன்னை முழுவதுமாக மறைத்துக்கொண்டுதான் ஆடை அணிய வேண்டும் என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளை; அதற்கு நாம் அடிபணிகிறோம். இதையல்லாது வேறு எந்த காரணம் சொன்னாலும் அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுமா? பெண்கள் கட்டுக்கோப்பாக இருக்கனும்னு கட்டளை போடும் ஆண்கள், தங்களுடைய ஒழுக்கத்தை பேணுவதில் கவனமா இருக்காங்களா? அவர்களின் பார்வைகளில் தவறிருந்து அதை சுட்டிக்காட்டினால் உடனே "ஆமா, அவ ட்ரெஸ் பண்ணினா, நாங்க அபப்டித்தான் பார்ப்போம், அதுக்குத்தானே பெண்களை புர்கா போட சொல்லிருக்கு?"ன்னு தெனாவெட்டா ஒரு பதில் வரும். அப்படியா? பெண்களை மட்டும்தான் புர்கா போட சொல்லிருக்கானா அல்லாஹ்? உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லையா? 
"நம்பிக்கை கொண்ட ஆண்களே, உங்கள் பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுங்கள்" (அந்நூர், 24:30)
இதைவிட பெரிய விஷயம், அதுவும் குறிப்பா இந்த காலத்து இளைஞர்களிடம் அதிகமா காணப்படுவது வட்டி! பெண்களை எப்பவும் வீண் விரயம் செய்பவர்கள் என்று குறை கூறும் ஆண்கள், உண்மையில் எப்படி இருக்காங்க? நம்ம ஊருல க்ரெடிட் கார்ட் இல்லாத ஒரு இளைஞர காட்டுங்க பார்ப்போம்?
இஸ்லாத்தில கடன்படுவது என்பது அல்லாஹ்வின் சோதனைகளில் ஒன்று, அதிலிருந்து நமது நபி ஸல் அவர்கள் பாதுகாவல் தேடி அல்லாஹ்விடம் துவா செஞ்சாங்க. ஆனா இதை நம்மாளுங்க கிட்ட சொன்னா என்ன சொல்லுவாங்க?
'சும்மாதானே கிடைக்குது', 'ஆத்திர அவசரத்துக்கு உதவும்', 'வட்டி போட முன்னாடி கட்டிடுவேன்' இப்படி எத்தனையோ சப்பகட்டு கட்டுவாங்க. க்ரெடிட் கார்ட கொண்டு ஐ ஃபோனும், ஐ பேடும், 'சும்மா கிடைக்கிற' வங்கி கடனில் சொகுசு காரும் உங்களுக்கு தேவைதானா?  க்ரெடிட் கார்ட் என்பது கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சு நம்மை ஆழ்துளை கிணற்றுல தள்ளிவிடக்கூடிய ஒரு பெரிய ஆபத்து, அது தெரிஞ்சிருந்தும் நம்ம சகோதரர்கள் அதில் சென்று விழுவது பெரிய வேதனை. கடன் என்பது நாம் மிகவும் முடியாத நேரத்தில் வாங்குவது, கடன் கொடுப்பதோ ஒரு தர்மச்செயல் போன்றது. நல்ல நிலையில் இருக்கும் நாம், பிறரிடம் தர்மம் வாங்குவதை விரும்பமாட்டோம், அப்படி இருக்கும்போது ஏன் இந்த க்ரெடிட் கார்ட் பின்னாடி ஓடனும்?

 இது போலத்தான் நம்முடைய சகோதரர்கள் பலர் இப்ப ரொம்ப சாதரணமா வங்கிகளிலும் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளிலும் கொஞ்ச கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் வேலை செய்கிறார்கள். கல்யாணத்துக்குன்னு வரன் தேடும்போது தான் தெரியுது, நம் சமூகத்தவர்கள் வட்டியை எவ்வளவு தவறாக புரிந்துக்கொள்கிறார்கள் என்று. "வட்டி என்பது கந்து வட்டியைத்தான் குறிக்கும், சாதரணமா வங்கிகளில் நாம் வாங்கும் கடனுக்கு வட்டி கட்டலைன்னா அவன் எப்படி வங்கியை நடத்துவான்? இப்பல்லாம் வட்டியில்லாம வியாபரம் செய்யவே முடியாது'ன்னு சொல்றவங்களை பார்ப்பது நம் சமூகத்தில் ஒன்றும் அரிதல்ல.
 'யார் வட்டி வாங்கித் தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்டவனாக எழுவது போலல்லாமல் (வேறு விதமாக) எழ மாட்டான். இதற்குக் காரணம், அவர்கள் 'நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கி இருக்கிறான்...' (அல்குர்ஆன் 2:275)
இதையெல்லாத்தையும் விட மிகவும் வேதனையான விஷயம் நம்முடைய வீடுகள்ல பெரும்பாலான ஆண்கள் தொழுவ பள்ளிக்கே போவதில்லை! தொழுவாதவங்களை தொழுங்க, தொழுங்கன்னு எவ்வளவு சொன்னாலும் பாங்கு சொல்லி முடிஞ்சதும் நைசா முசல்லாவை எடுத்துப்போட்டு வீட்டுலேயே தொழுது கடமை முடிஞ்சுதுன்னு நினைச்சுக்குறாங்க.

சுப்ஹானல்லாஹ்! சகோதரர்களே, நீங்கள் செய்யும் தவறை இனியாவது திருத்திக்கொள்ளுங்கள். நம் சகோதரரிகள் பலர் இப்பல்லாம் துணிவோடு புர்காவுடனும் நிகாபுடனும் வேலைக்கு செல்வதை பார்க்கிறோம். ஆனால் சகோதரர்கள் பலருக்கு இன்னுமே தாடி வைக்க தயக்கம். கேட்டா, ஆஃபிஸ்ல ட்ரெஸ் கோட்னு சொல்லிடுவாங்க. நிச்சயமா தாடி வைப்பது வாஜிபான காரியம். வெறும் சுன்னத்து தானேன்னு விட முடியாது. உங்கள் மேன்லினெஸை லேட்டஸ்ட் மாடல் செல்போன் வைத்திருப்பதிலும், பைக்கை வேகமாக ஓட்டுவதிலும், ஸ்டைலாக இருப்பதிலும் காட்டாதீர்கள்! நபி வழியை அல்லாஹ் ஒருவனை வணங்குவதற்க்காக மட்டுமே கடைப்பிடியுங்கள். உங்களை நீங்களே ஒருமுறை கேட்டுக்கொள்ளுங்கள் நபிவழிபடி தான் நடந்துக்கொள்கிறோமா? அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடந்துக்கொள்கிறோமா என!  உங்களை நோக்கி கேள்விகணைகள் வரும் முன்பே உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள்! ஒரு முஸ்லிம் ஆண் தன் தோற்றத்திலும், ஒவ்வொரு செயலிலும் நபிவழியை கடைப்பிடித்தால் மட்டுமே அவன் உண்மையான முஸ்லிமாகிறான்.

இதை எனக்கும் ஒரு படிப்பினையாக்கிக்கொள்கிறேன். மார்க்கத்தில் பெண், ஆணுக்கு அடிமையில்லை, ஆண், பெண்ணுக்கு அடிமையில்லை. ஆனால் அல்லாஹ் இட்ட கட்டளைக்கிணங்க பெண்களாகிய நாம் திருமணத்துக்கு முன் நம் வலீயாகிய தகப்பனாருக்கு பணிந்து நடக்கிறோம். அதுபோல திருமணத்துக்கு பின் நம் கணவருக்கு பணிகிறோம். ஏனெனில் அவர்களை அல்லாஹ் நமக்கு பொறுப்பாளர்களாக்கியிருக்கிறான். இதை புரிந்து கொண்டு, நமது வீடுகளிலும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் அல்லாஹ் ஒருவனுக்காக அன்றி வேறெதற்காகவும் இல்லை என்ற நிய்யத்தின் படி நடக்க பழகிக்கொள்ள வேண்டும்.

உங்கள் சகோதரி
நாஸியா
read more "இஸ்லாமிய ஆண்மகன்!- எப்படியிருக்க வேண்டும்?"

Monday, September 17, 2012

இஸ்லாம் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமானதா?

வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்...

இறைவனை நேசிக்கின்ற அவன் ஒருவனையே வணங்கி வழிபட்டு, அவனது அன்பையும் அருளையும் பெற ஆசைப்படுகின்ற இவ்வுலக வாழ்க்கையை,  உண்மையான இறைவனின் விருப்பத்திற்கேற்ப அமைத்துக்கொண்டு மரணத்திற்கு பின் நிரந்தர சொர்க்க வாழ்வை அடைய விரும்பும் நாம் ஒவ்வொருவரும் அதே ஆதமுடைய பிள்ளைகளான ஒரு இறைவனை
பற்றிய செய்தி அறியாத மக்களை பற்றி நாம் நினைத்ததுண்டா???
  • இந்த இஸ்லாமிய மார்க்கம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தம் ஆனதா???
  • குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் இறக்கப்பட்டதா??? 
  •  நாம் உண்டு, நம் வேலை உண்டு என ஒரு முஸ்லிம் இருக்கலாமா???
  • இறுதி தூதரை மாற்று மதத்தவர்களுக்கு அறிமுகப்படுத்தினோமா???
இல்லை....இல்லை...இல்லவே இல்லை.....

இஸ்லாமிய மார்க்கம் இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்டது.... குர்ஆன் அகில உலகத்தாருக்கும் இறக்கி அருளப்பட்டது.... அழைப்பு பணி செய்வது அனைவர் மீதும் உள்ள கடமை....

கடந்த சில நாட்களாக மீடியாக்களிலும்,சமூக வலை தளங்களிலும்,
நபிகளாரின் படத்தை தவறாக சித்தரித்த அமெரிக்கர்களுக்கு எதிராக கருத்துக்கள் பதியப்பட்டு வருகிறது.... ஆம்....எங்களின் உயிரினும் மேலான கண்மணி நாயகம்(ஸல்) அவர்களை அசிங்கமாக சித்தரிப்பவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

அதே நேரம், நபி (ஸல்) அவர்கள் எதற்காக அனுப்பபட்டார்களோ
எதை செய்ய சொல்லி அல்லாஹ்வும்,அவனுடைய தூதரும்
கட்டளை இட்டார்களோ அதனை நாம் செய்ய வசதியாக மறந்து விட்டோம்.

மார்க்கத்தை எத்தி வைப்பது நபிமார்களின் வேலை மட்டும் அல்ல. அவர்களுக்கு பிறகு நாம் அனைவரும் கூட்டாக சேர்ந்து செய்ய வேண்டிய வேலை......

இந்த பணியை பற்றி அல்லாஹ் குர்ஆனில்
3:110. மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்;தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்.
இன்னும் நபி ஸல் அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் பற்றி வலியுறித்தி உள்ளார்கள்....
''இன்று நீங்கள் என்னுடைய மார்க்கத்தின் பேச்சுகளை கேட்கிறீகள். நாளை உங்களிடமிருந்து மார்க்கத்தின் பேச்சுக்கள் கேட்கப்படும். பிறகு, உங்களிடமிருந்து யார் மார்க்கத்தின் பேச்சுகளை கேட்டார்களோ, அவர்களிடமிருந்து மார்க்கத்தின் பேச்சுகள் கேட்கப்படும். எனவே, நன்கு கவனமாக கேளுங்கள். உங்களுக்கு பின்னால் வருவோருக்கு அதை ஏத்தி வையுங்கள், பிறகு அவர்கள் தங்களுக்கு பின்னால் வருவோருக்கு எத்தி வைக்கட்டும். இந்த காரியம் தொடர்ந்து இவ்வாறு நடைபெறட்டும்.
-அபு தாவூத்
தன்னை இறைவன் என்று சொன்ன கொடுங்கோல் மன்னன் பிர் அவ்னிடம் சென்று அழைப்பு பணி செய்ய மூசா (அலை) அவர்களை கட்டளையிடும் இறைவன் எப்படி செய்ய வேண்டும் எனவும் கட்டளை இடுகிறான்....
20:43. “நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.
20:44. “நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.
கொடுங்கோல் மன்னனிடம் அழைப்பு பணி செய்ய வேண்டும்..... அதுவும் மென்மையான முறையில்.....

ஐந்து வசனம் கிடைத்த அபூபக்கர்(ரலி) அவர்களின் ஈமான் எவ்வாறு ஜொலித்தது??? ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட குர் ஆன் வசனங்களை
வைத்துள்ள நம் ஈமான் பலவீனமாக உள்ளது!

எதெற்கெடுத்தாலும் குர் ஆன்,ஹதீஸை பின்பற்றுகிறோம் என்று சொல்லும் நாம் இந்த விசயத்தில் பின்தங்கி விடுகிறோம்......

நபி ஸல் அவர்கள் காலத்தில் பிறநாட்டு மன்னர்களுக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதற்கு ஐநூறு கடிதங்கள் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அனுப்பப்பட்டது....

தகவல் தொடர்பு மிக எளிதாக உள்ள இக்காலத்தில் சமூக வலை தளங்களில்
மற்றும் தினமும் இருநூறு,முன்னூறு மெசேஜ்கள் நமக்கு செல்பேசியில் உள்ளது.... அதை எல்லாம் இறை அழைப்பு பணிக்காக செலவிடலாமே.....

உலக மக்கள் அனைவரையும் சத்தியமார்க்கத்தின் பால் அழைக்கும் கடமை பெண்களுக்கும் உண்டு..... ஏன் எனில் குர்ஆன் வசனங்கள் ஆண்,பெண்
இருபாலருக்கும்தான் இறக்கபட்டது....
9:71. முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்;
அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்;
பெண் எனப்படுபவள் தாயாகவோ,மனைவியாகவோ,
மகளாகவோ,சகோதரியாகவோ,சிறிய தாயாகவோ ஜொலிக்க வேண்டியவள்..... வீட்டிற்கு வெளியில் அண்டை வீட்டுக்காரியாகவும்,
நல்ல தோழியாக இருக்க கடமைப் பட்டவள்..... பெண்ணுக்குறிய அத்தனை தொடர்பை பற்றி நாளை மறுமையில் விசாரிக்க படுவாள்... எனவே,எல்லா நிலையையும் சரியாக பயன்படுத்திக் கொள்வோம்.

இஸ்லாத்தின் தனித் தன்மைகளை எடுத்துரைக்கும் முஸ்லிம் பெண்கள்
அவற்றை தங்களால் முடிந்த அளவு வாழ்வில் அமல்படுத்த வேண்டும்.
வாய் சொல்லை விட செயல்படுத்தும்போதுதான் மிகுந்த பலன் உண்டு.

வீட்டில் இருக்கும் பெண்கள் கவனத்திற்கு.......

1.அண்டை வீட்டினருடன் இஸ்லாம் சொல்லும் முறைப்படி நடக்க வேண்டும்...
நாம் சமைக்கின்ற உணவை சிறிது அவர்களுக்கு கொடுக்கலாம். நம்மால் முடிந்த சிறிய உதவிகளை செய்ய வேண்டும்.அவர்களை சொல்லாலோ, செயலாலோ துன்புறுத்தக் கூடாது.

2.வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களிடம் மென்மையான முறையில் நடக்க வேண்டும். அண்ணலார் வீட்டு வேலை செய்பவர்களிடம் எவ்வாறெல்லாம் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொண்டார்கள்? வேர்வை உலர்வதற்க்கு முன் கூலியை கொடுக்க சொன்னார்கள். கடுமையான வேலையில் உதவி செய்ய ஏவி உள்ளார்கள் என்பதை சரியாக முறையில் பேணுவதும் அழைப்பு பணியே ஆகும்.

3.அண்டை வீட்டில் நோயுற்றால் நலம் விசாரியுங்கள்...

4.கஸ்டமான துக்க வேளைகளில் அவர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள்.

5.நல்லவை நடந்தால் வாழ்த்து சொல்லுங்கள்.

6.தீயவை நடந்தால் அனுதாபம் தெரிவியுங்கள்.

7.நம் வீட்டு நிகழ்ச்சிகளில்,விருந்தில் கண்டிப்பாக அவர்களை அழையுங்கள்.

8.மார்க்கம் அனுமதித்த அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில்  கலந்து கொள்ளுங்கள்..

9. அவர்கள் வீட்டு விசேசங்களுக்கு பரிசுப் பொருளுடன் புத்தகங்கள், சிடிக்கள், நோட்டிஸ் போன்றவற்றை கொடுங்கள்....

10.பஸ்,ரயில் போன்ற பொது இடங்களில் அவர்களுக்கு இடம் கொடுப்பதும்,
அவர்களுடைய சுமையை அல்லது லக்கேஜை வாங்கி உதவுவதும் அழைப்பு பணியே ஆகும்.

11.வீட்டிலும் வெளியிலும் இஸ்லாத்தை முழுமையாக கடைபிடியுங்கள்.

12. நம் குழந்தைகளுக்கு போதிக்கும் நற்பண்புகள் அடுத்தவர்களை கவரும்.

13. நம் வீட்டுக்கு வெளியே சின்னதாக ஒரு சிலேட் அல்லது போர்டில்
தினம் ஒரு ஹதீஸ் எழுதி வைக்கலாம்....


உதாரணமாக

மனிதர்களுக்கு உதவி செய்பவனுக்கு இறைவன் உதவி செய்வான்....

மனிதர்களுக்கு இரக்கம் காட்டுபவனுக்கு இறைவன் இரக்கம் காட்டுவான்.....

ஏழைகளுக்கு உணவு அளியுங்கள்.....

போன்ற பிறர் நலம் பேண சொல்லும் பொன்மொழிகளை அவர்கள் கண்ணில்
படும்படி எழுதி வைத்து இறுதி தூதரை அவர்களுக்கு அறிமுகபடுத்துவது
ஒவ்வொரு இஸ்லாமியப் பெண்ணின் கடமையாகும். இவையெல்லாம் மற்றவர்கள் நம் மீது மதிப்பு ஏற்படுத்துவதோடு நம் இஸ்லாத்தை சார்ந்த மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும்.  நற்பண்புகளை மேலும் வளர்த்துக்கொள்ள செய்யும்!

உங்கள் சகோதரி
ஆஷா பர்வீன்
read more "இஸ்லாம் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமானதா? "

Tuesday, September 04, 2012

பெண்களுக்கு பாதி சொத்து- இது நியாயமா???


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

பொதுவாக எல்லா இடங்களிலும் சொல்லப் படும் ஒரு குற்றச்சாட்டு, இஸ்லாத்தில் பெண்கள் எல்லா விசயத்திலும் பார பட்சமாக நடத்த படுகிறார்கள் என்றும்..! அதிலும் முக்கியமாக சொத்து விசயத்தில் மிக அதிகமாகவே அவர்களுக்கு பாரபட்சம் காட்ட படுகிறது  என்பதாகும்.! மேலும் அநேக  விசயங்களில் ஆண்களை விட பெண்களுக்கு குறைவான உரிமைகள் தான் வழங்கப் படுகிறது என்றும் பரவலாக  சொல்ல படுகிறது..உண்மையில் அப்படித் தான் நம் மார்க்கத்தில், நமக்கு சொல்ல பட்டிருக்கிறதா, என்பதை பார்ப்போம்..!


அதற்கு முன்  பெண்கள்,ஆண்களால் எப்படி நடத்தப் பட்டார்கள் (இப்போதும் கூட) என்பதை நாம் சற்று கவனிக்க வேண்டும்..! அன்றைய கால கட்டத்தில் பெண்கள் வெறும் போக பொருளாகவும், அவர்களுக்கு, என்று தனி மதிப்போ,அந்தஸ்தோ,இல்லாதது மட்டும் அல்லாமல் ,ஆண்களின தேவைகளை பூர்த்தி செய்யும் அடிமைகளாகவும்,அவர்களால் கீழ் நிலை பிறவிகளாகவும்,வியாபார பண்ட மாற்றுப் பொருளாகவும்,நடத்தப் பட்டார்கள் என்றால் அது மிகையில்லை..உதாரணமாக,ஆண்களும்,பெண்களும்,செய்யும் ஒரே தவறுக்கு,ஆணுக்கு ஒரு நீதியும்,பெண்ணுக்கு ஒரு நீதியும் ,வழங்கப் பட்டு வந்தது, அன்றைய காலத்தில்..! இப்படி எல்லா இடங்களிலும் பெண்கள் மோசமாகவும்,கொடுமையாகவும், நடத்தப் பட்டார்கள்..!அதே போல ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கும்  போது அவள் எப்படி ஆணுக்கு சொந்தம் ஆவாளோ, அதே போல அவளின் உடைமைகளும் அவளின் கணவனுக்கு சொந்தம் ஆகி விடும்.திருமணத்திற்கு பின் அவைகளின் மீது அவளுக்கு எந்த உரிமையும் இருக்காது .கணவரின் அதிகாரத்தின் கீழ் தான் அவைகள் இருக்கும் .அவர் இஷ்டப் படி அதை அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.அவரை யாரும் ஒன்றும் சொல்ல முடியாது.சொல்ல போனால்,மனைவி என்பவள் ஒரு வகையில் அவளின் கணவனால் விலை கொடுத்து வாங்க பட்ட ஒரு பொருளை போன்றவள்..! அவ்வளவு தான் அன்று  அவளுக்கு மதிப்பு இருந்தது.

பெண்களுக்குக் கடமைகள் இருப்பதுபோல அவர்களுக்கு உரிமைகளும் 
சிறந்த முறையில் உள்ளன.  (2:228)

ஆனால் ஒரு சமுதாயத்தில்,அது  எந்த துறை ஆகட்டும்,எந்த ஒரு அழகான மாற்றம் நிகழ்வதாக இருக்கட்டும், ஒரு பெண்ணின் துணை இல்லாமல் ஒரு சரியான சமூக திட்டத்தை கொண்டு வர முடியாது..சமூக வாழ்வில் ஆண்,பெண் இருவரின் சம அளவினான புரிதலான பங்கு என்பது முக்கியமானது..ஆனால் அன்றைய கால காட்டத்தில் பெண்ணுக்கான உரிமைகளோ.கௌரவமோ,சரியான விதத்தில் அளிக்க படவில்லை..! இன்னும் சொல்லப் போனால் பெண் பிள்ளைகள் பிறந்தாலே அது ஒரு சாபக்கேடு எனக் கருதி ,உயிருடன் புதைக்கப் பட்டார்கள்..!

ஆனால் இஸ்லாம் பெண்களை பார்க்கும் பார்வை தனியானது மட்டும் அல்லாது மிக சிறப்பானது..! அதன் பார்வை கண்ணியம் மிக்கதும்,போற்றத் தக்கதும்,கௌரவ படுத்த கூடியதாகும்..! அதே பார்வை தான் பெண்களுக்கான சொத்திலும் வழங்கப் பட்டுள்ளது..! எதற்காக ஒரு பெண்ணுக்கு தனிப்பட்ட விதத்தில்  சொத்து..? என கேட்டால அவளின் அனைத்து தேவைகளுக்கும் பாதுகாப்பு தர கடமை பட்டவர்களான,தந்தையின் மரணம்,கணவனின் நிராகரிப்பு,அல்லது அவரின் மரணம்  போன்றவை நிகழ்ந்து விட்டால் அவளின் பொருளாதார தேவைக்காக அடுத்தவர்களின் கையை எதிர் பார்க்காமல், தன்னிறைவு கொண்ட பெண்ணாக இருக்க வேண்டும் என்ற காரணமே ஆகும்.

உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம்பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.  (4:12)


ஆனால் இங்கு சொத்து விசயத்தில் விமர்சகர்களின் குற்றச்சாட்டு என்பது ஆணுக்கு இரண்டு பங்கும்,அதே சமயத்தில் பெண்ணுக்கு ஒரு பங்கு தான் சொல்லப் பட்டிருகிறது என்பதாகும்..இது பெண்ணுக்கு இஸ்லாம் காட்டும் பாரபட்சத்தின் வெளிப்பாடு என்பது அவர்களின் கூற்று. இதை பொதுவாக வெளியில் இருந்து மேலோட்டமாக பார்க்கும் யாருக்கும் அப்படி தான் தோன்றும்..ஆனால்,எதற்காக ,பெண்ணுக்கு அப்படி சொல்ல பட்டது,அதன் காரணம் என்ன,என்பதை புரிந்து கொண்டால் தெளிவு கிடைக்கும்..!


அதற்கு முன் நாம் புரிந்து கொள்ள வேண்டிய,அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விசயம் .இறையின் பார்வையில் ஆண்களும்,பெண்களும் சமமானவர்கள் தான் ,இதில் எந்த வித சந்தேகமும் இல்லை.மேலும் அவர்கள் இருவருக்கும், அவர்கள் இவ்வுலகத்தில் செய்கின்ற நன்மை,தீமை வைத்தே  தீர்ப்பு வழங்கப் படும் என்றும்,இதில் ஆண்,பெண் வேறுபாடு இல்லை என்பதும்,இதில் எந்த விதத்திலும் ,அணு அளவும் அவர்களுக்கு தீங்கு செய்யப் பட மாட்டாது என்பது இறைவனின் வாக்கு..


ஆனால் அதே நேரத்தில்  இருவரும் சமமானவர்களே தவிர,சரி நிகரானவர்கள் அல்ல..! அப்படி இருப்பதற்கான வாய்ப்பும் இல்லை.உடல்,உணர்வு,இயல்பு,செயல் என இயற்கையாகவே இருவரின் தன்மைகளும் வேறு பட்டவை.அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக,அவர்களின் குணப்படி மேன்மை படுத்தப் பட்டுள்ளார்கள்..! அதே போல இருவரின் பொறுப்புகளும்,கடமைகளும், வேறு பட்ட தன்மைகளாக பிரித்து காட்டப் பட்டுள்ளது..


ஆணின் பொறுப்பு என்பது குடும்பத்தின் முழு பொருளாதார தேவையின் அடிப்படையில் அமைந்தது..! குடும்பத்தினருக்கான செலவினங்கள் தொடர்பான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்பவனாக  ஒரு ஆண் இருக்கிறான்.அது அவனுக்கு கட்டாய கடமையாகவும் ஆக்கப் பட்டுள்ளது.பெண்ணின் பொறுப்பு என்பது குடும்பத்தை நிர்வாகம் செய்யக் கூடிய விதமாகவும்,குழந்தை வளர்ப்பு ,இன்ன பிற உறவு சார்ந்த பேணுதலையும் கொண்ட,இல்லம் சார்ந்த பொறுப்பாக  இருக்கிறது..! இது ஒரு பெண்ணின் கட்டாய கடமையாக ஆக்கப் பட்டுள்ளது..! மறுமையில் இது குறித்து இருவரும் அவரவர் கடமை களைப் பற்றி விசாரிக்கப் படுவார்கள் என்பது இறைவனின் வாக்கு..


 உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.(4:11)


இந்த வசனத்தை வைத்துத் தான் இஸ்லாம் பெண்ணுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னாலும் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என பாரபட்சம் காட்டுகிறது என பரவலாக விமரிசிக்கப் படுகிறது.ஆழ்ந்து நோக்கினால் மார்க்கம் எந்த அளவு ஒரு பெண்ணுக்கு பொருளாதார பாதுகாப்பையும்,தனி அந்தஸ்தையும் கொடுத்துள்ளது என்பது புரியும்.முன்பே சொன்னது போல ஒரு  ஆணுக்கு தான் குடும்பத்தினரின் பொருளாதார தேவைகளை ஆற்ற வேண்டிய பொறுப்பு கடமை ஆக்கப் பட்டுள்ளது..தன் பெற்றோர்களின் அத்தியாவசிய தேவைகள்,தனக்கு திருமணம் செய்யும் போது ஆகும் செலவுகள்,தன் சகோதர,சகோதரிகளின்,கல்வி,உடை, போன்ற அடிப்படை வசதிகள்,தனக்கென வரும் மனைவி,குழந்தைகள்,மற்றும் உற்றார்,உறவினர்களுக்கு ஆகும் செலவுகள் என அனைத்தையும் பார்க்க கூடிய கடமை ஆணையேச் சாரும்..


பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும் போது அவனுக்குச் சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. அவளுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் (அவள் இறக்கும் போது) அவ(ளது சகோதர)ன் அவளுக்கு வாரிசாவான். இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டுபெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு. நீங்கள் வழி தவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன். (4:176)


அதே சமயத்தில்  ஒரு பெண்ணுக்கு எந்த விதமான பொருளாதார கடமைகளும் அவளுக்கு சுமத்தப் பட வில்லை...! அவளின் சொத்தை அவள் விரும்பிய படி செலவு செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது..! அதே போல அவள் சம்பாதிக்கும் பணமும் அவளுடையதாக இருக்கிறது...! அதை அவள் விரும்பிய படி செலவு செய்யவும் அனுமதிக்கப் பட்டுள்ளது...! ஆனால் அவளின் விருப்பப் படி எந்த விதமாக செலவு செய்தாலும்,அந்த செலவு சரியான விதத்தில்  இருக்க வேண்டும் என்பது மட்டுமே  அவளுக்கு சொல்லப் பட்டதாகும்..ஏனென்றால் நாளை எல்லா செயல்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை அவளுக்கு இருக்கிறது..!


உதாரணத்திற்கு இரண்டு பிள்ளைகளை  (ஒரு ஆண், ஒரு பெண்)  உடைய ஒரு தகப்பனார் இறந்துவிட்டார் எனில், அவரிடம்   மூன்று லட்சம்  மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தால், அவரின் மகனுக்கு இரண்டு லட்சம்  மதிப்புள்ள சொத்துக்களும், மகளுக்கு ஒரு லட்சம்  மதிப்புள்ள சொத்துக்களும்,அவர்களது பங்காக கிடைக்கும்...! இரண்டு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக கிடைக்கப் பெற்ற மகனுக்கு குடும்பத்தில் உள்ள எல்லா செலவினங்களின் மீதும் பொறுப்பு உண்டு. .! அவருக்குக் கிடைக்கப் பெற்ற இரண்டு  லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் முழுவதையுமோ,அல்லது அந்த சொத்துக்களில் பெரும் பங்கையோ அவர் குடும்பத்திற்காக,செலவு செய்துவிட்டு  எஞ்சியுள்ள சொத்துக்களை மாத்திரம் தான், அவர் தனது பங்காக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால்  ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்ற மகள்  அதிலிருந்து ஒரு பைசா கூட எவருக்கும் செலவு செய்யாது ,முழு மதிப்புள்ள சொத்தையும் தனக்காக வைத்து கொள்ள  முடியும்...அவரை யாரும் ஒன்றும் கேட்க முடியாது..அவராக விருப்பப் பட்டு தன் குடும்பத்திற்கு செலவு செய்யலாம்.ஆனால் கட்டாய கடமை இல்லை..! இதில் இருந்தே இஸ்லாம் எந்தளவு ஒரு பெண்ணுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்கி உள்ளது என்பதும்,இந்த பங்கீட்டு முறையினால் யார்  அதிக அளவு பலனை அடைகிறார்கள் என்பது புலப்படும்.


குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும்,உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப் பங்கீடு கட்டாயக் கடமை.(4:7)


அதே நேரத்தில்,இன்றைய காலகட்டத்தில், நம் நடைமுறை வாழ்க்கையில் இந்த பங்கீடுகள் சரியான முறையில் குடும்பத்தினரால் தன் பெண்களுக்கு வழங்கப் படுகிறதா, எனக் கேட்டால், நாம்  மிக பெரிய கேள்விகுறியை தான் பதிலாக வைக்க முடியும்..!  இஸ்லாத்தை பற்றி சரியாக அறியாதவர்கள் செய்யும் தவறுகள் என்பதைத்  தாண்டி, அறிந்தவர்கள் பலரும் தெரிந்தே, இத் தவறைச் செய்வது  மிகவும் வருந்தத் தக்கதே..! நிச்சயமற்ற இந்த உலக வாழ்க்கையின் மீது உள்ள ஆசை மனிதனை தெரிந்தே பல தவறுகளை செய்ய வைக்கிறது என்றால் அது மிகையில்லை...தன் தந்தையின் சொத்துக்களை,உரிய முறைப் படி தன் சகோதரிகளுக்கு பங்கீடு செய்யாமல,  தானே வைத்து கொள்ளும் சகோதரர்கள் தான் இங்கு அதிகம்..!  இந்திய-தமிழக முஸ்லிம் பெண்களின் நிலையில் அதிக முன்னேற்றம் இல்லாததற்கு சொத்துப் பங்கீடு சரியான முறையில் நடக்காததும், இந்தியக் கலாச்சாரத்தை ஒட்டி, பெண்களின் நகை, சொத்தை கணவன் வீட்டார் உரிமை கொண்டாடுவதும் காரணமாக அமைந்துள்ளது. தவறு இஸ்லாமிடம் இல்லை, அதைச் செயல்படுத்தாத ஆண்களிடம்தான்!  இந்த உலகத்து வாழ்க்கையும்,வசதிகளும் நிரந்தரம் என்பதை போன்ற அவர்களின் செயல்களால் நஷ்டமடைய போவதென்னமோ அவர்கள் தான்..

இது போன்ற நேர்மை இல்லாத செயல்களில் இருந்து நம்மை விடுவித்து, நாளை அவன் முன் குற்றமற்றவர்களாக நிற்க,வல்ல இறைவன் நமக்கு அருள் புரிவானாக..ஆமீன்..

உங்கள் சகோதரி..
ஆயிஷா பேகம்..

read more "பெண்களுக்கு பாதி சொத்து- இது நியாயமா???"